Saturday, June 29, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – எலுமிச்சை


பதிவுக்கு போவதற்கு முன்பு ஒரு தகவல். கோவையில் இருப்பதில் ஒரு நன்மை இங்கே இருக்கும் விவசாய கல்லூரி. உரம், விதைகள் என்று தோட்டத்திற்கு வேண்டிய பொருள்கள் தரமாக வாங்க முடியும். இன்னொன்று, கோவையில் வருடா வருடம் கொடிசியா வளாகத்தில் நடக்கும் அக்ரி இன்டெக்ஸ் (Agri Intex). இது ஒரு விவசாய கண்காட்சி (விழா எனலாம்). 

இந்த வருடம் ஜூலை 11  ல் இருந்து ஜூலை 14 வரை.


கண்டிப்பாய் போய் பாருங்கள் (நான் இரண்டு நாளும் அங்கே தான் சுற்றிக்கொண்டு இருப்பேன்). விவசாயம், தோட்டம் பற்றி ஆர்வம உள்ள அனைவரும் தவறாமல் காண வேண்டிய ஒரு கண்காட்சி. இங்கே வந்தால் தான், இந்தியாவில் விவசாய துறை எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்று காணலாம். தோட்டத்திற்கு வேண்டிய அத்தனை பொருள்களும் (செடிகள், விதைகள், Tools, விவரங்கள்) கொட்டிக் கிடக்கும். 2012 அக்ரி இன்டெக்ஸ் பற்றி இந்த பதிவில் எழுதி இருக்கிறேன்.

இப்போ எலுமிச்சை பற்றி, நாம் தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும், ஒரு சில செடிகள் நமக்கு ரொம்ப விசேஷமாய் இருக்கும். அப்படி எங்க வீட்டுத் தோட்டத்தில் இந்த எலுமிச்சை செடிக்கு ஒரு தனி கவனம் எப்பவுமே இருக்கும். காரணம், நான் வாங்கிய செடிகளிலேயே ரொம்ப விலை கொடுத்து வாங்கிய ஒரு செடி இது தான். இங்கே, கணபதியில் ஒரு நர்சரி கார்டனில் ரோஜா வாங்க சென்ற போது, ஒரு எலுமிச்சையும் வாங்கலாம் என்று இதை பார்த்தோம். இது ஏதோ ஆஸ்ரேலியன் எலுமிச்சை (நம்ம ஊர் கொடி எலுமிச்சை தான்) என்றார்கள். வழக்கம் போல ‘நன்றாக காய்க்கும் என்று சான்றிதல். செடியின் விலை ரூ.280 என்றார்கள். நான் இதுவரை ஐம்பது ரூபாய்க்கு மேல் செடியே வாங்கியது இல்லை. ரூ.280 என்றால் ரொம்பவே அதிகம். இருந்தாலும், ஒரு ஆசையில் வாங்கி வந்தேன்.

வாங்கி வந்து வைத்த பிறகு, ஒரு வருடம் தரையை விட்டு மேலே வரவே இல்லை. வைத்த மாதிரி அப்படியே நின்றது. ரூ.280 மொய் தான் போல என்று நினைத்துக் கொண்டேன். கொடுத்த காசுக்காக இந்த செடிக்கு, உரம் வைப்பதில் இருந்து தண்ணீர் விடுவது வரை, எப்பவுமே தனி கவனம் இருக்கு. இரண்டாவது வருடம் செடியாய் இருக்கும் போதே ஒன்றிரண்டு பூக்கள் வந்தது. காய்க்க விடாமல் கிள்ளி போட்டுவிட்டேன். செடி இன்னும் கொஞ்சம் நன்றாக வளரட்டும் என்று.

எலுமிச்சையில் இலையை சாப்பிடும் ஒரு விதமான புழு வரும். நாம் பார்த்து நீக்கி விட்டால் போதும். தினமும் லேசாய் கவனித்து வந்தால் போதும். மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை. வழக்கம் போல மற்ற செடிகளுக்கு வைக்கும் உரம் (மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு) போதுமானது. வேறு எந்த தனி கவனமும் தேவை இல்லை.

இந்த வருடம் செடி நிறைய கிளைகள் வந்து ஓரளவு உயரம் வந்தது. நிறைய பூக்கவும் செய்தது. இந்த வருடத்தில் இருந்து அறுவடை எடுக்கலாம் என்று விட்டுவிட்டேன். ஒவ்வொரு கிளையிலும் கொத்து கொத்தாக பூத்தது. திராச்சை கொத்து மாதிரி கிளை நுனியில் ஏழெட்டு காய்கள் கொத்தாய் காய்க்க, மேலே போன கிளைகள் எல்லாம் தரையை நோக்கி வந்து விட்டன. 

