Sunday, March 22, 2015

தோட்ட உலா – மார்ச் 2015



முதலில் முன்பு குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாய் வருமா என்று ஒரு செடியை பற்றி சொல்லி இருந்தேன் இல்லையா. அந்த செடி அருமையாய் காய்த்தது. படம் கீழே,


மா
கோடை ஆரம்பித்து விட்டது. மார்ச்சிலேயே வெயில் கொடுமைக்கு அடிக்கிறது. கோவை என்றால் குளுமை என்ற காலம் எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் சென்னையயோ, நெல்லையையோ ஒப்பிட்டு பார்த்தால் கோவை கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது (ஒரு முறை திருநெல்வேலிக்கு போய் விட்டு வந்தால் கோவை எவ்ளோ நல்லா இருக்கு என்று தோன்றும்).

தோட்டத்தில் கோடை ஸ்பெஷல் என்றால் மா தான். போன வருடத்தில் இருந்து முழு வீச்சில் காய்க்க ஆரம்பித்திருக்கும் மரம் இந்த முறையும் ஏமாற்றவில்லை (போன வருட விளைச்சல் கீழே.. கண்ணு போட்ராதிய என்ன !! ).

2013 Yield

ஆனால் இந்த முறை ரொம்பவே தாமதமாக தான் பூத்திருக்கிறது. கிட்டதட்ட இங்கே பார்த்ததில் எல்லா மரமும் இப்போது தான் பூத்து பிஞ்சே பிடித்திருக்கிறது. ஏப்ரல் மே-யில் மாம்பழம் கிடைப்பது கடினம் தான். ஜூன்-ஜூலை தான் பழம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.




இருந்தாலும் எங்க மாமரம் எப்பவுமே சாம்பிளுக்கு ஒரு நாலு காய் முன்னமே காய்த்து விடும். பிறகு ரெண்டு மாதம் கழித்து தான் மொத்தமாய் பூக்கும். அதனால் மே மாதத்தில் நாலு பழம் சாப்பிட்டுக்கலாம்.


ரோஜாக்கள்

தோட்டம் ஆரம்பித்த போது நிறைய ரோஜா செடிகள் வைத்திருந்தேன். நிறைய ஹைப்ரிட் செடிகள் சரியாய் வரவில்லை. வாங்கி வைத்த உடனே தளிர்த்து நன்றாக பூக்கும். அதன் பிறகு எதாவது பிரச்னை வந்து செடி நரங்கி போய் விடும். வைத்த நாட்டு ரோஜா செடிகளை (பன்னீர் ரோஜாக்கள்) கூட சரியாக் கவனிக்க முடியாமல் ஒவ்வொன்றாய் குறைந்து கடைசியாய் ஒரு இரண்டு செடிகள் மட்டும் கவனிப்பே இல்லாமல் நின்று கொண்டிருந்தது.

நமது ப்ளாக் நண்பர் ஒருவர் பழைய பன்னீர் ரோஜா படங்களை பார்த்து ‘எப்படி நீங்கள் அதை கவனிக்காமல் இழக்கலாம்’ என்று கவலைப்பட்டார். அதன் பிறகு இப்போது இருக்கும் இரண்டு செடிகளில் இருந்து குச்சி ஒடித்து வைத்து புதிதாய் கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறேன்.  
 
இந்த முறை ஊரில் இருந்து இரண்டு பன்னீர் ரோஜா செடிகள் வாங்கி வந்து வைத்திருக்கிறேன். இப்போது வரும் பன்னீர் ரோஜா பூ இதழ்கள் அவ்வளவாய் நன்றாய் இல்லை. பழைய செடியையும் எப்படியாவது காப்பாற்றி கொண்டு வரவேண்டும்.

ரோஜா செடிக்கு போர் தண்ணீர் விடாமல் நல்ல தண்ணீர் விட்டால் நல்லது (போர் தண்ணீரில் உப்பு அதிகமாக இருக்கும்) என்கிறார்கள். அதனால் இந்த முறை நல்ல தண்ணீர் (பஞ்சாயத்து தண்ணீர் வரும் இல்லையா. அது தான்) மட்டும் விட்டு வளர்த்து வருகிறோம்.

