Friday, November 21, 2014

காய்கறி கழிவுகளை உரமாக்கலாம் முன்பு ஒரு முறை DailyDump அறிமுகம் பற்றியும் இங்கே கோவையில் சித்ரா கிருஷ்ணசாமி மேடம் வீட்டில் அது பற்றி ஒரு டெமோ போய் பார்த்ததையும் எழுதி இருந்தேன். 

கிச்சனில் தினமும் சமையலின் போது நிறைய காய்கறி கழிவுகள், தோட்டத்தில் வரும் இலை சருகுகள் என்று நிறைய சேரும். இவற்றை அப்படியே குப்பையாக போடாமல் உரமாக மாற்றும் ஒரு முறை தான் DailyDump,org ல் கொடுத்திருகிறார்கள். 

Google image
அப்படியே அவர்கள் கொடுத்திருக்கிற படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், ஒரு மூன்றடுக்கு கம்பா (Khamba) மற்றும் ‘Leave it Pot’ எல்லாம் சேர்த்து மூவாயிரம் ரூபாய் ஆகும். எனக்கு முதலில் நிறைய சந்தேகங்கள் இருந்தது, அது சரியாக மக்கி அதே போல உரமாக வருமா, நிறைய புழு,பூச்சிகள் அதில் உற்பத்தி ஆகுமோ, துர்நாற்றம் ஏதும் வீசுமோ இப்படி நிறைய. 

முதலிலேயே நிறைய செலவு செய்து பிறகு சரி வரவில்லை என்றால் என்ன செய்வது என்று நாமே சின்னதாய் ஆரம்பித்து பார்க்கலாம் என்று இரண்டு மண் பானைகளை கொண்டே செய்து பார்க்கலாம் என்று இங்கே கவுண்டம்பாளையம் ரோட்டோரத்தில் உள்ள கடையில் இரண்டு பானைகள் வாங்கி வந்தேன் (அதுவே ஒவ்வொன்றும் 150 ரூபாய்). ஆர்டர் கொடுத்தால்  மண்பானையில் வேண்டும் என்றால் துளைகள் போட்டே செய்து தருகிறோம் என்றார்கள், கொஞ்சம் விலை தான் அதிகம் சொன்னார்கள். தவிர ஒரு வாரம் ஆகும் என்றார்கள். நான் சாதாரண மண்பானை இரண்டே வாங்கி வந்துவிட்டேன்.

காய்கறி கழிவுகளை உரமாக்க நமக்கு தேவையானது Microbes எனப்படும் நுண்ணுயிர்கள் கொண்ட பவுடர். இவைகள் கழிவுகளை விரைவாக மக்க வைக்க உதவுகிறது. அது தவிர காய்ந்த இலை சருகுகள் வேண்டும்.    
Compost Microbes பவுடர் இங்கே கோவையில் சிறுதுளி சென்டரில் (உக்கடம் – சுங்கம் by-pass சாலையில் இரயில்வே பாலம் ஏறி இறங்கும் போது வலது பக்கத்தில் உள்ளது) கிடைக்கிறது. விலை பாக்கெட் ஐம்பது ரூபாய். இலை சருகுக்கு வேப்பமரம் மற்றும் இதர மரங்களின் சருகுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். . 

