Friday, July 25, 2014

அக்ரி இன்டெக்ஸ் - 2014



  
மேலே உள்ள படம் Google–ல் இருந்து எடுத்தது. இப்படி தான் இருந்தது இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்.  கடந்த மூன்று வருடமாக நான் அக்ரி இன்டெக்ஸ் போய் கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. எங்கே இருந்து கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. எங்கே பார்த்தாலும் கூட்டம்..கூட்டம்..கூட்டம்.. எந்த ஸ்டாலிலும் நின்று விசாரிக்க கூட இடம் இல்லை. சொல்ல போனால் நெருங்க கூட முடியவில்லை.

மக்களுக்கு திடீரென்று gardening மேலே ரொம்ப ஆர்வம் வந்து விட்டதா (அதிகமா gardening ஸ்டால்களில் தான் கூட்டம்). இல்லை, அதிக விளம்பரத்தின் விளைவா என்று தெரியவில்லை (சனி-ஞாயிறு பொழுது போக்காக).

சனிக்கிழமை நமது ப்ளாக் நண்பர்கள் அரவிந்தனும், விஜயும் தஞ்சாவூர்/காரைக்காலில் இருந்து வந்திருந்தார்கள். நான் சனிக்கிழமை போக திட்டமிடவில்லை என்றாலும், நண்பர்களை பார்க்கலாம் என்று குடும்பத்தோடு போனேன். Hall-A –ல் கூட்டத்தை பார்த்தே வீட்டில் வெளியே வந்து விட்டார்கள் (நீங்க வேணும்னா சுத்திட்டு வாங்கன்னு). அவ்ளோ கூட்டம்.

ஒரு சுற்று சுற்றி விட்டு, அரவிந்தனையும், விஜயையும் சந்தித்தேன். நம் தோட்டம் ப்ளாக் மூலம் அறிமுகமாகி, நேரில் சந்திப்பது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. அவ்வளவு தூரத்தில் இருந்து (தஞ்சாவூரில் இருந்து) இதற்காகவே வந்திருந்தது, அவர்களில் தோட்டம் மீதான ஆர்வத்தை பார்த்து ஆச்சரியமாய் இருந்தது. எல்லோரும் சேர்ந்து என் வீட்டிற்கு வந்து, என் தோட்டத்தை ஒரு சுற்று சுற்றி விட்டு மறுபடி கொடிசியா கிளம்பினார்கள்.

ஞாயிற்று கிழமை. நம்ம தோட்ட ஆர்வத்தையும், தோட்டத்தையும் பார்த்து எதிர் வீட்டில் உள்ள தம்பியும் ‘அண்ணா, நானும் தோட்டம் போட ஆசை. கொஞ்சம் விவரம் கொடுங்க என்று கேட்டிருந்தான். சரி, கீரை தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்று நானும் அந்த தம்பியும் ஞாயிறு காலை ஒன்பதரைக்கே கிளம்பி விட்டோம் (கொஞ்சம் கூட்டம் குறைவா இருக்கும் என்ற நம்பிக்கையில்). நாங்க போகும் போதே அங்கே ஒரு பெரிய கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஆரம்பத்திலேயே சென்றதால் ஓரளவுக்கு கூட்டம் பரவாயில்லை. கூட்டம் வருவதற்குள் வேகமாக வாங்க ஆரம்பித்தோம்.

கொஞ்சம் Grow Bags, விதைகள் வாங்கினோம். Coir Pith 5 KG Block நிறைய ஸ்டாலில் இருந்தது. ஆனால் எல்லோருமே விலை Rs.100 என்றார்கள. நீண்ட தேடலுக்கு பிறகு ஒரு கடையில் Rs.50-க்கு கிடைத்தது. இரண்டு வாங்கி கொண்டோம். இந்த வாரம் தான் மாடியில் தோட்டம் அமைத்து கொடுக்க வேண்டும். ஆர்வத்தை பார்த்து பிறகு மற்ற செடிகளும் ஆரம்பிக்கலாம் என்று சொல்லி இருக்கிறேன்.

என்னுடைய பர்சேஸ் என்று பார்த்தால் இந்த முறை பெரிதாய் ஒன்றும் இல்லை. இரண்டு Hand Sprayer (Each Rs.80 – 1 Lt Capacity) வாங்கினேன். கொஞ்சம் பூ விதைகள். கொஞ்சம் Poly Grow Bags. அவ்ளோ தான்.

சென்னையில் இருந்து ப்ளாக் நண்பர் தங்கவேல் வந்திருந்தார். இங்கே கோவையில் இருந்து சுகந்தா மேடம் வந்திருந்தார்கள். அவர்களையும் சந்தித்து விட்டு மதியம் கிளம்பினேன்.   

