Sunday, December 30, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சீத்தா


 சீத்தாப்பழம் (Custard Apple), அவ்வளவாக கண்டுகொள்ளப் படாத  ஒரு பழம். விதைகள் நிறைய இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ருசியிலும், அதில் அடங்கி இருக்கும் சத்துக்களிலும் மற்ற பழங்களை விட குறைந்தது இல்லை.  ஊரில் எல்லோர் வீட்டிலும், தோட்டங்களிலும் இருக்கும். இதன் பூவையும் பறித்து சாப்பிட்டுக் கொண்டு திரிவோம்.

இதுவும் எங்க ஊர் சந்தையில் இருந்து வாங்கி வந்த செடி தான். வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காய்க்கிறது. இந்த தடவை ஒரு 25 – 30 காய் கிடைத்தது. 

சீத்தா எளிதாக வளரும் ஒரு மரம். நோய் ஏதும் தாக்காது. குறைந்த நீர் இருந்தாலும் நன்றாக வரும். தனி கவனம் எடுத்து ஏதும் கவனிக்க வேண்டியதில்லை. எல்லா மரத்திற்கும் உரம் வைக்கும் போது இதற்கும் கொஞ்சம் வைத்து விட்டால் போதும்.  

நன்றாக பழுத்த பழத்தின் ருசியே தனி தான். ஆனால் ரொம்ப கனிந்து விட்டால் சிதைந்து விடும் அளவுக்கு அதன் தோல் மென்மையாகி விடும். அதனால் தான் கடைகளில் கிடைக்கும் பழங்கள் காயாகவே பறித்து விற்பனைக்கு வருகிறது. அவைகள் பழுக்கும் போது அவ்வளவு ருசி இருப்பதில்லை. இங்கே வீட்டு செடியில் நன்றாக பழுக்கும் வரை விட்டு பறிப்போம். நன்றாக பழுத்து விட்டால் பழம் தானாகவே கீழே விழுந்து சிதைந்து விடும். நன்றாக பழுக்கும் திரட்சி வந்ததும், ஒரு துணியை வைத்து கிளையோடு கட்டி விட்டால் இதை தவிர்க்கலாம்.

எங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் ரொம்ப பிடித்த பழம் இது தான். இந்த தடவை ஊருக்கு பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது இன்னும் ஒரு செடி கொண்டு வந்து வைக்கலாம் என்று இருக்கிறேன்.









 

Tuesday, December 4, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெங்காயம்


வெங்காயம் விலை எகிறிப்  போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் (போன வாரம் சின்ன வெங்காயம் கிலோ ஐம்பது, அறுபது ரூபாய் இருந்தது) தோட்டத்தில் இருந்து இந்த வாரம் வெங்காயம் பற்றிய பதிவு. 

வெங்காயம் என்பது நம் சமையலில் ஒரு முக்கியமான காய்கறி. வெங்காயம் போடாமல் ஏதாவது சமைப்பார்களா என்பது சந்தேகமே. 

சின்ன வயதில் சமையல் அறையில் ஏதாவது வெங்காயம் முளைத்து கிடந்தால் எடுத்து வந்து நட்டு வளர்ப்போம். இங்கே வெங்காயத்திற்கு TNAU-ல் விதைகள் கிடைப்பதை பார்த்து ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது. பிறகு Google பண்ணி பார்த்த போது, வெங்காயச் செடி நன்றாக வளர்ந்ததும் பூ பூக்கும் என்றும், அந்த பூ முற்றியதும் அதில் இருந்து விதை எடுக்கலாம் என்றும் விவரங்கள் கிடைத்தது.

சரி நாமும் முயற்சி செய்து பார்ப்போம் என்று ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து நட்டேன். நன்றாக வளர்ந்ததும் ஒவ்வொரு இலை நுனியிலும் வெள்ளையாய் ஒரு மொட்டு வந்து, பூத்தது. பூ நன்றாக பெரிதானதும் உள்ளே சின்னதாய் கருப்பாய் (எள் மாதிரி) விதைகள் கிடைத்தது. 