தினமும் சேரும் காய்கறி கழிவுகள், பழத் தோல்கள், பூ கழிவுகள் (செம்பருத்தி, சாமந்தி), முட்டை கூடு என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். முட்டை கூட்டை நன்றாக நொறுக்கி போட வேண்டும். சிட்ரிக் அமிலம் சம்பந்தமான பழங்களை தவிர்க்க சொல்கிறார்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரி). எல்லாவற்றையும் எடுத்து அதே அளவு இலை சருகு, ஒரு tea spoon அளவுக்கு Compost Microbes பவுடர் கலந்து கொஞ்சமாய் ரப்பதம் இருக்கும் அளவுக்கு நீர் தெளித்து நன்றாக கிளறி விடவும் (தனியாக Sprayer தேவை இல்லை. கையால் தெளித்தால் போதும்). நிறைய நீர் விடக் கூடாது. நீர் தேங்காமல் ரம் இருக்கும் அளவுக்கு தெளித்து கிளறி விட்டால் போதும். நிறைய பழத்தோல் சேர்த்தால், கிளறி விட்டப்பிறகு மேலே கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தூவி விட்டால் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காது. தவிர வேப்பம் புண்ணாக்கு கலக்கும் போது இறுதியில் கிடைக்கும் உரம் இன்னும் தரமாக இருக்கும்.
பூச்சி புழுக்கள் வருமா என்று கேட்டால், கழிவுகளை மக்க வைப்பதில் அவை இல்லாமல் எப்படி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அருவருக்க தக்க அளவில் எல்லாம் புழுக்கள் வருவதில்லை. கூர்ந்து கவனித்தால் சின்னதாய் சில பூச்சி புழுக்கள் தெரியலாம். கண்டிப்பாய் ஒரு கையுறை வேண்டும்.

துர்நாற்றம் எல்லாம் இல்லை. முதலில் ஓரிரு நாள் கொஞ்சம் புளித்த வாடை இருக்கலாம். பிறகு ஒரு Earth Smell க்கு மாறி விடும். அளவான நீர் தெளித்து, காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் எந்த துர்நாற்றமும் வராது. எல்லாவற்றையும் எதாவது ஒன்றை வைத்து மூடி வைக்க வேண்டும் (அதே நேரத்தில் காற்று போகவும் வசதி இருக்க வேண்டும்). இல்லாவிட்டால் நிறைய பூச்சி வரலாம். தவிர சீக்கிரம் கலவை காய்ந்து போய் விடும்.    

தினமும் சேரும் காய்கறி கழிவுகளை ஏற்கனவே உள்ள கலவையோடு கலந்து வந்தேன். ஓரளவுக்கு பானை முக்கால் பாகம் வந்ததும் (ஒரு வாரம்), அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பானையில் நிரப்ப ஆரம்பித்தேன். இரண்டாவது பானை நிரம்ப, முதல் பானையில் உள்ளது ஓரளவுக்கு மக்க ஆரம்பித்திருக்கும். அதை அப்படியே மூன்றாவதாக ஒரு பழைய பக்கெட் ஒன்றில் மாற்றி விட்டேன் (நம்ம பட்ஜெட் ‘Leave it Pot’ இப்போதைக்கு இது தான்). பக்கெட்டில் காற்று போகும் அளவுக்கு அங்கங்கே கொஞ்சம் துளைகள் போட்டுக் கொண்டேன். எதாவது ஒன்றை வைத்து முடி வைக்க வேண்டும். மறக்காமல் இதையும் தினமும் கிளறி விடவேண்டும். மண்பானையில் காற்று போக சிமெண்ட் வைத்து அதன் வாய் பகுதியில் லேசாய் உயர்த்தி விட்டேன்.  

இப்படி செய்து, கடைசியாக பக்கெட்டில் சேர்த்து வர, 45 – 60 நாட்களில் நமக்கு நல்ல உரமாக மாறி இருக்கும். பெரிதாக போட்ட மாதுளை தோல் கூட நல்ல மக்கி போய் இருக்கும். இதை பெரிய கண் இருக்கும் சல்லடை போன்று பிளாஸ்டிக் Tray  (மேலே நான் காய்கறி கழிவுகளை வைத்திருக்கும் Tray போல) வைத்து அரித்து அந்த பவுடரை உரமாக பயுன்படுதலாம். அப்படியே எடுத்தும் பயன்படுத்தலாம். நான் அப்படியே எடுத்து மேலே மாடியில் இருக்கும் செடிகளுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு கை அளவுக்கு போட்டு விட்டேன். 

