Friday, June 20, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – Carnation மற்றும் Dianthus

நம் தோட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு வரிசை. பொதுவாய் நான் காய்கறி செடிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பூக்கள் என்று பார்த்தால், பிச்சிப் பூ (ஜாதி பூ), முல்லை, நாட்டு ரோஜா, மல்லி, சாமந்தி தவிர பெரிதாய் ஏதும் வைக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, நாம் எங்காவது கண்ணை கவரும் விதை பாக்கெட்டை பார்த்துவிட்டால் கை நம நம என்று அரிக்கும். அதை வாங்கி நமது கலெக்க்ஷனில் சேர்த்தால் தான் நிம்மதி. அப்படித் தான், ஒரு கண்காட்சியின் போதும் கண்ணை கவரும் நிறைய நம்தாரி (Namdhari Seeds – NS) பூ விதைகள் கலெக்ஷனில் வந்து சேர்ந்தது. அப்படி கிடைத்தது தான் இந்த Carnation மற்றும் Dianthus பூ விதைகள். விதை வாங்கிய பிறகு தான் எங்கே வைக்க என்று இடம் தேடுவது எல்லாம் நடக்கும்.



வீட்டை சுற்றி நாம் தோட்டத்திற்க்கு இடம் கைப்பற்றுவதே பெரிய கதையை இருக்கும். ஒவ்வொரு செடியாய் வர வர, மண்வெட்டியை வைத்துக்கொண்டு நாமும் சுற்றி சுற்றி எங்கே பாத்தி எடுக்கலாம் என்று நடந்து கொண்டிபோம். ‘துணி காய போடும் இடத்தையாவது விட்டு வைங்க. என்னால மாடிக்கெல்லாம் தினமும் நடக்க முடியாது’ என்று பதறி போய் வீட்டில் ஓடி வருவாங்க. நாமும் முடிந்த அளவுக்கு கொஞ்சமாய் நடக்க மட்டும் இடம் விட்டு எப்படியும் ஒரு பாத்தி அதிலும் ரெடி செய்து விடுவோம்.    

Carnation மற்றும் Dianthus பூக்களை பற்றி கூற வேண்டும் என்றால், இரண்டுமே கிட்டதட்ட ஒரே இனம் தான், மிக சில வித்தியாசங்களை தவிர. Dianthus செடியின் இலைகள் கொஞ்சம் கரும்பச்சை நிறத்தில், புல் போல நீளமாய் இருக்கும். Carnation செடி இலை, இளம் பச்சை நிறத்தில், இலை கொஞ்சம் அகலமாய் இருக்கும். Dianthus செடி கொஞ்சம் கொடி போல நீளமாய் போகிறது. பூவில் பெரிதாய் வித்தியாசம் இல்லை.
Carnation Plant

Dianthus Plant


இந்த முறை, முதல் தடவையாய் plastic Container-ல் முயற்சிக்கலாம் என்று சின்ன தொட்டியில் இருந்து கொஞ்சம் பெரிய தொட்டி வரை வாங்கினேன். இவைகளை நர்சரிகளில் வாங்குவதை விட, சில Departmental Store-ல் விலை மிக குறைவாக கிடைக்கிறது (நான் இங்கே Kannan Departmental Store-ல் வாங்கினேன்). விலை பத்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை ஆனது.


இரண்டு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பித்தன. விதைகள் கொஞ்சம் பெரிதாகவே இருப்பதால் நாம் தனி தனியாக Nursery Tray-ல் போடலாம். இரண்டுமே 100% முளைப்பு திறன் இருந்தது ஆச்சரியம்.


செடிகளுக்கு Coir Pith & Compost  கலவையையே தொட்டிகளில் எடுத்துக் கொண்டேன். செடிகள் கொஞ்சம் வளர்ந்ததும் plastic Container-ல் மாற்றி விட்டேன். எதிர்பார்த்ததை விட எளிதாகவே வளர்ந்தது. பூக்கள் நிறைய நிறத்தில், Double shaded எல்லாம் வந்திருக்கிறது. இதை இன்னும் பெரிய தொட்டிகளில் மாற்றி நன்றாக கொண்டு வர வேண்டும்.
நாம் கிளைகளை அவ்வப்போது வெட்டி விட, செடி நன்றாகவே தளிர்த்து வரும்.




