Sunday, October 20, 2013

தோட்ட உலா – அக்டோபர் 2013



தோட்டத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உண்டு. அவை எல்லாவற்றையும் தனி ஒரு பதிவாக கொண்டு வருவது கடினம். அதனால் ஒரு கதம்பமாக இந்த தொடரை ஆரம்பிக்கிறேன். நல்லது, கெட்டது, வளர்ந்து கெட்டது, காய்த்து கொட்டியது என்று தோட்டத்தை ஒரு உலா வரும் மாத பதிவாக கொண்டு வருகிறேன்.  
இந்த மாத அறுவடை
போன பருவத்தில் ஊற்றிக்கொண்ட தக்காளியையும் மிளகாயும் இந்த முறை உருப்படியாய் கொண்டுவர கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்து கொண்டு வந்தேன். தக்காளி பெரிதாய் இரண்டு பாத்தியிலும் (30 செடி) , மிளகாய் ஒரு பாத்தியிலும் (ஒரு 15 செடி). இரண்டுமே இங்கே விவசாய கல்லூரியில் வாங்கிய விதைகள் தான். 

முதலில் கொஞ்சம் திணறிய மிளகாய் (ஒரு கட்டத்தில் பிடுங்கி விடலாம் என்று கூட நினைத்தேன்), ஒரு சின்ன மழைக்கு பிறகு நன்றாக வளர ஆரம்பித்தது. நாம் என்ன தான் கவனம் எடுத்தாலும், நீர் ஊற்றினாலும் ஒரு சின்ன மழை தூறல் தோட்டத்தில் கொண்டு வரும் மாற்றம் நிறைய. தக்காளி நன்றாக வந்தது. இருந்தாலும் சின்னதாய் சாறு உறிஞ்சும் பூச்சி (கொசு மாதிரி, சின்னதாய், வெள்ளையாய் பூச்சிகள்) தாக்குதல் கொஞ்சம் இருந்தது. இது வரை தக்காளியில் இந்த பிரச்னையை பார்த்தது இல்லை. அதனால் முதலில் கொஞ்சம் லேசாய் விட்டுவிட்டேன். இதை கட்டுப்படுத்த இப்போதைக்கு நீர் பாய்க்கும் போது, நீரை கொஞ்சம் வேகமாய் செடியில்  அடித்து கொஞ்சம் கொஞ்சமாய் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும் சில, இன்னும் நாயகன் கமல் மாதிரி என்ன வேகமாய் தண்ணீர் அடித்தாலும் எதிர்த்து நின்று, போவேனா என்று அடம்பிடிக்கிறது. ஒழித்துக்கட்ட உருப்படியாய் ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

மொத்தத்தில், இந்த மாத விளைச்சலில் மிளகாயும் தக்காளியும் முதலிடம் பெறுகிறது,




இந்த மாத சீசன் 

பன்னீர் ரோஜா (நாட்டு ரோஜா) போன மாதம் மொட்டையாய் வெட்டி விட்ட பிறகு, சின்ன தூரலில் நன்றாக தளிர்த்து விட்டது. இந்த செடிகள் எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு வைத்தது. பெரிதாய் ஒன்றும் கவனம் தேவை இல்லை. எப்போதாவது லேசாய் கிளறி உரம் வைத்து, கிளைகளை வெட்டி பராமரித்து வந்தால் போதும். கீழே பார்ப்பது வெறும் இரண்டு செடியில் இருக்கும் பூக்கள்,



ஊத்திக்கிச்சி
முதன் முதலாய் கொடி அவரை முயற்சி செய்தது. செடி அவ்ளோ செழிப்பா வந்தது. கொடி வளர்ந்து சுண்டைக்காய் செடி மொத்தமும் சுற்றி அதை காலி செய்து விட்டது. நன்றாக காய் தந்து கொண்டிருந்த சுண்டைக்காய் செடி இருந்த இடமே இல்லாமல் கொடி சுற்றிக் கொண்டது. அவரை காய்த்தால் சரி தான் என்று விட்டாச்சு. கடைசியில் உச்சியில், எட்டாத உயரத்தில் இரண்டு கொத்து காய்த்தது. பிறகு ஒன்றையும் காணோம். செடி மட்டும் சுண்டைக்காய் செடியை காலிசெய்து விட்டு, பக்கத்தில் முருங்கை, மாதுளை என்று ஒவ்வொன்றாய் கைப்பற்ற ஆரம்பித்தது. இது வேளைக்கு ஆவரது இல்லன்னு அவரையை காலி செய்து விட்டேன் :-(. இந்த மாத ஃளாப் இது தான். ஆனால் செடி அவரையில் இருந்து நல்ல விளைச்சல் இந்த முறை கிடைத்தது. இனி தான் சுண்டைக்காய் செடியை கொஞ்சம் வெட்டி விட்டு கொண்டு வரவேண்டும்.

