Friday, June 20, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – Carnation மற்றும் Dianthus

நம் தோட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு வரிசை. பொதுவாய் நான் காய்கறி செடிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பூக்கள் என்று பார்த்தால், பிச்சிப் பூ (ஜாதி பூ), முல்லை, நாட்டு ரோஜா, மல்லி, சாமந்தி தவிர பெரிதாய் ஏதும் வைக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, நாம் எங்காவது கண்ணை கவரும் விதை பாக்கெட்டை பார்த்துவிட்டால் கை நம நம என்று அரிக்கும். அதை வாங்கி நமது கலெக்க்ஷனில் சேர்த்தால் தான் நிம்மதி. அப்படித் தான், ஒரு கண்காட்சியின் போதும் கண்ணை கவரும் நிறைய நம்தாரி (Namdhari Seeds – NS) பூ விதைகள் கலெக்ஷனில் வந்து சேர்ந்தது. அப்படி கிடைத்தது தான் இந்த Carnation மற்றும் Dianthus பூ விதைகள். விதை வாங்கிய பிறகு தான் எங்கே வைக்க என்று இடம் தேடுவது எல்லாம் நடக்கும்.வீட்டை சுற்றி நாம் தோட்டத்திற்க்கு இடம் கைப்பற்றுவதே பெரிய கதையை இருக்கும். ஒவ்வொரு செடியாய் வர வர, மண்வெட்டியை வைத்துக்கொண்டு நாமும் சுற்றி சுற்றி எங்கே பாத்தி எடுக்கலாம் என்று நடந்து கொண்டிபோம். ‘துணி காய போடும் இடத்தையாவது விட்டு வைங்க. என்னால மாடிக்கெல்லாம் தினமும் நடக்க முடியாது என்று பதறி போய் வீட்டில் ஓடி வருவாங்க. நாமும் முடிந்த அளவுக்கு கொஞ்சமாய் நடக்க மட்டும் இடம் விட்டு எப்படியும் ஒரு பாத்தி அதிலும் ரெடி செய்து விடுவோம்.    

Carnation மற்றும் Dianthus பூக்களை பற்றி கூற வேண்டும் என்றால், இரண்டுமே கிட்டதட்ட ஒரே இனம் தான், மிக சில வித்தியாசங்களை தவிர. Dianthus செடியின் இலைகள் கொஞ்சம் கரும்பச்சை நிறத்தில், புல் போல நீளமாய் இருக்கும். Carnation செடி இலை, இளம் பச்சை நிறத்தில், இலை கொஞ்சம் அகலமாய் இருக்கும். Dianthus செடி கொஞ்சம் கொடி போல நீளமாய் போகிறது. பூவில் பெரிதாய் வித்தியாசம் இல்லை.
Carnation Plant

Dianthus Plant


இந்த முறை, முதல் தடவையாய் plastic Container-ல் முயற்சிக்கலாம் என்று சின்ன தொட்டியில் இருந்து கொஞ்சம் பெரிய தொட்டி வரை வாங்கினேன். இவைகளை நர்சரிகளில் வாங்குவதை விட, சில Departmental Store-ல் விலை மிக குறைவாக கிடைக்கிறது (நான் இங்கே Kannan Departmental Store-ல் வாங்கினேன்). விலை பத்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை ஆனது.


இரண்டு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பித்தன. விதைகள் கொஞ்சம் பெரிதாகவே இருப்பதால் நாம் தனி தனியாக Nursery Tray-ல் போடலாம். இரண்டுமே 100% முளைப்பு திறன் இருந்தது ஆச்சரியம்.


செடிகளுக்கு Coir Pith & Compost  கலவையையே தொட்டிகளில் எடுத்துக் கொண்டேன். செடிகள் கொஞ்சம் வளர்ந்ததும் plastic Container-ல் மாற்றி விட்டேன். எதிர்பார்த்ததை விட எளிதாகவே வளர்ந்தது. பூக்கள் நிறைய நிறத்தில், Double shaded எல்லாம் வந்திருக்கிறது. இதை இன்னும் பெரிய தொட்டிகளில் மாற்றி நன்றாக கொண்டு வர வேண்டும்.
நாம் கிளைகளை அவ்வப்போது வெட்டி விட, செடி நன்றாகவே தளிர்த்து வரும்.
   Carnation செடிகள் பொதுவாகவே எளிதாய் வரும். ரொம்ப எளிதாய் படர்ந்து விரியும். எளிதாய் கிளையை ஒடித்து வைத்து புதிய நாற்று தயாரிக்கலாம் (நான் இன்னும் முயற்சிக்கவில்லை).

