Saturday, June 29, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – எலுமிச்சை


பதிவுக்கு போவதற்கு முன்பு ஒரு தகவல். கோவையில் இருப்பதில் ஒரு நன்மை இங்கே இருக்கும் விவசாய கல்லூரி. உரம், விதைகள் என்று தோட்டத்திற்கு வேண்டிய பொருள்கள் தரமாக வாங்க முடியும். இன்னொன்று, கோவையில் வருடா வருடம் கொடிசியா வளாகத்தில் நடக்கும் அக்ரி இன்டெக்ஸ் (Agri Intex). இது ஒரு விவசாய கண்காட்சி (விழா எனலாம்). 

இந்த வருடம் ஜூலை 11  ல் இருந்து ஜூலை 14 வரை.


கண்டிப்பாய் போய் பாருங்கள் (நான் இரண்டு நாளும் அங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பேன்). விவசாயம், தோட்டம் பற்றி ஆர்வம உள்ள அனைவரும் தவறாமல் காண வேண்டிய ஒரு கண்காட்சி. இங்கே வந்தால் தான், இந்தியாவில் விவசாய துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று காணலாம். தோட்டத்திற்கு வேண்டிய அத்தனை பொருள்களும் (செடிகள், விதைகள், Tools, விவரங்கள்) கொட்டிக் கிடக்கும். 2012 அக்ரி இன்டெக்ஸ் பற்றி இந்த பதிவில் எழுதி இருக்கிறேன்.

இப்போ எலுமிச்சை பற்றி, நாம் தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும், ஒரு சில செடிகள் நமக்கு ரொம்ப விசேஷமாய் இருக்கும். அப்படி எங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த எலுமிச்சை செடிக்கு ஒரு தனி கவனம் எப்பவுமே இருக்கும். காரணம், நான் வாங்கிய செடிகளிலேயே ரொம்ப விலை கொடுத்து வாங்கிய ஒரு செடி இது தான். இங்கே, கணபதியில் ஒரு நர்சரி கார்டனில் ரோஜா வாங்க சென்ற போது, ஒரு எலுமிச்சையும் வாங்கலாம் என்று இதை பார்த்தோம். இது ஏதோ ஆஸ்ரேலியன் எலுமிச்சை (நம்ம ஊர் கொடி எலுமிச்சை தான்) என்றார்கள். வழக்கம் போல ‘நன்றாக காய்க்கும் என்று சான்றிதல். செடியின் விலை ரூ.280 என்றார்கள். நான் இதுவரை ஐம்பது ரூபாய்க்கு மேல் செடியே வாங்கியது இல்லை. ரூ.280 என்றால் ரொம்பவே அதிகம். இருந்தாலும், ஒரு ஆசையில் வாங்கி வந்தேன்.

வாங்கி வந்து வைத்த பிறகு, ஒரு வருடம் தரையை விட்டு மேலே வரவே இல்லை. வைத்த மாதிரி அப்படியே நின்றது. ரூ.280 மொய் தான் போல என்று நினைத்துக் கொண்டேன். கொடுத்த காசுக்காக இந்த செடிக்கு, உரம் வைப்பதில் இருந்து தண்ணீர் விடுவது வரை, எப்பவுமே தனி கவனம் இருக்கு. இரண்டாவது வருடம் செடியாய் இருக்கும் போதே ஒன்றிரண்டு பூக்கள் வந்தது. காய்க்க விடாமல் கிள்ளி போட்டுவிட்டேன். செடி இன்னும் கொஞ்சம் நன்றாக வளரட்டும் என்று.

எலுமிச்சையில் இலையை சாப்பிடும் ஒரு விதமான புழு வரும். நாம் பார்த்து நீக்கி விட்டால் போதும். தினமும் லேசாய் கவனித்து வந்தால் போதும். மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல மற்ற செடிகளுக்கு வைக்கும் உரம் (மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு) போதுமானது. வேறு எந்த தனி கவனமும் தேவை இல்லை.

இந்த வருடம் செடி நிறைய கிளைகள் வந்து ஓரளவு உயரம் வந்தது. நிறைய பூக்கவும் செய்தது. இந்த வருடத்தில் இருந்து அறுவடை எடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூத்தது. திராச்சை கொத்து மாதிரி கிளை நுனியில் ஏழெட்டு காய்கள் கொத்தாய் காய்க்க, மேலே போன கிளைகள் எல்லாம் தரையை நோக்கி வந்து விட்டன. 

