Sunday, July 21, 2013

அக்ரி இன்டெக்ஸ் (Agri Index) 2013நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த வருட அக்ரி இன்டெக்ஸ் (Agri Index 2013),  இரண்டு வாரங்களுக்கு முன்பு (July 12 – 14) ரொம்ப சிறப்பாகவே முடிந்தது. ஞாயிறு காலை 9 மணிக்கெல்லாம் குடும்பமாய் கிளம்பி விட்டோம். கொடிசியா வளாகத்தில் Hall A, B, C முழுக்க நூற்றுக்கணக்கான ஸ்டால்கள். போன வருடம் பார்த்த நிறைய ஸ்டால்களை இந்த வருடமும் பார்க்க முடிந்தது. வழக்கம் போல வளாகத்துக்கு வெளியே கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் நர்சரி கார்டன் என்று நிறைய.

இந்த வருடம் முக்கியமாக தேனீ வளர்ப்பு பற்றி விவரம் அறிந்து இங்கே தோட்டத்தில் சில பெட்டிகள் வைக்கும் சாத்தியம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்து வைத்திருந்தேன். எனவே முதலில் ஈரோடு அருகில் உள்ள ஒரு தேனீ பண்ணை சார்பில் இருந்த ஒரு ஸ்டாலுக்கு முதல் விசிட். வீட்டுத்தோட்டத்தில் கூடு வைப்பதற்கான சாத்தியங்கள், எத்தனை வைக்கலாம், விலை விவரங்கள், தேனீ வளர்ப்பு பயிற்சி விவரங்கள் பற்றி விசாரித்து பார்த்தேன். ஒரு நாலு சென்ட் தோட்டத்தில், மரங்கள் நிறைய இருக்கும் பட்சத்தில் ஐந்து தேனீ பெட்டிகள் வைக்கலாம் என்றார்கள். சுற்றிலும் மூன்று கிலோ மீட்டர் வரை சென்று தேன் எடுக்குமாம். இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ என்று இரு வகை இருக்கிறது (அவர்கள் வைத்திருந்தது இந்தியன் தேனீ). ஒரு பெட்டி தயார் செய்ய Rs,1500.  ஈரோட்டில் ஒரு முழு நாள் பயிற்சி மற்றும் சில உபகரணங்கள் இலவசம் என்றார்கள். Honey Extractor  மட்டும் ஒரு Rs,1500. மொத்தம் ஐந்து பெட்டி வைக்க Rs,9000  செலவு. ஆர்டர் செய்தால், பெட்டி தயார் செய்து ஓன்று அல்லது இரண்டு மாதத்தில் வீட்டில் வந்து அமைத்து கொடுத்து விடுவார்களாம். தேனீ வளர்ப்பு பற்றி சுத்தமாய் விவரம் இல்லாமல் அவரப்பட்டு Rs,9000 கொடுத்து வர மனமில்லை. வரும் போது தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD மட்டும் வங்கி வந்தேன். ஆனால் பெட்டி அமைப்பது பற்றி ஒரு திட்டம் மனதில் இருக்கிறது. (இங்கே கோவை வேளாண் பல்கலை கழகத்திலேயே வாரம் தோறும ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறது.விசாரித்துப் பார்க்க வேண்டும்).வீட்டில் தான் என்னை கொஞ்சம் கலவரமாய் பார்த்தாள். வீட்டை சுற்றி செடியும், கொடியுமாய், பத்தாதற்க்கு சுற்றித் திரியும் பறவைகள், அணில் எல்லாம் வீட்டைச் சுற்றி தான். இப்போ தேனீ. இனி வீட்டுக்கு வெளியே நடமாட விடமாட்டான் போல என்பது போல ஒரு கலவரம்.

வெளியே ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு, Hall C-ல் இருந்து ஆரம்பித்தோம். Hall C முழுக்க கோவை வேளாண் பல்கலை கழகத்தின் ஸ்டால்கள் தான். முதலிலேயே இருந்த Seed ஸ்டாலில் சில விதைகளும், அடுத்து தென்னைக்கு டானிக்கும் வாங்கிக்கொண்டேன். விதை ஆராய்ச்சி பற்றி, பருத்தி, நெல், கரும்பு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனி ஸ்டால்கள் நிறைய. Hall C ஐ முடித்து விட்டு B ஐ தொடர்ந்தோம்.

வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து தருவோம் (Sq.Feetக்கு ஒரு குறிப்பிட்ட தொகை) என்று நிறைய ஸ்டால்கள் இருந்தன. மாடி தோட்டத்திற்கு தேவையான பைகள் (தொட்டிக்கு பதிலாக), Green House அமைப்பதற்கு வலைகள் என்று நிறைய. செடி வைக்கும் பை ஏழு-எட்டு வருடங்களுக்கு அப்படியே இருக்கும் என்றார்கள். சோதனைக்காக நானும் இரண்டு பைகள் வாங்கி வந்தேன் (Rs.70 each).  லோக்கல் விதை கடை ஓன்று (கலர் கலராய் உலகத்தில் இருக்கும் அத்தனை காய்கறி, பூ விதைகளும் கிடைக்கும். பாக்கெட் பத்து ரூபாய் தான்). நானும் அதில் கொஞ்சம் செடி பீன்ஸ், கொடி பீன்ஸ் என்று ஒரு ஐந்து பாக்கெட் வாங்கி கொண்டேன் (செடி வந்தால் தான் உண்டு). இதே போல் இன்னொரு ஸ்டாலிலும்  கிழங்கு வகையில் இருந்து வரும் பூ செடிகள் (ஜெர்பரா, டெய்லியா வகை) நிறைய இருந்தது.

ஒரு கடையில் மல்லி, முல்லை நாற்றுகளுக்கு இடையே சம்பந்தமே ஒரு நாற்று இருக்க, போய் விசாரித்து பார்த்தேன். சந்தனமரம் நாற்று என்றார்கள். அடடா! இந்த நாற்று எல்லாம் விற்பார்களா? வீட்டில் வளர்க்கலாமா? என்று ஆச்சரியம். நான் ஆர்வமாய் விசாரிப்பதை பார்த்து பக்கத்தில் இருந்த ஒருத்தர் ‘நீங்க வச்சி வளர்ங்க. ஆனா வளர்ந்தவுடன் வெட்டிட்டு போயிருவாங்க என்றார் நக்கலாக. எதுக்கு வம்பு என்று வந்து விட்டேன்.

Hall B முடிக்கவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் வளாகத்தை விட்டு வெளியே வந்து கொண்டு போன வெஜிடபிள் பிரியாணியை ஆற அமர ஒரு மரத்தடியில் அமர்ந்து ஒரு கட்டு கட்டிவிட்டு பிறகு தொடர்ந்தோம் :-) 

இன்னொரு ஸ்டாலில் இலைகளில் இருந்து செடி உற்பத்தி என்று எலுமிச்சை, மல்லி, முல்லை போன்ற நாற்றுகள் விற்றுகொண்டிருந்தார்கள். விதை இல்லாமல், வெறும் இலையை மண்ணில் புதைத்து வைத்து செடி உற்பத்தி. நிறைய பேர் போட்டி போட்டு வாங்கி கொண்டிருந்தார்கள். சில செடிகள் சாம்பிளுக்கு மண் இல்லாமல், தொங்க விட்டிருந்தார்கள். இலையில் இருந்து செடி வளர்ந்திருந்தது. (ஆனா, செடி வளர்ந்து காய்க்குமா-ன்னு ஒரு கேள்வி கேட்டேன். அதெல்லாம் நன்றாகவே காய்க்கும் என்றார்கள்). நிறைய மண் நிரப்பிய சின்ன சின்ன பைகளில் இலைகளை மண்ணில் புதைத்து வைத்திருந்தார்கள். நான் ஒன்றும் வாங்கவில்லை.

ISUZU- வின் Business Class Car (MU-7) ஓன்று பார்வைக்கு விட்டிருந்தார்கள். விலை வெறும் 28 லட்சம் தானாம். எத்தனை விவசாயிகள் புக் செய்தார்கள் என்று தெரியவில்லை. அங்கே அங்கே நிறைய ராகி மாவுல பிஸ்கட், தோசை மாவு என்று நிறைய ஸ்டால்கள். ஒவ்வொரு ஹாலிலும் சில விவசாய கருத்தரங்குகள் போய் கொண்டிருந்தது. ஒரு ஏழெட்டு பேர் அமர்ந்து கவனித்து கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத கடுப்பில் ‘இது விவசாய கண்காட்சி. இங்கே எதுக்கு தோசை மாவு, இட்லி மாவு, பிஸ்கட் எல்லாம் விக்கறானுங்க. இது என்ன சமையல் கண்காட்சியா என்று மைக்கில் கத்திக்கொண்டிருந்தார் ஒருவர். நானும் போய் என் ஆதரவையும் தெரிவிக்கலாம் என்று ஆசை தான். ஆனால் குடும்பமாய் போய் விட்டதால் முடியவில்லை. ‘அடுத்த முறை வரும் போது உங்களை எல்லாம் கழட்டி  விட்டுட்டு தான் வரணும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். என் பொண்ணு  ‘அதெல்லாம் முடியாது, அடுத்த வருசமும் எனக்கு அந்த ராகி, குதிரைவாலி பிஸ்கட் எல்லாம் வேணும். நானும் வருவேன் என்றாள் :-).

