Saturday, May 26, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – புடலை


படரும் செடி (கொடி) ஒன்றை பார்க்கலாம். தோட்டம் அமைக்கும் போது கிச்சன் கழிவு நீர் போக அமைத்த choke pit மீது செடி ஏதும் வைக்க முடியாது. கீழே வெறும் பாறை தான் இருக்கும். அந்த இடத்தை படரும் செடிகள் (புடலை, அவரை, பாவற்காய்) வளர்ப்பதற்கு எதுவாக பந்தல் அமைத்து விட்டேன்
 .
இரண்டு சிமெண்ட் தூண்கள், சுவற்று பக்கத்தில் கான்க்ரீட் போட்டு இரண்டு அலுமினியம் கம்பி தூண்கள், சில மூங்கில் கம்புகள், பந்தல் ரெடி.

இது குட்டையான புடலை ஜாதி. விதை இங்கே கோவை விவசாய பண்ணையில் வாங்கியது. ஒரு காய் 300 முதல் 500 கிராம் வரை  இருக்கிறது. பொதுவாக ஒரு செடி என்று விடாமல், மூன்று நான்கு செடிகள் விட்டால் நிறைய காய்கள் கிடைக்கும். போன குளிர் காலத்தில் சுத்தமாக தாக்குப்பிடிக்க முடியாமல், நான்கு காய்கள் காய்த்து விட்டு கருகி விட்டது. ஆனால் இப்போது சம்மரில் கலக்கலாக காய்த்துக் கொண்டிருக்கிறது. வாரத்திற்கு இரண்டு காய்கள் தாராளமாக பறிக்க முடிகிறது.
    
எடுத்த சில படங்கள் கீழே,












Tuesday, May 22, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – ரோஜா


பொதுவாக ரோஜா செடி 10 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்கிறார்கள். காஷ்மீர் ரோஸ், பட்டன் ரோஸ், பன்னீர் ரோஸ், கொடி ரோஸ் என்று நிறைய வெரைட்டி கிடைக்கும். தோட்டம் ஆரம்பித்த போது கிட்டத்தட்ட 25 ரோஜா வெரைட்டி வைத்திருந்தேன். எல்லா நிறத்திலும் எங்கு பார்த்தாலும் ரோஜா தான். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று வண்ண மயமாய் இருந்தது. தொட்டியிலும் தரையிலும் ரோஜா செடிகள் இருந்தது. ஆனால், நிறைய ஒட்டு செடிகள் ஒரு வருடத்தில் எதாவது ஒரு நோயில் பட்டுப்போய் விடுகின்றன. 

ரோஜா என்றால் இந்த ரோஸ் நிறத்தில் பூக்கும் பன்னீர் ரோஜா தான். அவ்வளவு அழகும் மனமும் இருக்கிறது. எந்த பிரச்சனையும் இல்லாமல் வருடம் முழுவதும் கொத்து கொத்தாக பூத்து கொண்டிருக்கிறது. நிறைய பேர் என் வீட்டில் வந்து இந்த ரோஜா இதழ்களை பறித்துக்கொண்டு போவார்கள். 

ரோஜா செடி பராமரிக்க இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வருடம் கொஞ்சம் இதற்கென நேரம் செலவிட்டு மறுபடியும் எல்லா ரோஜா செடியும் வைத்து ஒரு தோட்டம் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன். 

இப்போது என் தோட்டத்தை அழகு படுத்திக் கொண்டிருக்கும் பன்னீர் ரோஜா சில கீழே,

கொத்து கொத்தாய் ஒரு கிளையில் மொட்டுக்கள்,



தொட்டியில் பூத்துக்குலுங்கும் மலர்கள்,






அழகாய் பூக்கள்,







கீழே பார்ப்பதும் பன்னீர் ரோஜா தான். இது ரொம்ப அடர்த்தியான பூ. மனமும் அதிகம்.