Friday, May 24, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கொண்டை கடலைஇங்கே கோவையில் ஆபிசுக்கு வரும் வழியில் நிறைய விளைநிலங்களை பார்க்கலாம். ஆனால் பெரிதாய் ஏதும் நடுவதில்லை. பொதுவாய் கால்நடை தீவன பயிர்கள் அல்லது கொண்டை கடலை. இவை இரண்டும் தான். நீர் ஆதாரம் அவ்வளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். இந்த கொண்டை கடலை செடியை ‘இது என்னவாய் இருக்கும் என்று வரும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே வருவேன். செடியில் சின்னதாய் குண்டு குண்டாய் தொங்கி கொண்டிருக்கும் பை போன்ற காய்கள். அந்த பைக்குள் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. ஒருநாள் வரும் போது பைக்கில் இருந்து வயலில் இறங்கி காயோடு இரண்டு செடிகளை பறித்து வந்தேன். பார்த்தால் கொண்டை கடலை. நான் கொண்டை கடலை பீன்ஸ் மாதிரி காய்க்கும், உள்ளே வரிசையாய் கடலை இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்படி தனி தனி கடலைக்கு கவர் எல்லாம் போட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை :-) . அதை பறித்து வந்து இங்கே Project  மக்களிடம் ஒரு போட்டி வேறு வைத்தேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை (என்னடே, கோவில்ல நல்லா சுண்டல் வாங்கி திங்கறீங்க. சுண்டல் எப்படி காய்க்கும்னு தெரியாதா :-) )

தோட்டத்தில் ஒரே வகை காய்கறிகளை பயிரிட்டால் நிலம் மேம்படாது. ஒவ்வொரு செடியும் வெவ்வேறு சத்துக்களை நிலத்தில் இருந்து எடுக்கும், அதே சமயம் வெவ்வேறு சத்துக்களை நிலத்திற்கு அளிக்கும். அதனால் ஒரே இடத்தில் வேறுவேறு செடிகளை பயிரிடுவது அவசியமாகிறது. அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும். நிலமும் பன்பட்டிருக்கும். ஒரு முறை தக்காளி போட்டால், அடுத்த முறை அதே இடத்தில் அவரை போடலாம், அடுத்த முறை வெண்டை. இப்படி பயிர் சுழற்சி (crop rotation) மிக அவசியம்.

பட்டாணி, அவரை, கொண்டை கடலை பயிர்களில் வேர்முண்டுகள் (root nodules) பற்றி படித்திருப்போம். இவைகள் மண்ணில் நைட்ரஜன் சுழற்சிக்கு (Nitrogen fixation) பெரிதும் உதவுகின்றன. பயிரிடப்படும் மண்ணுக்கு மீண்டும் நைட்ரஜன் சக்தியை மீட்டு வளர்ந்த மண்ணை வளமாக்கும். இவற்றின் வேர்களில் வளரும் ஒருவித பாக்டீரியா காற்றில் உள்ள நைட்ரஜனை செடிகளுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி வேர் முண்டுகளில் (root nodules) சேர்த்து வைக்கும். அதனால் பயிர் சுழற்சியில் இவைகள் முக்கியமான பயிர்கள்.

நான் கொண்டை கடலை பயிரிட்டது இந்த காரணமாக தான். மற்ற படி கொஞ்சமாய் பயிரிடும் போது பெரிதாய் மகசூல் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு செடியில் பத்தில் இருந்து இருபது வரை மட்டுமே கடலை காய்க்கிறது. இவைகள் வறட்சியை தாங்கி வளரும் செடி. அதனால் இங்கே பாசனம் இல்லாமலேயே அறுவடை செய்கிறார்கள். மழை காலத்தில் விதைக்கிறார்கள். நீர்பாசனமே கிடையாது. மழையிலும், டிசம்பர் மாத பனிபொழிவில் வளர்த்து விடுகிறது.

