Saturday, January 24, 2015

தோட்ட உலா – ஜனவரி 2015



அரை நெல்லி

முதலில் இந்த வருடம் முதன் முதலாய் காய்க்க துவங்கி இருக்கும் அரை நெல்லி மரம். இந்த மரத்தை பற்றி முன்பு ஒரு பதிவில் ஒரே ஒரு காய் மட்டும் காய்த்தது பற்றி எழுதி இருந்தேன். அடுத்த முறை மூன்று காய் காய்த்தது. பிறகு ஒன்பது காய் கொண்ட ஒரு கொத்து. இப்படி மூன்று சீசன் போய் விட்டது. என்னடா இது இப்படி காய்க்குதே, ஒரு வேலை வச்ச கன்று சரி இல்லையோ, வெட்டி தான் போடணுமா என்று பேசி கொண்டிருப்போம். இன்னும் ஒரு முறை பாப்போம், இல்லன்னா நீ காலி என்பது போல சில மிரட்டல் எல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

இந்த முறை (நான்காவது காய்ப்பு) இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்பது போல காய்த்து தள்ளி விட்டது. சில மரங்கள் இப்படி தான் முதலில் ஓன்று இரண்டு காய்கள் என்று ஆரம்பித்து ஓரிரு பருவத்திற்கு பிறகு தான் முழு விளைச்சல் கொடுக்கிறது. எங்க வீட்டு மாமரமும் இப்படி ஒரு காய் காய்த்து தான் ஆரம்பித்தது.

இந்த வருடத்தில் இருந்து அரை நெல்லியும் நிரந்தரமாய் எல்லா பருவத்திலும் விளைச்சல் எதிர்பார்க்கும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. 

Season 1

Season 3
Season 4

  கொடி அவரை மற்றும் சுரை      

போன முறை கொடி அவரை போட்டு கொஞ்சமாய் (வெறும் இரண்டு கொத்து) பூ வந்து விளைச்சல் எடுக்க முடியாமல் போனதை இங்கே எழுதி இருந்தேன். இந்த முறை கொடி அவரை போடும் திட்டமே இல்லை. செடி அவரை என்று நினைத்து விதைத்தது கடைசியில் கொடி அவரையாக இருந்திருக்கிறது. இந்த முறையாவது காய்க்குமா (இந்த முறை அதே விதை கிடையாது) என்று பார்க்கலாம் என்று தோன்றியது. கொடி அவரை ஒன்றே பெரிய செடியாக வரும், இது மொத்தம் பத்து செடி. கொடி தாங்குமா. ஒரு மூன்று செடிகளை மட்டும் பக்கத்தில் கொடிக்கு கயிறு கட்டி திசையை மாற்றி விட்டு, மற்றதை பிடிங்கி விடாமல அப்படியே தரையோடு விட்டு விட்டேன்.
  
போன முறை சொதப்பியதற்க்கு இந்த முறை எக்கச்சக்க காய். ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூ கொத்து கொத்தாய். வாரா வாரம் முக்கால் கிலோ வரை தவறாமல் பறிக்க முடிகிறது. இந்த வருடம் முதல் கொடி அவரையில் முதல் அறுவடை..





அதே போல போன முறை மாடியில் Grow Bag-ல் போட்டு சொதப்பிய சுரைகாயை இந்த முறை கீழே தரைக்கு மாற்றி இருந்தேன். செடி முதலில் இருந்தே செழிப்பாய் வளர்ந்தது. பார்த்தாலே இந்த முறை நல்ல விளைச்சல் கொடுக்கும் என்று தோன்றியது.