இந்த வருடம் வழக்கத்தை விட வீட்டுத் தோட்டம் சம்பந்தமாக நிறைய கடைகளை பார்க்க முடிந்தது. நிறைய விதை கடைகள் இருந்தது (ஆனால் அவர் அவர்களுக்கென்று ஒரு Brand வைத்திருந்தார்கள்). Biocarve, Omaxe மாதிரி விதைகளை எங்கும் பார்க்க முடியவில்லை. Nursery Tray நிறைய இருந்தது. ரொம்ப விலை குறைவாகவே கொடுத்தார்கள் (வெறும் பதினைந்து ரூபாய் தான்). வெளியே Hydroponic system வைத்து ஒரு பெரிய தோட்டம் ஓன்று Demo-க்காக வைத்திருந்தார்கள். நிறைய செடிகள், செம செழிப்பாக இருந்தது. பார்த்தவுடனே கெமிக்கல் உரம் என்பது தெளிவாக தெரிந்தது. Drip System வைத்து நீரிலேயே எல்லா சத்துகளையும் கரைத்து செலுத்தி வளர்த்து இருக்கிறார்கள். ஆனால் உருப்படியாய் Hydroponic systemஒன்றும் இல்லை.        
  இந்த வருடம் நிறைய ஸ்டால்கள் இருந்தது. ஒரே பிரச்னை கூட்டம் தான். இப்படி கூட்டம் இருக்க கூடாது. உள்ளே வரும் கூட்டம் எதாவது வாங்கி, வந்த வேலை முடிந்ததுடா, அப்பாடா என்று ஓட வேண்டிய இருக்கிறது. ஒரு விவரமும் கேட்க முடியவில்லை. ஒன்றுமே கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த மாதிரி கண்காட்சிக்கு இப்படி எது ஷாப்பிங் திருவிழா மாதிரி கூட்டம் தேவை இல்லை. சனிக்கிழமை நான் போகும் போது டிக்கட் இல்லாமல் இலவசமாக உள்ளே அனுப்பினார்கள். பிறகு வெள்ளை வேட்டி சட்டையில் வந்தவர்களுக்கு அனுமதி இலவசம் என்றார்கள. இணையத்தில் பதிவு செய்து SMS  வைத்திருபவர்களுக்கு இலவசம் என்றார்கள்.

இப்படியே வருடா வருடம் கூட்டம் சேர்ந்தால், இந்த அக்ரி இன்டெக்ஸ்-க்கான பயனே இல்லாமல் போய் விடலாம். முடிந்தால் இந்த கூட்டத்தை சமாளிக்கும் விதத்தில் எதாவது செய்தால் பயன் இருக்கும் (தோட்டம் சம்பந்தமான கடைகளை தனியாக, நிறைய இடம் கொடுத்து போடலாம்).   

Monday, July 21, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-3 (நாற்று எடுத்தல்)

ஜூன் சீசனுக்கு மே இரண்டாவது வாரத்தில் நான் ஆரம்பித்தேன்.
முதலில் விதைக்க நேரடி விதைப்பு தேவையா, இல்லை Nursery Tray பயன்படுத்தலாமா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். விதை ரொம்ப சிறியதாக, அதிக எண்ணிக்கையில் தேவை படும் போது (கீரை, கேரட் மாதிரி) நேரடியாக தான் விதைக்க வேண்டும். முள்ளங்கி, பீட்ரூட் நேரடியாக விதைப்பதுண்டு. கிட்டத்தட்ட மற்ற காய்கறிகள் எல்லாமே நான் Nursery Tray பயன்படுத்தி தான் நாற்று தயார் செய்கிறேன்.

Nursery Tray-யின் ஒரு பயன் என்னவென்றால், மே நடுவில் விதைப்பை ஆரம்பிப்பதால் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அவரை, வெண்டை போன்றவற்றை நேரடியாக பாத்திகளில் விதைக்கும் பொழுது நிறைய நீர் விட வேண்டிய இருக்கும். தவிர நிறைய வெயிலின் தாக்கமும் இருக்கும். Nursery Tray-ல் நடும் போது தொடக்கத்தில், பாதி நேரம் நிழல் வரும் இடமாய் பார்த்து வைக்கலாம். தண்ணீர் பயன்பாடும் மிக குறைவு. வெயில் ஜூனில் கொஞ்சம் குறைந்து வரும் போது, எடுத்து நட தயாராய் இருக்கும்.