இந்தமுறை கிட்டத்தட்ட மொத்தம் 60 காய்கள் காய்த்திருக்கிறது. ஒவ்வொன்றும் பெரிதாய் 50 gm ல் இருந்து  100 gm வரை இருக்கிறது. கொடுத்த விலைக்கு, எதிர்பார்த்ததை விட எக்கச்சக்கமாய் காய்த்திருக்கிறது. போன வாரம் அறுவடை செய்தாகிவிட்டது. ஒரு நாற்பது காய் பறித்தோம். மொத்தம் 2 ½ கிலோ இருந்தது. இன்னும் ஒரு கிலோ போல் செடியில் கிடக்கிறது. பறித்ததில் ஒரு பெரிய கொத்தில் எட்டு காய்கள் (600 gms இருந்தது). காய்த்திலேயே பெரியதானது. வழக்கம் போல ஜூஸ் போடவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்திக் கொண்டோம்.14 comments:

 1. தாமதம் ஆனாலும் நல்ல பலனை கொடுத்துள்ளது... வாழ்த்துக்கள்...

  முதல் தகவல் - கோவையில் உள்ளவர்களுக்கும் மிகவும் உதவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் :-)

   Delete
 2. என் வீட்டில் ஒரு எலுமிச்சை மரம் உள்ளது. வருடம் 3 ஆகிவிட்டது. பூ பூக்கவில்லை. தண்டு மட்டும் தடித்து இருக்கிறது. எழுமிச்சையிலும் ஆண் மரம் , பெண் மரம் வேறுபாடு உண்டா..

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நாட்டு ரகங்கள் ஐந்து வருடம் கூட எடுக்கும். காத்திருங்கள்.

   Delete
 3. நல்ல விளைச்சல் போலிருக்கு..

  கொத்தாக விளைந்திருப்பதும் பார்க்க அழகாயிருக்கு.

  ReplyDelete
 4. திராட்சைக் கொத்து மாதிரி எலுமிச்சைக் கொத்து!! இப்பத்தான் இந்த வகை எலுமிச்சையைப் பார்க்கிறேங்க. வாழ்த்துக்கள்! எலுமிச்சையை என்ஜாய் செய்யுங்க! :)

  இங்கே கலிஃபோர்னியாவில் வீடு வீட்டுக்கு எலுமிச்சை மரம் வைச்சிருப்பாங்க. சும்மா எக்கச்சக்கம் காய்த்து, பழுத்து கீழே விழுந்து வீணாப் போயிட்டிருக்கும். உபயோகிக்கலைன்னா கடைக்கெல்லாம் குடுக்க மாட்டாங்க போல! அவ்வ்வ்வ்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி மஹி.
   /இங்கே கலிஃபோர்னியாவில் வீடு வீட்டுக்கு எலுமிச்சை மரம் வைச்சிருப்பாங்க. சும்மா எக்கச்சக்கம் காய்த்து, பழுத்து கீழே விழுந்து வீணாப் போயிட்டிருக்கும். உபயோகிக்கலைன்னா கடைக்கெல்லாம் குடுக்க மாட்டாங்க போல/ அங்கே கடைல வாங்கி காசு கொடுப்பன்களோ என்னவோ .. :-) .. அங்கே எல்லாம் ஆப்பிள் கூட தெருவில் இருக்கும் மரங்களில் காய்த்து கிடக்கும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

   Delete
 5. அன்பு சிவா

  ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
  எந்த நர்சரி என்று சொல்ல முடியுமா ?

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தாமதமாய் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.

   இங்கே கணபதி பஸ் ஸ்டான்ட்க்கு கொஞ்சம் முன்னாடி இடது பக்கம் ஒரு நர்சரி இருக்கும் (காந்திபுரத்தில் இருந்து வரும் போது). அதில் வாங்கியது தான்.

   Delete
 6. அன்பு சிவா

  ஆஸ்ரேலியன் எலுமிச்சை மிக அருமை
  எந்த நர்சரி என்று சொல்ல முடியுமா ?

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப தாமதமான பதில். மன்னிக்கவும். இது இங்கே கோவையில் கணபதியில் ஒரு நர்சரியில் வாங்கியது. காந்திபுரத்தில் இருந்து வரும் போது, ஓவர் ப்ரிட்ஜ் தாண்டியது, ஒரு பங்க வரும் அதை தாண்டி கொஞ்ச தொலைவில். இடது பக்கம் உள்ளது இந்த நர்சரி

   Delete
 7. நான் வளர்க்கும் எலுமிச்சை செடியின் பச்சை நிறம் தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதை எவ்வாறு சரி செய்வது?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம். எனக்கு அந்த அளவுக்கு இன்னும் தகவல் தெரியவில்லை. நான் பொதுவாய் வேப்பம் புண்ணாக்கு கரைசல் ஒரு முறை விட்டு பார்ப்பேன். இரண்டு கிலோ புண்ணாக்கு வாங்கி, ஒரு பக்கட் நிறைய நீரில் நன்றாக கரைத்து வேரில் ஊற்றி விடுங்கள். ஏதும் வேர் பூச்சி மாதிரி பிரச்னை இருந்தால் சரி ஆகி விடும். கொஞ்சம் உரமும் வைத்து பாருங்கள்.

   Delete