Wednesday, November 27, 2013

தோட்ட உலா – நவம்பர் 2013இந்த மாத அறுவடை

மா. மழை காலத்தில் (மழையை தான் காணோம்) மாம்பழமா என்று கேட்க வேண்டாம். எங்க வீட்டு மாமரம் வருடம் முழுவதும் காய்க்கிறது. மே மாதம் ஒரு சீசன், இப்போ நவம்பரில் அடுத்த சீசன் முடிந்து மறுபடி பூத்திருக்கிறது. இந்த மாமரத்தை பற்றி, Tailor Bird கூடு கட்டியதை பற்றிய பதிவில் சொல்லி இருந்தேன். வீடு வாங்கும் போது ஏற்கனவே இருந்த மரம். ரொம்ப சுவற்றை ஒட்டி வைத்து விட்டார்கள். சீசன் தவறாமல் காய்கிறது. ஆனால் காய்ப்பதில் முக்கால்வாசி எங்களுக்கு கிடைப்பதில்லை ( எல்லாம் வெளியே இருந்தே பறித்து போய் விடுவார்கள்).

இந்த மாம்பழம் வெரைட்டி என்னவென்று தெரியவில்லை. பொதுவாய் கிடைக்கும் வகை இல்லை. சுவையும் ரொம்பவே சுமார் தான் (இனிப்பும் இல்லை, புளிப்பும் இல்லை). ரொம்ப சுவற்றின் ஓரமாய் வேறு இருப்பதால் மரத்தை எடுத்து விட்டு வேறு மரம் ஓன்று வைக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. போன முறை  Tailor Bird வந்து கூடு கட்டியதால் இந்த திட்டம் தாமதமாகி போனது. பட்டர் ப்ருட் (Avocado) மரம் ஓன்று முயற்சி செய்யலாம் என்று ஒரு திட்டம்.  

பப்பாளி. புதிய மரத்தில் இருந்து முதல் பழம். எந்த புதிய செடி/மரம் வளர்த்தாலும் முதல் விளைச்சல் ரொம்ப விசேஷமானது. இந்த மரம் வீட்டில் இருக்கிற பெரிய மரத்தின் விதையில் இருந்து உருவாக்கியதால் சுவை அதே போல் இருக்குமா என்று ஒரு ஆர்வம் இருந்தது. பழம் வேறு சம்மந்தமே இல்லாமல் உருண்டையாய் வந்ததால் ஒரு குழப்பம். முதல் அறுவடை. சுவை கொஞ்சம் கூட குறைவில்லாமல் அதே சுவை (கொஞ்சம் எக்ஸ்ட்ரா சர்க்கரை போட்டது மாதிரி). இந்த பழங்கள் கொஞ்சம் சிறிதாய் இருந்தாலும், இப்போது வரும் காய்கள் ஒரு கிலோ அளவில் வந்து கொண்டிருக்கின்றன. இது மூன்றாவது பப்பாளி மரம். இன்னும் ஒரு மரம் (நான்காவது) இப்போது தான் பிஞ்சு பிடித்திருக்கிறது.  


எலுமிச்சை. இந்த மாதம் அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஒரு கொத்தில் இருந்து ஐந்து காய்கள் பறித்திருப்போம். வழக்கம் போல ஒவ்வொரு பழமும் 150 gms  எடை இருக்கிறது. முக்கால்வாசி பேர் இதை பார்த்தவுடன் கொய்யா பழம் என்று தான் சொல்கிறார்கள் . மூன்று கிலோ அளவுக்கு காய்கள் கிடக்கிறது.


 
வெள்ளை கத்தரி. போன மாத பதிவில் விடுபட்டு போன கத்தரி. இந்த வெள்ளை கத்தரி கொண்டு வர கிட்டதட்ட ஒரு வருடம் முயற்சித்து, இப்போது தோட்டத்தில் எளிதாய் வளர்கிறது. ஹைப்ரிட் வகை (வயலட் நிறம்) கத்தரி போல காய்த்து கொட்டுவது இல்லை. ஆனால் நீண்ட காலம் பலன் கொடுக்கிறது.  
புதினா. தொட்டியில் வளர்க்க எளிதான ஒரு செடி. தரையில் வைத்து விட்டால் இன்னும் செழிப்பாக வளர்கிறது. என் தோட்டத்தில் எப்போதோ தரையில் வைத்து விட்ட சில குச்சிகள், வேர்விட்டு எக்கச்சக்கமாய் வளர்த்து கிடக்கிறது. வேண்டும் போது பறித்துக் கொள்ள வேண்டியது தான். 