Nursery Tray பயன்பாடு பற்றி இந்த பதிவில் விவரமாய் எழுதி இருக்கிறேன். நமக்கு தேவையான செடிகளை திட்டமிட்ட பிறகு, ஒவ்வொன்றிலும் எத்தனை செடிகள் தேவை என்பதை தோராயமாக (நம் தேவை, தோட்டத்தில் இருக்கும் இடம் போன்றவற்றை பொறுத்து) முடிவு செய்து அதற்கு ஏற்றாற்போல் நாற்று எடுக்க விதைக்கலாம். நான் பொதுவாய் தேவைக்கு இரண்டு மடங்காக விதைப்பதுண்டு. சில செடிகள் முளைப்பு திறன் 50% அளவுக்கு இருக்கும் பட்சத்தில், அது போதுமானதாக இருக்கும். சின்ன சின்ன விதைகள் போடும் போது (கோஸ், காலி ஃப்ளவர் மாதிரி) ஒரே குழிக்குள் இரண்டு மூன்று விதைகள் போடலாம். அத்தனையும் முளைத்தால் ஒன்றை விட்டு விட்டு மற்றதை பிடுங்கி போட்டு விடலாம். இல்லாவிட்டால் நன்றாக வளர்ந்த பிறகு தனி தனி செடியாக பிரித்து வைக்கலாம். 

Nursery Tray-ல் நடும் போது வெறும் Coir Pith மற்றும் மண்புழு உரம் மட்டும் போதும் (1:1 என்ற விகிதத்தில்). செம்மண் கலக்க கூடாது. அப்படி கலந்தால், நாற்று எடுத்து நடும் போது, வேரில் இருந்து எல்லாமும் உதிர்த்து விழும். அப்படியே ஒரு தக்கை போல வராது.

நாற்று ஒரு மாதம் வரை Tray-ல் வைக்கலாம் (செடியை பொறுத்தது. சுரைக்காய் போன்ற பெரிய செடிகளை சீக்கிரமே எடுத்து நடலாம்). நாம் முதலில் கலக்கும் மண்புழு உரம் போதுமானதாக இருக்கிறது. தனியாக ஏதும் Liquid Fertilizer மாதிரி விட தேவை இல்லை.
தினமும் தவறாமல் நீர் ஊற்ற வேண்டும். ஒரு நாள் தவறினாலும், நாற்று வாடி விடும் (இடம் கொஞ்சம் என்பதால், நீர் பிடிப்பு அவ்வளவாய் இருக்காது). நாற்று வந்து இரண்டு வாரத்தில் நல்ல வெயிலில் வைக்கலாம்.

நான் இப்போது 50 குழிகள் இருக்கும் Tray தான் பயன்படுத்துகிறேன். 98 குழிகள் இருக்கும் Tray அவ்வளவாய் நன்றாக இல்லை (ரொம்ப சிறிய குழிகள் என்பதால், செடி கொஞ்சம் வளர்ந்த பிறகு வேர் போக இடம் இருப்பதில்லை. நீர் பிடிப்பும் ரொம்ப குறைவு).

நாற்றுகளை ஒரு இரண்டு அல்லது மூன்று இலை அடுக்குகள் வந்த பிறகு அதற்கான பாத்திகளில் எடுத்து நடலாம். ரொம்ப நாள் Tray-ல் விட்டுவிட கூடாது. செடி வளர்ச்சி குன்றி போய் விடும். நடுவதற்கு ஒரு நாள் முன்பு கொஞ்சம் குறைவாக நீர் விட்டால், Tray-ல் இருந்து எடுக்க எளிதாக இருக்கும். லேசாய் ஒவ்வொரு குழியையும் கீழேயும், பக்கவாட்டிலும் அழுத்தினால் ஓட்டிகொண்டிருப்பது விட்டுவிடும். பிறகு செடியை பிடித்து மெதுவாய் இருத்தால் அப்படியே தக்கை போல வந்துவிடும். முடிந்த அளவுக்கு முழுதாய் எடுக்க முயற்சிக்கலாம். சிறிய செடிகளில்  வேர் அவ்வளவாய் வந்திருக்காது. அப்போது பாதியை உடைந்து வரும். அது பிரச்னை இல்லை. மேல் பகுதி உடைந்து விடாமல் எடுத்தால் போதும்.






