Saturday, January 24, 2015

தோட்ட உலா – ஜனவரி 2015



அரை நெல்லி

முதலில் இந்த வருடம் முதன் முதலாய் காய்க்க துவங்கி இருக்கும் அரை நெல்லி மரம். இந்த மரத்தை பற்றி முன்பு ஒரு பதிவில் ஒரே ஒரு காய் மட்டும் காய்த்தது பற்றி எழுதி இருந்தேன். அடுத்த முறை மூன்று காய் காய்த்தது. பிறகு ஒன்பது காய் கொண்ட ஒரு கொத்து. இப்படி மூன்று சீசன் போய் விட்டது. என்னடா இது இப்படி காய்க்குதே, ஒரு வேலை வச்ச கன்று சரி இல்லையோ, வெட்டி தான் போடணுமா என்று பேசி கொண்டிருப்போம். இன்னும் ஒரு முறை பாப்போம், இல்லன்னா நீ காலி என்பது போல சில மிரட்டல் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

இந்த முறை (நான்காவது காய்ப்பு) இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல காய்த்து தள்ளி விட்டது. சில மரங்கள் இப்படி தான் முதலில் ஓன்று இரண்டு காய்கள் என்று ஆரம்பித்து ஓரிரு பருவத்திற்கு பிறகு தான் முழு விளைச்சல் கொடுக்கிறது. எங்க வீட்டு மாமரமும் இப்படி ஒரு காய் காய்த்து தான் ஆரம்பித்தது.

இந்த வருடத்தில் இருந்து அரை நெல்லியும் நிரந்தரமாய் எல்லா பருவத்திலும் விளைச்சல் எதிர்பார்க்கும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. 

Season 1

Season 3
Season 4

  கொடி அவரை மற்றும் சுரை      

போன முறை கொடி அவரை போட்டு கொஞ்சமாய் (வெறும் இரண்டு கொத்து) பூ வந்து விளைச்சல் எடுக்க முடியாமல் போனதை இங்கே எழுதி இருந்தேன். இந்த முறை கொடி அவரை போடும் திட்டமே இல்லை. செடி அவரை என்று நினைத்து விதைத்தது கடைசியில் கொடி அவரையாக இருந்திருக்கிறது. இந்த முறையாவது காய்க்குமா (இந்த முறை அதே விதை கிடையாது) என்று பார்க்கலாம் என்று தோன்றியது. கொடி அவரை ஒன்றே பெரிய செடியாக வரும், இது மொத்தம் பத்து செடி. கொடி தாங்குமா. ஒரு மூன்று செடிகளை மட்டும் பக்கத்தில் கொடிக்கு கயிறு கட்டி திசையை மாற்றி விட்டு, மற்றதை பிடிங்கி விடாமல அப்படியே தரையோடு விட்டு விட்டேன்.
  
போன முறை சொதப்பியதற்க்கு இந்த முறை எக்கச்சக்க காய். ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூ கொத்து கொத்தாய். வாரா வாரம் முக்கால் கிலோ வரை தவறாமல் பறிக்க முடிகிறது. இந்த வருடம் முதல் கொடி அவரையில் முதல் அறுவடை..





அதே போல போன முறை மாடியில் Grow Bag-ல் போட்டு சொதப்பிய சுரைகாயை இந்த முறை கீழே தரைக்கு மாற்றி இருந்தேன். செடி முதலில் இருந்தே செழிப்பாய் வளர்ந்தது. பார்த்தாலே இந்த முறை நல்ல விளைச்சல் கொடுக்கும் என்று தோன்றியது.

சுரைக்காய் செடிக்கு நிறைய பூச்சி தொல்லைகள் வருகிறது. சின்னதும் பெரிதுமாய் புழுக்கள் நிறைய. தினமும் ஒரு முறை கவனமாக செடியை பார்க்க வேண்டிய இருக்கிறது. பெரிதாய் வரும் புழுக்கள் இலைகளை மொத்தமாய் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றது. அவைகளை நாம் எதையாவது வைத்து நீக்கி விட வேண்டியது தான். சின்ன சின்னதாய் காய் பிஞ்சிகள் வரும் போதே அவற்றை சுரண்டி சாப்பிட்டு விடுகின்றன. பிஞ்சிகள் ஓரளவுக்கு பெரிதாக இருந்தாலும் அப்படியே வெம்பி விடுகின்றன. இப்படி கொஞ்சம் காய்கள் வீணாக போய்விட்டது. வேப்பெண்ணை கரைசல் தெளித்து விட்டாலும், நாம் தினமும் பார்த்து நீக்கி விட்டால் தான் காய்களை காப்பாற்ற முடிகிறது. பெரிய விளைச்சல் கிடைக்கவிட்டலும் வாரம் ஒரு காய் (ஒரு கிலோ அளவில்) என்று வீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.