அந்த விதைகளையே ஒரு சோதனை முயற்சியாக ஒரு சிறிய இடத்தில் விதைத்தேன். ஒரு வாரத்தில் முளைத்து விட்டது. எதிர்பார்த்ததை விட வெங்காயம் பெரிதாகவே வந்திருக்கிறது. 









சின்ன வெங்காயம் விதை TNAU-ல் வாங்கியது. மண்ணை லேசாக கிளறி விட்டு தூற்றி விட்டேன். புல் மாதிரி தான் வளர்ந்து கிடந்தது. செடி முற்றி லேசாக பழுப்பு நிறம் கொடுத்து வாட துவங்கும் போது அறுவடை செய்தேன். நன்றாக திரட்சியான சின்ன வெங்காயம், செடிக்கு ஒன்றாய் காய்த்திருந்தது. சின்ன வெங்காயத்தை வாங்கி நாம் அப்படியே விதைத்தும் நடவு செய்யலாம். 

அடுத்த முறை இன்னும் கொஞ்சம் பெரிய இடத்தில் மற்ற காய்கறிகள் போலவே பயிரிடலாம் என்றிருக்கிறேன். வெண்டை மாதிரி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக நடலாம். 







Monday, November 19, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சுண்டைக்காய்


முன்பெல்லாம்  “உணவே மருந்து. மருந்தே உணவு’ என்ற நிலை தான் இருந்தது. ஊரில் எல்லாம் வாரா வாரம் ஞாயிறு சாயங்காலம் பார்த்தால் எல்லோர் வீட்டிலும்  வேப்பிலை, இஞ்சி என்று ஏதாவது உரலில் போட்டு இடித்து, நாம எங்கே விளையாண்டு கொண்டிருந்தாலும் பிடித்து ஒரு தம்ளர் குடித்தால் தான் விடுவார்கள். கண்டங்கத்தரி, தூதுவளை என்று நிறைய செடிகள் எல்லோர் வீட்டிலும் நிற்கும். காய்ச்சல், தலைவலி, சளி என்று எல்லாவற்றும் மருந்து செடி கொடிகளில் இருந்தே வைத்திருப்பார்கள்.

அப்படி ஒரு செடி தான் சுண்டைக்காய். இது கத்தரி, கண்டங்கத்தரி செடி இனம். இலையும் செடியும் ஓன்று போல தான் இருக்கும். இதன் காய் சிறுகசப்பு சுவை உடையது. நாம் பொதுவாக வத்தக் குழம்புகளில் பார்க்கலாம். இது பொதுவாக எல்லா கடைகளில் கிடைப்பது இல்லை.ஆனால் வீட்டில் வளர்ப்பது ரொம்ப எளிது. 

இது செடி என்றாலும் சிறிய மரம் என்று சொல்லும் அளவுக்கு பெரிதாக வளரும். அதனால் நடும் போதே நிறைய இடம் இருக்குமாறு பார்த்து நட வேண்டும். ரொம்ப கவனிப்பு ஏதும் தேவை இல்லை. தண்ணீர் மட்டும் பாய்த்தால் போதும். நோய் தாக்குதல் ஏதும் இருப்பதில்லை. 

ஒவ்வொரு இலைக்கும் இடையில் கொத்தாய் பூக்கள் பூக்கும். ஒரு கொத்தில் 50  காய்கள் வரை வரும். இதனால் ஒரு செடியிலேயே எக்கச்சக்கமாய் காய் பறிக்கலாம். எங்கள் தேவைக்கு போக நிறைய அக்கம் பக்கம் இருப்பர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு ஒரு செடியே நிறைய காய்க்கிறது. 

