Monday, June 10, 2013

தோட்டம் 2012 – Part-3 (HITS – Vegetables)



தக்காளி, சின்ன வெங்காயம் விலை எல்லாம் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்த பதிவு பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன் :-). போனவாரம் இங்கே தோட்டத்தில் ஒரு கிலோ போல சின்னவெங்காயம் கிடைத்தது. இன்னும் இரண்டு பாத்திகளில் வெங்காயம் தயாராக நிற்கிறது. கிலோ 100 விற்கும் போது இந்த மாதிரி ஒரே மூணு கிலோ கிடைத்தாலும் வீட்டில் ரொம்ப சந்தோசமா ஆகிடறாங்க (நமக்கு பாராட்டு வேற :-)). ஆனால் சில நேரம் தக்காளி காய்த்து கொட்டிக் கிடக்கும் போது, கடையில் ஒன்னரை கிலோ பத்து ரூபாய்க்கு வித்துக்கிட்டு இருக்கும். எது எப்படி என்றாலும், நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து பறித்து சமைத்து சாப்பிடுவதில் ஒரு தனி சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது. போன வருடம் தோட்டத்தில் விளைந்த சில காய்கறி ஹிட்ஸ் இங்கே.

தோட்டத்தில் முதன்மை காய்கறிகளாக தக்காளி, கத்தரியை கூறலாம். இரண்டிலும்  நாட்டு ரகமும் உண்டு, ஹைப்ரிட் வகைகளும் உண்டு. பொதுவாய் கடைகளில் கிடைக்கும் விதைகள் ஹைப்ரிட் வகைகளாக தான் இருக்கின்றன. நாட்டு ரகம் வேண்டும் என்றால் கடையில் வாங்கும் பழத்தின் விதைகளை போட்டு உருவாக்கலாம். கத்தரியில் தான் நாட்டு ரகம் (வெள்ளை) கொண்டு வருவதற்குள் இரண்டு வருடம் ஆகிவிட்டது. கத்தரி வளர்ந்து காய்க்கவே நான்கு-ஐந்து மாதம் ஆகி விடும். ஆனால் நீண்ட நாள் காய்த்துகொண்டு கிடக்கும்.

இரண்டாவதாக முக்கிய காய்கறிகள் என்று பார்த்தால் வெண்டை, அவரையை கூறலாம். எல்லா பருவத்திலும் காய்க்கும். விதை, எல்லா உரக்கடைகளிலும், சில நர்சரி கார்டன்களிலும் கிடைக்கும். வெண்டை விதைத்து இரண்டு மாதத்திலேயே அறுவடை கிடைக்கும். கொஞ்சம் திட்டம் இட்டு விதைத்தால் வருடம் முழுவதும் வெண்டை, அவரைக்கு கடைக்கு செல்ல வேண்டியதில்லை  


முட்டை கோஸ், காலி ஃப்ளவர், கேரட் எல்லாம் ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தது தான். எந்த வித பிரச்சனையும், நோயும் இல்லாமல் வந்தது ஆச்சரியம். இதன் விதைகள் பொதுவாக பொருள்காட்சி, கண்காட்சி நடக்கும் இடங்களில் விதை கடை இருந்தால் அங்கே கிடைக்கிறது. விளைச்சல் குறைவாக தான் கிடைக்கும். அதை விளைவிக்க ஆகும் நாட்களை கணக்கு பார்த்தால், ரெகுலராக தோட்டத்தில் வளர்ப்பது தேவை இல்லை தான் (நிறைய இடம் இருந்தால் போட்டு விடலாம்).



 தேங்காய், இடம் இருந்தால் இரண்டு தென்னை வைத்து விடலாம். சிலர் வீட்டில் தென்னை வளர்ப்பதில் சிக்கல் இருப்பதாக சொல்கிறார்கள் (காற்றில் மட்டை, தேங்காய் விழுந்து காயப்படுத்தலாம் என்று). வீட்டில் தென்னை இன்னும் கொஞ்சம் உயரே போனதும் கீழே மொத்தமாய் கம்பி வலை அமைத்து விடலாம் என்றிருக்கிறேன். வீடு வாங்கும் போதே இரண்டு தென்னைகளும் இருந்தன. எனவே வெட்டாமல் அப்படியே விட்டுவிட்டேன். இளநீருக்கும், தேங்காய்க்கும் வீட்டில் பஞ்சம் இல்லை.  ஒரு தென்னை நன்றாக காய்கிறது. இன்னொன்று இப்போது தான் காய்க்க ஆரம்பித்திருக்கிறது. 





