வரிசையா
பழங்கள், பூக்கள், காய்கறிகள் ஹிட்ஸ் பற்றி எழுதியாச்சு. தோட்டத்தில் சில FLOPS-ம் இருக்கிறது. ஒரு சில செடிகள் நாம்
எதிர்பார்க்காமலேயே அட்டகாசமாய் வரும். சிலவற்றை நாம் எளிதாய் நினைப்போம், ஆனால்
சரியாய் வராது. இதற்கு நிறைய காரணங்கள் சொல்லலாம். சரியான பருவநிலை, அந்த
செடிக்கேற்ற மண்ணின் தன்மை, விதை தேர்வு, நோய் எதிர்ப்பு திறன் இப்படி நிறைய
சொல்லலாம். இதில் எதாவது ஒன்றில் குறை என்றாலும் வளர்ச்சியிலோ, விளைச்சலிலோ பாதிப்பு
இருக்கும். அப்படி சிலவற்றில் கோட்டை விட்ட சில செடிகள் இதோ :-)
பீட்ரூட்
கேரட், காலி ஃப்ளவர் வரிசையில் வித்தியாசமாய்
முயற்சித்தது. இதன் விதைகள் எங்காவது பொருள்காட்சியில் விதை கடைகளில் தேடினால்
கிடைக்கும். வழக்கம் போல சின்னதாய் ஒரு பாத்தி தயார் செய்து நேரடியாய் விதைத்து
விட்டேன். ஒரு வாரத்திலேயே முளைத்து, செடியும் செழிப்பாக வளர்ந்தது. செடியை
பார்க்கும் போது அவ்ளோ செழிப்பாக இருந்தது.
நான்
முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகை செடிகளில் ஒரு பிரச்னை, மண்ணுக்கு கீழே என்ன
நடக்கிறது என்று தெரியாது. கிழங்கு வைக்கிறதா இல்லையா, திரட்சியாக வருகிறதா
இல்லையா என்று அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது. சில செடிகளில் பீட்ரூட் வெளியே
தெரியும் படி வந்தது. அவைகள் பார்ப்பதற்கு நன்றாகவே தெரிந்தது.
அறுவடை
செய்த போது தான் தெரிந்தது, பீட்ரூட் எதுவும் சரியாக வரவில்லை என்று. சில
கிழங்குகள் நிறமே வராமல் வெளிறிப் போய் இருந்தன. ஆனால் இலைகள் அவ்ளோ நன்றாக
இருந்தன. கிழங்கு வராட்டா என்ன, இலையை வைத்து கீரை கூட்டு செய்து விட்டோம் :-).. கீரை, உண்மையாகவே செம ருசி.
என்னுடைய
கணிப்பு படி, மண் கொஞ்சம் இறுகிய செம்மண்ணாய் போய் விட்டது. இன்னும் கொஞ்சம் மணல்
கலந்து, இலை சருகுகள் கலந்து தயார் செய்திருக்க வேண்டும். இந்த வருடம்
முயற்சிக்கலாம் என்று ஒரு திட்டம் இருக்கிறது. பார்க்கலாம்.
மிளகாய்
ஆமாம்.
மிளகாயே தான். 2012 ல் கிட்டத்தட்ட மூன்று பருவம் முயற்சி
செய்து ஊற்றிக் கொண்டது. முட்டை கோஸ், காரட் எல்லாம் கலக்கலாய் கொண்டுவந்து,
கடைசியில் மிளகாயில் கோட்டை விட்டாச்சு :-) . 2011 ல்
மாடியில் காய போட்ட வற்றல் விதைகளை எல்லாம் மழை நீர் அரித்துக்கொண்டு போய், கீழே
விழுந்து சும்மா வளர்ந்த செடியில் எல்லாம்
கிலோ கணக்கில் மிளகாய் பறித்தோம். ஆனால் போன வருடம், செடி பக்கத்துல போய் என்ன
குட்டிக்கரணம் போட்டாலும் வருவேனா என்று அப்படியே நின்று போனது.
முதல்
பிரச்னை, விதை தேர்வு. ஒரு பருவத்தில் எங்கோ கண்காட்சியில் வாங்கிய ஒரு விதையை
போட்டேன். செடியும் நன்றாகவே வந்தது. மிளகாயும் கொத்து கொத்தாகவே காய்த்தது. ஆனால்
மிளகாய் தான் ஏதோ ஹைப்ரிட் வகை போல. சுத்தமாய் காரம் கிடையாது. பார்த்தாலே இளம்
பச்சை நிறத்தில் வெளிறிப்போய் இருந்தது. சட்னியில் பத்து மிளகாய் போட்டாலும் காரம்
இல்லை.
அந்த
விதைகளை தூக்கிப் போட்டுவிட்டு கடையில் வாங்கிய வற்றலில் இருந்து விதை போட்டு
அடுத்த முறை நட்டேன். இந்த முறை என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, ஏதோ நோய்
தாக்குதல். செடி எதுவுமே தரையை விட்டு எந்திரிக்கவே இல்லை. இலை எல்லாம் கொஞ்சம்
சுருண்டு கொண்டு வளர்ச்சி இல்லாமல் அப்படியே நின்று விட்டது. மற்ற செடிகள் எல்லாம்
பக்கத்து பாத்திகளில் நன்றாக தான் வளர்ந்தன.