இந்த வருடம் அக்ரி இன்டெக்ஸ்ல் என்னுடைய Purchase என்று பார்த்தால்,

Nursery Tray -  ரொம்ப நாளாகவே தேடிக் கொண்டிருந்த ஒரு பொருள். சில நர்சரியில் விசாரித்த போது, பெங்களூரில் இருந்து வரவழைத்து தருவதாக சொன்னார்கள். விலையும் அதிகமாக சொன்னார்கள். இந்த முறை அக்ரி இன்டெக்ஸ்ல் ஒரு கடையில் கிடைத்தது. விலை இருபது ரூபாய் தான். ஒரு ஐந்து Tray வாங்கினேன். தேங்காய் நார் துகள்களை பரப்பி, விதைத்து விட்டால், செடி வளர்ந்ததும் எடுத்து  நட எளிதாய் இருக்கும். முயற்சி செய்து பாப்போம்.

வழக்கம் போல நிறைய விதைகள், தென்னை டானிக்,

Organic Farming – Pest and Disease Control பற்றி ஒரு CD, வேம்பு, இஞ்சி, பூண்டு என்று இயற்கையாய் பூச்சிக் கொல்லி தயார் செய்வது பற்றியது. இந்த ஏரியா இன்னும் அவ்வளவாய் கற்றுக்கொள்ளாத ஒரு பகுதியாகவே இருக்கிறது. இந்த வருடம் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஒரு திட்டம். அதற்கு இந்த சி.டி கொஞ்சம் உதவியாய் இருக்கும். அதோடு முன்னம் கூறியது போல, தேனீ வளர்ப்பு பற்றி ஒரு CD.

மாடி தோட்டம் அமைக்க இரண்டு Bags. காணால் போன Shovel ஓன்று புதிதாய். அவ்வளவு தான்.

எல்லாம் மறுபடி ஒரு சுற்று சுற்றி விட்டு கிளம்ப மணி நான்கு ஆகிவிட்டது. மதியத்திற்கு அப்புறம் கூட்டம் எக்கச்சக்கமாய் ஆகி விட்டது. எந்த ஸ்டாலிலும் நின்று பார்க்க, விசாரிக்க முடியவில்லை. மொத்தத்தில், இந்த வருட அக்ரி இன்டெக்ஸ்ம் ரொம்ப திருப்திகரமாய் முடிந்தது.

சில படங்கள். Sorry for the very poor quality pictures. என்னுடைய Hi-Fi Mobile Camera-வில் இவ்வளவு தான் வரும். ரொம்ப கூட்டம் வேறு. கூட்டத்தில் முடிந்த அளவுக்கு எடுக்க முடிந்த படங்கள் இவ்வளவு தான் :-)


The EntranceIndia’s first 100 hp Jaya Tractor ( to spoil the soil in better way :-) )Stalls (Engineering Divisions)


Seed Shop Terrace Garden stall


Plant from Leaf
சந்தன மர நாற்று The crowdவிவசாயிகளின் வாகனம் (The business class MU-7)


My Purchases


Wednesday, July 10, 2013

தோட்டம் 2012 – Part-4 (FLOPS)வரிசையா பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஹிட்ஸ் பற்றி எழுதியாச்சு. தோட்டத்தில் சில FLOPS-ம் இருக்கிறது. ஒரு சில செடிகள் நாம் எதிர்பார்க்காமலேயே அட்டகாசமாய் வரும். சிலவற்றை நாம் எளிதாய் நினைப்போம், ஆனால் சரியாய் வராது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம். சரியான பருவநிலை, அந்த செடிக்கேற்ற மண்ணின் தன்மை, விதை தேர்வு, நோய் எதிர்ப்பு திறன் இப்படி நிறைய சொல்லலாம். இதில் எதாவது ஒன்றில் குறை என்றாலும் வளர்ச்சியிலோ, விளைச்சலிலோ பாதிப்பு இருக்கும். அப்படி சிலவற்றில் கோட்டை விட்ட சில செடிகள் இதோ :-)