சுரைக்காய் செடிக்கு நிறைய பூச்சி தொல்லைகள் வருகிறது. சின்னதும் பெரிதுமாய் புழுக்கள் நிறைய. தினமும் ஒரு முறை கவனமாக செடியை பார்க்க வேண்டிய இருக்கிறது. பெரிதாய் வரும் புழுக்கள் இலைகளை மொத்தமாய் சாப்பிட ஆரம்பித்து விடுகின்றது. அவைகளை நாம் எதையாவது வைத்து நீக்கி விட வேண்டியது தான். சின்ன சின்னதாய் காய் பிஞ்சிகள் வரும் போதே அவற்றை சுரண்டி சாப்பிட்டு விடுகின்றன. பிஞ்சிகள் ஓரளவுக்கு பெரிதாக இருந்தாலும் அப்படியே வெம்பி விடுகின்றன. இப்படி கொஞ்சம் காய்கள் வீணாக போய்விட்டது. வேப்பெண்ணை கரைசல் தெளித்து விட்டாலும், நாம் தினமும் பார்த்து நீக்கி விட்டால் தான் காய்களை காப்பாற்ற முடிகிறது. பெரிய விளைச்சல் கிடைக்கவிட்டலும் வாரம் ஒரு காய் (ஒரு கிலோ அளவில்) என்று வீட்டுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.











பூச்சி அரித்த பிஞ்சி
பூச்சி அரித்து வெம்பி போன பிஞ்சி

 மொச்சை / பீன் (Bean)

இந்த செடியின் விதையை எதிர் வீட்டில் இருப்பவர்கள் கொடுத்தார்கள். மொச்சை போல இருக்கும் என்றார்கள். எப்படி வருகிறதென்று பார்க்கலாம் என்று போட்டு விட்டேன். ஊதா கலரில் பூத்து பெரிய புளியங்காய் சைசுக்கு கொத்தாய் காய்த்தது. அப்படியே பொரியல் செய்யலாம் என்றார்கள். வைத்து பார்த்தோம், ரொம்ப மாவாக இருந்தது. இது சரியாக என்ன செடி/காய் என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறவும். 









கொய்யா

கொய்யா மரத்தில் வழக்கம் போல இந்த முறையும் நல்ல காய் பிடிப்பு. காயும் ஓரளவுக்கு பெரிதாக வந்திருக்கிறது. போன முறை நிறைய காய்கள் மேலே புள்ளிகள் போல வந்து வீணாகி போனது. சரியாக என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

வழக்கம் போல கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கரைத்து ஊற்றி விட்டு பார்த்தேன். இந்த முறை ஒரு சில காய்கள் மட்டும் அப்படி வந்திருக்கிறது. மற்றபடி நன்றாக வந்திருக்கிறது.


கொய்யா எல்லாம் ஆப்பிள் மாதிரி காஸ்ட்லி பழமாகி விட்டது. இங்கே கோவையில் கிலோ 80 ரூபாய்க்கு வீங்கி போன ஹைப்ரிட் கொய்யா விற்கிறார்கள். தேடினாலும் இது போல சிவப்பு நாட்டு கொய்யா கிடைப்பதில்லை. 





அடிப்பகுதி கருத்து போன கொய்யா

 மாதுளையில் கூட சில காய்களில் புள்ளி வருகிறது, காயின் அடிப்பகுதி கறுத்து/அழுகி போகிறது. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறுங்கள்.

மாதுளை -கரும்புள்ளி

மாதுளை - கறுத்து போன அடிப்பகுதி
 தை பட்டம் விதைப்பு

இப்போது அடுத்த விதைப்பு துவங்க நல்ல பருவம். இப்போது தோட்டத்தில் எல்லா பாத்திகளும் ஹவுஸ்-புல்லா தான் போய்ட்டு இருக்கு. இருந்தாலும் நாற்று எடுத்து விட்டால் சில முக்கிய காய்கறிகளை கோடையில் விளைச்சல் எடுக்க சரியாக இருக்கும். பொதுவாக ஏப்ரல்-மே வெயிலுக்கு நல்ல விளைச்சல் எடுக்கலாம். ஜூன்-ஜூலை வரை கத்தரி மாதிரி சில காய்கறிகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். பொதுவான காய்கறிகள் கூட சேர்த்து, இந்த முறை தர்பூசணி போடலாம் என்று இருக்கிறேன். முன்பு ஒருமுறை தானாய் வளர்ந்த செடியில் ஒரு காய் பறித்தோம். இந்த முறை திட்டமிட்டு விதைத்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். சம்மரில் நம்ம வீட்டிலேயே தர்பூசணி வந்தால் கலக்கல் தானே. உங்கள் தை பட்டம் விதைப்பு பற்றி கூறுங்கள். முடிந்தால் விதைகளை பகிர்ந்து கொள்ளலாம்.        




