Saturday, February 7, 2015

மாடித் தோட்டம் – அடிப்படை காய்கறிகள்



இதுவரை மாடியில் கீரை, முள்ளங்கி போன்ற எளிதான காய்கறிகள் தான் வைத்திருக்கிறேன். முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய் எல்லாம் மாடியில் முயற்சித்ததில்லை. கீழே தரையில் தான் வளர்த்திருக்கிறேன்.  

இந்த முறை முதன் முறையாக எல்லாவற்றையும் மாடி தோட்டத்திற்கு மாற்றினேன். இதில் முக்கியமாக நான் கவனிக்க நினைத்த விஷயம், நம் வழக்கமான Coir Pith Media எப்படி இந்த செடிகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை கொடுக்கிறது என்பது தான். கண்டிப்பாய் சில சவால்கள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், கீரைகளை பொறுத்த வரை கொஞ்சம் சத்து இருந்தாலும் வரும். ஆனால் தக்காளி, கத்தரி எல்லாம் பெரிய செடி, நிறைய காய் பிடிக்கும் என்பதால் நிறைய சத்து தேவை படும்.

முன்பு ஒரு முறை தக்காளி ஓன்று தானாய் முளைத்து மாடியில் Grow Bag-ல் வளர்ந்த போது சரியாய் வரவில்லை. இலைகள் ரொம்ப வறட்சியாய், நிறைய பூத்தாலும் காய்கள் எல்லாம் ரொம்ப சிறிதாக, நீர் சத்தே இல்லாமல் வந்தது. தேவையான ஊட்டச்சத்து ஏதோ சுத்தமாக கிடைக்கவில்லை என்று தெளிவாக தெரிந்தது

இந்த முறை, நாற்று எடுத்து நட்ட பிறகு செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பாக வந்தது. பிஞ்சி பிடித்த பருவத்தில் இருந்து தக்காளியும், கத்தரியும் கொஞ்சம் டல் அடிக்க ஆரம்பித்தது. மிளகாய் எந்த பிரச்னையும் இல்லமால் ரொம்ப செழிப்பாக வந்து கொண்டிருந்தது. நாம் வெறும் மண்புழு உரம் மட்டும் வைத்து மீடியா தயாரிக்கும் போது தக்காளி காய்க்கும் பருவத்தில் கொஞ்சம் திணறுகிறது. சில சத்துக்கள் அதற்கு கிடைப்பதில்லை.

ஒரு சோதனை முயற்சியாக காய்கறி கழிவுகளில் இருந்து தயாரித்த உரத்தை ஒரே ஒரு தக்காளி செடிக்கு மட்டும் போட்டு காய்ப்பதில் ஏதும் வித்தியாசம் வருகிறதா என்று பார்த்தேன். ரொம்பவே ஒரு மாற்றம் தெரிந்தது. மற்ற செடிகளில் காய்கள் சிறுத்து போன போது, இந்த ஒரு செடி மட்டும் நல்ல தரமான அளவில் காய்த்தது. அதே உரத்தை எல்லா கத்தரி செடிக்கும் போட்டு விட்டிருந்தேன். அவைகளும் நன்றாக காய்த்திருந்தது.  கூடுதலாக இரண்டு வாரத்திருக்கு ஒரு முறை பஞ்சகாவ்யாவும் தெளித்து வந்தேன்.

மொத்த விளைச்சல் என்று பார்த்தால், மிளகாய் தரையில் காய்ப்பதை விட மாடியில் காய்த்து கொட்டி விட்டது என்றே சொல்லலாம். ஒரு அறுவடையில் ஒரு செடியில் இருந்து மட்டும் அரை கிலோ மிளகாய் பறித்தோம். இன்னும் காய்த்துக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு முறையும் எப்படியும் கிலோ கணக்கில் பறிக்கும் படி ஆகி விட்டது (கொஞ்சம் செடி எண்ணிக்கை அதிகமாகி விட்டது).

கத்தரி, நல்ல விளைச்சல். கத்தரி தரையில் வைக்கும் போது நீண்ட காலம் காய்த்துக் கொண்டிருக்கும். ஆனால் மாடியில் நீண்ட காலம் அதே அளவு செழிப்பாக நிற்குமா என்பது சந்தேகமே. Growing Media-வில் இன்னும் கொஞ்சம் சத்து இருக்கும் படி பார்த்துக் கொண்டால் தாக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

தக்காளி, கொஞ்சம் திணற தான் செய்கிறது. இன்னும் நிறைய சத்து தேவை படுகிறது. பூத்து, பிஞ்சி பிடிப்பதில் எல்லாம் பிரச்னை வருவதில்லை. காயின் திரட்சி தான் குறைவாக போய் விடுகிறது. ஆர்கானிக் முறையில் போகும் போது, உர மேலாண்மையில் இன்னும் நிறைய கவனம் தேவை படுகிறது.

இந்த செடிகள் காய்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த தக்காளி தோட்டத்தை மாடியில் ஆரம்பித்து விட்டேன். Baby Corn வைத்த அதே செமெண்ட் தொட்டியில். இந்த முறை காய்கறி கழிவில் தயாரித்த உரம் நிறைய சேர்த்திருக்கிறேன். நன்றாகவே வந்து கொண்டிருக்கிறது.
















காய்கறி கழிவு உரம் போட்டும் போடாமலும் வந்த காய்களின் வித்தியாசங்கள்,

With Compost Added

Without Compost
மாடியில் வைத்த பிறகு மிஞ்சிய சில தக்காளி நாற்றுகளை கீழே தரையில் வைத்து விட்டிருந்தேன். தரையில் வைக்கும் போது நமக்கு எந்த கவலையும் இல்லை. அதுபாட்டுக்கு காய்த்து கொட்டும். படத்தை பார்த்தால் தெரியும்,





இப்போது மாடியில் வைத்திருக்கும் தக்காளி,