   Carnation செடிகள் பொதுவாகவே எளிதாய் வரும். ரொம்ப எளிதாய் படர்ந்து விரியும். எளிதாய் கிளையை ஒடித்து வைத்து புதிய நாற்று தயாரிக்கலாம் (நான் இன்னும் முயற்சிக்கவில்லை).

காய்கறிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால், இது போல நிறைய முயற்சிப்பது இல்லை. இந்த செடிகள் வெற்றிகரமாய் வந்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் தேடி, வீட்டைச் சுற்றி இன்னும் கொஞ்சம் இடத்தை ஆட்டையை போடலாம் என்று தான் தோன்றுகிறது (வீட்டைச் சுற்றி நடக்க கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தானே) J








இது வரை கிடைத்திருக்கும் வண்ணங்கள். இவை Carnation மலர்கள் 







கீழே உள்ளவைகள் Dianthus மலர்கள்,



Saturday, June 14, 2014

தகவல் - அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.


நமது ப்ளாக் நண்பர்கள் சிலர் ‘அக்ரி இன்டெக்ஸ்’ பற்றி விசாரித்தார்கள். வெளி ஊர்களில் இருந்தும் கூட சில நண்பர்கள் விசாரித்தார்கள். சிலர் நமது தோட்டத்தை பார்க்கவும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இந்த வருடம் ‘அக்ரி இன்டெக்ஸ்’ போகலாமே என்று தோன்றியது. இந்த வருடம் 18-July (Fri) - 21-July (Monday) தேதிகளில் வருகிறது. இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது. நான் எப்படியும் கண்டிப்பாய் போவேன். அங்கு வர நினைத்திருக்கும் நண்பர்கள் 20-July (ஞாயிற்று கிழமை) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே கொடிசியா வளாகத்திலேயே சந்திக்கலாம். அப்படியே மொத்தமாய் ஒரு ரவுண்ட் ஸ்டால் விசிட் போகலாம். அப்படியே நம்ம தோட்டதிற்க்கும் ஒரு விசிட் போட்டுடலாம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒரு மெயிலை (gsivaraja@gmail.com) தட்டி விடுங்க. பிளான் போட்டுடலாம்.




முந்தைய அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவுகள்,


Monday, June 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – கருணைக் கிழங்கு





நாம் வழக்கமாய் போடும் செடிகளை தவிர, எப்போதாவது வித்தியாசமாய் முயற்சிப்பது நம்ம தோட்டத்தை இன்னும் fresh-ஆக வைத்துக் கொள்ள உதவும். நாமாக முயற்சித்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தால் சந்தோசம் தானே.  

முன்பு இது போல தான் உருளைகிழங்கு முயற்சி செய்து ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. இப்போது கருணை கிழங்கு. இதை பிடி கரணை என்றும் சொல்கிறார்கள். குழம்பு வைக்க வாங்கிய சில கிழங்குகள் நல்ல Fresh-ஆ தெரிந்தது. முளை விடுவது போல இருந்தது. சரி, ஒரு Try விட்டு பார்க்கலாம் என்று ஒரு மூன்று கிழங்குகளை எடுத்து முளைக்க போட்டு விட்டேன்.

இது போல பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை செடிகள் போல) படத்தில் உள்ளது போல சின்ன Nursery Bag-ல் போட்டு விடலாம். இந்த பைகள் விலை குறைவு தான். கிலோ கணக்கில் கிடைக்கிறது. நான் போன முறை இங்கு Agri Index-ல் வாங்கினேன்.

கிழங்கை முளை விட்டு வர சரியாக ஒரு மாதம் ஆனது. கொஞ்சம் பொறுமை அவசியம். எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு. சின்னதாய் ஒரு பூ மொட்டு மாதிரி வர ஆரம்பித்தது. அது பெரிதாகி வெடித்து உள்ளே இருந்து ஒரு குடை போல இலைகள் விரிந்து செடி மலர்ந்தது. இரண்டு செடிகளை தரையிலும், ஒன்றை ஒரு பெரிய Nursery Bag-லும் வைத்து விட்டிருக்கிறேன்.  