பீட்ரூட்
 கேரட், காலி ஃப்ளவர் வரிசையில் வித்தியாசமாய் முயற்சித்தது. இதன் விதைகள் எங்காவது பொருள்காட்சியில் விதை கடைகளில் தேடினால் கிடைக்கும். வழக்கம் போல சின்னதாய் ஒரு பாத்தி தயார் செய்து நேரடியாய் விதைத்து விட்டேன். ஒரு வாரத்திலேயே முளைத்து, செடியும் செழிப்பாக வளர்ந்தது. செடியை பார்க்கும் போது அவ்ளோ செழிப்பாக இருந்தது.

நான் முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகை செடிகளில் ஒரு பிரச்னை, மண்ணுக்கு கீழே என்ன நடக்கிறது என்று தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, திரட்சியாக வருகிறதா இல்லையா என்று அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது. சில செடிகளில் பீட்ரூட் வெளியே தெரியும் படி வந்தது. அவைகள் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிந்தது.
அறுவடை செய்த போது தான் தெரிந்தது, பீட்ரூட் எதுவும் சரியாக வரவில்லை என்று. சில கிழங்குகள் நிறமே வராமல் வெளிறிப் போய் இருந்தன. ஆனால் இலைகள் அவ்ளோ நன்றாக இருந்தன. கிழங்கு வராட்டா என்ன, இலையை வைத்து கீரை கூட்டு செய்து விட்டோம் :-).. கீரை, உண்மையாகவே செம ருசி.

என்னுடைய கணிப்பு படி, மண் கொஞ்சம் இறுகிய செம்மண்ணாய் போய் விட்டது. இன்னும் கொஞ்சம் மணல் கலந்து, இலை சருகுகள் கலந்து தயார் செய்திருக்க வேண்டும். இந்த வருடம் முயற்சிக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. பார்க்கலாம். 
மிளகாய்
ஆமாம். மிளகாயே தான். 2012 ல் கிட்டத்தட்ட மூன்று பருவம் முயற்சி செய்து ஊற்றிக் கொண்டது. முட்டை கோஸ், காரட் எல்லாம் கலக்கலாய் கொண்டுவந்து, கடைசியில் மிளகாயில் கோட்டை விட்டாச்சு :-) . 2011 ல் மாடியில் காய போட்ட வற்றல் விதைகளை எல்லாம் மழை நீர் அரித்துக்கொண்டு போய், கீழே விழுந்து  சும்மா வளர்ந்த செடியில் எல்லாம் கிலோ கணக்கில் மிளகாய் பறித்தோம். ஆனால் போன வருடம், செடி பக்கத்துல போய் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் வருவேனா என்று அப்படியே நின்று போனது.

முதல் பிரச்னை, விதை தேர்வு. ஒரு பருவத்தில் எங்கோ கண்காட்சியில் வாங்கிய ஒரு விதையை போட்டேன். செடியும் நன்றாகவே வந்தது. மிளகாயும் கொத்து கொத்தாகவே காய்த்தது. ஆனால் மிளகாய் தான் ஏதோ ஹைப்ரிட் வகை போல. சுத்தமாய் காரம் கிடையாது. பார்த்தாலே இளம் பச்சை நிறத்தில் வெளிறிப்போய் இருந்தது. சட்னியில் பத்து மிளகாய் போட்டாலும் காரம் இல்லை. 

அந்த விதைகளை தூக்கிப் போட்டுவிட்டு கடையில் வாங்கிய வற்றலில் இருந்து விதை போட்டு அடுத்த முறை நட்டேன். இந்த முறை என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, ஏதோ நோய் தாக்குதல். செடி எதுவுமே தரையை விட்டு எந்திரிக்கவே இல்லை. இலை எல்லாம் கொஞ்சம் சுருண்டு கொண்டு வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. மற்ற செடிகள் எல்லாம் பக்கத்து பாத்திகளில் நன்றாக தான் வளர்ந்தன. 

மொத்தத்தில் தோட்டத்தில் மிளகாய் கொஞ்சம் சிக்கலான செடியாகவே இருந்து வருகிறது. இந்த வருடம் மீண்டும் இப்போது நாற்று விட்டிருக்கேன். பார்க்கலாம்.


(தொடரும்)