தவிர, இந்த முறை செமெண்ட் தொட்டி இல்லாமல் மண் தொட்டி வாங்கி அதில் வைத்திருக்கிறோம். மண் தொட்டி நல்ல குளிர்ச்சி கொடுக்கும். விலை தான் கொஞ்சம் அதிகம் (ஒவ்வொன்றும் Rs.150).   

செடிகள் ஒவ்வொன்றும் அறுபதில் இருந்து நூற்றைம்பது வரை விலை சொல்கிறார்கள். செடிகள் நன்றாக தளிர்த்து பூக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த் பருவம் பூப்பதை வைத்து பார்க்க வேண்டும்.






முருங்கை

இந்த முருங்கை மரத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பெரிதாய் நின்ற ஒரு மரத்தை வெட்டிய பிறகு அதன் வேரில் இருந்து தளிர்த்து வந்து மரமாகி விட்டது. கடந்த மூன்று  வருடத்தில் இந்த முறை தான் நிறைய காய்த்து இருக்கிறது. சின்ன மரம் தான். வாரம் எப்படியும் நாற்பது-ஐம்பது காய் பறிக்கிறோம்.

இது நாட்டு வகை என்பதால் காய் சின்னதாக தான் இருக்கும். முருங்கை இலை நல்ல ருசியாக இருக்கும். எங்க வீட்ல இலை பறித்து முருங்கை இலை கஞ்சி வைப்போம். முருங்கை இலை கீரை வைப்போம்.






இன்னொரு முருங்கை, ரொம்ப காலத்திற்கு முன்பு ஒரு தோட்டக்கலை பயிற்சி வகுப்பு என்று ஒன்றுக்கு போன போது நல்ல ரகம் என்று விதை கொடுத்தார்கள். நானும் ஒரு பையில் போட்டு வைத்தேன். மெதுவாய் வளர்ந்து கொண்டிருந்தது, இப்போது தான் பிஞ்சி பிடித்திருக்கிறது. நம் தோட்டத்தில் பையில் வளரும் முதல் மரம் என்று சொல்லலாம். நான் இந்த செடியில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், எப்படி தான் வருகிறது என்பதற்காக வைத்திருக்கிறேன். 


மாதுளை

இந்த சம்மரில் மாதுளையும் நன்றாக பிஞ்சி போட்டிருக்கிறது. போன முறை பழத்தின் மேல் கருப்பாய் புள்ளியாய் கொஞ்சம் நோய் தாக்குதல் இருந்தது. இந்த முறை ஓரளவுக்கு சரியானது மாதிரி தெரிகிறது.


 
 சிட்ரஸ் (Citrus)

தோட்டத்தில் இருந்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கும். நாம கொஞ்சம் அவரைக் காய் கொடுத்தால், ‘ ப்ரண்டு வீட்ல முள் கத்தரிக்காய் செடி இருந்தது, உங்க நியாபகம் தான் வந்தது. ரெண்டு செடி எடுத்துட்டு வந்தேன்’ என்று திருப்பி ஏதாவது கொடுப்பார்கள்.

“இன்று எங்க கல்யாண நாள்” என்று சொல்லி ஏதாவது செடி கொடுப்பார்கள். அப்போது அந்த செடி மேல் நமக்கு இன்னும் அக்கறை வரும். வளர்த்து பெரிதாய் வந்த பிறகு, செடியை அவர்களிடம் காட்டும் போது ‘உங்க கல்யாண நாள்னு கொடுத்தீங்களே’ எனும் போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோசம். அதில் நமக்கும் ஒரு சந்தோசம்.    

பக்கத்து வீட்டில் என் அளவுக்கு தோட்டத்தை ஆர்வமாய் செய்யும் அன்னபூரணி அம்மா வீட்டில் இந்த சிட்ரஸ் பழம் மரம் உண்டு. கிட்டத்தட்ட சின்ன எலுமிச்சை சைஸில் ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கும். ஜூஸ் போட நன்றாக இருக்கும்.