ஜுன் சீசன் லே-அவுட்
வழக்கம் போல முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, அவரை, கொத்தவரை ஆகியவற்றை மெயின் பாத்திகளில் நட்டேன். இந்த முறை வெண்டை, அவரை, கொத்தவரை வரிசையாக நடாமல், கலந்து (ஒரு வெண்டை, ஒரு அவரை, ஒரு கொத்தவரை என்று மாற்றி மாற்றி) நட்டு விட்டேன். ஒவ்வொரு பருவத்திலும் பயிர் சுழற்சி முறையையும் கடை பிடிக்க வேண்டும் (போன முறை தக்காளி வைத்த இடத்தில் இந்த முறை அவரை, இந்த மாதிரி).



முட்டைகோஸ், காலி ஃப்ளவர், Broccoli இந்த மூன்றையும் மாடியில் தனி தோட்டமாய் Grow Bags அமைத்து விட்டேன் (ஒவ்வொரு பையிலும் ஒரு செடி). அதோடு முள்ளங்கி, காரட், பீட்ரூட் மூன்று நீண்ட பைகளில் அதே தோட்டத்தில் வைத்தேன்.



கீரையை மொத்தமாய் மேலே மாடியில் அமைத்து விட்டேன். 



பாகல், மிதி பாகல், பீர்க்கங்காய் மூன்றையும் வீட்டின் முன்னால் அமைத்த புதிய கொடியில் விட்டேன். பக்கவாடில் முன்பு அமைத்த கொடியில் புடலை, சுரை. மாடியில் உள்ள கொடியில் சுரை, பாகல் (மிச்சம் இருந்த செடிகள்) மற்றும் வெள்ளரி. இது இந்த சீசனில் கொடிகள்.



இந்த முறை, இந்த மொத்த தோட்டம் அமைப்பில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொரு காய்கறியின் விளைச்சல் காலம் எவ்வளவு, எவ்வளவு விளைச்சல் எடுக்கலாம், எந்த மாதிரியான பூச்சி தாக்குதல் வருகிறது, ஒவ்வொரு செடியின் பராமரிப்பு – இப்படி நிறைய விவரங்களை சேகரித்து கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதை ஒவ்வொன்றாய் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)

Friday, July 11, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-2 (விதை தேர்வு)



பதிவுக்கு போவதற்கு முன், அடுத்த சனி, ஞாயிறு இங்கே கோவையில் அக்ரி இன்டெக்ஸ் (கொடிசியா வளாகத்தில்). நான் ஞாயிறு (20-July) காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை அங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பேன். ஞாயிறு காலை வரும் நண்பர்கள், முடிந்தால் ஒரு Final Confirmation மெயில் அனுப்புங்கள். கொடிசியா வளாகத்தில் சந்திக்கலாம்.


நிறைய நண்பர்கள் விதை வாங்குவது பற்றி கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவு ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

விதை எனும் போது முதலில் நாட்டு விதைகள், ஹைப்ரிட் விதைகள் என்று இரு பெரும் பகுதிகளாக வரும். வீட்டு தோட்டத்தில் முடிந்தால் (கிடைத்தால்) நாட்டு ரகங்கள் வளர்ப்பது நல்லது. ஆனால் எல்லோருமே நாட்டு விதைகள் என்று தேடுவதை பார்த்து, எங்கு பார்த்தாலும் எல்லாவற்றையுமே நாட்டு விதைகள் என்று தான் சொல்லி விற்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு நம்பக தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை முக்கிய காய்கறிகளான கத்தரி, தக்காளி மாதிரி செடிகளுக்கு நாட்டு ரகங்கள் முயற்சிக்கலாம்.

நிறைய செடிகளுக்கு நாம் ஹைப்ரிட் ரகங்கள் தான் போக வேண்டிய வரும் (TNAU கொடுப்பது ஹைப்ரிட் மட்டும் தான் ). இணையங்களில் பொதுவாக ஹைப்ரிட் விதைகள் தான் கிடைக்கிறது (சில தளங்களில் நாட்டு விதைகள் என்றும் வைத்திருக்கிறார்கள்).

‘வானகம் நாட்டு விதைகள் - நான் இந்த தடவையில் இருந்து கொஞ்சம் நாட்டு ரகங்களுக்கு மாறலாம் என்று நினைத்திருந்தேன். மறைந்த நம்மாழ்வார் ஐயாவின் ‘வானகம் ஸ்டாலில் ஒரு முறை எல்லா நாடு விதைகளும் கிடைத்தது. சில ரகங்கள் தான் வாங்கி வந்தேன். இந்த முறை தக்காளி, வெண்டைக்காய், அவரை, சீனி அவரை (கொத்தவரை) நாட்டு ரகங்கள் தான்.

