Tuesday, October 23, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – காலி ஃப்ளவர்


போன பருவத்தில் கொஞ்சம் வித்தியாசமான காய்கறியாக முட்டை கோஸ் முயற்சித்து ஓரளவு வெற்றியும் கிடைத்தது. இந்த பருவத்தில் இன்னொரு முயற்சியாக காலி ஃப்ளவர். இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது காலி ஃப்ளவர் விதை கிடைத்தது. சரி, இந்த தடவை இதை முயற்சி செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.

காலி ஃப்ளவர். வெஜ் மக்களுக்கு காய்கறியில் ஒரு சிக்கன் மாதிரி தான். தந்தூரி காலி ஃப்ளவர், சில்லி காலி ஃப்ளவர் என்று எல்லாம் செய்ய ஏற்ற ஒரு காய்கறி. எல்லா குழந்தைகளுக்கு பிடித்த ஒரே காய்கறி இதுவாக தான் இருக்கும்.

முட்டைக்கோஸும் காலிஃப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. விதை, செடி எல்லாமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. காலி ஃப்ளவர் ஒரு குளிர் பிரதேச காய்கறி. சிலர் இங்கு நன்றாக வராது, பூச்சி தாக்குதல் நிறைய இருக்கும் என்றார்கள். 

இருந்தாலும் இந்த ஜூலையில் நாற்று விட்டு எடுத்து நட்டி விட்டேன்.ஒரு அடி இடைவெளியில் மொத்தம் 12  செடிகள் நட்டி விட்டேன். கோஸ் வந்ததை விட செடி ரொம்ப செழிப்பாக வந்தது. கொஞ்சம் முன் எச்சரிக்கையாக ஒரு தடவை கொஞ்சம் மஞ்சள் கரைசளையும், ஒரு தடவை பஞ்சகாவியாவும் தெளித்து விட்டேன். 

விதைத்து இரண்டாவது மாதத்தில் பூக்க ஆரம்பித்தது. சில செடிகள் ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது, சில கொஞ்சம் சுருண்டு கொண்டு போய் விட்டது. சில செடிகளில் பூ ரொம்ப குட்டியாக வந்தது. மற்ற செடிகளில் பூ ரொம்ப ஆரோக்கியமாக வளர்ந்தது. வெயில் பூவில் ரொம்ப விழாமல் இருக்க செடியின் இலையை மடக்கி குடை போல ஒரு கிளிப் வைத்து மாட்டி விட்டேன் :-). இந்த அடை மழைக்கு கொஞ்சம் முன்னதாக தப்பிக் கொண்டது. 

இணையத்தில் இருந்து, காலிஃப்ளவரில் பொட்டாசியம், விற்றமின் பி 6, ஆகியவை உள்ளன. இதில் விற்றமின் சி மிக அதிகமாக உள்ளது. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். காலிஃப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது.

விதைத்து மூன்றாவது மாதம் (அக்டோபர்) அறுவடை செய்தாகி விட்டது. பூ ரொம்ப திரட்சியாகவும் ருசியாகவும் இருந்தது. கொஞ்சம் அதிகமாக அக்கறை எடுத்தால் இன்னும் நன்றாகவே பலன் கொடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த வருட பலன் கீழே,

 












Monday, October 8, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – வெண்டை


தக்காளி, கத்தரி, மிளகாய்க்கு அடுத்தபடி வீட்டு தோட்டத்தில் எளிதாக வரும் ஒரு செடி வெண்டை. ரொம்ப உபயோகமான காய்கறி. விதைத்து சீக்கிரமே பலன் கொடுக்கும் செடியும் கூட. எல்லா காலத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் காய்க்கும். 

வெண்டை விதை எல்லா உரக்கடைகளிலும், கோவை விவசாய கல்லூரியிலும் கிடைக்கும். நான் பொதுவாக ஊரில் இருந்து வாங்கி வருவது உண்டு. விதைத்து நாற்று எடுத்தும் நடலாம், நேரடியாகவும் நடலாம். செடிக்கு ஒரு அடி இடைவெளியில் நட வேண்டும். வீட்டு உபயோகத்திற்கு 12 செடிகள் நட்டால் போதுமானதாக இருக்கும்.

வெண்டை நான்காவது இலை வரும் போதே மொட்டு வைத்து பூக்க ஆரம்பித்து விடும். விதைத்து இரண்டாவது மாதத்திலேயே நமக்கு வெண்டைக்காய் கிடைக்க ஆரம்பித்து விடும். ஒரு செடி கிட்டத்தட்ட 7 அடி உயரம் வரை  வளரும். ஒரு செடியில் 20 ல் இருந்து 25 காய் வரை கிடைக்கும் (500 gms). 12 செடியில் இருந்து வாரம் நமக்கு 400 – 500 கிராம் வரை 3 மாதம் வரை தொடர்ந்து கிடைக்கும். 12 செடியில் இருந்து மொத்தம் 5ல் இருந்து 6 கிலோ வரை மகசூல் எடுக்கலாம்.

பொதுவாக வெண்டையில் மாவு பூச்சி போல சாறு உறிஞ்சும் வெள்ளை பூச்சி வருகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் இந்த பூச்சி சாற்றை உறிஞ்சுவதால், செடியில் குருத்து காய்ந்து விடுகிறது. செடியின் வளர்ச்சி அதோடு நின்று விடுகிறது. வீட்டு தோட்டம் என்பதால் நாம் லேசாக ஒரு குச்சியை வைத்து அந்த பூச்சிகளை தட்டி விட்டால் செடிகளை காப்பாற்றி விடலாம். நான் பூச்சி மருந்து என்று இது வரை ஒன்றும் முயற்சிக்கவில்லை.

சரியான நேரத்தில் பார்த்து வெண்டைக்காயை பறிக்க வேண்டும். ஒரு நாள் கூட விட்டாலும் காய் முற்றி விடும். 

வெண்டைக்காயின் பயன் என்று பார்த்தால் (விக்கியில் இருந்து), ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது.  இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது.   இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. 

என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,