வெங்காயம், கிலோ 100 ரூபாய், 110 ரூபாய் என்றெல்லாம் போய்விட்டது. சின்ன வெங்காயம் விதை இங்கே கோவை விவசாய கல்லூரியில் கிடைக்கிறது. பெரிய வெங்காயம் விதை நானே ஒரு செடியை பூக்க விட்டு உருவாக்கினேன் (முந்தைய வெங்காயம் பற்றி பதிவில் விவரமாக எழுதி இருக்கிறேன்). நாற்று தயார் செய்து பிறகு கொஞ்சம் இடைவெளி விட்டு நடலாம். விதைத்து நான்கு-ஐந்து மாதத்தில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். இதுவரை நோய் என்ற பிரச்சனை வந்ததில்லை. கடையில் வாங்கும் சின்ன வெங்காயத்தை கூட முளைக்க வைத்து வளர்க்கலாம்.


சுண்டைக்காய், இது ஒரு காட்டு செடி மாதிரி தான். அது பாட்டுக்கு வளர்ந்து காய்த்து கொண்டு கிடக்கும். எந்தவித பராமரிப்பும் தேவை இல்லை. மரம் போல பெரிதாய் வரும். அதனால் அதற்கு ஏற்றார் போல இடம் தெரிவு செய்து நடவும். இதை மோரில் ஊற வைத்து, வற்றலாக்கி பொறித்து சாப்பிடலாம். இப்போது வீட்டில் இதை வைத்து துவையல் எல்லாம் செய்கிறார்கள். கசப்பு எல்லாம் இல்லை. தவிர, இதை சில முறைகளில் வடாகம் கூட செய்ய முடிகிறது. ஒரு செடி, நம் தேவைக்கு மிக அதிகமாகவே காய்கிறது.




வீட்டுத் தோட்டத்தில் மிக முக்கியமாக வளர்க்க வேண்டியது கீரைகள். வளர்க்க எளிதானதும் கூட. இங்கே தோட்டத்தில் முக்கியமாக மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை, முருங்கை கீரைகள் வருடம் முழுவதும் கிடைத்துக்கொண்டு இருக்கும். மணத்தக்காளி பழுத்தவுடன் அதில் இருந்து விதைகள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். பொன்னாங்கண்ணி சின்னதாய் ஒரு குச்சி ஒடித்து வைத்தால் வந்துவிடும். மாடியில் தொட்டியில் அழகாய் வளர்கிறது. தேவை படும் போது வெட்டி எடுத்துக்கொள்ளலாம். தானாக தளிர்த்து வளர்ந்து கொள்ளும். அரைக்கீரை/சிறுகீரை விதைகள் நிறைய உரக்கடைகளில்  கிடைக்கும். அரைக்கீரைகளில் கொஞ்சம் பூச்சி அரிப்பு வருகிறது. சாம்பலை தூவி கட்டுபடுத்தலாம்.





2013 புதுவரவுகள் 



வெள்ளை கத்தரி – ஒரு வழியாய் பல முயற்சிகளுக்கு பிறகு வெள்ளை கத்தரி கொண்டு வந்திருக்கிறேன். ஊரில் சந்தைக்கு போனால் நம்மை பளீரென்று வரவேற்பது இந்த வெள்ளை கத்தரி தான். ஆனால் இங்கே கோவையில் எந்த கடையிலும் கிடைப்பது இல்லை. வெள்ளை கத்தரி விதை என்று கடையில் சொல்லி கொடுத்ததெல்லாம் கடைசியில் ஊதா நிறமாக தான் வந்திருக்கிறது. கடைசியில் இந்த வருடம் வெற்றிகரமாக விளைவித்தாகி விட்டது .அதனால் முதல் காயை விதைக்கு விட்டு விட்டேன்.



கரும்பு – போன வருடம் முயற்சித்து உருப்படவில்லை. இந்த வருடம் ஓரளவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இறுதியில் விளைச்சல் எப்படி என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

12 comments:

  1. அட....சூப்பர்....இவ்ளோ செடிகளையும் வைக்க இடம் இருக்கா ? நம்ம வீட்டுல சப்போட்டா காய்ச்சி தொங்குது, பலாப்பழம் இருக்கு, சீதாப்பழம் இருக்கு...தென்னை மரம் இருக்கு...கீரைகள் தான் போடனும்..இப்போ மழை சீசன் கண்டிப்பா நடனும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      பலா வைக்கிற அளவுக்கு இடம் இருக்கா? இங்கே அவ்ளோ இடம் இல்லை.. முடிந்த அளவுக்கு இருக்கிற இடத்தில் செடியும் மரமும் வைத்திருக்கிறேன். தென்னை, சப்போட்டா, சீத்தா எல்லாம் இருக்கு.