இந்த செடியில் ஒரு விஷேசம், செடியில் குருத்து ஏதும் இல்லை. முதலில் வரும் மூன்று இலைகள் தான் இருக்கிறது. புதிதாய் ஏதும் இலை வர குருத்து ஏதும் இல்லை. பக்க கிளை மட்டும் ஓன்று வருகிறது.  
 
கிழங்கு வர இன்னும் நான்கு-ஐந்து மாதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதனால் இதை Part-1 ஆக கொடுக்கிறேன். எப்படி கிழங்கு வருகிறது என்பதை பொறுத்து சில மாதங்கள் கழித்து Part-2 வரலாம் :-)














Monday, May 19, 2014

தோட்ட உலா – மே 2014 (Summer Special)



மா
சம்மர் ஸ்பெஷல் என்றால் மாம்பழம் இல்லாமலா?. எங்க வீட்டு மாமரம் மூன்றாவது வருடம் காய்கிறது. முதல் வருடம் வெறும் மூன்று காய் என்று ஆரம்பித்து, போன வருடம் ஒரு பதினைந்து காய்த்தது. இந்த வருடம் ஐம்பதை தாண்டி விட்டது. இவ்வளவுக்கும் இந்த வருடம் குறைந்தது ஒரு நூறு பிஞ்சாவது உதிர்ந்து இருக்கும். அதையும் தாண்டி இவ்வளவு காய்திருப்பது ஆச்சரியம் தான்.

எல்லா வருடமும் ஏதாவது ஒரு ஜீவன் வந்து எங்களுக்கு ஒரு மாங்காய் கூட மிச்சம் வைக்காமல் மொத்தமாய் திருடி போய்விடும். கடுப்பில் வெளியே போன மொத்த கிளையையும் வெட்டி விட்டேன். இந்த முறை கிட்டதட்ட எல்லாமே மேலேயே காய்த்து விட்டது. கீழே காயத்த சில காய்களையும் சீக்கிரமே பறித்து ஊறுகாய் போட்டு விட்டோம்.

மாங்காய் எல்லாம் நல்ல திரட்சியாய் வந்திருக்கிறது. இப்போது தினமும் எப்படியும் இரண்டு, மூன்று பழங்கள் தவறாமல் கிடைக்கிறது. கொஞ்சம் இனிப்பு குறைவு தான் (புளிப்பு சுத்தமாய் கிடையாது). வெளியே கல் வைத்து பழுக்க வைத்து வரும் பழங்களுக்கு (அதில் பாதி புளிக்க தான் செய்கிறது), நம்ம வீட்டு தோட்டத்திலேயே எந்த வித ரசாயனமும் இல்லாமல் கிடைப்பது நல்லது தானே.   





மாதுளை

இந்த முறை மாதுளை ஒரு பூச்சி தாக்குதலில் கொஞ்சம் திணறி விட்டது. பெரும் போராட்டதிற்க்கு பிறகு விரட்டி விட்டிருக்கிறேன். White Fly (சின்னதாய், வெள்ளையாய் கொசு மாதிரி) கூட்டம் கூட்டமாய் வந்து இலைக்கு அடியில் பவுடர் மாதிரி முட்டை இட்டு செடியை ஒரு வழி ஆக்கி விட்டது. நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். வேப்பிலை சாறு, சோப்பு கரைசல், நீரை பீச்சி அடிப்பது என்று. ஒன்றும் வேலைக்காகவில்லை. இலை எல்லாம் உயிரற்று போவதால் மரத்தின் காய்ப்பு திறன் ரொம்பவே குறைந்து விடும்.