BioCarve.com - முதல் முறையாக சில விதைகளை இணையத்தில் ஆர்டர் செய்தேன். அதில் Biocarve.com இணையத்தில் இருந்து தான் எல்லா இங்க்லீஷ் காய்கறிகளும் வேறு சில காய்கறிகளும் ஆர்டர் செய்தேன். கோஸ், சிவப்பு முள்ளங்கி (Red Globe Radish),  கேரட், broccoli, குடை மிளகாய், பெரிய வெங்காயம், Sweet Corn. பாக்கெட் ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் தான். Shipping Charge-ம் நியாயமாகவே இருந்தது. Net Banking வசதியும் இருக்கிறது. ஆர்டர் செய்து இரண்டு நாளில் அனுப்பி விட்டார்கள். மூன்று நாளில் விதை கிடைத்து விட்டது. Packing ரொம்பவே நன்றாக செய்திருந்தார்கள்.



omaxehybridseeds.com  - Biocarve.com-ல் பீட்ரூட் மட்டும் இல்லை. அதனால் omaxehybridseeds.com  ல் பீட்ரூட் மற்றும் Baby Corn விதைகளை ஆர்டர் செய்தேன். நான் முன்பு வெற்றிகரமாய் கொண்டு வந்த கேரட், கோஸ், காலி ஃப்ளவர் எல்லாம் omaxe seeds  தான். omaxehybridseeds.com- ல் Internet Banking வசதி இல்லை. Credit/Debit Card Accept செய்கிறார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அவர்களின் Shipping Charges இருக்கிறது. எதை வாங்கினாலும் அதில் 10% தான் Shipping Charges எடுக்கிறார்கள். நாற்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் விதை வாங்கினால் நான்கு ரூபாய் தான் Shipping Charges. எப்படி என்று தெரியவில்லை. நான் இரண்டு பாக்கெட் ஆர்டருக்கு மொத்தம் Rs. 88 ஆனது. (Seed Rs.80 & Shipping Rs. 8) . எக்கச்சக்கமாய் காய்கறி விதைகள், பூ விதைகள் என்று கொட்டி கிடக்கிறது omaxehybridseeds.com  ல்.

ஒரே ஒரு பிரச்னை, Payment ஆன பிறகு சும்மா ‘Payment Successful’ என்றொரு Blank page வந்து அப்படியே நின்று போய் விட்டது. Order Confirmation மெயில் வந்தது. ஆனால் இந்த சைட்டில் சும்மா basket-ல் சேர்த்து check-out Click செய்தாலே Order Confirmation மெயில் வருது. இது அடுத்த பிரச்னை. மூன்று மெயில் அனுப்பி கேட்ட பிறகு அனுப்பியாச்சு என்று ஒரு மடல் (With Tracking Number) அனுப்பி இருந்தார்கள். ஒரு வழியாய் இரண்டு வாரங்கள் கழித்து பார்சல் வந்து சேர்ந்தது. ஓரளவுக்கு கூரியர் பிரச்னை பற்றி அனுப்பிய சில மடலுக்கு பதில் கொடுத்தார்கள் (சென்னைக்கு ஜூன்-21 வந்து சேர்ந்ததாக Tracking-ல் காட்டியது. ஆனால் கோவை வர இரண்டு வாரங்கள். ஜூலை-5 தான் வந்து சேர்ந்தது). சில பிரச்சனைகள் இருந்தாலும், கொஞ்சம் பொறுமை இருந்தால் ஆர்டர் செய்யலாம்.



மற்ற தளங்கள் – விதைகள் கிடைக்கும் மற்ற தளங்கள் என்று பார்த்தால், சிலர் ebay தளத்தை கூறுகிறார்கள். ஆனால் விலை அநியாயத்திற்கு அதிகமாய் இருக்கும். நான் இதுவரை எதுவும் வாங்கியதில்லை. மற்றபடி, www.gardenguru.in தளத்தை கூறலாம். நாட்டு விதைகள் கூட இருக்கிறது. இதிலும் நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.  

TNAU Seeds இங்கே கோவை TNAU-ல் சில அடிப்படை காய்கறி விதைகள் கிடைக்கும். அங்கே இருக்கும் Seed Vending Machine பற்றியும் முன்பு எழுதி இருந்தேன். நிறைய வகைகள் கிடைப்பதில்லை. கத்தரி, தக்காளி, செடி அவரை, கொத்தவரை, சாம்பல் பூசணி, பாகல், சுரைக்காய் எல்லாம் கிடைக்கும். பத்து ரூபாய் தான் பாக்கெட். TNAU Seeds-ஐ பொருத்தமட்டில் முளைப்பு விகிதமும் சரி, விளைச்சலும் சரி ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருக்கும். சரியான Exp. Date போட்டு இருக்கும்.