ஒரு வருடத்திற்கு முன்பு சின்னதாய் ஒரு நாற்று கொடுத்தார்கள். அது சரியாய் வராமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தமாய் போனது. போன மாதம் மறுபடி ஒரு செடி கொடுத்தார்கள். கொஞ்சம் பெரிய செடியாகவே இருந்தது. இந்த முறை நேரடியாக வைக்காமல் ஒரு சாக்கு பையில் வைத்திருக்கிறேன். வைத்த பிறகு தளிர்விட்டு நன்றாக வளர்ந்து வருகிறது. இதை கூடுதல் கவனம் எடுத்து கொண்டுவர வேண்டும். கொஞ்ச நாள் கழித்து ஒரு இடம் பார்த்து வைக்க வேண்டும்.  


 

  

Sunday, March 1, 2015

தோட்டம் – பூச்சிக்கொல்லி – ஒரு பார்வை



வீட்டுத் தோட்டம் போடும் எல்லோருக்கும் ஒரு பெரிய சவால் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் தான். அதுவும் நாம் இயற்கை விவசாயம் முறையில் போகும் போது இன்னும் சவாலாக இருக்கும். சிலருக்கு தோட்டம் பற்றி வரும் கொஞ்சம் ஆர்வத்தையும் விரட்டி விடுவது இந்த பூச்சிகள் தான். சிலர் என் தோட்ட்டத்தை பார்த்தவுடன் முதலில் கேட்கும் கேள்வி எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதாக தான் இருக்கும்.

நான் நிறைய பதிவுகளில் கூறியபடி நானும் இதில் ஜீரோ என்று தான் கூற வேண்டும். புத்தகங்களிலும், இணையத்திலும் தேடிப் பார்த்தால் எக்கச்சக்கமான இயற்கை பூச்சிக்கொல்லி முறைகள் கிடைக்கும். ஆனால் அவைகளுக்கு எல்லாம் இப்போது வரும் பூச்சிகள் ஓடிப் போகிறதா என்பதில் தான் நாம் கற்றுக் கொள்ளும் கட்டமே ஆரம்பிக்கிறது. நிறைய நேரங்களில், ரசாயன பூச்சிக்கொல்லிகளை சாப்பிட்டு தேறிய பூச்சிகள் அவ்வளவு எளிதாய் பூண்டு கரைசளுக்கோ, மஞ்சள் கரைசளுக்கோ கட்டுப்படுவது இல்லை. ஆசையாய் வளர்த்த செடிகளில் கூட்டம் கூட்டமாய், கொத்து கொத்தாய் பூச்சிகள் வந்து அழித்துப் போகும் போது வெறுத்துப் போய் தோட்டம் மீதான ஆசையே சிலருக்கு போய் விடும்.

எனக்கு தெரிந்த, கற்றுக் கொண்ட சில விவரங்களை இந்த பதிவில் கூறுகிறேன். ஒரு சுவாரசியாமான தகவல் ஒன்றும் கடைசியில் இருக்கிறது. தொடருங்கள் :-)

வீட்டுத்தோட்டத்தில் பூச்சிக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமானது, தினமும் செடிகளை  ஒரு முறையாவது கவனிப்பது. நாம் ஒன்றும் ஏக்கர் அளவில் செடிகள் பயிரிடவில்லை. வெண்டையில் பத்து, அவரையில் பத்து என்று கொஞ்சம் செடிகள் தான் இருக்கும். தினமும் ஒரு பத்து நிமிடம் எல்லா செடிகளையும் நோட்டம் விட்டாலே நிறைய செடிகளை காப்பாற்றலாம். இது ரொம்ப அவசியமானது. இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டாலே சில பூச்சிகள் செடிகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடும்.

“தினமும் என்னை கவனி” என்பது பூச்சிக் கட்டுப்படுத்துதளில் முதல் படி. சின்ன சின்ன பூச்சிகளோ, புழுக்களோ தெரிந்தால் கையாலோ, ஒரு குச்சியாலோ நீக்கி விட்டாலே கட்டுப்படுத்தி விடலாம். பூச்சிகள் நிறைய இருந்தால், சாம்பல் இருந்தால் அதையும் தூவி பார்க்கலாம்.