கடைசியாய், ஒரு பழைய காலண்டர் அட்டையை எடுத்து, அதை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி, இறுக்கமாய் ஸ்டேப்ளர் பின் வைத்து அடித்து ஒரு பளபளப்பான அட்டையாக மாற்றி கொண்டேன். பிடிக்காக நம் கை போகும் அளவுக்கு வெட்டி கொண்டேன். கொஞ்சம் தேங்காய் எண்ணை வாங்கி, இரண்டு பக்கமும் ஒரு மூடி எண்ணையை (தேங்காய் எண்ணை அல்லது கிடைக்கும் எதாவது ஒரு எண்ணை) ஊற்றி நன்றாக படரும் படி தேய்த்து விட்டால் ஆயுதம் தயார். லேசாய் பூச்சி அடைந்து இருக்கும் கிளையை ஆட்டி விட்டு, எண்ணை தடவியை அட்டையை சாமரம் வீசுவது போல அசைத்தால் முக்கால் வாசி பூச்சிகள் அதில் ஒட்டி மடிந்து விடும். ஒரு ஐந்து நாள் தொடர்ச்சியாய் இதை சோம்பல் பார்க்காமல் செய்தேன். இப்போது மிஞ்சிய ஒன்றிரண்டு பூச்சிகளும் இடத்தை காலி செய்து விட்டு போய் விட்டன. ஆர்கானிக் வழியில், சில நேரம் இது போல வன்முறை தான் கை கொடுக்கிறது. இப்போது நன்றாக காய்த்திருக்குகிறது. வழக்கம் போல பழம் ஒவ்வொன்றும் 400 – 500 கிராம் அளவில் வந்திருக்கிறது. இந்த வருடம் அதிகபட்சமாக ஒரு காய் 550  கிராம் வந்திருகிறது. இரண்டு காய் வைத்தால், ஒரு கிலோ வந்து விடுகிறது. 

Google Image

Google Image



மாதுளையில் பிஞ்சி பிடித்து கொஞ்சம் பெரிதானதும் அதை சுற்றி துணி ஒன்றை கட்டி விடுவது அவசியம். இல்லாவிட்டால் அணில் வந்து கடித்து சாப்பிட்டு விடுகிறது. பிஞ்சி காயாய் இருந்தாலும் கூட விட்டு வைப்பதில்லை. துணி கட்டி விட்டால் அது கண்டு கொள்வதில்லை. துணியை காயை சுற்றி ரொம்ப இருக்கமாய் கட்ட கூடாது. காய் பெரிதாவதற்க்கு ஏற்றால் போல் கொஞ்சம் தளர்வாய் கட்ட வேண்டும்.  




இப்போது இன்னொரு மாதுளை நாற்றும் வைத்து விட்டிருக்கிறேன். ஊரில் இருந்து கொண்டு வந்த அதே மாதுளை வகை தான் (சிவப்பு கிடையாது. பச்சை/மஞ்சள்). நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்தில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 


முருங்கை

இந்த சீசனில் காய்க்காத முருங்கையே இல்லை எனலாம். சரியான மழை இல்லாத காரணத்தினாலோ என்னவோ, இத்து போன மரம் கூட காய்த்து கொட்டிவிட்டது. இதில் எங்கள் வீட்டு மரமும் அடக்கம். வீட்டில் முருங்கை மரம் என்று ஒன்றும் பெரிதாய் கிடையாது. முன்பு வெட்டி விட்ட மரத்தில் இருந்து அப்போ அப்போ சில துளிர்கள் தரையில் இருந்து தளிர்த்து வரும். நாங்களும் கடந்த இரண்டு வருடமாய் அதில் இருந்தே தேவையான கீரையை பறித்து வருகிறோம். இந்த முறை ஒரு தளிர் மட்டும் கொஞ்சம் வளர்ந்து விட்டது. அந்த ஒற்றை கொம்பு கொஞ்சம் மரம் மாதிரி வளர்ந்து, பூத்து காய்த்தும் விட்டது. அதுவும் அளவுக்கு அதிகமாகவே. 




சீத்தா, எலுமிச்சை & கொய்யா   

கோடை சீசன் என்றால் சுவிச் போட்ட மாதிரி சீத்தா தளிர்த்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து விடும். எலுமிச்சையும் அதே போல தான். ஆனால் எலுமிச்சை ஏப்ரல்-மே –யில் காய் கொடுத்தால் வெயிலுக்கு ஜூஸ் போட நன்றாக இருக்கும். ஆனால் இது எப்பவுமே ஜுன்-ஜூலை தான் காய் ரெடியாகிறது.