17 comments:

  1. இசை'க்கு வளரும் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் மிரட்டலுக்கும் காய்கள் காய்க்கும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன் :)

    கொய்யா, அவரை, சுரை, நெல்லி இவற்றையெல்லாம் பார்த்து காதில் புகை வராத குறைதான். ஊரில் போய் செட்டில் ஆனதும் முதலில் செய்யப்போவது இந்த தோட்ட வேலைதான். உங்கள் தோட்டத்தைப் பார்த்தாலே ஒரு மகிழ்ச்சி வந்துவிடுகிற‌து.

    ReplyDelete
    Replies
    1. :-) இசை இல்லை என்றால் வசை தான் :) .. சும்மா சொன்னேன்.. சும்மா செல்லமா திட்டினால் போதும்.. வீட்டில் இருக்கும் செடி மரம் எல்லாமே வீட்டில் ஒரு ஆள் மாதிரி தான். நல்லா காய்க்கும்னு நெனைச்சு வச்சோம்னா நல்லாவே வரும்

      Delete
  2. மிரட்டி காய்க்க வைத்து அத வேறு படமா போட்டு, எங்களை மிரட்டுறீங்க. வீட்டு ஞாபகம் கொய்யா,அரை நெல்லி பார்க்கையில்.
    Super siva keep it up.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா.. அரை நெல்லி பழுத்ததும் அதில் ஜாம் ஓன்று போட்டு அதையும் படமா போடலாம் என்று இருக்கிறேன் :-) ..

      Delete
  3. சிவா ஸூபர் , பார்த்தாலே ஆனந்தமாக இருக்கிறது. அனைத்தும் அருமை, எப்பொழுதும் முயற்சி தோற்பதில்லை, கண்டிப்பாக பலன் உண்டு என்பதற்க்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒரு விஷயம் சிறிது பொறுமை தேவை சாதிப்பதற்க்கு. அந்த பொறுமைக்கு கிடைத்த பரிசு.

    தொடரட்டும் உங்கள் முயற்சி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜேஷ். முயற்சியும் ஆர்வமும் கண்டிப்பா சரியாக தான் வரும். நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் பொறுமையும் வேண்டும்.

      Delete
  4. @சித்ரா மேடம், நீங்கள் சொல்வது போல். ஊரில் செட்டிலானதும் முதல் வேலை இதுதான். நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் தலைப்பு (பசுமை விவசாயம் ) ஆர்கானிக் பற்றி நடந்தது. கேட்கும்போதே கொடுமையாக இருந்தது, விவசாயிகள் சொல்கிறார்கள் ஒவ்வொரு காய்கறிக்கும், பூச்சிக்கொல்லி மருந்துதான் அடிக்கிறார்கள். கத்திரிக்காய் , முட்டைகோசு , காலிப்லவர், போன்ற காய்கறிகள் அதிகமாக பூச்சிகளால் தாக்கப்படுகிறது என்றும்,அதற்காக அவற்கள் அதிகமாக மருந்துகளை பயன்படுத்துகின்றனர் என்றும், மிகவும் வேதனையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு விவசாயி தான் வீட்டிற்க்கு அவர் காய்கறிகளை பயன்படுத்துவதில்லை என்றும் அவர் வேறு ஒருவரிடம் வாங்கினார் என்றும் கூறியது வேதனையாக இருந்தது. ஏன் என்று கேட்டதற்க்கு அவர் சொன்னது, நான் விலைவிக்கும் காய்கறி அதிக மருந்துகளால் விளைந்தவை, என்னாலே அதை பயன்படுத்த முடியவில்லை காரணம் அத்தனை நஞ்சாக இருக்கிறது என்றார்.