காய்கறிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால், இது போல நிறைய முயற்சிப்பது இல்லை. இந்த செடிகள் வெற்றிகரமாய் வந்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் தேடி, வீட்டைச் சுற்றி இன்னும் கொஞ்சம் இடத்தை ஆட்டையை போடலாம் என்று தான் தோன்றுகிறது (வீட்டைச் சுற்றி நடக்க கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தானே) J
இது வரை கிடைத்திருக்கும் வண்ணங்கள்இவை Carnation மலர்கள் கீழே உள்ளவைகள் Dianthus மலர்கள்,Saturday, June 14, 2014

தகவல் - அக்ரி இன்டெக்ஸ் 2014 (Agri Intex 2014)

அக்ரி இன்டெக்ஸ் பற்றி போன வருட பதிவுகளில் நிறைய எழுதி இருக்கிறேன். வீட்டு தோட்டம் ஆர்வம் இருக்கும் கோவை வாசிகளுக்கு வருடா வருடம் வரும் ஒரு திருவிழா மாதிரி தான் இது. தோட்டம் பற்றி, விவசாயம் பற்றி, செடிகள் பற்றி நிறைய விசயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். முன்பு தோட்டத்திற்க்கு தேவையான நிறைய பொருட்களுக்கு அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்களை நம்பி தான் இருந்தேன். அக்ரி இன்டெக்ஸ் ஸ்டால்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.


நமது ப்ளாக் நண்பர்கள் சிலர் ‘அக்ரி இன்டெக்ஸ் பற்றி விசாரித்தார்கள். வெளி ஊர்களில் இருந்தும் கூட சில நண்பர்கள் விசாரித்தார்கள். சிலர் நமது தோட்டத்தை பார்க்கவும் என்னிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இந்த வருடம் ‘அக்ரி இன்டெக்ஸ்போகலாமே என்று தோன்றியது. இந்த வருடம் 18-July (Fri) - 21-July (Monday) தேதிகளில் வருகிறது. இன்னும் சரியாக ஒரு மாதம் தான் இருக்கிறது. நான் எப்படியும் கண்டிப்பாய் போவேன். அங்கு வர நினைத்திருக்கும் நண்பர்கள் 20-July (ஞாயிற்று கிழமை) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே கொடிசியா வளாகத்திலேயே சந்திக்கலாம். அப்படியே மொத்தமாய் ஒரு ரவுண்ட் ஸ்டால் விசிட் போகலாம். அப்படியே நம்ம தோட்டதிற்க்கும் ஒரு விசிட் போட்டுடலாம். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் ஒரு மெயிலை (gsivaraja@gmail.com) தட்டி விடுங்க. பிளான் போட்டுடலாம்.
முந்தைய அக்ரி இன்டெக்ஸ் பற்றிய பதிவுகள்,


Monday, June 2, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – கருணைக் கிழங்கு

நாம் வழக்கமாய் போடும் செடிகளை தவிர, எப்போதாவது வித்தியாசமாய் முயற்சிப்பது நம்ம தோட்டத்தை இன்னும் fresh-ஆக வைத்துக் கொள்ள உதவும். நாமாக முயற்சித்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் கிடைத்தால் சந்தோசம் தானே.  

முன்பு இது போல தான் உருளைகிழங்கு முயற்சி செய்து ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. இப்போது கருணை கிழங்கு. இதை பிடி கரணை என்றும் சொல்கிறார்கள். குழம்பு வைக்க வாங்கிய சில கிழங்குகள் நல்ல Fresh-ஆ தெரிந்தது. முளை விடுவது போல இருந்தது. சரி, ஒரு Try விட்டு பார்க்கலாம் என்று ஒரு மூன்று கிழங்குகளை எடுத்து முளைக்க போட்டு விட்டேன்.

இது போல பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை செடிகள் போல) படத்தில் உள்ளது போல சின்ன Nursery Bag-ல் போட்டு விடலாம். இந்த பைகள் விலை குறைவு தான். கிலோ கணக்கில் கிடைக்கிறது. நான் போன முறை இங்கு Agri Index-ல் வாங்கினேன்.

கிழங்கை முளை விட்டு வர சரியாக ஒரு மாதம் ஆனது. கொஞ்சம் பொறுமை அவசியம். எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு. சின்னதாய் ஒரு பூ மொட்டு மாதிரி வர ஆரம்பித்தது. அது பெரிதாகி வெடித்து உள்ளே இருந்து ஒரு குடை போல இலைகள் விரிந்து செடி மலர்ந்தது. இரண்டு செடிகளை தரையிலும், ஒன்றை ஒரு பெரிய Nursery Bag-லும் வைத்து விட்டிருக்கிறேன்.  

இந்த செடியில் ஒரு விஷேசம், செடியில் குருத்து ஏதும் இல்லை. முதலில் வரும் மூன்று இலைகள் தான் இருக்கிறது. புதிதாய் ஏதும் இலை வர குருத்து ஏதும் இல்லை. பக்க கிளை மட்டும் ஓன்று வருகிறது.  
 
கிழங்கு வர இன்னும் நான்கு-ஐந்து மாதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதனால் இதை Part-1 ஆக கொடுக்கிறேன். எப்படி கிழங்கு வருகிறது என்பதை பொறுத்து சில மாதங்கள் கழித்து Part-2 வரலாம் :-)