மொத்தத்தில் ரொம்ப எளிதாகவே உரம் தயாராகிறது. நல்ல உரமாகவும் கிடைக்கிறது. ஆனால் இது தோட்டத்திற்கான உர தேவையை பூர்த்தி செய்யாது. இதை செய்வது அதற்கான காரணமும் கிடையாது. வீணாக போகும் காய்கறி கழிவுகளை உரமாக்கினால் நல்லது தானே. அதையே நம்ம செடிக்கு போட்டு கூட ரெண்டு காய்கறி பறித்தால் இன்னும் சந்தோசம் தானே. 


Day 1

After a week

After 6 weeks
Final Compost - Ready to Use
நாம் எல்லா நேரமும் Microbes பவுடர் வாங்க வேண்டியதில்லை. கடைசியாக தயாராக இருக்கும் உரத்தில் இருந்து கொஞ்சம் அள்ளி போட்டாலே அதில் இருக்கும் Microbes புதிய கழிவுகளை மக்க வைக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் (நான் இன்னும் செய்து பார்க்க வில்லை). 

கடைசியாக, இப்போது பெரிய Khamba மற்றும் ‘Leave it Pot’ போகலாமா என்றால், சில விசயங்களை கவனித்து வாங்க வேண்டும். முதலில் இதை வீட்டிற்குள் வைக்க முடியாது. மாடிபடிக்கு அடியிலோ, வெளியே எதாவது ஷெட்க்குள்ளேயோ வைக்க வேண்டிய இருக்கும். பெரிய கம்பா போகும் போது அதை புழங்க (கிளறி விட, சாய்த்து எடுக்க) இட வசதி இருக்க வேண்டும். மழையிலும் நனையாத இடம் வேண்டும். மொத்தத்தில் தனியாக ஒரு இடம் இருந்தால் நல்லது. அதனால் மேலே மாடியில் பெரிதாக தோட்டம் அமைக்கும் போது இதற்கும் ஒரு இடம் விட்டு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். 

பெரிய கம்பா வேண்டும் என்றால் கோவையில் சிறுதுளி சென்டரில் எல்லா வகையும் கிடைக்கிறது. இங்கே மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் ரோட்டோரத்தில் இருக்கும் மண்பானை கடைகளில் ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்களாம். விலை பொதுவாக மூன்றடுக்கு கம்பா Rs.1500 க்கும், ‘Leave it Pot’ Rs. 1000 க்கும் கிடைக்கும். கிட்டதட்ட Rs.2500 செலவு செய்தால் அமைக்கலாம். இப்போதைக்கு இங்கே மண்பானையும் அந்த பாக்கெட்டும் தான்  :-)

மேலும் விவரங்களுக்கு http://www.dailydump.org/ பாருங்கள்
          
Saturday, November 8, 2014

மாடித் தோட்டம் (with DIY Kit) – கீரைகள்நிறைய நண்பர்கள் DO IT YOURSELF KIT வாங்கி மாடி தோட்டம் முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் ஆர்வ மிகுதியில் வாங்கி விட்டு ரெண்டு கத்தரி தான் கிடைச்சது, ஆயிரம் ரூபாய் ண்டம் என்று சில புகார்களையும் கேட்க முடிந்தது. சிலருக்கு வெறும் Coir Pith-ஐ வைத்து கொண்டு என்ன செய்வது, வேறு என்ன கலக்க வேண்டும், எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று குழப்பம் (இது சரியாக DO IT YOURSELF KIT-ல் கொடுக்கவில்லை. வெறும் சூடோமொனாஸ் கலந்து வைத்தால் செடி வந்து விடுமா என்ன?). கெமிக்கல் முறையில் நீங்கள் செய்ய நினைத்தால் NPK Solution வைத்தே செய்யலாம் என்று நினைக்கறேன் (அதையும் DO IT YOURSELF KIT-ல் கொடுத்தார்கள்). நம்ம தோட்டத்தில் எப்பவுமே இயற்கை வழி விவசாயம் தான். எந்த மாதிரி கலவையை முயற்சிக்கலாம் என்பதை இந்த பதிவில் முன்பு விளக்கமாக கொடுத்து இருந்தேன். பாருங்கள்.