அடுத்தது, மிக முக்கியமான பொருள் வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் புண்ணாக்கு. அதன் கசப்பு சுவை தான் நிறைய பூச்சிகளை விரட்ட உதவுகிறது. சில மரங்கள் நன்றாக இருந்த மாதிரி இருக்கும், திடீரென்று பட்டுப் போகும். வேர் பூச்சி காரணமாக இருக்கலாம். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருபது கிலோ வேப்பம் புண்ணாக்கு வாங்கி, மரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அளவில் ஒரு பக்கெட் நீரில் நன்றால் கரைத்து ஊற்றி விடுவேன். இதுவரை எந்த மரத்திலும் பிரச்னை வந்ததில்லை.  

வேப்பம் புண்ணாக்கை ஒரு மெல்லிய துணியில் கட்டி, நீரில் பாதி நாள் ஊற வைத்து அந்த சாற்றை எடுத்து செடிகளுக்கு தெளிக்கலாம். தக்காளி செடிகளுக்கு காய்களையும், பிஞ்சிகளையும் கூண்டோடு காலி செய்யும் ஒரு பெரிய புழு வரும். ஒரே நாளில் பத்து, பதினைந்து என்று ஓட்டை போட்டு நம்மை திணற வைக்கும் (கீழ் படம்). சிரமம் மாறாமல் செடி எல்லாம் தேடி அதை கண்டுபிடித்து கொன்றால் தான் தக்காளி தப்பிக்கும். அதன் பிறகு நீரில் வேப்பம் புண்ணாக்கு கலந்து காய்களிலும் பிஞ்சிகளிலும் நன்றாய் படும்படி தெளித்து விட்டால் அதன் பிறகு வருவதில்லை (இந்த முறை குடை மிளகாயிலும் ஓட்டை போட்டு டார்ச்சர் செய்து விட்டது. பிறகு வேப்பம் புண்ணாக்கு தெளித்து தான் கட்டுப்படுத்த முடிந்தது).




வெண்டையில் பூச்சி தாக்குதல் இரண்டு இலை வருவதற்குள் ஆரம்பித்து விடும். வெள்ளையாய் சாறு உறிஞ்சும் பூச்சிகள்  சரியாய் இலை குருத்தில் கூட்டமாய் வரும். இரண்டு நாட்கள் பார்க்காமல் விட்டால் செடியை மறந்து விட வேண்டியது தான். குருத்தில் உயிரே இல்லாமல் போய் செடி அப்படியே நின்று விடும். வேப்ப எண்ணெய் கொஞ்சம் (ஒரு பத்து துளி) ஒரு லிட்டர் நீரில் எடுத்து (இரண்டு துளி பாத்திரம் கழுவ படுத்தும் dish washer liquid அல்லது காதர் சோப் சிறிது. இரண்டு துளி போதும். நிறைய கலந்தால் செடியின் இலை வெந்து போகும்) தெளிக்கலாம். ஆனால் நான் பார்த்தவரையில் அவ்வளவாய் கட்டுப் படுத்த முடியவில்லை. நான் சின்னதாய் குச்சி ஒன்றை எடுத்து மெதுவாய் ஒவ்வொரு செடியாய் பூச்சிகளை நீங்கி விட்டு தான் காப்பாற்றி கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாள் அப்படி செய்து காலி செய்தால் பிறகு வருவதில்லை. ஆனாலும் தினமும் ஒரு தடவை செடிகளை பார்த்து கொள்வது அவசியம்.

இப்போது மிக முக்கியமான ஒரு பூச்சிக் கொல்லி. அவரை போட்டவர்களுக்கு தெரியும் அசுவினி பூச்சிகளின் அட்டகாசம். எப்படி கண்டுபிடிக்கும் என்று தெரியவில்லை (அது தான் இயற்கை), ஒரு மொட்டு வந்ததும் கூட்டமாய் வந்து கும்மி அடிக்க ஆரம்பித்து விடும். ஒரு வாரம் பார்க்காமல் விட்டால் அவரைக்காய் கண்ணுக்கே தெரியாது. கருப்பாய் கூட்டம் கூட்டமாய் அசுவினி தான் தெரியும் (கீழ் படம்). நமக்கு கண்ணீரே வந்து விடும். 




