Saturday, July 18, 2015

விகடனில் ‘தோட்டம்’ வலைப்பூ

நண்பர்களுக்கு வணக்கம். இந்த வாரம் அவள் விகடன், வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. அதில் ‘பூத்துக் குலுங்க வழிகாட்டும் ‘தோட்டம்’ வலைப்பூ’ என்ற தலைப்பில் எனது தோட்டம் ப்ளாக் பற்றி ஒரு பக்கத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் அவள் விகடன் முடிந்தால் வாங்கி பாருங்கள்.

விகடனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு வீட்டுத்தோட்ட சிறப்பிதழாக வரும் இதழ் வர இருப்பதாக கூறி நமது ப்ளாக் பற்றி விவரம் கேட்டார்கள். இந்த சீசன் செடிகள் இப்போது தான் நாற்றாக நிற்பதால் படம் எடுக்க முடியவில்லை. போன சீசனின் படங்களையே கொடுக்க வேண்டியதாகி விட்டது. இந்த அளவுக்கு இந்த வலைப்பூவை கண்டு கொண்ட விகடன் குழுவிற்கு மிக்க நன்றி.   

இங்கே கோவை வந்த பிறகு தோட்டம் ஆரம்பித்த போது, ஆர்வத்தில் எடுத்த படங்களை ஒரு வலைப்பூ ஆரம்பித்து போடலாமே என்று ஆரம்பித்து, நண்பர்கள் உங்கள் ஆதரவில் இந்த அளவுக்கு இந்த வலைப்பூ வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


 
நன்றி : விகடன்

Saturday, July 11, 2015

2015 - சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – Part – 1 (நடவு)



இந்த சீசனில் முடிந்த அளவுக்கு நாட்டு ராகங்களாக நட இருக்கிறேன். நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகளையும், முன்பு வாங்கி இருந்த சில ஹைப்ரிட் விதைகளையும் மே இறுதி வாக்கில் Nursery Tray-க்களில் நட்டு விட்டேன். கிட்டத்தட்ட எட்டு Tray-க்கள், நானுறு விதைகள். இதில் இந்த சீசனது பட்டியல் இது தான்,

வெண்டை (நாட்டு வகை)
செடி அவரை (நாட்டு வகை)
தக்காளி (நாட்டு வகை)
மஞ்சள் தக்காளி (நாட்டு வகை)
ஹைப்ரிட் தக்காளி (DIY Kit-ல் வந்தது)
பச்சை கத்தரி (நாட்டு வகை)
ஓடவை ஊதா கத்தரி (நாட்டு வகை)
வெள்ளை கத்தரி (போன வருடம் எடுத்த விதை)
சீனி மிளகாய் (நாட்டு வகை)
சம்பா மிளகாய் (நாட்டு வகை)
ஹைப்ரிட் மிளகாய் (DIY Kit-ல் வந்தது)
மிதி பாகல் (நாட்டு வகை)
புடலை (நாட்டு வகை)
வெள்ளரி (நாட்டு வகை)
கும்பு சுரை (நாட்டு வகை)
குடை மிளகாய் (வெள்ளை)
குடை மிளகாய் (Mixed Color)
Hot Pepper (Omaxe Hybrid Seed)
காலி ஃப்ளவர் (Omaxe Hybrid Seed)
முட்டை கோஸ் (Omaxe Hybrid Seed)
Baby Corn (Omaxe Hybrid Seed)
Sweet Corn  (Omaxe Hybrid Seed)
Water Melon (Omaxe Hybrid Seed)
Musk Melon (Omaxe Hybrid Seed)
தூதுவளை
கண்டங்ககத்தரி


இந்த சீசனில் முயற்சிக்க போகும் புதிய செடிகள் என்று பார்த்தால், போன HortiTech-ல் வாங்கிய சில Omaxe ஹைப்ரிட் விதைகள் (வெள்ளை குடை மிளகாய், Hot Pepper மிளகாய், Musk Melon). நாட்டு ரகங்களில் கண்டங்கத்தரி, தூதுவளை, ஆகியவற்றை கூறலாம். தவிர பரமேஸ் கொடுத்த சில புதிய நாட்டு ராகங்கள் (சீனி மிளகாய், சம்பா மிளகாய், மஞ்சள் தக்காளி, கும்பு சுரை)

Omaxe Hybrid Seeds for this season


அடிப்படை காய்கறிகளை (தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை மற்றும் கொடிகள்) தரையிலும், மற்ற காய்கறிகளை (குடை மிளகாய், முள்ளங்கி வகைகள்) மாடியில் Grow Bag-களிலும் வைக்க இருக்கிறேன். போன முறை முட்டை கோஸ்-ம், காலி ஃப்ளவர்-ம் Grow Bag-ல் வைத்து அவ்வளவு செழிப்பாய் வரவில்லை. இவைகளுக்கு நிறைய சத்து தேவைப்படுகிறது. சின்ன Grow Bag-களில் வைக்கும் போது செடி வளர்ந்த பிறகு அவ்வளவாய் உரம் சேர்க்க முடிவதில்லை (இடம் இருப்பதில்லை, அப்படி சேர்த்தாலும் அவ்வளவாய் வளர்ச்சி வருவதில்லை). அதனால் இவைகளை மட்டும் இந்த முறை தரையில் ஒரு பாத்தியில் வைக்க இருக்கிறேன்.

