Sunday, October 25, 2015

மாடித் தோட்டம் – Part-2 (Growing Media – வளர்ப்பு ஊடகம்)விகடனில் எனது ப்ளாக் பற்றி பார்த்து வந்த சில அழைப்புகளை வைத்து இன்றைய ‘மாடித்தோட்டம்’ நிலவரம் பற்றி நிறைய புரிந்து கொள்ள முடிந்தது. ‘பிதாமகன்’ சூர்யா ரேஞ்சில் ‘வாங்க சார். வாங்க. விட்டா கிடைக்காது. போனா வராது’ என்று மாடித் தோட்டம் அமைத்துக் கொடுக்க கிளம்பி இருக்கும் கூட்டம் ஒரு புறம், 36 வயதினிலே பார்த்து விட்டு எப்படியும் சில கல்யாண வீட்டு ஆர்டர்களை பிடித்தே தீருவது என்று கூட்டம் மறுபுறம். இவர்களுக்கு இடையில் என்னை போல ‘நம்மளையும் எல்லாவற்றுக்கும் அலைய விட்ருவாய்ங்களோ’ என்று கவலையில் ஒரு கூட்டம்.

சில அழைப்புகளை இங்கே பதிகிறேன். யாரையும் புண்படுத்தவோ, கிண்டல் செய்யவோ பதியவில்லை. இப்போதைய நிலவரத்தை புரிந்து கொள்ளவே பதிகிறேன்.  

அழைப்பு - 1     

20 ஆயிரம் செலவு செய்தேன். பத்துக்கு பத்து அளவில் Share Net  எல்லாம் அமைத்து இருபது பையில் செடியோடு வைத்து விட்டு போனார்கள். இரண்டு வாரம் நல்லா இருந்த செடிகள் இப்போது வளர்ச்சியே இல்லாம நிக்குது. ஏன்னே தெரியல’

பைகளில் என்ன என்ன கலந்தார்கள் என்று தெரியுமா? என்று கேட்டதற்கு ‘தெரியலையே. எல்லாமே கலந்து கொண்டு வந்து அப்படியே செட் செய்து விட்டு போய்விட்டார்கள். கேட்கவும் இல்லை. இப்போது போனில் அழைத்தால் எடுக்க மாட்டேங்கிறார்கள்.’

அழைப்பு – 2

3700 ரூபாய் வாங்கிக் கொண்டு இருபது பைகளில் செடியோடு வைத்து விட்டு போனார்கள். செடி எல்லாமே பழுத்து போய் வாடி நிற்கிறது. என்ன செய்றது’

என்னிடம் இருந்து அதே கேள்வி “பைகளில் என்ன என்ன கலந்தார்கள் என்று தெரியுமா?”

“வெறும் களிமண் தான். கிளறி பார்த்தால் கண்ணாடி சில்லு எல்லாம் இருக்குது. அவர்களை அழைத்துப் பார்த்தால் எடுக்க மாட்டேன்கிறார்கள்’

கொடுமைக்கு எங்கோ ரோட்டோரத்தில் உள்ள மண்ணை பைகளில் நிரப்பி 3700 ரூபாயை வாங்கிக் கொண்டு போய் இருக்கிறார்கள்.

அழைப்பு – 3

“முளைத்து ரெண்டு வாரமா நல்லா தான் வந்தது. அப்புறம் அப்படியே நிற்கிறது”

அதே கேள்வி “பையில் என்னவெல்லாம் கலந்து வைத்தீர்கள் மேடம்?”

“காயிர் பித் மட்டும் தான் சார்”

“வெறும் காயிர் பித் மட்டும் தானா. அப்புறம் உரம் கூட போடவில்லையா?”

“இல்லைங்க. அப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க”

இதற்கு பெயர் தான் உயிரோடு வைத்து கொல்வது. பாவங்க அந்த செடி, சீக்கிரம் கொஞ்சம் மண்புழு உரம் போட்டு விடுங்க என்று சொல்லி வைத்தேன்.

அழைப்பு - 4

மேலே உள்ள அழைப்புகளை எல்லாம் விட நான் மிகவும் அதிர்ச்சியான ஒரு அழைப்பு

“விகடன்ல உங்க பேட்டி பார்த்தேன் சார். அந்த பச்சக் கலர்ல பை எல்லாம் இருக்குது இல்லையா. அது எல்லாம் எங்கே சார் கிடைக்கும். அதுல மண் போட்டா செடி நல்லா வருமா சார். நல்லா லாபம் வருமா சார் (யாருக்கு???)”