முதன்முதலாய் மாடியில் அவரை போட்ட போது, செடிகள் அவ்ளோ நன்றாய் வந்து இருந்தது. செடியை பார்த்தாலே பூச்செடி மாதிரி பளிச்சென்று வெள்ளையாய் தெரியும். வழக்கம் போல அசுவினி கூட்டம் ஓன்று மோப்பம் பிடித்து கூட்டமாய் வந்து ஆண்டுக் கொண்டன. நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். பசுமை விகடனில் ‘”3G” கரைசல் என்றொரு விவரம் கொடுத்திருந்தார்கள். அதவாது பூண்டு, இஞ்சி, மிளகாய் எல்லாம் மொத்தமாய் போட்டு மிக்சியில் போட்டு அடித்து, நீரில் கரைத்து தெளிக்க சொல்லி இருந்தார்கள். நானும் தெளித்து பார்த்தேன். அசுவினி பூச்சிகள் எல்லாம் அதில் குளித்து தலை துவட்டி கொண்டன. ஒன்றுமே வேலைக்காக வில்லை. நானும் தெளித்து கையால் லேசாய் தேய்த்து பூச்சிகளை காலி செய்து பார்த்தேன். பூக்கள் உதிர்ந்தது தான் மிச்சம். கீழே உதிர்ந்த பூக்களை அள்ளினால் இரண்டு கை நிறைய வரும். அப்படி கொட்டி போனது. நானும் குப்பையை தூவி பார்த்தேன், மஞ்சளை தெளித்து பார்த்தேன். கதர் சோப் வாங்கி தெளித்து பார்த்தேன். ஒன்றுமே பலன் இல்லாமல் கடைசியாக எல்லா செடிகளையுமே விளைச்சலே எடுக்காமல் அப்படியே பிடுங்கி போட்டேன் (உனக்கும் இல்ல.. எனக்கும் இல்ல.. போங்கடே.. என்பது மாதிரி ஒரு மனநிலை தான் :-) )

ஒரு முறை ப்ளாக் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்த போது கோலா பானம் தெளித்து பாருங்கள் என்றார். அது எப்படி வேலை செய்யும் என்று முதலில் நான் நம்பவில்லை.

நாட்டில் மக்கள் தொகை கட்டுப்படுத்த அரசாங்கம் முதலில் ‘நாம் இருவர். நமக்கு இருவர்’ என்றது, பிறகு ‘நாம் இருவர். நமக்கு ஒருவர்’ என்றது. அதுவும் வேலைக்காகாமல், நாட்டின் கதவை தொறந்து விட்டு கோலா கம்பனிகளை உள்ளே விட்டு, குடிச்சாவது சாவுங்க மக்கா. அப்படியாவது மக்கள் தொகை குறையுதா என்று பார்த்தது. எட்டணா பெறாததை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி, நக்கிக் கொண்டு அலைவதை பெருமையாக நினைக்க வைக்க நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை கூப்பிட்டு கூவ விட்டு சமூக சேவை செய்ய வைத்தார்கள் (கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த கோலாவையே எதிர்த்து நரம்பு புடைக்க வீர வசனம் பேசி கல்லா கட்ட முடியும் என்பதும் ஒரு நல்ல lateral thinking  தான்). ஆனால் அந்த கோலாவில் இப்படி ஒரு பூச்சிக்கொல்லி நன்மை இருக்கும் என்பது நான் நினைத்தே பார்க்கவில்லை.

நண்பர் சொன்ன போது நான் நம்பவில்லை. இஞ்சி பூண்டு கரைசலுக்கு எல்லாம் அசைந்து கொடுக்காத அசுவினி பூச்சி இனிப்பா இருக்கும் இந்த பானத்திற்கு அசையுமா என்று நினைத்தேன். ஆனால் தெளித்து பார்த்தபோது வந்த ரிசல்ட்டை பார்த்து ஆச்சரியம்.