விதைகள் எல்லாம் முளைத்து விட்டது. வெண்டையின் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாக இருந்தது. பதினைந்து விடைகளில் மொத்தமே நான்கு செடிகள் தான் முளைத்தது. அதனால் இரண்டு வாரம் பார்த்துவிட்டு புதிதாய் ஒரு Tray-ல் போன சீசனில் விதைக்கு விட்டு எடுத்த நாட்டு விதைகளை போட்டு விட்டேன். அவை எல்லாமும் முளைத்து அருமையாக வந்திருக்கின்றன. கொத்தவரை ஓன்று கூட முளைக்கவில்லை. கண்டங்கத்தரியும், துதுவளையும் போட்ட ஐந்து விதைகளில் ஒன்றே ஓன்று தான் முளைத்திருக்கிறது. கொஞ்சம் பார்த்து காப்பாற்றி கொண்டு வரவேண்டும்.

சீசனை தொடங்குவதற்கு முன்னமே தேவையான அளவு மண்புழு உரம் (150 Kg @ Rs7.50/Kg, வீட்டில் இருக்கும் மரங்களுக்கும் சேர்த்து) வாங்கி வைத்து விட்டேன். அதோடு TNAU போய் ஒரு மூன்று லிட்டர் பஞ்சகாவ்யாவும் (Rs.80/Ltr), அன்னூர் போய் 25 Kg (Rs.20/Kg) வேப்பம் புண்ணாக்கும் வாங்கி வைத்து விட்டேன்  .இந்த சீசனுக்கு இது போதும்.

Nursery Tray-க்களில் செடிகள் முளைக்கும் போதே வாரம் ஒரு முறை பஞ்சகாவ்யா கலந்து நீர் ஊற்றி, தெளித்து வந்தால் நாற்றுகள் நன்றாக வரும்.

போன வாரத்தில் இருந்து செடிகள் ஒவ்வொன்றாய் அதற்குரிய பாத்திகளில் நட ஆரம்பித்து விட்டேன். Sweet Corn, Baby Corn, அவரை செடிகள் எல்லாம் எடுத்து பாத்திகளில் வைத்து விட்டேன். புடலை, சுரை, பாகல், வெள்ளரி செடிகளையும் தரையில் வைத்து விட்டேன்.  தக்காளி, மிளகாய், கத்தரி, கோஸ் செடிகளை இந்த வாரம் எடுத்து நட வேண்டும். மற்றவைகளை Grow Bag-களில் வைக்க வேண்டும். கீரைகள் எல்லாம் மாடியில் Grow Bag-களில் வளர ஆரம்பித்து விட்டன.  

இந்த முறை புதிதாய் சேர்த்திருக்கும் ரகங்கள் எப்படி வருகிறது என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் செப்டம்பரில் அறுவடைக்கு தயாராக இருக்கும். இந்த சீசன் செடிகளின் வளர்ச்சி, அறுவடை, மற்ற பிரச்சனைகள் பற்றி வரும் வாரங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.     




அவரை நாற்றுகள்

தக்காளி - பீன்ஸ்

மிளகாய் - பாகல் - புடலை - வெள்ளரி

கத்தரி

மிளகாய்

முட்டை கோஸ் (Cabbage)


Sweet Corn - Baby Corn - Water melon - Musk Melon - Avarai


Sweet Corn - Baby Corn

 Garden Tips – 001    

பஞ்சகாவ்யாவை ஒரு பக்கெட்டில் வைத்து தினமும் இரண்டு முறை ஒரு குச்சியை வைத்து நன்றாக கலக்கி விட்டு வந்தால் இரண்டு-மூன்று மாதங்களுக்கு வைத்து பயன்படுத்தலாம். நல்ல குளிர்ச்சியான நிழலில் வையுங்கள். கொசு, பூச்சிகள் உள்ள விழாத மாதிரி மூடி இருக்கும் பக்கெட்டில் வைத்து, மூடியில் காற்று போகும் படி சின்ன சின்ன துளைகள் நிறைய போட்டு வைத்தால் போதும்.




Garden Tips – 002

Nursery Tray-ல் விதைகள் நடும் போது புதிதாய் Coir Pith மீடியா தயாரித்து உபயோகிக்கவும். ஏற்கனவே பயன்படுத்திய Coir Pith கலவையை பயன்படுத்தும் போது முளைக்கும் செடிகள் கூடவே நிறைய களைகளும் (புற்கள், பிற செடிகள்) வளர ஆரம்பிக்கும்.

Garden Tips – 003

Nursery Tray-ல் விதைகள் நடும் போது கத்தரி, தக்காளி மாதிரி சிறிய விதைகளை ஒரே குழியில் இரண்டு-மூன்று விதைகள் போட்டு விடவும். முளைப்பு திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு குழியிலும் ஒரு செடியாவது வரும். சில நேரம் நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளாக இருப்பின் ஒரே குழியில் நான்கைந்து செடிகள் வளர்ந்து விடும். அவற்றை உடனே நீக்காமல் கொஞ்சம் வளரவிட்டு பிறகு அவற்றில் நல்ல திரட்சியான செடியை விட்டுவிட்டு மற்றவற்றை வெட்டி விடலாம் (பிடுங்க கூடாது. பிடுங்கினால் நாம் விட நினைத்த செடியின் வேரும் பாதிக்கும்).