இந்த கோடையில், நாட்டு கொய்யா (சிவப்பு கொய்யா) நன்றாக பிஞ்சி பிடித்திருக்கிறது. போன முறை சில பிஞ்சிகள் மேல் சொரசொரப்பாய் புள்ளிகள் போல வந்து விட்டது. வேப்பம் புண்ணாக்கு வைக்க தவறிவிட்டேன். இந்த முறை தொடக்கத்திலேயே வைத்து விட்டேன். நான் பார்த்ததில் வேப்பம் புண்ணாக்கு கொய்யாவிலும் மாதுளையிலும் நன்றாகவே வேலைசெய்கிறது. ஒரு பக்கெட்டில் பாதி அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, வேப்பம் புண்ணாக்கு இரண்டு கிலோ அளவுக்கு எடுத்து நன்றாக கரைத்து, அந்த கரைசலை மரத்திற்கு ஊற்றி விடுவேன். பூச்சி தொல்லை இல்லாத மற்ற பிரச்சனைகள் நிறைய இதனால் சரி ஆகி இருக்கிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஊற்றி விடலாம். நல்ல பலன் இருக்கிறது. 




முல்லை

கோடை சீசன் என்றால் முல்லை சரியாக பூக்கிறது. வழக்கமான பிச்சி பூ (ஜாதி பூ) ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தான் பூக்கும். வீட்டில் முல்லை கொடியும் இருக்கும் பட்சத்தில் நமக்கு கோடையில் பூ கிடைத்துக் கொண்டிருக்கும்.

முல்லை இந்த வருடம் தான் நன்றாக பூக்க ஆரம்பித்திருக்கிறது. சீசன் முடிந்தவுடன் கிளைகளை கொஞ்சம் வெட்டி விடுவது அவசியம். முல்லை கொடிக்கும் சரி, பிச்சி பூ செடிக்கும் சரி பூச்சி தாக்குதலோ, வேறு எந்த கவனமும் தேவை இல்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொஞ்சம் உரம் (மண்புழு உரம்) வைத்தால் போதுமானதாக இருக்கிறது.     







நீட்ட புடலை

இந்த பதிவில் ஒரே ஒரு காய்கறியை மட்டும் பார்த்து விடலாம். நீண்ட காலமாய் நீட்ட புடலை (நாட்டு புடலை) கொண்டு வர முயற்சித்து ஒன்றும் வரவில்லை. சரியான விதை கிடைக்கவில்லை. அப்படி நீட்ட புடலை என்று நம் தலையில் கட்டிய விதையும் கடைசியில் குட்டை புடலையை தான் கொடுக்கும். இந்த முறை கொடி காய்கறிகள் (புடலை, பாகல்) போட்டதில் ஏகப்பட்ட குழப்பம். கொஞ்சம் சரியாய் வரவில்லை. எங்கே வாங்கின விதையை போட்டேன் என்பதிலும் குழப்பம். சரியாய் குறித்துக் கொள்ளவில்லை. அப்போ அப்போ எதாவது காய்க்கும். கிடைத்தவரை லாபம் என்று பறித்துக் கொள்வோம். ஒரு நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீளமாய் ஒரு பிஞ்சி ஓன்று இருந்தது. யோசித்து பார்த்ததில் நீட்ட புடலையாய் தான் இருக்கும் என்று சின்னதாய் ஒரு கல்லை கட்டி விட்டேன். அடுத்ததாய் ஒரு பிஞ்சும் வந்து இரண்டு காய்கள் கிடைத்தது. இந்த முறை நாட்டு விதை (வானகம் ஸ்டாலில் வாங்கியது), இப்போது தான் முளைத்து இருக்கிறது. நன்றாக வரும் என்று நினைக்கிறேன். வந்தால் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ காய்கறியில் தனி பதிவை போட்டுடலாம்.