ஒரு அரை லிட்டர் வாங்கி hand sprayer-ல் (நீர் கலக்காமல் அப்படியே எடுத்து கொண்டு) வைத்து அசுவினி மொய்த்துக் கொண்டிருக்கும் மொட்டு, காய்களில் தெளித்து, ஒரு கையால் பூச்சிகளை குளிப்பாட்டுவது போல தேய்த்து விட்டால் போதும். இருக்கிற பாதி பூச்சிகள் செத்து போய்விடும். மிச்சம் இருக்கும் கொஞ்சமும் ‘என்ன கருமத்தடா அடிச்சீங்க’ என்ற ரீதியில் உயிர் பிழைத்தோம் என்று ஓடி விடும். இதில் நான் ரொம்ப ஆச்சரியப் பட்ட விஷயம், ஒரு முறை இருக்கும் இருக்கும் இடம் எல்லாம் தெளித்து விட்டால், அப்புறம் மீண்டும் வருவதே இல்லை.

இப்போது அவரையில் வரும் அசுவினி பிரச்சனை இந்த கோலா பானத்தால் முழுவதும் தீர்ந்து விட்டது. இதை ஆர்கானிக் முறை என்று சொல்ல முடியாது. இருந்தாலும், காய் பறித்து சமைப்பதற்கு முன்பு கழுவிட்டு பயன்படுத்துங்க :-)

நண்பர்கள் நலனுக்காக ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இங்கே சரவணம்பட்டியில் ஒரு புகழ்பெற்ற டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர். நான் ஏதோ ஒரு பொருள் வாங்க போய் இருந்தேன். என் முன்னால் ஒருவர் ஒரு கூடை நிறைய கருப்பாய் அரை லிட்டர் கோலா பானங்கள். ‘ஏதோ கடன் பிரச்சனை. தற்கொலை பண்ணிக்க போறார் போல’ என்று நினைத்துக் கொண்டேன். அவர் பில் போடும் பெண்ணிடம் பேரம் பேச ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது அவர் அதை ஒரு ஹோட்டலுக்காக வாங்க வந்திருக்கிறார் என்று. ‘பத்து ரூபாய்க்கு எல்லாம் தரமுடியாது சார். இன்னும் எக்ஸ்பயரி ஆக ரெண்டு நாள் இருக்கு. வேணும்னா அஞ்சு ரூபா கம்மி பண்ணலாம்’ இது பில் போடும் பெண். அட பாவிங்களா. எக்ஸ்பயரி ஆனா சரக்க கம்மி விலைல வாங்கி டீசண்டா ஒரு கண்ணாடி தம்ளர்ல ஊத்தி கொடுத்து லாபம் பாக்கறீங்களா. நான் நினைத்து கொண்டேன்.

அதனால் ஹோட்டலுக்கு போய் ஏதும் குளிர்பானம் சாப்பிட்டா, பாட்டிலோடு வாங்கி, எக்ஸ்பயரி தேதி பார்த்து குடிங்க. காலாவதியானதை சாப்பிட்டு நம்ம எக்ஸ்பயரி தேதியோடு விளையாடாதீங்க :-)

மொத்தத்தில் நான் சொல்ல வர்ற கருத்து என்னவென்றால், கோலா குடிச்சி சாவாதீங்க என்பது இல்லை, அவரையில் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த கோலா வாங்கி தெளிச்சி சந்தோசமா அறுவடை பண்ணுங்க. அவ்ளோ தான்.

நம்ம நாட்ல இவ்ளோ விலை குறைவா எந்த பூச்சிக் கொல்லியும் கிடைக்காது (இஞ்சி பூண்டு எல்லாம் ரொம்ப விலை). சில சமயம் முக்கா லிட்டர் பாட்டிலுக்கு அரை  லிட்டர் இலவசம் என்று ஆபர் எல்லாம் வரும். விட்ராதிய.     
    
அப்புறம், கப்சியை விட அக்கா மாலா தான் நல்ல பலன் கொடுக்கும். நம்ம தோட்டத்தில் நான் அதை தான் பயன்படுத்துகிறேன். I strongly recommend AKKA MAALAA to all our blog friends. Enjoy

(தொடரும்)