விதை என்று தனியாக வாங்க வேண்டியதில்லை. கடையில் வாங்கும் கொண்டை கடலையில் கொஞ்சம் எடுத்து விதைக்க வேண்டியது தான். நான் கருப்பு கடலை எடுத்து விதைத்தேன். எடுத்து அப்படியே விதைக்க வேண்டியது தான். வாரம் ஒரு முறை லேசாய் நீர் விட்டால் போதும். காய்த்து செடிகள் எல்லாம் காய ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வேறு எந்த பராமரிப்பு தேவை இல்லை. முக்கியமாக அறுவடைக்கு பிறகு வேரோடு செடியை அதே பாத்தியில் தோண்டி வைத்து விடவும்.

தோட்டத்தில் இருந்து சில படங்கள்
Monday, May 6, 2013

தோட்டம் 2012 – Part-2 (HITS – Flowers)


பழங்களுக்கு அடுத்த படியாக பூக்களை பார்க்கலாம். கலர்புல்லா ஒரு பதிவு.இதில் கொடுக்கபட்டுல சில படங்கள் Photography என்ற வகையில் என் தோட்டத்தில் நான் முயற்சி செய்த சில படங்கள்.

ஜாதி(பிச்சி)ப் பூ:

இடம் இருந்தால் நம்ம ஆளுங்க முதலில் வைக்க ஆசைப்படும் ஒரு பூ. இதை பற்றி விவரமாக முன்பே எழுதிவிட்டேன். சொந்தகாரர் வீட்டில் இருந்து பதியம் போட்டு கொண்டு வந்த கொடி, சீசனில் 2000 பூக்கள் வரை பறித்திருக்கிறோம். கடையில் வாங்குவதை விட, பதியம் போட்டு கொண்டு வரும் போது அந்த செடி கொடுத்தவரின் நினைவாக இருப்பதும், அவர்கள் வீட்டுக்கு வரும்போது ‘நான் கொடுத்த செடி தானே என்ற சந்தோசமும் கூடுதல். பொதுவாய் ஜூலை ஆகஸ்ட்-ல் பூக்க ஆரம்பிக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து பூ கிடைக்கிறது. சீசன் முடிந்ததும் கிளைகளை வெட்டி விடுவது அவசியம். இதில் பூச்சி தொல்லை என்று ஏதும் இது வரை பார்த்ததில்லை. 
ரோஜா

ரோஜாவை பொதுவாய் இரண்டு வகை படுத்தலாம். நாட்டு ரோஜா (பன்னீர் ரோஜா), மற்றொன்று ஓட்டு வகைகள் (ஹைப்ரிட்). இதில் நிறத்திலும் சரி, மணத்திலும் சரி நாட்டு ரோஜா அருகில் எந்த ஹைப்ரிட் ரோஜாவும் வரமுடியாது. பன்னீர் ரோஜா இதழ்களை குழந்தையை குளிப்பாட்டும் போது அரைத்து பூச சிலர் பறித்து போவார்கள். இதழ்களை பறித்து உலர வைத்து தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். 

ஹைப்ரிட் ரோஜா வாங்கும் போது செழிப்பாக வருகிறது. ஒரு தடவை பூத்த பிறகு தான் எல்லா பிரச்சனையும் ஆரம்பிக்கிறது. இலைகள் பழுத்து போவது, பூக்கள் மொட்டிலேயே கருகுவது, செடி வளர்ச்சி இல்லாமல் போவது என்று எக்கச்சக்க பிரச்சனைகள். இதனால் வைத்த நிறைய ஹைப்ரிட் செடிகளை ஒரு கட்டத்திற்கு பிறகு பிடுங்கி போட்டுவிட்டேன். இங்கே நர்சரி கார்டன்களில் ரோஜாவுக்கென்று நிறைய உரம் விற்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் பெரிதாக வேலைக்காகவில்லை. ஹைப்ரிட் செடிகளுக்கு உப்பு தண்ணீர் (போர் தண்ணீர்) சரி வராது. நல்ல தண்ணீர் (சப்ளை செய்யப்படும் ஆற்று நீர்) தான் சரிவரும் என்று நண்பர் ஒருவர் கூறினார். இதை முயற்சித்து பார்க்க வில்லை.  