அவர் கேட்கும் தோரனையை பார்த்து ‘வாழ்க்கைல செடியே வளர்த்திர்க்க மாட்டார்’ என்ற ஒரு டவுட்டில் “எதுக்கு கேக்கறீங்க” என்று கேட்டேன்.

“மாடித் தோட்டம் அமைச்சி கொடுக்கறத ஒரு பிசினஸ் மாதிரி பண்ணலாம்னு இருக்கேன். நல்லா போவுதா சார்”  என்றார்

“கவலையே படாதீங்க. உங்களுக்காக தான் பல கஸ்டமர்ஸ் வெயிட்டிங். சீக்கிரம் வந்து ஜோதில ஐக்கியமாகுங்க. லேட் பண்ணாதீங்க. அலர்ட் ஆகி கூட்டம் கலைஞ்சிற போவுது” என்று சொல்லி வைத்தேன்.

மேலே கூறிய யாரையும் குற்றம் சொல்ல முடியாது. நான் முன்பு கூறிய மாதிரி நிறைய பேருக்கு தோட்டம் மீது நிஜமான ஈடுப்பாட்டை விட, எங்க வீட்டிலும் மாடித் தோட்டம் இருக்கு, நாங்களும் ஆர்கானிக் காய்கறி பறிக்கிறோம் என்ற கூட்டத்தில் உறுப்பினராய் சேரும் ஆர்வம் மட்டுமே இருக்கிறது. செடிகளைப் பற்றியோ, தோட்டம் பற்றியோ சில அடிப்படை புரிதல்களை தெரிந்து கொள்ளாமல் ஆரம்பித்து தோல்வியில் முடிகிறது.  உண்மையாகவே ஆர்வம் இருப்பவர்கள் சிலர், லேகியம் விற்கும் கூட்டத்திடம் மாட்டி தப்பு தப்பாய் முயற்சி செய்து தோல்வியில் முடிகிறது.

எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்.

இங்கே கோவையில் மாடித்தோட்டம் கம்பெனிகளுக்கு குறைவு கிடையாது. தொடக்கத்தில் இங்கே ஒரு கண்காட்சியில் பார்த்து, ஒரு கம்பெனிக்கு நேரில் போய் விசாரித்தேன். 3/4 அடி அளவில் ஒரு Polythene Grow Bag (இருபது ரூபாய் பெறும்), அதன் உள்ளே ஒரு கிலோ அளவில் (800 grams) ஒரு காயிர் பித் கட்டி (இது ஒரு இருபது ரூபாய்). அது தவிர மேகி நூடுல்ஸ் உள்ளே சின்னதாய் பவுச் இருக்குமே அது மாதிரி ஒரு ஐந்து பவுச். என்னவென்று கேட்டதற்கு கடல்பாசி சாறு (extract)  என்றார்கள்.  அப்புறம் பத்து ரூபாய் விதை பாக்கெட்டை பத்தாய் பிரித்து அதில் ஒரு விதை பாக்கெட். எல்லாம் சேர்த்து விலை வெறும் Rs.200 தான்.  


வெறுமனே காயிர் பித்தில் செடியை வைத்து வாரம் ஒரு முறை அந்த பவுச்சில் இருக்கும் சாற்றை நீரில் கலந்து விட்டால் போதும் என்றார்கள். அஞ்சு பாக்கெட் என்றால் ஐந்து வாரம் தான் வரும். அஞ்சு வாரத்திலேயே காய்க்கிற மாதிரி ஏதும் கத்தரி, தக்காளி விதை கண்டுபிடித்திருக்கிறார்களோ என்ற டவுட்டில் ‘அஞ்சு வாரத்துக்கு அப்புறம் மேடம் என்ன செய்ய. அதுக்குள்ளே செடி எல்லாம் காய்க்காதே’ என்று கேட்டேன். ‘அதுக்கு தான் சார் இன்னொரு பவுடர் இருக்கு’. என்று ஆம்வே பாட்டில் மாதிரி ஒன்றை எடுத்தார்கள்’ (எந்த அமேசான் காட்டில் இருந்து இந்த அரியவகை முலிகைகளை கொண்டு வருகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்). ‘இத ஒரு ஸ்பூன் எடுத்து வாரம் ஒரு முறை நீரில் கரைத்து விட்டா போதும்’ என்றார்கள். ‘ஆர்கானிக்’ தான் என்றார்கள் (இத சொல்லலன்னா நாங்க எல்லாம் தெரிச்சி ஓடிருவோம்னு தெரியும் போல). அங்கே Booster, Stimulant, Shield என்ற பெயரில் எக்கச்சக்க ஐட்டங்கள் கூறினார்கள். நான் செடி வளர்க்க போவது எங்க வீட்டு மொட்டை மாடியிலா இல்லை International Space Station-னிலா என்று ஒரு சந்தேகம் வந்து போனது. எவனையும் சொந்தமாய் சிந்திக்க விடக்கூடாது, நாம் வளர்க்கும் ஒவ்வொரு செடிக்கும் அவர்களை நம்பியே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அப்படி என்ன தான் அந்த கடல்பாசி சாறு என்று தெரிந்து கொள்ள ஒரே ஒரு Kit மட்டும் வாங்கி வந்தேன்.