பதிவு1

பதிவு2

முதன்முறை மாடி தோட்டம் முயற்சிப்பவர்களுக்கு கீரைகள் ஏற்றதாக இருக்கும். நல்ல விளைச்சலும் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான கீரைகளை எளிதாக எடுக்க முடிக்கும் (வெளியே கிடைக்கும் கீரைகள் எப்படி நம்பி வாங்குவது என்று தெரியவில்லை. பூச்சி அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளித்து இருக்கலாம், எப்படி பட்ட நீரில் வளர்த்தார்கள் இப்படி நிறைய யோசனைகளை வருகிறது. இதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்). நம் வீட்டிலேயே ரொம்ப எளிதாக எல்லா கீரைகளையும் எடுக்க முடியும். அதுவும் நிறைய கீரைகள் விதைத்து மூன்று – நான்கு வாரத்திலேயே அறுவடைக்கு தயாராக இருக்கும். கொஞ்சம் திட்டமிட்டு விதைத்தால் வருடம் முழுவதும் கீரை தாராளமாய் கிடைக்கும்.

நான் DO IT YOURSELF KIT-ஐ வைத்து கீரை தோட்டம் தான் போட்டிருக்கிறேன். அதை ஒவ்வொரு கீரையை விவரமாய் பார்க்கலாம்.  

வீட்டில் என்ன என்ன கீரை வளர்க்கலாம் என்று பட்டியலிட்டு பார்த்தால், இவைகளை கூறலாம் (விடுபட்ட கீரைகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்)

பாலக் கீரை
தண்டங் கீரை
பருப்புக் கீரை (பச்சை மற்றும் சிவப்பு)
புளிச்சக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
வல்லாரை கீரை
அகத்திக் கீரை
வெந்தயக் கீரை
பசலை கீரை
கொத்த மல்லி
புதினா


இவற்றில் சிலவற்றை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இப்போது DO IT YOURSELF KIT கொண்டுவந்த கீரை தோட்டத்தை பற்றி பார்க்கலாம் (நண்பர்கள் முயற்சிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்)

புளிச்சக் கீரை (Gongura)

ஆந்திரா மெஸ்ல சாப்பிடவங்களுக்கு இந்த கோங்குரா ஊறுகாய் தெரிந்திருக்கும். கொஞ்சம் புளிய இலையை கடைந்து காரம் சேர்த்த மாதிரி ஒரு சுவை இருக்கும். சென்னையில் இருக்கும் போது ஆந்திரா மெஸ்ல சாப்பிடும் போது அது ஒரு கீரை என்று தெரியாது. கீரை விதைகளை முதலில் வாங்கிய போது (இங்கே ARJUN Growbags-ல்) கிடைத்த அத்தனை கீரையையும் வாங்கியதில் இந்த புளிச்ச கீரையும் வந்தது. இரண்டு பையில் போட்டு விட்டேன்.

நன்றாக வளர்ந்த பிறகு தான் கீரையை என்ன செய்வது என்ற நமது கூகிள் தேடல் தொடங்கியது. தெளிவாக ஒரு செய்முறை வீடியோ ஓன்று Youtube-ல் கிடைத்தது. அதை பார்த்த பிறகு தான் அடடே இது நம்ம ஆந்திரா மெஸ் துவையல் மாதிரி இருக்கே என்று. வீட்டில் உடனே இலையை பறித்து ரெசிபி படி செய்தும் கொடுத்துவிட்டார்கள். நல்ல ருசி. நிறைய நாள் வைத்து ஊறுகாயாக வைத்து சாப்பிடலாம். 
பாலக் கீரை

முன்பு பாலக் கீரையை தரையில் முயற்சித்து சரியாக வராமல் போய், வந்த ஓன்று இரண்டும் பூச்சி சாப்பிட்டுவிட்டு போக, பிறகு முயற்சிக்கவே இல்லை இப்போது Coir Pith மீடியா வந்த பிறகு நிறைய செடிகள் எளிதாக வருகிறது. அதில் ஓன்று பாலக் கீரை. பாலக்கீரை விதை எல்லா கடைகளிலும் கிடைக்கிறது (Biocarve மாதிரி இணையத்தில் இதை Spinach என்று போட்டு விலை முப்பது-நாற்பது என்று விற்கிறார்கள். அது பாலக் கீரை தான். அது உள்ளூர் விதை கடைகளிலேயே பத்து ரூபாய்க்கு கிடைக்கும். அதை வாங்கினால் போதும்)