முன்பு TNAU-ல் விதைகளை நுழைவு வாயிலில் உள்ள ஒரு கடையில் கொடுப்பார்கள். இந்த Vending Machine வந்ததில் இருந்து ஓன்றும் உருப்படியாய் இல்லை. இந்த வாரம் போய் பார்த்ததில் வெறும் கொத்தவரை, வெள்ளை பூசணி,பாகல்  விதை பாக்கெட்டுகளை மட்டும் வைத்து நிரப்பி வைத்திருக்கிறார்கள். ஒரு அடிப்படை காய்கறி விதை கூட இருப்பதில்லை. கொஞ்ச காலமாகவே இப்படி தான் ஏனோ தானோ என்று தான் வைத்திருக்கிறார்கள்.     

ARJUN GrowBags Seeds இதை தவிர, கோவையில் ARJUN GrowBags பற்றி முன்பு எழுதி இருக்கிறேன். அவர்களிடமும் கிட்டதட்ட எல்லா விதைகளும் கிடைக்கிறது. காய்கறி விதைகள் பத்து ரூபாய் தான். காரட், கோஸ் விதைகள் கூட கிடைக்கிறது. சில பூ விதைகள் கூட இருக்கிறது (விலை பதினைந்து ரூபாய் தான்). நான் சில விதைகள் வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன். நன்றாக வந்திருக்கிறது.

இது  தவிர இங்கே கோவையில் Sakthi Agro Service கடை பற்றியும் முன்பு ஒரு முறை எழுதி இருக்கிறேன் (வடவள்ளி சிக்னல் அருகில், TNAU க்கு முன், சிக்னல் அருகிலேயே). அங்கேயும் நிறைய விதைகள் (பீட்ரூட் முதல் கொண்டு) கிடைக்கிறது. விலை பத்து ரூபாய் தான்

நல்ல நாட்டு செடி என்றால் நான் பொதுவாய் ஒரு காயை விதைக்கு விட்டு அடுத்த சீசனுக்கு நாற்று எடுத்து கொள்வேன். போன சீசனில் ஊரில் இருந்து கொண்டு வந்த வெள்ளை கத்தரி நன்றாக காய்த்தது. இந்த முறை அதில் இருந்து தான் நாற்று எடுத்து விட்டிருக்கிறேன். செடி நன்றாக வந்திருக்கிறது. இப்படி நாம் வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை செடிகளில் இருந்து விதை எடுத்து அடுத்த சீசனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். Hybrid Seed-ல் இருந்து கொண்டு வரும் செடிகளில் இருந்து எடுப்பது அவ்வளவாய் பயன் தராது. செடி வரும். ஆனால் காய்க்கும் திறன் மாறுபடும்.

நான் முன்பு கூறியது மாதிரி, காய்கறி விதைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதில்லை. பாக்கெட் பத்து ரூபாய் என்ற அளவில் வாங்கினால் போதும். கிடைக்காத முட்டைகோஸ், ஃப்ளவர், மாதிரி வேண்டுமென்றால் இணையத்தில் முப்பது, நாற்பது ரூபாய்க்கு வாங்கலாம். Ebay மாதிரி இணையத்தில் நூறு ரூபாய் எல்லாம் கொடுத்து வீட்டுத் தோட்டத்திற்க்கு வாங்க தேவை இல்லை.

முளைப்பு திறனை பொருத்தமட்டில் எல்லா கம்பெனி விதைகளிலும் நமக்கு 90%  Germination Rate கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 50% முளைத்தால் கூட நமக்கு போதும். அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் அதிகமாகவே முளைக்க போட்டுக் கொள்ளலாம். முடிந்த அளவுக்கு விதைகளை அந்த வருடமே பயன்படுத்தினால் நல்லது. நீண்ட நாள் சேமித்து வைத்தால் எதிர்பார்த்த அளவு முளைக்கவும் செய்யாது, விளைச்சலும் கிடைக்காது. அதனால் வீட்டுத் தோட்டத்திற்கு முடிந்த அளவுக்கு சிறிய பாக்கெட் வாங்குங்கள். நாட்டு ரகங்கள் காய்க்கும் போது, கண்டிப்பாய் அடுத்த சீசனுக்கு விதைகள் எடுத்து கொள்ள வேண்டும்.