பூச்சி அரித்த பிஞ்சி
பூச்சி அரித்து வெம்பி போன பிஞ்சி

 மொச்சை / பீன் (Bean)

இந்த செடியின் விதையை எதிர் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்தார்கள். மொச்சை போல இருக்கும் என்றார்கள். எப்படி வருகிறதென்று பார்க்கலாம் என்று போட்டு விட்டேன். ஊதா கலரில் பூத்து பெரிய புளியங்காய் சைசுக்கு கொத்தாய் காய்த்தது. அப்படியே பொரியல் செய்யலாம் என்றார்கள். வைத்து பார்த்தோம், ரொம்ப மாவாக இருந்தது. இது சரியாக என்ன செடி/காய் என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறவும். 









கொய்யா

கொய்யா மரத்தில் வழக்கம் போல இந்த முறையும் நல்ல காய் பிடிப்பு. காயும் ஓரளவுக்கு பெரிதாக வந்திருக்கிறது. போன முறை நிறைய காய்கள் மேலே புள்ளிகள் போல வந்து வீணாகி போனது. சரியாக என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

வழக்கம் போல கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கரைத்து ஊற்றி விட்டு பார்த்தேன். இந்த முறை ஒரு சில காய்கள் மட்டும் அப்படி வந்திருக்கிறது. மற்றபடி நன்றாக வந்திருக்கிறது.


கொய்யா எல்லாம் ஆப்பிள் மாதிரி காஸ்ட்லி பழமாகி விட்டது. இங்கே கோவையில் கிலோ 80 ரூபாய்க்கு வீங்கி போன ஹைப்ரிட் கொய்யா விற்கிறார்கள். தேடினாலும் இது போல சிவப்பு நாட்டு கொய்யா கிடைப்பதில்லை. 





அடிப்பகுதி கருத்து போன கொய்யா

 மாதுளையில் கூட சில காய்களில் புள்ளி வருகிறது, காயின் அடிப்பகுதி கறுத்து/அழுகி போகிறது. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறுங்கள்.

மாதுளை -கரும்புள்ளி

மாதுளை - கறுத்து போன அடிப்பகுதி
 தை பட்டம் விதைப்பு

இப்போது அடுத்த விதைப்பு துவங்க நல்ல பருவம். இப்போது தோட்டத்தில் எல்லா பாத்திகளும் ஹவுஸ்-புல்லா தான் போய்ட்டு இருக்கு. இருந்தாலும் நாற்று எடுத்து விட்டால் சில முக்கிய காய்கறிகளை கோடையில் விளைச்சல் எடுக்க சரியாக இருக்கும். பொதுவாக ஏப்ரல்-மே வெயிலுக்கு நல்ல விளைச்சல் எடுக்கலாம். ஜூன்-ஜூலை வரை கத்தரி மாதிரி சில காய்கறிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். பொதுவான காய்கறிகள் கூட சேர்த்து, இந்த முறை தர்பூசணி போடலாம் என்று இருக்கிறேன். முன்பு ஒருமுறை தானாய் வளர்ந்த செடியில் ஒரு காய் பறித்தோம். இந்த முறை திட்டமிட்டு விதைத்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். சம்மரில் நம்ம வீட்டிலேயே தர்பூசணி வந்தால் கலக்கல் தானே. உங்கள் தை பட்டம் விதைப்பு பற்றி கூறுங்கள். முடிந்தால் விதைகளை பகிர்ந்து கொள்ளலாம்.        




Friday, January 9, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - குடை மிளகாய்

தோட்டத்தில் இருந்து 2015-ன் முதல் காய்கறி வெளியே வருகிறது.  

போன சீசனில் சரியாக வராத செடிகள் சிலவற்றை இந்த சீசனில் சில மாற்றங்கள் செய்து வெற்றிகரமாக கொண்டு வர முடிந்தது. அதில் குடை மிளகாயும் ஓன்று. போன சீசனில் முதன் முதலாய் முயற்சித்த குடை மிளகாய் (பச்சை நிறம்) செம சொதப்பல். தரையில் வைத்த செடி ஏதோ சத்து குறைவாலோ, நோய் தாக்குதலாலோ சரியாக வளரவே இல்லை. செடி சின்னதாக இருக்கும் போதே சரியான வளர்ச்சி இல்லாமல் நரங்கி போய் விட்டது. அதே பாத்தியில் வைத்த கத்தரி, மிளகாய் நன்றாக வந்தது. கடைசியில் ஒரே ஒரு குடை மிளகாய் தான் கிடைத்தது. அதை படம் வேறு எடுத்து கொண்டேன். நமது தோட்டத்தின் முதல் குடை மிளகாவாயிச்சே J. ஆனால் அதை வைத்து ‘என் வீட்டு தோட்டத்தில் எல்லாம் எழுத முடியாது என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

Yield from Last season

Yield from Last season

இந்த முறை சிறு மாற்றம் செய்யலாம் என்று அப்படியே மாடி தோட்டத்திற்கு மாற்றினேன். வழக்கமான Coir Pith மீடியா தான்.