புதுவரவு 

செண்டு செடி. ஊரில் இருந்து கொண்டு வந்த ஆரஞ்சு கலர் அடுக்கு செண்டு விதை. ஒரு மூன்று செடி வெளியே வைத்து விட்டிருக்கிறேன். செடி நன்றாக வந்து கொண்டிருக்கிறது. அடுத்தமாதம் பூவோடு பதிவில் வரலாம்.

பப்பாளி. நம்ம வீட்டு பப்பாளியில் இருந்து விதை எடுத்து கொண்டு வந்த இரண்டு இரண்டு செடி, இப்போது காய்க்க ஆரம்பித்திருக்கிறது. பழைய இரண்டு மரங்களோடு இப்போது இந்த இரண்டு புதிய மரங்களும் சேர்ந்து நான்கு மரங்கள் இருக்கிறது. பப்பாளிக்கு கடந்த இரண்டு வருடங்களாக பஞ்சம் இல்லை. எப்படியும் வாரம் ஒரு ஐந்து பழங்கலாவது கிடைக்கிறது (இரண்டு மரங்களில் இருந்து). அக்கம் பக்கம் எல்லோருக்கும் ரெகுலராக சப்ளை இருந்து கொண்டு இருக்கிறது. 

இரண்டு வருடங்களுக்கு வைத்த மரம், இன்னும் ஓரளவுக்கு பெரிய பழம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது (ஒரு கிலோ அளவில்). ரொம்ப உயரம் போய் விட்டதால் (ஒரு 15 அடி வளர்ந்திருக்கும்) பப்பாளி பறிப்பதற்க்குள் தான் ஒரு வழி ஆகி விடுகிறோம். கீழே ஒரு பெரிய போர்வையை இரண்டு பேர் பிடிக்க, பறித்து போட்டு வலை போட்டு பிடிக்க வேண்டிய இருக்கிறது. 

புதிதாய் வளர்ந்திருக்கும் மரத்தின் காய் கொஞ்சம் வித்தியாசமாக உருண்டையாக வந்திருக்கிறது. 



கரும்பு பல மாதம் ஆகியும் பெரிதாய் ஒன்றும் வளர வில்லை. ஆனாலும் செடி நன்றாக தான் இருக்கிறது. அதானால் ஓர் ஓரமாய் வளர்ந்து விட்டு போகட்டும் என்று விட்டாச்சு. பார்க்கலாம் எப்படி வருதுன்னு,

சீசன்-2

எலுமிச்சை மறுபடி காய்த்திருக்கிறது. இந்த முறை எலுமிச்சை ஒரு இரண்டு கிலோ கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 

புது இடத்தில் நட்டு வைத்த சாத்துக்குடி கொஞ்சமாய் மறுபடி பூத்திருக்கிறது. இந்த மழையை தாக்குப்பிடித்து உதிராமல் வருமா என்று பார்க்க வேண்டும்,

பிரச்சினை 

இரண்டாவது தென்னை இப்போது தான் காய்க்கவே ஆரம்பித்தது. இரண்டு முறை குருத்தில் வண்டு தாக்குதல் கொஞ்சம் தீவிரமாகவே இருந்தது. கடைசியாய் நான் தான் ஏறி ஒரு வண்டு இருப்பதை கண்டுபிடித்து வேப்பெண்ணை ஊற்றி கொன்று காலி செய்தேன். அப்போதே அது குருத்தை நிறைய தின்றிருந்தது. கொஞ்சம் குருத்து அழுகல் நோய் மாதிரி வேறு L. இரண்டு வாரம் முன்பு ஒரு ஆள் வைத்து சுற்றி இருக்கும் ஓலைகளை வெட்டி கொஞ்சம் வெயில் படும் படி விட்டிருக்கிறோம். மருந்தும் ஊற்றி இருக்கிறோம். நன்றாக வந்து விடும் என்று நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம். 


ஆராய்ச்சி

பீன்ஸ். இந்த முறை ஒரு மூன்று செடி உருப்படியாய் வந்து காய்த்திருக்கிறது. எல்லாவற்றையும் விதைக்கு விட்டு விட்டேன். இதில் இருந்து இன்னும் கொஞ்சம் செடி கொண்டு வந்து உருப்படியாய் ஒரு முறையாவது பீன்ஸ் அறுவடை செய்யவேண்டும். பார்க்கலாம்.

மிளகாய், இப்போது விளைந்திருக்கும் மிளகாய் வகை கொஞ்சம் நீளமான ஒரு ராகமாய் இருக்கிறது. காரம் பரவாயில்லை. மாடியில் ரோஜா தொட்டியில் அதுவாகவே முளைத்து ஒரு மிளகாய் செடி காய்த்திருக்கிறது. காய் பார்க்க நல்ல திரட்சியாக இருக்கிறது. அடுத்த பருவத்திற்கு இதில் இருந்து விதை எடுத்து வளர்த்து பார்க்கலாம் என்று ஒரு திட்டம்.