இந்த முறை தக்காளி மிளகாய் விளைச்சல் அமோகம். கடையில் தக்காளி வாங்கி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். இந்த வாரத்தோடு தக்காளி விளைச்சல் முடிகிறது. அடுத்த நாற்று தயாராக இருக்கிறது. மிளகாய் இன்னும் ஒரு மாதம் விளைச்சல் கிடைக்கும் போல.


செண்டு. நான் போன மாத தோட்ட உலாவில் கூறியது போல இந்த மாதம் பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டது. நினைத்தது மாதிரி ஆரஞ்சு அடுக்கு செண்டு. அழகு :-)


இந்த மாத சீசன்
கொய்யாவும் சீத்தாவும் காய்த்திருக்கின்றன. சீத்தா பொதுவாய் ஏப்ரல், மே மாதங்களில் தான் சீசன். இந்த வருடம் போனஸ் விளைச்சலாய் நவம்பரிலும் காய்த்திருக்கிறது. ஏப்ரல் சீசன் போல அதிக காய் இல்லை என்றாலும் ஒரு 40 காய் பிடித்திருக்கிறது. 


புதுவரவு
வெற்றிலை. எதிர் வீட்டில் இருந்து ஒரு அம்மா கேரளா போன போது நம்ம தோட்டம் நியாபகம் வர இந்த வெற்றிலை கொடியை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். வெற்றிலை கொடி ரொம்ப நாளாய் வைக்கலாம் என்று நினைத்தது. இப்போது தானாகவே வந்திருக்கிறது. தோட்டத்தில் இருந்து பப்பாளி பழம் மாதிரி அக்கம் பக்கம் சப்ளை ஆகும் போது இப்படி சில பலன் கிடைக்கும். ஒரு மிளகு கொடியும் அதில் இருந்தது. ஆனால் மிளகு கொடி ரொம்ப காய்ந்து விட்டது. வருவது கடினம் தான்.

இந்த காய்கறி சீசன் தோட்டத்தில் இந்த மாதத்தோடு முடிகிறது. அடுத்த சீசனை தொடங்கி விட விதை எல்லாம் போட்டு நாற்றுக்கள் தயாராக நிற்கிறது. விரிவாக அடுத்த பதிவில் எழுகிறேன்.

Next Season Starts....

Friday, November 15, 2013

கோவையில் – வீட்டுத் தோட்டம் & மாடித் தோட்டம் – ஒரு நாள் பயிற்சி

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். ஹோட்டல் ஸ்ரீராம்-ல், இந்த ஞாயிறு (17.11.2013) வீட்டுத் தோட்டம் மற்றும் மாடி தோட்டம் பற்றி ஒரு பயிற்சி கருத்தரங்கு ஓன்று நடைபெறுகிறது. நமது ப்ளாக் நண்பர் தங்கவேல்  மூலமாக இந்த தகவல் கிடைத்தது. இந்த பயிற்சி பற்றி எனக்கு எந்த விவரமும் இல்லை. கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்த்து கொள்கிறேன். அவ்வளவே.

கட்டணம் (Rs.750). கோவையில் என்பதால் இங்கே வீட்டு தோட்டத்தில் ஆர்வம் உள்ள மக்கள் வட்டம் பற்றி தகவல் கிடைக்கலாம். கோவையில் தோட்டத்திற்கு தேவையான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கலாம். அதனால் நான் இந்த பயிற்சிக்கு போகிறேன். போன் செய்து ரெஜிஸ்டர் செய்து கொண்டால், ஞாயிறு நேரில் போய் பணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.

விருப்பம் இருந்தால், கொடுக்கபட்ட எண்னை தொடர்பு கொண்டு பேசி பாருங்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண்கள்:
94420 19007
75985 16303
98940 66303    P.வின்சென்ட்