பாலக்கீரையை வீட்டில் முட்டை எல்லாம் போட்டு ஒரு கீரை கூட்டு வைப்பார்கள் நன்றாக இருக்கிறது.

பாலக்கீரையை அறுவடை செய்யும் போது கீழே இருக்கும் பாகத்தை அப்படியே வேரோடு விட்டுவிட்டால் நமக்கு அது தளிர்த்து இரண்டாவது அறுவடையும் கிடைக்கும்,

பருப்புக் கீரை

எளிதாக வரும் இன்னொரு கீரை. கொஞ்சம் கிளறி தூவி விட்டால் போதும், மூன்று வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். வீட்டில் இதை சாம்பார் (பருப்பு குழம்பு) வைக்கும் போது போட்டு வைப்பார்கள். நன்றாக இருக்கும். 

இதில்  சிவப்பு நிறத்தில் பருப்பு கீரை ஒன்றும் கிடைக்கிறது. அதை இந்த பதிவில் எழுதி இருந்தேன்.

பொன்னாங்கண்ணி

இது சிவப்பு பொன்னாங்கண்ணி. இது ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு குச்சி, வைத்து விட்டால் அதுவாக மடமடவென்று தளிர்த்து கொள்ளும். நாம் வேண்டும் போது வெட்டி எடுத்துக் கொள்ளலாம். உடனே குப்பென்று தளிர்த்து விடும். 

Coir Pith–ல் சரியாக வருமா என்று நினைத்தேன். முன்பு மண்ணில் வைத்ததை விட நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் அறுவடைக்கு பிறகு நிறைய தளிர் வந்து அடர்த்தியாக ஆகி விடும். அப்போது மீண்டும் பிடுங்கி விட்டு, புதிதாய் அதில் கொஞ்சம் குச்சிகளை வெட்டி வைத்தால் வந்து விடும்.

இதை தவிர பச்சை இலையோடு இன்னொரு பொன்னாங்கண்ணி கீரையும் இருக்கிறது. அதை இன்னும் முயற்சிக்க வில்லை.       

வெந்தய கீரை

மற்றும் ஒரு எளிதான கீரை. சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் கொஞ்சம் எடுத்து தூவி விட்டால் போதும், தனியாக விதை வாங்க வேண்டியதில்லை (இதையும் Methi என்று விதையாக விற்கிறார்கள். அது நமக்கு தேவையில்லை). தூவி விட்டு இரண்டு நாளில் முளைத்து செழிப்பாக வளர ஆரம்பித்து விடும். எங்க வீட்டில் இதை பறித்து லேசாக வதக்கி மாவில் கலந்து சப்பாத்தி சுடுவார்கள். கசப்பு லேசாய் இருந்தாலும் நல்ல ருசி. உடலுக்கும் ரொம்ப நல்ல கீரை. இப்போது தவறாமல் தோட்டத்தில் போட்டு விடுகிறேன்.  

மல்லி

வெந்தயம் மாதிரி இதுவும் கொஞ்சம் மல்லியை எடுத்து தூவி விட்டால் முளைத்து விடும் (பாதியாக உடைத்து போட்டால் எளிதாக முளைக்கிறது). பொதுவாய் நாம் வீட்டில் இருக்கும் மல்லியை போட்டால் செடி கடையில் கிடைப்பது போல பெரிதாக வருவதில்லை. சின்னதாய் இருக்கும் போதே பூ பூத்து விடும். இந்த முறை DO IT YOURSELF KIT-ல் கொடுத்த விதையை போட்டேன். நன்றாக வந்திருந்தது.


.