    இனி நாம் ஒவ்வொருவரும், முடிந்த அளவு வீட்டில் தோட்டம் அமைத்து முதல் கடமையாக நாம் குடும்பத்திற்க்கும், நமக்கும் ஏற்ற வகையில் ஆரோக்கியத்தின் பயனாக, இதை பொழுது போக்கிற்காக இல்லாமல் இதன் பயனை நினைத்து செய்தால். நமக்கு ஆரோக்கியமும் கிடைக்கும், மருத்துவ செலவும் குறையும்.

    உடல் ஆரோக்கியம்தான், மன ஆரோக்கியம்,இதுவே சந்தோஷமான வாழ்க்கை.


    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜேஷ். நான் தொலைகாட்சி அவ்வளவாய் பார்ப்பதில்லை. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்ததில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      Pesticide Residuals என்றொரு வார்த்தை ஓன்று. பூச்சிக் கொல்லி தெளித்த பின் காய்கறிகளிலேயே உறிஞ்சி கொண்டு இருக்கும் பூச்சிக் கொல்லி விஷம் அது. இன்றைக்கு மருத்துவம் வளர்ந்து விட்டது என்று புல்லரித்து பேசும் நாம், அந்த மருத்துவம் ஏன், எதற்கு என்று யோசிக்க மறந்து, மறுத்து விடுகிறோம். முக்கால்வாசி பிரச்னை நம் உணவு தான். அதில் பயன்படுத்தப்படும் ரசாயனம் தான். நாம் வெளியே ஆர்கானிக் காய் என்று எவ்வளவு நம்பி வாங்க முடியும் என்பது இன்னும் கேள்வி குறியே. வீட்டுத் தோட்டம் ஒன்றே வருங்காலத்தில் ஒரே வழி.

      Delete
  5. சிவா!
    இளம் விவசாயிக்கு என் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள். உண்மையில் அசத்துகிறீர்கள்.
    நேற்று "நீயா நானா" பார்த்த போது , உங்கள் நினைவும் உங்களைப் போன்றோர் ஏன் பங்குபற்றுவதில்லை எனும் எண்ணமும் வந்தது.
    அந்த நிகழ்ச்சியில் கிழக்குப் பதிப்பகம் பத்திரிக்கு என்ன? வேலையென்பதை யாராவது அறிந்து
    சொல்லுங்கள்.
    பூச்சிகொல்லியால் புற்று நோய்வருவதில்லை எனக் கூசாமல் பொய் சொல்லினார்கள்.
    வண்ணாத்திப் பூச்சி, தேனீ அழிவு, இதனால் விவசாயம், எதிர்கால தாவர வர்க்கங்களில் இனப்பெருக்கம் பாதிப்பு, பூச்சிகொல்லியால் என்பதை எவருமே குறிப்பிடவில்லை.
    நிலம் இருப்போர் சிறுதளவாவது உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதே சிறப்பு.
    மீண்டும் உங்களைப் பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன். எல்லோருமே 'நீயா நானா' பார்ப்பீர்கள் போல :-)

      //அந்த நிகழ்ச்சியில் கிழக்குப் பதிப்பகம் பத்திரிக்கு என்ன? வேலையென்பதை யாராவது அறிந்து
      சொல்லுங்கள்.// இதை தனி பதிவாக போட்டு விவாதிக்கலாம் போல.

      ///பூச்சிகொல்லியால் புற்று நோய்வருவதில்லை எனக் கூசாமல் பொய் சொல்லினார்கள்// அப்போ எதனால் வருதாம். அதை சொன்னாங்களா.

      எனக்கு இந்த மாதிரி நிகழ்சிகளில் ஆர்வம் இல்லை. எல்லாம் திரை-கதை-வசனம் எழுதிய செட்டப் நிகழ்சிகள். சென்டிமென்ட் பேத்தல்கள். இப்படி சில நிகழ்சிகள் பண்றாங்களே என்று சொல்லி ஆறுதல் அடைவது நல்லதில்லை என்றே எனக்கு தோன்றும்.