      Delete
  2. உங்க தோட்டத்து காய்கறிகள் சூப்பர். பார்க்க ஆசையாக இருக்கு.
    //எது எப்படி என்றாலும், நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து பறித்து சமைத்து சாப்பிடுவதில் ஒரு தனி சந்தோசம் இருக்கத் தான் செய்கிறது// 100% உண்மை. மிகவும் நன்றாக செய்திருக்கிறீங்க.

    ReplyDelete
  3. பழைய நட்புகளை மீண்டும் சந்தித்ததில் மிக மகிழ்ச்சி சிவா ! படங்கள் அருமை.

    உங்கள் பதில்கள் குறித்து வைத்துக்
    கொண்டேன். அடுத்த கேள்வி, நந்தியாவெட்டை தொட்டி செடியை சுற்றி நிறைய சிவப்பு எறும்புகள். எறும்பு மருந்துப் போட்டால் செடி இறந்திடுமோன்னு பயமாய் இருக்கு. செடியின் இலைகளும் பழுப்பாய் மாறி வருகிறது. உதவி ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. சந்தோசம் உஷா.

      எறும்பு இங்கும் பிரச்னை தான். கூட்டம் கூட்டமாய் கூடு கட்டிக்கொண்டு ஒரு வழியாக்கி விடுகிறது. எறும்பு பவுடர் செடியில் ரொம்ப தூவுவதும் நல்லது இல்லை. எறும்பு எங்கு இருந்து கிளபுகிறது என்று பார்த்து அங்கே தூவி விடலாம். நானும் இன்னும் முழுமையாக வழி கண்டு பிடிக்கவில்லை. :-(

      Delete
  4. நேத்து சுண்டக்காய் வாங்கினேன், அதில் ஒன்றை பழுக்க வைத்து விதையாக்கி செடி வளர்க்க
    முடியுமா? சென்னையில் சுண்டக்காய் செடிக்கு எங்கே போவேன் :-)
    சின்ன வெங்காயம் , மண்புழு உரம் எல்லாம் அடுத்த முறை கோவை போகும்பொழுது
    வாங்கிட வேண்டியதுதான்.
    இப்படிக்கு,
    அரை கோவைவாசி ;-)

    ReplyDelete
    Replies
    1. உஷா, நீங்களும் கோவை வருவீங்களா.. வந்தால் சொல்லுங்க.

      சுண்டைக்காய் பழுக்க வைத்து விதை எடுக்க முடியாது. செடியிலேயே காய விட்டு விதை எடுக்கலாம். இங்கே எங்க வீட்டில் நிறைய முளைத்து நிற்கும். முடிந்தால் நான் காய் ஒன்றில் இருந்து விதை எடுத்து அனுப்புகிறேன்.

      Delete
  5. sir can i get that brinjal seed pls

    ReplyDelete
    Replies
    1. Hi..let me know if you need. I will try to send. Please mail me (gsivaraja@gmail.com) with your mailing address and ph number

      Delete
  6. வெள்ளைக் கத்தரிக்காயையும் சுண்டைக்காயையும் சமீபத்து சிங்கைப்பயணத்தில் பார்த்ததும் கண்ணீர் மல்க க்ளிக்கி எடுத்துக்கிட்டு வந்துட்டேன். படத்தைப் பார்த்த மகள் இது என்ன காய் என்று கேட்டாள்!!!!!

    உங்கள் தோட்டம் அட்டகாசமாக இருக்கிறது.

    இனிய பாராட்டுகள்.

    நம்ம வீட்டில் மணத்தக்காளி தானாகவே ஏராளமாக முளைச்சு வந்துருது. ஆனால் உள்ளூர் ஆராய்ச்சி நிலையம் இதை விஷச்செடின்னு சொல்லுதே:(

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர். :-)

      நம்ம பசங்களுக்கு இனி ஒவ்வொரு காயும் படத்தில் காட்டி தான் சொல்லி கொடுக்க வேண்டும் போல :-)

      விஷ செடியா, ஏனாம்? அவங்க பாடி கண்டிசன் அவ்ளோ தான் :-) . ஒரு தடவை கீரை கூட்டு வைத்து கொடுத்து பாருங்க :-) ..

      Delete