இவர்கள் தான் கோவையின் மாடித்தோட்ட முன்னோடிகள். ‘மாடித்தோட்டத்தை உய்விக்க வந்த உத்தமரே’ என்று சீக்கிரம் யாரேனும் பட்டம் இவர்களுக்கு கொடுக்கலாம் (இல்லை ஏற்கனவே கொடுத்திருக்கலாம்). இப்படி பட்டவர்களிடம் என்னை போல தொடக்கத்தில் சிக்குண்டு போனவர்கள் பட்டியல் நீளமாய் இருக்கும்.  


     
மேலே சொன்ன சம்பவங்கள் போதும் என்று நினைக்கிறேன். இப்போது பதிவுக்குள் வரலாம். மாடித் தோட்டம் தொடங்கும் அனைவருக்கும் வரும் முதல் கேள்வி, நான் எதை எல்லாம் கலந்து வளர்ப்பு மீடியா தயார் செய்ய வேண்டும் என்பது தான். இது தான் நம் தோட்டத்தின் முதுகெலும்பு எனலாம்.    

சிலர் Grow Bag-ல் வெறும் செம்மண், மணல் கலந்து ரோஸ் தொட்டி வைப்பது போலவே ஆரம்பித்து தோல்வியில் முடிகிறது (நானும் கூட தொடக்கத்தில் இதை செய்திருக்கிறேன்). செம்மண், மணல் மட்டும் மாடியில் வைத்து ஆரம்பித்தால், நீர் ஊற்ற ஊற்ற மண் இறுகி, செடி வளர்ச்சி இல்லாமல் போய் விடும். மாடித் தோட்டத்திற்கு என்று குறிப்பிட்டு இப்படித் தான் வளர்ப்பு மீடியா இருக்க வேண்டும் என்று யாரும் வரையறுக்க வில்லை. அவரவருக்கு ஒரு கலவை, அதில் ஓரளவுக்கு விலை குறைவாகவும் அதே சமயத்தில் நல்ல விளைச்சலும் கொடுக்கும் கலவையை எடுத்துக் கொள்கிறோம்.

வீட்டுத் தோட்டம் என்று போகும்போது அதை ஆர்கானிக் முறையில் அமைப்பது மிக அவசியம். NPK போன்ற சில இரசாயன உரங்களை பயன்படுத்தியும் சிலர் செய்கிறார்கள். பொழுதுபோக்கு (Hobby) என்ற வகையில் அது ஒன்றும் தப்பில்லை. அவர்கள் இரசாயன பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதை மட்டும் தவிர்த்து கொள்கிறார்கள். ஆனால் முழுவதுமே இயற்கை முறையில் தோட்டம் அமைக்கும் போது ஒரு முழு திருப்தி கிடைக்கிறது.