விதைகள் அதே BioCarve விதைகள். இந்த முறை பச்சை நிறம் கூட சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கூடுதலாக. சிவப்பு, மஞ்சள் நிற விதைகள் இங்கே கோவையில் ஒரு கண்காட்சியில் வாங்கி இருந்தேன் (போன July 2014 Agri Intex-ல்). பச்சை நிறம் போன முறை சொதப்பிய அதே விதைகள் தான். பொதுவாய் BioCarve விதைகளின் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாகவே இருக்கிறது. பத்து விதைகள் போட்டால் மூன்று - நான்கு தான் முளைக்கிறது. ஆனால் வரும் செடிகள் நன்றாக விளைச்சல் கொடுக்கிறது.

மூன்று பாக்கெட்டுகளில் இருந்து மொத்தமாய் முப்பது விதைகள் போட்டதில் ஒரு பத்து செடிகள் தான் வந்தது. ஒவ்வொன்றையும் தனி தனி Grow Bag-ல் மாற்றி விட்டேன். இந்த முறை இந்த செடிகளுக்கு தனி கவனம் எடுத்து ( சரியான இடைவெளிகளில் மண்புழு உரம் வைப்பது, இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பஞ்சகாவ்யா தெளிப்பது என்று) பார்த்து கொண்டேன். இன்னும் கூடுதலாக நான் கிச்சன் கழிவில் இருந்து தயாரித்த உரம் (போன ‘Make your own Compost’ பதிவில் காட்டி இருந்த உரம்) நிறைய இந்த செடிகளுக்கு தான் போனது.

செடிகள் ரொம்பவே செழிப்பாக வளர்ந்தது. பொதுவாய் குடை மிளகாய் செடி ஓன்று ஐந்தில் இருந்து பத்து மிளகாய் வரை கொடுக்குமாம். எல்லா செடியிலும் ஐந்து காய்கள் வந்தது. காய் ஒவ்வொன்றும் நல்ல திரட்சியாக இருந்தது. முதல் அறுவடையில் மொத்தம் நான்கு மிளகாய் (பச்சை) பறித்ததில் மொத்தம் 600 கிராம் இருந்தது (ஒவ்வொன்றும் 150 கிராம்). 

















பச்சை நிறம் தவிர சிவப்பு, மஞ்சள் நிறம் வந்தால் நன்றாக இருக்குமே என்று இருந்தது. நான் இரண்டு செடிகள் ஒட்டி வைத்த பையில் மஞ்சள் நிறம் (ஆரஞ்சு கலந்த மஞ்சள்) வந்தது. பச்சை நிற மிளகாய்க்கும் மஞ்சள் நிற மிளகாய்க்கும் வடிவத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. மஞ்சள் நிறம் கொஞ்சம் தட்டையாக இருந்தது. குடை மிளகாய் எல்லாமே பெரிதாகும் வரை பச்சை நிறத்தில் தான் இருக்கிறது. காய் திரட்சியான பிறகு தான் நிறம் மாற தொடங்குகிறது. முழுவதும் நிறம் மாறிய பிறகு அந்த மஞ்சள்-ஆரஞ்சு குடை மிளகாய் அழகோ அழகு. வளைத்து வளைத்து போட்டோ எடுத்தாச்சு.







காய்கறிகளில் குடைமிளகாய் நிறைய வண்ணங்களில் வருகிறது. பச்சை, சிவப்பு, மஞ்சள் தவிர, ஊதா மற்றும் வெள்ளை நிறம் கூட இருக்கிறது. எல்லாம் போட்டு விட்டால் தோட்டம் பூவே இல்லாமல் கலர்புல்லா ஆகி விடும். போன Horti Intex-ல் எல்லா கலரும் கலந்த Omaxe விதை பாக்கெட் ஓன்று இன்னும் திறக்காமல் வைத்திருக்கிறேன். அடுத்த சீசனில் போடலாம் என்று வைத்திருக்கிறேன். 
  
மொத்தத்தில் வருட தொடக்கத்தில் சொதப்பிதை வருட இறுதியில் வெற்றிகரமாய் கொண்டு வந்தாச்சு. செடி எளிதாகவே வருகிறது. பெரிதாய் ஏதும் நோய் தாக்குதல் இல்லை. ஒரு சில செடிகளில் குருத்து மற்றும் இலைகளில் சின்ன சின்னதாய் Mealy bug மாதிரி பூச்சிகள் வந்தன (Below Photo). லேசாய் நீர் விடும் போது கைகளால் அகற்றி, நீரில் வேப்பெண்ணை கலந்து அடித்து விட்டேன். சரி ஆகி விட்டது. 


இந்த செடிகளுக்கு கொஞ்சம் சத்து நிறைய தேவை படும். போதிய இடைவெளிகளை உரம் இட வேண்டும். விதைத்து மூன்று மாதத்தில் அறுவடை செய்யலாம். இன்னும் நான்கு செடிகளில் காய் நிறம் கொடுக்கவில்லை. சிவப்பு மிளகாய் ஏதும் வருகிறதா என்று பார்க்கலாம்.