எந்த கம்பெனி விதைகள் நன்றாக இருக்கும் என்று கேட்டால், எதையும் குறிபிட்டு கூற முடியாது. இந்த முறை முப்பது ரூபாய் கொடுத்து BioCarve.com-ல் வாங்கிய கேரட் விதைகள் பல்லை இளித்து விட்டு போய் விட்டது ( 0% Germination). ஆனால் பிறகு பத்து ரூபாய்க்கு Arjun Growbags-ல் வாங்கிய கேரட் விதை எல்லாமுமே முளைத்து விட்டது (90% Germination இருக்கும்). BioCarve.com-ல் வாங்கிய மற்ற விதைகள் பரவாயில்லை தான். அதனால் நாம் எதையும் குறிபிட்டு கூட முடியாது. முளைப்பு திறனும், விளைச்சலும் நமக்கு கிடைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே அமையும்.

(தொடரும்)





                         

Thursday, July 3, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-1



நிறைய பேர் தோட்டம் பற்றி கேட்கும் போதெல்லாம் என்ன காய்கறி போட்டிருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். நான் ‘என்ன போடவில்லை என்று கேளுங்க என்பேன். இடம் இருக்குதோ, இல்லையோ, நம்ம இடத்துக்கு வருதோ இல்லையோ, முடிந்த அளவுக்கு எல்லா காய்கறிகளையும் வைக்க முயற்சிப்பது, அதில் ஓன்று இரண்டு சொதப்பினாலும் ஓரளவுக்கு வெற்றி பெறுவது என்று தான் ஒவ்வொரு சீசனும் போவதுண்டு.
    
நான் பொதுவாய் வருடத்தில் இரண்டு சீசன் வைத்து நடுவது உண்டு. ஓன்று ஜுனில் ஆரம்பித்து அக்டோபர் வரை போகும் (சில செடிகள் அதையும் தாண்டி டிசம்பர் வரை போவதுண்டு). பிறகு நவம்பரில் ஆரம்பித்து ஏப்ரல் வரை போகும். இதில் ஜூன் தான் முக்கிய சீசனாக இருக்கும். கோடை முடிந்து வெயில் கொஞ்சமாய் குறைந்து செடி வளர ஏற்றதாய் இருக்கும். மழையை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எங்கே பெய்கிறது :-(. அப்படி பெய்தால் செடிகளுக்கு நல்லது தான். மே மாதம் தொடக்கத்தில் விதைத்து விட்டால், ஜூன் தொடக்கத்தில் நாற்று எல்லாம் நட தயாராய் இருக்கும். நட்டி விட்டால் ஜூலை தொடக்கத்தில் இருந்து நமக்கு காய்கள் கிடைக்க ஆரம்பிக்கும். ஒரு நான்கு மாதம் காய்கறி கடைக்கு போக தேவை இல்லை :-)
 
கடந்த மூன்று ஆண்டுகளாக தோட்டம் போட்டாலும், இந்த ஜூன் சீசனை கொஞ்சம் விரிவாக, திட்டமிட்டு முயற்சிக்க முடிவு செய்து ஆரம்பித்தேன். நண்பர்கள் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் ஒரு முக்கிய காரணம், இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை கொண்டு வந்திருக்கிறது.

முடிந்த அளவுக்கு எல்லா காய்கறிகளையும் இந்த சீசனில் கொண்டு வந்துவிடும் ஒரு முடிவோடு ஆரம்பித்தேன். Coir Pith Based Terrace Garden ஆரம்பித்த பிறகு இடப்பிரச்சனை கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில காய்கறிகளை மாடிக்கு ஷிப்ட் செய்ததால் நினைத்த அளவுக்கு இடம் எடுக்க முடிந்தது.

முதலில் இந்த சீசனின் பட்டியலை பார்க்கலாம்,

முக்கிய அடிப்படை காய்கறிகள் – தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டைக்காய், அவரை, சீனி அவரை (கொத்தவரை)

கொடிகள் – புடலை (குட்டை மற்றும் நீண்ட நாட்டு வகை), பாகல் (ரெகுலர் மற்றும் மிதி பாகல்), பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளரி

இங்க்லீஷ்/கிழங்கு வரை காய்கறிகள் – கோஸ், காலி ஃப்ளவர், Broccoli, கேரட், பீட்ரூட், குடை மிளகாய், பீன்ஸ்

கீரை வகைகள் – அரை கீரை, சிறு கீரை, பாலக் கீரை, பருப்புக் கீரை, புளிச்சக் கீரை (gongura), வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா  

இதர வகைகள் – தட்டை பயறு, Sweet Corn, இஞ்ஜி   

இடம் திட்டமிடல் - எந்த இடத்தில எந்த செடியை வைக்கலாம் என்று. பட்டியல் தயாரானதும் ஒரு பேப்பரில் தோட்டத்தில் இருக்கும் இடத்தை சின்னதாய் ஒரு மேப் போட்டு காய்கறியை ஒவ்வொரு பகுதிக்கும் குறித்து, நம் பட்டியல் அதில் அடங்குகிறதா என்று பார்க்கலாம். அடங்கவில்லை என்றால், போன பதிவில் சொன்ன மாதிரி ஆக்கிரமிப்பு தான். அப்படியே ஒரு எட்டு வீட்ட சுத்தி வந்தீங்கன்னா,  எப்படியும் தேவையான இடத்தை தேற்றி விடலாம்.