      //வண்ணாத்திப் பூச்சி, தேனீ அழிவு, இதனால் விவசாயம், எதிர்கால தாவர வர்க்கங்களில் இனப்பெருக்கம் பாதிப்பு, பூச்சிகொல்லியால் என்பதை எவருமே குறிப்பிடவில்லை// நல்லது. அப்புறம் என்னதான் பேசினாங்க.. காய்கறி பூச்சி கொல்லி மருந்தை எல்லாம் உறிஞ்சுவதில்லை என்றார்களா.. சொல்லி இருப்பாங்க..

      //நிலம் இருப்போர் சிறுதளவாவது உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வதே சிறப்பு// - இது ஓன்று தான் இப்போதைக்கு வழி.

      விவரமாய் நிகழ்ச்சி பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி யோகன்.

      Delete
  6. அன்புடையீர், வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். கண்டிப்பா வந்து பார்க்கிறேன்.

      Delete
  7. என் வலைத்தளம் அறிமுகத்திற்கும் உங்கள் வருகைக்கும் ரொம்ப நன்றி மேடம்.

    ReplyDelete
  8. வணக்கம்

    உங்கள் ப்ளாக்கை கொஞ்சகாலமாகத்தான் தொடர்கிறேன், உங்கள் தோட்டத்தைப் பற்றி ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும், நாம் எப்பொழுது இப்படி தோட்டம் போடுவோம்ங்கிற‌ எண்ணமே பிரதானமாகிறது!!

    நானும் என் சிறு வாடகைவீட்டில் என்னால் முடிந்த‌ அளவு தொட்டிச்செடிகளை வைத்து பராமரித்துவந்தேன்! அதிலும் நிறைய‌ பூச்சிகள் தொந்தரவு இருந்தது. பூண்டு, மிளகாய்க்க்கரைசல் தெளித்து ஓரளவிற்கு சமாளிக்க‌ முடிந்தது.

    நம் கையால் பயிரட்டச் செடிகளிலிருந்து காய்களை பறித்து சமைக்கிறது எனக்கு மிக‌ ஆனந்தமான‌ விஷயம்!

    //ஊதா கலரில் பூத்து பெரிய புளியங்காய் சைசுக்கு கொத்தாய் காய்த்தது. அப்படியே பொரியல் செய்யலாம் என்றார்கள். வைத்து பார்த்தோம், ரொம்ப மாவாக இருந்தது. இது சரியாக என்ன செடி/காய் என்று தெரியவில்லை. நண்பர்களுக்கு விவரம் தெரிந்தால் கூறவும்// இதைப் பார்த்தால் ஊர் அவரக்காய் மாதிரியல்லவா தெரிகிறது! நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இல்லாதமாதிரியும் தெரிகிறது!

    தொடரட்டும் உங்கள் தோட்டக் "கலைப்பணி".

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி மேடம்.

      //நம் கையால் பயிரட்டச் செடிகளிலிருந்து காய்களை பறித்து சமைக்கிறது எனக்கு மிக‌ ஆனந்தமான‌ விஷயம்!// உண்மை தான். வாடகை வீட்டிலேயே உங்கள் முயற்சியை கேட்க ரொம்ப மகிழ்ச்சி. பூச்சி தொல்லை சமாளிக்க கொஞ்சம் கடினமாக தான் இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் கற்று தேறிக் கொள்ளலாம் :-)

      Delete
  9. as others say it is a good. when you opened a blog there is always a second opinion, you should always listen those who makes impossible to possible. I challenge you can you SOW and harvest Native seeds in a container in 90 days each plant gives you 1KG in 3 days. Be honest in publishing.

    ReplyDelete
    Replies
    1. Not sure what you are trying to say here and to whom. Can you elaborate a little bit on your notes plz..

      Delete