இந்தமுறை கிட்டத்தட்ட மொத்தம் 60 காய்கள் காய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் பெரிதாய் 50 gm ல் இருந்து  100 gm வரை இருக்கிறது. கொடுத்த விலைக்கு, எதிர்பார்த்ததை விட எக்கச்சக்கமாய் காய்த்திருக்கிறது. போன வாரம் அறுவடை செய்தாகிவிட்டது. ஒரு நாற்பது காய் பறித்தோம். மொத்தம் 2 ½ கிலோ இருந்தது. இன்னும் ஒரு கிலோ போல் செடியில் கிடக்கிறது. பறித்ததில் ஒரு பெரிய கொத்தில் எட்டு காய்கள் (600 gms இருந்தது). காய்த்திலேயே பெரியதானது. வழக்கம் போல ஜூஸ் போடவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்திக் கொண்டோம்.Monday, June 10, 2013

தோட்டம் 2012 – Part-3 (HITS – Vegetables)தக்காளி, சின்ன வெங்காயம் விலை எல்லாம் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த பதிவு பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன் :-). போனவாரம் இங்கே தோட்டத்தில் ஒரு கிலோ போல சின்னவெங்காயம் கிடைத்தது. இன்னும் இரண்டு பாத்திகளில் வெங்காயம் தயாராக நிற்கிறது. கிலோ 100 விற்கும் போது இந்த மாதிரி ஒரே மூணு கிலோ கிடைத்தாலும் வீட்டில் ரொம்ப சந்தோசமா ஆகிடறாங்க (நமக்கு பாராட்டு வேற :-)). ஆனால் சில நேரம் தக்காளி காய்த்து கொட்டிக் கிடக்கும் போது, கடையில் ஒன்னரை கிலோ பத்து ரூபாய்க்கு வித்துக்கிட்டு இருக்கும். எது எப்படி என்றாலும், நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து பறித்து சமைத்து சாப்பிடுவதில் ஒரு தனி சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது. போன வருடம் தோட்டத்தில் விளைந்த சில காய்கறி ஹிட்ஸ் இங்கே.

தோட்டத்தில் முதன்மை காய்கறிகளாக தக்காளி, கத்தரியை கூறலாம். இரண்டிலும்  நாட்டு ரகமும் உண்டு, ஹைப்ரிட் வகைகளும் உண்டு. பொதுவாய் கடைகளில் கிடைக்கும் விதைகள் ஹைப்ரிட் வகைகளாக தான் இருக்கின்றன. நாட்டு ரகம் வேண்டும் என்றால் கடையில் வாங்கும் பழத்தின் விதைகளை போட்டு உருவாக்கலாம். கத்தரியில் தான் நாட்டு ரகம் (வெள்ளை) கொண்டு வருவதற்குள் இரண்டு வருடம் ஆகிவிட்டது. கத்தரி வளர்ந்து காய்க்கவே நான்கு-ஐந்து மாதம் ஆகி விடும். ஆனால் நீண்ட நாள் காய்த்துகொண்டு கிடக்கும்.

இரண்டாவதாக முக்கிய காய்கறிகள் என்று பார்த்தால் வெண்டை, அவரையை கூறலாம். எல்லா பருவத்திலும் காய்க்கும். விதை, எல்லா உரக்கடைகளிலும், சில நர்சரி கார்டன்களிலும் கிடைக்கும். வெண்டை விதைத்து இரண்டு மாதத்திலேயே அறுவடை கிடைக்கும். கொஞ்சம் திட்டம் இட்டு விதைத்தால் வருடம் முழுவதும் வெண்டை, அவரைக்கு கடைக்கு செல்ல வேண்டியதில்லை  


முட்டை கோஸ், காலி ஃப்ளவர், கேரட் எல்லாம் ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தது தான். எந்த வித பிரச்சனையும், நோயும் இல்லாமல் வந்தது ஆச்சரியம். இதன் விதைகள் பொதுவாக பொருள்காட்சி, கண்காட்சி நடக்கும் இடங்களில் விதை கடை இருந்தால் அங்கே கிடைக்கிறது. விளைச்சல் குறைவாக தான் கிடைக்கும். அதை விளைவிக்க ஆகும் நாட்களை கணக்கு பார்த்தால், ரெகுலராக தோட்டத்தில் வளர்ப்பது தேவை இல்லை தான் (நிறைய இடம் இருந்தால் போட்டு விடலாம்). தேங்காய், இடம் இருந்தால் இரண்டு தென்னை வைத்து விடலாம். சிலர் வீட்டில் தென்னை வளர்ப்பதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள் (காற்றில் மட்டை, தேங்காய் விழுந்து காயப்படுத்தலாம் என்று). வீட்டில் தென்னை இன்னும் கொஞ்சம் உயரே போனதும் கீழே மொத்தமாய் கம்பி வலை அமைத்து விடலாம் என்றிருக்கிறேன். வீடு வாங்கும் போதே இரண்டு தென்னைகளும் இருந்தன. எனவே வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டேன். இளநீருக்கும், தேங்காய்க்கும் வீட்டில் பஞ்சம் இல்லை.  ஒரு தென்னை நன்றாக காய்கிறது. இன்னொன்று இப்போது தான் காய்க்க ஆரம்பித்திருக்கிறது. 