ஒவ்வொரு செடியிலும் நமது தேவைக்கு ஏற்ற மாதிரி எத்தனை வேண்டும் என்று முடிவு செய்யணும். சில நேரம் சில செடிகளை அளவுக்கு அதிகமாய் போட்டு (குறிப்பாய் கத்தரி, தக்காளி) கிலோ கணக்கில் காய்த்து கொட்டும். ஆனால் மற்ற செடிகளுக்கு இடம் இல்லாமல் போய் விடும்.         

இந்த சீசனுக்கு கொடி வகைகள் நிறைய இருந்ததால், இருக்கும் ஒரு கொடி பத்தாது. மாடியில் போன சீசனில் ஒரு கொடி அமைத்தும், வெயிலுக்கும், காற்றுக்கும் போட்ட எல்லாமே ஊற்றி கொண்டது. அதை இந்த முறை கொஞ்சம் Shade Net வாங்கி தற்காலிகமாய் ஒரு வேலி அமைத்து காற்றின் தாக்கத்தை கட்டுபடுத்தி தயார் செய்தேன். மூன்றாவதாக, வீட்டின் முன்புறம் உள்ள முதல் பாதியில் வருடத்தின் ஒரு பாதி தான் வெயில் விழும், பிறகு நிழல் வந்து விடுகிறது. கொஞ்சம் உயரமாய் இருந்தால் வெயில் வரும். அதிலும் ஒரு கொடி அமைக்க ரொம்ப நாளை நினைத்தது, அதையும் செய்து முடித்தேன். மொத்தம் மூன்று கொடிகள் இந்த சீசனுக்கு தயார்.  

நிலம் தயார் படுத்துதல் – நாம் தொடந்து நிலத்தில் விளைச்சல் எடுப்பதால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து கொண்டே வரும். முதலில் நன்றாக ஒரு மண் வெட்டியில் கொத்தி கிளறி விட வேண்டும். நான் நிறைய உரம் எல்லாம் போடுவதில்லை. எனக்கு தெரிந்த ஒரே உரம், இங்கே TNAU-ல் கிடைக்கும் மண்புழு உரம் தான். அதுவும் வருடத்திற்கு இரு முறை  வாங்கி ஒவ்வொரு பாதிக்கும் ஐந்து கிலோ போல் போட்டு விடுவேன் (நிலம் தயார் செய்யும் போது). 

இந்த முறை சில மெயின் பாத்திகளில் புதிதாக மண்ணையே மாற்றி விட்டேன். தோட்டம் ஆரம்பித்தபோது அந்த பாத்திகளில் அவ்வளவாய் செம்மண் போடவில்லை. அதனால் புதிதாய் செம்மண் வாங்கி போட்டுவிட்டேன். அதனால் உரம் ஏதும் இந்த முறை போடவில்லை.

வழக்கம் போல மாடி தோட்டத்திற்க்கு Coir Pith, Vermi Compost, செம்மண கலவை தான். 

அடுத்த பதிவில், விதை தேர்வு பற்றி எழுதுகிறேன். முடிந்த அளவுக்கு இந்த தொடரை சீக்கிரம் முடிக்க முயற்சிக்கிறேன் (இல்லாவிட்டால் அடுத்த சீசனே வந்து விடும்)

நண்பர்களில் எத்தனை பேர் உங்கள் வீடுகளில் தோட்டம் போட்டிருகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த சீசனில், அப்படி தோட்டம் போட்டிருக்கும் நண்பர்களின் தகவல்களையும் எதிர்பார்கிறேன். முடிந்தால்  படங்களுடன் உங்கள் தோட்டம் பற்றியும், நீங்கள் கற்று கொண்ட விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றாய் தோட்டம் பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம்.      

(தொடரும்)

 
Preparing the Land

Terrace - Spinach Garden

Terrace - English Vegetables

Front - for Creepers

Terrace - ShareNet - for Creepers