இயற்கை முறை எனும் போது நமக்கு நிறைய மண்புழு உரம் தேவைப்படுகிறது. நான் இது வரை மண்புழு உரம் தவிர வேறு ஒன்றும் பயன்படுத்தியதில்லை. தேவைப்பட்டதும் இல்லை. இயற்கை உரம் என்ற பெயரில் இப்போது கடைகளிலும், நர்சரிகளிலும் விதவிதமான உரங்கள் கிடைக்கிறது. கொஞ்சம் சாம்பலும், அதில் கொஞ்சம் இரசாயன NPK உரத்தை கரைத்து கலந்து விட்டால் தெரியவா போகிறது. போட்டால் செடி நன்றாக தான் வரும். அதனால் முடிந்த அளவுக்கு வெறும் மண்புழு உரம் கொண்டு அமைத்தால் போதும். நாமே பெரிய அளவில் காய்கறி கழிவுகளை கொண்டோ, மக்கிய சருகுகளை கொண்டோ உரம் தயாரிக்க முடிந்தால் அதையும் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக செம்மண். ஒரு செடி எல்லா விதத்திலும் நன்றாக வளர (வளர்ச்சி, பூப்பது, காய் பிடிப்பது, விளைச்சல்) கிட்டதட்ட 14  வித தனிமங்கள் தேவைப் படுகிறது. மண்புழு உரத்தில் அவை எல்லாம் இருக்கும் என்று கூற முடியாது. அப்படி எதாவது ஓன்று குறையும் பட்சத்தில் செடி ஏதாவது குறைவை காட்ட ஆரம்பிக்கும் (இலை பழுத்து போவது, பூ உதிர்வது, காய் வெம்பி போவது). அவை எல்லாமும் மண்ணில் இருக்கிறது. அதனால் தான் நல்ல செறிவுள்ள மண்ணில் வளர்க்கும் போது நாம் எதைப் பற்றியும் கவலைப்பட தேவை இல்லை. நாம் மாடித் தோட்டம் வளர்ப்பு ஊடகத்தில் (Growing Media) கொஞ்சம் செம்மண் கலந்து கொண்டால் தேவையான தனிமங்களை செடி அதில் இருந்து எடுத்துக் கொள்ளும்.

இப்போது ஒவ்வொன்றையும் எந்த விகிதத்தில் கலந்து நமது வளர்ப்பு ஊடகம் தயாரிப்பது என்பது அடுத்த கேள்வி. மாடித்தோட்டம் என்பது ஊடகங்களால் மாடியை விட மிக உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, தோட்டம் பொருட்கள் விலை எல்லாம் எதிர்பார்த்தது போலவே எகிறி விட்டது. இன்று Rs.100-க்கு வாங்கும் 5Kg Coir Pith Block, ஒரு வருடத்திற்கு முன்பு வரை Rs.50-க்கு கிடைத்தது. TNAU-ல் கிலோ Rs.5-க்கு ஒரு வருடத்திற்கு முன் கிடைத்த மண்புழு உரம், இப்போது கிலோ Rs.10. அதனால் நாம் தயாரிக்கும் ஊடகம் செடிக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதாகவும், அதே சமயத்தில் விலை அதிகமாக ஆகாதவாறும் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

“பொழுதுபோக்காக செய்யும் விசயத்துக்கு விலை எல்லாம் பார்க்க கூடாது” “நம்ம வீட்டிலேயே ஆரோக்கியமான காய்கறி கிடைக்குது. கணக்கு எல்லாம் பார்க்க கூடாது” என்பதெல்லாம் வியாபார உலகத்திற்கு மட்டுமே தேவையான ஒரு விவாதம். Rs.200 செலவு செய்து ‘Growing Kit’ என்ற பெயரில் ஒரே ஒரு பையை வாங்கி அதில் பத்து ரூபாய்க்கு கீரை வளர்ப்பது தேவையே இல்லை.  

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வளர்ப்பு ஊடகம் தயாரிக்க வேண்டும். எனது தோட்டத்தின் வளர்ப்பு மீடியா என்றால் grow bag-ன் அடி பாதி அளவு (ஒரு அடி grow bag என்றால் அரை அடி உயரத்திற்கு) வெறும் Coco Peat. மேல் பாதி Coco Peat, மண்புழு உரம், செம்மண் 2:2:1 விகிதத்தில் நன்றாக கலந்து நிரப்பிக் கொள்வது. எந்த விதமான Coco Peat ப்ளாக் என்றாலும் சிறியதாக உடைத்து ஒரு பக்கெட் நீரில் போட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து கையால் பிழிந்து எடுத்து பயன்படுத்தவும். Low EC, High EC, Washed, Un-Washed என்று நம்மை குழப்ப எக்கச்சக்க வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். Low-EC, Washed  ப்ளாக் என்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம். நான் இது வரை எது மலிவாக கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொள்வேன். எந்த ப்ளாக் வாங்கினாலும் ஒரு வாஷ் செய்தால் போதும். செடி வளர்ந்து வரும் போது வாரத்திற்கு ஒரு முறை, ஒரு உள்ளங்கை பாதி அளவுக்கு மண்புழு உரம் தூவி நீருற்றி விடவும். செடி பூக்க ஆரம்பித்ததில் இருந்து வாரம் ஒரு முறை ஒரு உள்ளங்கை அளவுக்கு மண்புழு உரம் போட்டு நீருற்றி விடவும். இதை தவிர உர மேலாண்மைக்கு நான் வேறு ஏதும் செய்வதில்லை.