(தொடரும்)
ஓ! ஹைபிரிட் என்றால் காரம் இருக்காதா? இப்போது தான் தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteஅப்படி சொல்ல முடியாது. ஆனால் சில ரகங்கள் காரம் இல்லாமல் வருகிறது.
Delete//இளம் பச்சை நிறத்தில் வெளிறிப்போய் இருந்தது. சட்னியில் பத்து மிளகாய் போட்டாலும் காரம் இல்லை.//
ReplyDeleteமிளகாயில் தவறில்லை சகோதரரே.. காரமில்லாத வகையென்றே ஒன்று உண்டு. இங்கெல்லாம் இதை எண்ணெய்யில் உப்புடன் லேசாக வறுத்து வைத்துக்கொண்டு சமோசா, போண்டா போன்றவைகளுடன் சாப்பிடுவார்கள்.
நான் மிளகாவை எண்ணையில் வறுத்து சாப்பிடுவதை தொலைகாட்சி நிகழ்ச்சி சிலவற்றில் பார்த்திருக்கிறேன். வடக்கே செய்வார்கள் என்று நினைக்கிறேன். சரி தானே..
Deleteமிளகாய்ச் செடி எனக்கும் ஒத்துவரலைங்க. ஒரு முறை வீட்டிலிருந்த வற்றலையே முளைக்கவைத்தேன், பல மாதம் கழித்து செடி மட்டும் சின்னதாக வந்தது, பூவோ தலையே காட்டலை! கடையில் வாங்கி வைக்கும் செடிகளிலும் பேருக்கு 1-2ந்னு காய்ச்சது! பீட்ரூட் கீரை உண்மையிலேயே நல்ல ருசி + சத்து! கிழங்கு கிடைக்கலைன்னாலும் கீரை ப்ரெஷ்ஷா கிடைச்சுதுல்ல, வெரி குட்! :)
ReplyDeleteநானும் நாலஞ்சு கேரட் நட்டு வைச்சிருக்கேன், இந்த வாரம் பறிச்சுப் பார்க்கணும்..சஸ்பென்ஸா இருக்கு, மண்ணுக்குள்ள என்ன இருக்கும்னு!! :)))
மிளகாய் இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் கேவலமாய் தான் நின்றது. ஒரு மழைக்கு அப்புறம் தேறிவிட்டது.
Deleteகாரட் வந்ததா :-) .. ஓன்று மட்டும் பிடுங்கி பார்த்து செக் பண்ணி கொள்ளுங்கள்.
கேரட் திருப்திகரமாவே வந்ததுங்க. என்ன ஒண்ணு, இனிப்புதான் கொஞ்சம் கம்மி! :)
DeleteNice to hear..
DeleteAppadiyaa.. Enakkum inge konjam inippu kammiyaa thaan vanthathu. May be due to the soil nature and climate condition here..
இங்கே நர்ஸரியில் சில்லிபெப்பர் செடிகள் வாங்கிவந்து கன்ஸர்வேட்டரியில் வச்சு கண்ணே கண்ணேன்னு காப்பாத்துனதில் கொஞ்சம் ஒரு பத்துப்பதினைஞ்சு காய்ச்சது.
ReplyDeleteஅபூர்வத்தை சமைக்க மனசில்லாமல் ஃப்ரீஸரில் போட்டு வச்சுருக்கேன்.
வழக்கம்போல் பண்ணையில் வாங்கும் மிளகாய்தான் சமையலுக்கு என்றாலும் இப்போதெல்லாம் இந்திய மிளகாய்கள் ஃப்ரோஸன் செக்ஷனில் இறக்குமதி. அதுதான் இப்போதைக்கு.
காய்ஞ்சமிளகாய் வாங்கும்போது அதிலுள்ள விதைகளை ஒருமுறை தோட்ட்த்தில் தூவிவச்சதும் எதோ கீரைப்பாத்தி போல கூட்டமா முளைச்சு வந்ததும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆனால்..... கீரையோடு நின்னு போச்சு. பூவிட ஆரம்பிக்கவும் குளிர் ஃப்ராஸ்ட் வரவும் சரியா இருந்துச்சு:( செடிகள் எல்லாம் போச்:(
வரும் வசந்தகாலத்தின் ஆரம்பத்துலேயே தொட்டியில் விதைச்சுப் பார்க்கலாமுன்னு விதைகளை மறுமுறை சேகரிச்சு வச்சுருக்கேன்.
//அபூர்வத்தை சமைக்க மனசில்லாமல் ஃப்ரீஸரில் போட்டு வச்சுருக்கேன்// :-)))
Deleteஉங்க பாடு ரொம்ப கஷ்டம் தான் போல.. அந்த குளிர் தேசத்திலும் சேமித்து வைத்து முயற்சிகறீங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு கேட்கவே :-)
Intha milagai Kashmiri milagai / piri milagai endru solvargal. ithu karathirkaga alla, I than vatral colour- kaga serpargal.
ReplyDelete