நாங்கள் இதை வைத்து கார குழம்பு செய்வதுண்டு. மோரில் ஊற வைத்து வத்தலும் போடலாம். ஊரில் எல்லாம் சுண்ட வத்தல், முறுக்கு வத்தல் எல்லாம் சாப்பாட்டில் தவறாமல் இருக்கும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்;  வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காய் செடியில் கொத்துக்கொத்தாய் சிறிய காய்கள் பார்க்க ரொம்ப அழகு. இங்கே தோட்டத்தில் படம் எடுக்க எனக்கு ரொம்ப பிடித்த ஒரு செடி. என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,













சுண்டைக்காயை  வைத்து நிறைய பேச்சு வழக்கு உண்டு. 'சுண்டக்கா பய" "சுண்டக்கா சைஸ்ல இருந்துக்கிட்டு ஏன்னா வரத்து வரான்" என்று, சிறிய என்று பொருளில் பேச்சு வழக்கு உண்டு. சரி, சுண்டைக்காயை கொஞ்சம் close-up வைத்து பெரிசா எடுத்தா எப்படி இருக்கும் என்று நினைத்து எடுத்த இரண்டு படங்கள் கீழே.




Tuesday, October 23, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – காலி ஃப்ளவர்


போன பருவத்தில் கொஞ்சம் வித்தியாசமான காய்கறியாக முட்டை கோஸ் முயற்சித்து ஓரளவு வெற்றியும் கிடைத்தது. இந்த பருவத்தில் இன்னொரு முயற்சியாக காலி ஃப்ளவர். இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது காலி ஃப்ளவர் விதை கிடைத்தது. சரி, இந்த தடவை இதை முயற்சி செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.

காலி ஃப்ளவர். வெஜ் மக்களுக்கு காய்கறியில் ஒரு சிக்கன் மாதிரி தான். தந்தூரி காலி ஃப்ளவர், சில்லி காலி ஃப்ளவர் என்று எல்லாம் செய்ய ஏற்ற ஒரு காய்கறி. எல்லா குழந்தைகளுக்கு பிடித்த ஒரே காய்கறி இதுவாக தான் இருக்கும்.

முட்டைக்கோஸும் காலிஃப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. விதை, செடி எல்லாமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. காலி ஃப்ளவர் ஒரு குளிர் பிரதேச காய்கறி. சிலர் இங்கு நன்றாக வராது, பூச்சி தாக்குதல் நிறைய இருக்கும் என்றார்கள். 

இருந்தாலும் இந்த ஜூலையில் நாற்று விட்டு எடுத்து நட்டி விட்டேன்.ஒரு அடி இடைவெளியில் மொத்தம் 12  செடிகள் நட்டி விட்டேன். கோஸ் வந்ததை விட செடி ரொம்ப செழிப்பாக வந்தது. கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஒரு தடவை கொஞ்சம் மஞ்சள் கரைசளையும், ஒரு தடவை பஞ்சகாவியாவும் தெளித்து விட்டேன். 

விதைத்து இரண்டாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. சில செடிகள் ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது, சில கொஞ்சம் சுருண்டு கொண்டு போய் விட்டது. சில செடிகளில் பூ ரொம்ப குட்டியாக வந்தது. மற்ற செடிகளில் பூ ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. வெயில் பூவில் ரொம்ப விழாமல் இருக்க செடியின் இலையை மடக்கி குடை போல ஒரு கிளிப் வைத்து மாட்டி விட்டேன் :-). இந்த அடை மழைக்கு கொஞ்சம் முன்னதாக தப்பிக் கொண்டது. 

இணையத்தில் இருந்து, காலிஃப்ளவரில் பொட்டாசியம், விற்றமின் பி 6, ஆகியவை உள்ளன. இதில் விற்றமின் சி மிக அதிகமாக உள்ளது. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

விதைத்து மூன்றாவது மாதம் (அக்டோபர்) அறுவடை செய்தாகி விட்டது. பூ ரொம்ப திரட்சியாகவும் ருசியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்தால் இன்னும் நன்றாகவே பலன் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த வருட பலன் கீழே,