வெங்காயம், கிலோ 100 ரூபாய், 110 ரூபாய் என்றெல்லாம் போய்விட்டது. சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை விவசாய கல்லூரியில் கிடைக்கிறது. பெரிய வெங்காயம் விதை நானே ஒரு செடியை பூக்க விட்டு உருவாக்கினேன் (முந்தைய வெங்காயம் பற்றி பதிவில் விவரமாக எழுதி இருக்கிறேன்). நாற்று தயார் செய்து பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு நடலாம். விதைத்து நான்கு-ஐந்து மாதத்தில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். இதுவரை நோய் என்ற பிரச்சனை வந்ததில்லை. கடையில் வாங்கும் சின்ன வெங்காயத்தை கூட முளைக்க வைத்து வளர்க்கலாம்.


சுண்டைக்காய், இது ஒரு காட்டு செடி மாதிரி தான். அது பாட்டுக்கு வளர்ந்து காய்த்து கொண்டு கிடக்கும். எந்தவித பராமரிப்பும் தேவை இல்லை. மரம் போல பெரிதாய் வரும். அதனால் அதற்கு ஏற்றார் போல இடம் தெரிவு செய்து நடவும். இதை மோரில் ஊற வைத்து, வற்றலாக்கி பொறித்து சாப்பிடலாம். இப்போது வீட்டில் இதை வைத்து துவையல் எல்லாம் செய்கிறார்கள். கசப்பு எல்லாம் இல்லை. தவிர, இதை சில முறைகளில் வடாகம் கூட செய்ய முடிகிறது. ஒரு செடி, நம் தேவைக்கு மிக அதிகமாகவே காய்கிறது.
வீட்டுத் தோட்டத்தில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டியது கீரைகள். வளர்க்க எளிதானதும் கூட. இங்கே தோட்டத்தில் முக்கியமாக மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முருங்கை கீரைகள் வருடம் முழுவதும் கிடைத்துக்கொண்டு இருக்கும். மணத்தக்காளி பழுத்தவுடன் அதில் இருந்து விதைகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். பொன்னாங்கண்ணி சின்னதாய் ஒரு குச்சி ஒடித்து வைத்தால் வந்துவிடும். மாடியில் தொட்டியில் அழகாய் வளர்கிறது. தேவை படும் போது வெட்டி எடுத்துக்கொள்ளலாம். தானாக தளிர்த்து வளர்ந்து கொள்ளும். அரைக்கீரை/சிறுகீரை விதைகள் நிறைய உரக்கடைகளில்  கிடைக்கும். அரைக்கீரைகளில் கொஞ்சம் பூச்சி அரிப்பு வருகிறது. சாம்பலை தூவி கட்டுபடுத்தலாம்.

2013 புதுவரவுகள் வெள்ளை கத்தரி – ஒரு வழியாய் பல முயற்சிகளுக்கு பிறகு வெள்ளை கத்தரி கொண்டு வந்திருக்கிறேன். ஊரில் சந்தைக்கு போனால் நம்மை பளீரென்று வரவேற்பது இந்த வெள்ளை கத்தரி தான். ஆனால் இங்கே கோவையில் எந்த கடையிலும் கிடைப்பது இல்லை. வெள்ளை கத்தரி விதை என்று கடையில் சொல்லி கொடுத்ததெல்லாம் கடைசியில் ஊதா நிறமாக தான் வந்திருக்கிறது. கடைசியில் இந்த வருடம் வெற்றிகரமாக விளைவித்தாகி விட்டது .அதனால் முதல் காயை விதைக்கு விட்டு விட்டேன்.கரும்பு – போன வருடம் முயற்சித்து உருப்படவில்லை. இந்த வருடம் ஓரளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இறுதியில் விளைச்சல் எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.