எனது வளர்ப்பு ஊடகம் விகிதம் சரி தானா. இல்லை இதை விகிதம் குறைவாக மாற்றி (இன்னும் கொஞ்சம் விலை குறைவாக) விளைச்சல் எடுக்க முடியுமா என்று சின்னதாய் ஒரு ஆராய்ச்சி செய்து பார்த்தேன். மண்புழு உரம் மட்டும், செம்மண் மட்டும், மண்புழு உரம் + செம்மண் சம பங்கு இப்படி பல கலவைகளை எடுத்து ஒரே மாதிரியான செடிகளை வைத்து வளர்த்து பார்த்தேன்.

இதன் கூட சுபிக்ஷா ஆர்கானிக் (முந்தைய ‘Arjun Grow Bags’)  முறை ஒன்றையும் சேர்த்துக் கொண்டேன் (சுபிக்ஷா ஆர்கானிக் நிறுவனர் அர்ஜுன் அவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட ஒரு நல்லெண்ணம் உண்டு. இங்கே மாடித்தோட்டம் நிறுவனம் என்ற பெயரில் ஏகப்பட்ட கொள்ளை நிறுவனங்களுக்கு மத்தியில் உண்மையாகவே ஆர்வம் கொண்டு நிறைய முயற்சி செய்கிறார். நியாயமான விலையிலும் கொடுக்கிறார். அதை பிறகு ஒரு பதிவில் விவரமாக பகிர்ந்து கொள்கிறேன்). சுபிக்ஷா ஆர்கானிக் பரிந்துரைப்பது, வெறும் காயிர் பித் மட்டும் பைகளில் நிரப்பிக் கொள்வது (Growing Media என்று ஓன்று கிடையாது) , ஒவ்வொரு முறை செடிக்கு நீரூற்றும் போதும் பாதி உள்ளங்கை அளவு மண்புழு உரமும், அதில் பாதி அளவு இயற்கை உரமும் (அவர்களே அதை கொடுகிறார்கள். கிலோ Rs.30. கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவியா கலந்தது என்றார்கள்) தூவி தண்ணீர் விட்டு வந்தால் போதும் என்றார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை (இதை அவரிடமே பேசி இருக்கிறேன்). சரி அதையும் தான் செய்து பார்ப்போமே என்று சேர்த்துக் கொண்டேன்.

நான் எடுத்துக் கொண்ட கலவையும், அதன் முடிவுகளும் கீழே. வெறும் மண்புழு உரம், வெறும் செம்மண் மட்டும் உள்ள கலவையில் செடிகள் சரியாய் வரவில்லை. சில செடிகள் நோய் வந்தது போல வளர்ச்சி இல்லாமல் போயின, சில சாம்பிளுக்கு இரண்டு காய் காய்த்து விட்டு அப்படியே நின்று போனது. உருப்படியாய் வந்தது A, B மற்றும் C கலவை. இதில் C தான் நான் வழக்கமாய் பயன்படுத்தும் கலவை. முடிவு,  சுபிக்க்ஷா ஆர்கானிக் கூறும் முறை சரியாக தான் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாய் உரம் இட்டு வரவேண்டும். தவிர அவர்கள் கொடுக்கும் இயற்கை உரமும் வாங்க வேண்டும். வளர்ப்பு ஊடகம் என்று தனியாக தயாரிக்க நேரம், இடம் இல்லாதவர்கள் இதை  முயற்சிக்கலாம். கலவை – B ( பையின் கால் பகுதி மட்டும் வளர்ப்பு ஊடகம்) செடியும் கிட்டத்தட்ட கலவை – C மாதிரி வளர்ச்சி சீராக இருந்தாலும், விளைச்சலில் கொஞ்சமாய் குறைவாக இருந்தது. கலவை – C (எனது வழக்கமான கலவை. கீழ் பாதி வெறும் காயிர் பித், மேல் பாதி 2:2:1 என்ற அளவில் காயிர் பித் : மண்புழு உரம் : செம்மண்) வழக்கம் போல செடிகள் நல்ல ஆரோக்கியமாக வந்தது. நல்ல விளைச்சலும் கூட.
A - Type