இப்போது நிறைய நாட்டு ரோஜாக்கள் தான் இருக்கிறது. தொட்டியில் வைத்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதும் வெட்டிவிட்டால் செழுசெழு என்று தளிர்த்து, கொத்து கொத்தாக போகிறது. உரம் என்றோ, பராமரிப்பு என்றோ பெரிதாய் ஒன்றும் கிடையாது. கீழே இருக்கும் படம் போன மாதம் எடுத்தது தான். 

 


 ரோஜாவில் இன்னொரு பயன், நிறைய படங்கள் எடுக்கலாம். அப்படி முயற்சி செய்த சில படங்கள். 


செம்பருத்தி மற்றும் தங்கஅரளி (மஞ்சள் அரளி)

செம்பருத்தி. பார்க்க ரொம்ப சாதாரணமாக தெரியும் ஒரு பூ. ஆனால் நிறைய பயன்கள். வீட்டின் முன் கேட்டுக்கு வெளியே இடப்புறம் ஒரு செம்பருத்தியும், வலப்புறம் தங்கஅரளி (மஞ்சள் அரளி) ஒன்றும் வைத்து விட்டேன்.

செம்பருத்தியில் கூட இப்போது ஹைப்ரிட் கிடைக்கிறது. மஞ்சள் நிறம், பிங்க் நிறம் என்று நிறைய நிறத்தில் கிடைக்கிறது. ஆனால் அவைகள் எல்லாம் வெறும் பார்வைக்கு தான். மருத்துவ குணம் ஓன்று கூட கிடையாது. செம்பருத்தியின் பயன்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். முதலில் நினைவுக்கு வருவது முடிவளர ஒரு சிறந்த மூலிகை பூ. பூக்களை பறித்து காய வைத்து எண்ணையில் காய்த்து பயன்படுத்துவார்கள். செம்பருத்தி இலையை பறித்து அரைத்தும் தலையில் தேய்த்தால் முடிக்கு நல்லதாம். நிறைய பேர் பறித்து போவார்கள். 

பூவை பக்கத்து பிள்ளையார் கோவிலுக்கு பறித்து போவார்கள். வீட்டில் பூவை பறித்து நீர் ஊற்றி அவித்து குளிர வைத்து ஜூஸ் கூட செய்யலாம் (பக்கத்து வீட்டில் கேட்டு தெரிந்து கொண்டது). ஜூஸ் நன்றாக தான் இருக்கிறது. நல்லதும் கூட. செம்பருத்தி பூவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. தினமும் ஓன்று அல்லது இரண்டு பூக்களை சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்லது (Hibiscus can effectively lower high blood pressure and reduce high cholesterol levels)தங்கஅரளி பூ அழகாய் மஞ்சளாய் வீட்டை அலங்கரித்து நிற்கும். இதை பூஜைக்கும் பறித்து போகிறார்கள். தவிர நிறைய சின்ன சின்ன பறவைகள் (தேன்சிட்டு போல) இந்த பூக்களில் இருந்து தேன் எடுப்பதை பார்க்க முடிகிறது. அதனால் இந்த மரத்தில் எப்பவும் நிறைய குருவிகளை பார்க்கலாம்.


வெல்வெட் பூ

இதன் பெயர் சரியாக தெரியவில்லை. நாகர்கோவிலில் இருந்து சொந்தகாரர் ஒருவர் 
கொடுத்தது. வெல்வெட் பூ என்று பெயர் சொல்லி கொடுத்தார்கள். சின்னதாய் சில குச்சி மட்டும் கொடுத்தார். வைத்தவுடன் தளிர் விட்டு வந்துவிட்டது. செடி பார்ப்பதற்கு புல்செடி மாதிரி சாதரணமாய் தெரிந்தாலும், பூ அவ்ளோ அழகு. கருஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கிறது. 2013 ல் புது வரவுகள்  

இந்த வருடம் தோட்டத்தை அலங்கரிக்க புதிதாக இந்த பூக்களை சேர்த்திருக்கிறேன். விவரமாக வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

முல்லை (கொடி)

மல்லி பூ 


பவள மல்லி


சாமந்தி