B - Type

C - Type

D - Type

E - Type

F - Type

G - Type
 

நீங்கள் கூட வேறு சில காம்பினேஷன் முயற்சித்து நல்ல பலன் பெற்றிருக்கலாம். அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வளர்ப்பு மீடியா தயார் செய்வது பற்றி ஒரு வீடியோ பதிவு தயார் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வாரம் பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)

Saturday, October 10, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - வெள்ளரிப்பழம்முலாம்பழத்தை அடுத்து இந்த சீசனின் அடுத்த புது வரவு. இது வெள்ளரிக்காய் பதிவாக வரவேண்டியது, பழமாகி போனது ஒரு சின்ன குழப்பத்தில். அந்த குழப்பத்தால் ஒரு அருமையான பழத்தை பல வருடங்களுக்கு பிறகு ருசிக்க முடிந்தது.  

இந்த ஜூன் சீசன் தொடக்கத்தில் வெள்ளரியையும், சுரைக்காயையும் ஒரு பாத்தியில் போட்டு விட்டிருந்தேன். வெள்ளரி நன்றாக பிடித்து வளர்ந்து வந்தது. சுரைக்காய் இலையும் கிட்டதட்ட வெள்ளரி இலை போலவே இருந்ததால் பெரிதாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ளரி பூத்தாலும் பூ பிஞ்சி ஏதும் பார்க்க முடியவில்லை.

ஒரு நாள் கீழே படத்தில் இருக்கும் பிஞ்சி ஓன்று கண்ணில் பட்டது. அதன் வடிவத்தை பார்க்க ஏக குழப்பம். வெள்ளரிக்காய் மாதிரி இல்லை. கொஞ்சம் குடுவை வடிவத்தில் சுரைக்காய் மாதிரி இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் அதன் காம்பு பகுதியை பார்த்தால் வெம்பி விடும் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி ஏதும் நடக்காமல் காய் பெரிதாகிக் கொண்டே வந்தது. நன்றாக முற்றிய பிறகு தான் அது சுரைக்காய் இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு அதை பறித்து பயனில்லை என்று அப்படியே விட்டுவிட்டேன்.
அதுவும் முற்றி நிறம் கொடுக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு மஞ்சள் நிறம். ஒரு மஞ்சள் பையை, மேலே ஒரு முடிச்சு போட்டு கட்டித் தொங்க விட்டால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது பழம். பொதுவாய் கடைகளில் கிடைக்கும் வெள்ளரி அவ்வளவு மாவு தன்மை இருக்காது. அதனால் பழமும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்து பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நல்ல மஞ்சள் நிறம் கொடுத்ததும், லேசாய் அழுத்தி பார்த்து பழுத்து விட்டதென்று தெரிந்ததும் பறித்து வெட்டினால் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பழம் அவ்ளோ மாவாய் வெண்ணை மாதிரி, நல்ல மணத்தோடும். ஒரு ஸ்பூன்-அ வச்சி அப்படியே வெட்டி வெட்டி சாப்பிடலாம்.  

‘இந்த மாதிரி ஒரு பழத்தை சாப்பிட்டு ஒரு இருபது வருடம் இருக்கும்’ என்று எங்க வீட்டில் ஒரே சந்தோசம். எனது பள்ளிக் காலங்களில் ஊரில் பக்கத்து கிராமங்களில் (ஆழ்வார் தோப்பு, திருக்களூர்) இருந்து நார் பெட்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சி விற்க வருவார்கள். அப்போ சிலநேரம் இந்த மாதிரி வெள்ளரிப்பழத்தை ஒரு வாழை இலையில் சுற்றி கொண்டு வருவார்கள். அதை வாங்கி, சின்ன சின்னதாய் வெட்டி சீனி போட்டு சாப்பிடுவோம். எங்களுக்கு அவ்ளோ ருசியான ஒரு பண்டம் அது. பல காலங்களுக்கு பிறகு அப்படி ஒரு பழம் பார்க்க முடிந்ததில் இந்த சீசன் ஒரு சிறப்பு பெற்று விட்டது. அதுவரை சிலவற்றை பிஞ்சாக பறித்துக் கொண்டிருந்தோம். இந்த பழம் பறித்த பிறகு, எல்லாவற்றையும் பழுக்க விட்டே பறிக்க ஆரம்பித்தோம்.

இந்த விதை நாட்டு விதைகள் என்று நண்பர் பரமேசிடம் வாங்கியது. அவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி எல்லா சீசனிலும் தவறாமல் இடம் பெற போகும் ஒரு செடியாகி விட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு.