Friday, November 21, 2014

காய்கறி கழிவுகளை உரமாக்கலாம்



 முன்பு ஒரு முறை DailyDump அறிமுகம் பற்றியும் இங்கே கோவையில் சித்ரா கிருஷ்ணசாமி மேடம் வீட்டில் அது பற்றி ஒரு டெமோ போய் பார்த்ததையும் எழுதி இருந்தேன். 

கிச்சனில் தினமும் சமையலின் போது நிறைய காய்கறி கழிவுகள், தோட்டத்தில் வரும் இலை சருகுகள் என்று நிறைய சேரும். இவற்றை அப்படியே குப்பையாக போடாமல் உரமாக மாற்றும் ஒரு முறை தான் DailyDump,org ல் கொடுத்திருகிறார்கள். 

Google image
அப்படியே அவர்கள் கொடுத்திருக்கிற படி ஆரம்பிக்க வேண்டும் என்றால், ஒரு மூன்றடுக்கு கம்பா (Khamba) மற்றும் ‘Leave it Pot’ எல்லாம் சேர்த்து மூவாயிரம் ரூபாய் ஆகும். எனக்கு முதலில் நிறைய சந்தேகங்கள் இருந்தது, அது சரியாக மக்கி அதே போல உரமாக வருமா, நிறைய புழு,பூச்சிகள் அதில் உற்பத்தி ஆகுமோ, துர்நாற்றம் ஏதும் வீசுமோ இப்படி நிறைய. 

முதலிலேயே நிறைய செலவு செய்து பிறகு சரி வரவில்லை என்றால் என்ன செய்வது என்று நாமே சின்னதாய் ஆரம்பித்து பார்க்கலாம் என்று இரண்டு மண் பானைகளை கொண்டே செய்து பார்க்கலாம் என்று இங்கே கவுண்டம்பாளையம் ரோட்டோரத்தில் உள்ள கடையில் இரண்டு பானைகள் வாங்கி வந்தேன் (அதுவே ஒவ்வொன்றும் 150 ரூபாய்). ஆர்டர் கொடுத்தால்  மண்பானையில் வேண்டும் என்றால் துளைகள் போட்டே செய்து தருகிறோம் என்றார்கள், கொஞ்சம் விலை தான் அதிகம் சொன்னார்கள். தவிர ஒரு வாரம் ஆகும் என்றார்கள். நான் சாதாரண மண்பானை இரண்டே வாங்கி வந்துவிட்டேன்.

காய்கறி கழிவுகளை உரமாக்க நமக்கு தேவையானது Microbes எனப்படும் நுண்ணுயிர்கள் கொண்ட பவுடர். இவைகள் கழிவுகளை விரைவாக மக்க வைக்க உதவுகிறது. அது தவிர காய்ந்த இலை சருகுகள் வேண்டும்.    
Compost Microbes பவுடர் இங்கே கோவையில் சிறுதுளி சென்டரில் (உக்கடம் – சுங்கம் by-pass சாலையில் இரயில்வே பாலம் ஏறி இறங்கும் போது வலது பக்கத்தில் உள்ளது) கிடைக்கிறது. விலை பாக்கெட் ஐம்பது ரூபாய். இலை சருகுக்கு வேப்பமரம் மற்றும் இதர மரங்களின் சருகுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். . 

தினமும் சேரும் காய்கறி கழிவுகள், பழத் தோல்கள், பூ கழிவுகள் (செம்பருத்தி, சாமந்தி), முட்டை கூடு என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். முட்டை கூட்டை நன்றாக நொறுக்கி போட வேண்டும். சிட்ரிக் அமிலம் சம்பந்தமான பழங்களை தவிர்க்க சொல்கிறார்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு மாதிரி). எல்லாவற்றையும் எடுத்து அதே அளவு இலை சருகு, ஒரு tea spoon அளவுக்கு Compost Microbes பவுடர் கலந்து கொஞ்சமாய் ரப்பதம் இருக்கும் அளவுக்கு நீர் தெளித்து நன்றாக கிளறி விடவும் (தனியாக Sprayer தேவை இல்லை. கையால் தெளித்தால் போதும்). நிறைய நீர் விடக் கூடாது. நீர் தேங்காமல் ரம் இருக்கும் அளவுக்கு தெளித்து கிளறி விட்டால் போதும். நிறைய பழத்தோல் சேர்த்தால், கிளறி விட்டப்பிறகு மேலே கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு தூவி விட்டால் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காது. தவிர வேப்பம் புண்ணாக்கு கலக்கும் போது இறுதியில் கிடைக்கும் உரம் இன்னும் தரமாக இருக்கும்.
பூச்சி புழுக்கள் வருமா என்று கேட்டால், கழிவுகளை மக்க வைப்பதில் அவை இல்லாமல் எப்படி என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அருவருக்க தக்க அளவில் எல்லாம் புழுக்கள் வருவதில்லை. கூர்ந்து கவனித்தால் சின்னதாய் சில பூச்சி புழுக்கள் தெரியலாம். கண்டிப்பாய் ஒரு கையுறை வேண்டும்.

துர்நாற்றம் எல்லாம் இல்லை. முதலில் ஓரிரு நாள் கொஞ்சம் புளித்த வாடை இருக்கலாம். பிறகு ஒரு Earth Smell க்கு மாறி விடும். அளவான நீர் தெளித்து, காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் எந்த துர்நாற்றமும் வராது. எல்லாவற்றையும் எதாவது ஒன்றை வைத்து மூடி வைக்க வேண்டும் (அதே நேரத்தில் காற்று போகவும் வசதி இருக்க வேண்டும்). இல்லாவிட்டால் நிறைய பூச்சி வரலாம். தவிர சீக்கிரம் கலவை காய்ந்து போய் விடும்.    

தினமும் சேரும் காய்கறி கழிவுகளை ஏற்கனவே உள்ள கலவையோடு கலந்து வந்தேன். ஓரளவுக்கு பானை முக்கால் பாகம் வந்ததும் (ஒரு வாரம்), அதை அப்படியே விட்டுவிட்டு அடுத்த பானையில் நிரப்ப ஆரம்பித்தேன். இரண்டாவது பானை நிரம்ப, முதல் பானையில் உள்ளது ஓரளவுக்கு மக்க ஆரம்பித்திருக்கும். அதை அப்படியே மூன்றாவதாக ஒரு பழைய பக்கெட் ஒன்றில் மாற்றி விட்டேன் (நம்ம பட்ஜெட் ‘Leave it Pot’ இப்போதைக்கு இது தான்). பக்கெட்டில் காற்று போகும் அளவுக்கு அங்கங்கே கொஞ்சம் துளைகள் போட்டுக் கொண்டேன். எதாவது ஒன்றை வைத்து முடி வைக்க வேண்டும். மறக்காமல் இதையும் தினமும் கிளறி விடவேண்டும். மண்பானையில் காற்று போக சிமெண்ட் வைத்து அதன் வாய் பகுதியில் லேசாய் உயர்த்தி விட்டேன்.  

இப்படி செய்து, கடைசியாக பக்கெட்டில் சேர்த்து வர, 45 – 60 நாட்களில் நமக்கு நல்ல உரமாக மாறி இருக்கும். பெரிதாக போட்ட மாதுளை தோல் கூட நல்ல மக்கி போய் இருக்கும். இதை பெரிய கண் இருக்கும் சல்லடை போன்று பிளாஸ்டிக் Tray  (மேலே நான் காய்கறி கழிவுகளை வைத்திருக்கும் Tray போல) வைத்து அரித்து அந்த பவுடரை உரமாக பயுன்படுதலாம். அப்படியே எடுத்தும் பயன்படுத்தலாம். நான் அப்படியே எடுத்து மேலே மாடியில் இருக்கும் செடிகளுக்கு எல்லாவற்றுக்கும் ஒரு கை அளவுக்கு போட்டு விட்டேன். 

மொத்தத்தில் ரொம்ப எளிதாகவே உரம் தயாராகிறது. நல்ல உரமாகவும் கிடைக்கிறது. ஆனால் இது தோட்டத்திற்கான உர தேவையை பூர்த்தி செய்யாது. இதை செய்வது அதற்கான காரணமும் கிடையாது. வீணாக போகும் காய்கறி கழிவுகளை உரமாக்கினால் நல்லது தானே. அதையே நம்ம செடிக்கு போட்டு கூட ரெண்டு காய்கறி பறித்தால் இன்னும் சந்தோசம் தானே. 






Day 1

After a week

After 6 weeks




Final Compost - Ready to Use
நாம் எல்லா நேரமும் Microbes பவுடர் வாங்க வேண்டியதில்லை. கடைசியாக தயாராக இருக்கும் உரத்தில் இருந்து கொஞ்சம் அள்ளி போட்டாலே அதில் இருக்கும் Microbes புதிய கழிவுகளை மக்க வைக்க போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் (நான் இன்னும் செய்து பார்க்க வில்லை). 

கடைசியாக, இப்போது பெரிய Khamba மற்றும் ‘Leave it Pot’ போகலாமா என்றால், சில விசயங்களை கவனித்து வாங்க வேண்டும். முதலில் இதை வீட்டிற்குள் வைக்க முடியாது. மாடிபடிக்கு அடியிலோ, வெளியே எதாவது ஷெட்க்குள்ளேயோ வைக்க வேண்டிய இருக்கும். பெரிய கம்பா போகும் போது அதை புழங்க (கிளறி விட, சாய்த்து எடுக்க) இட வசதி இருக்க வேண்டும். மழையிலும் நனையாத இடம் வேண்டும். மொத்தத்தில் தனியாக ஒரு இடம் இருந்தால் நல்லது. அதனால் மேலே மாடியில் பெரிதாக தோட்டம் அமைக்கும் போது இதற்கும் ஒரு இடம் விட்டு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். 

பெரிய கம்பா வேண்டும் என்றால் கோவையில் சிறுதுளி சென்டரில் எல்லா வகையும் கிடைக்கிறது. இங்கே மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் ரோட்டோரத்தில் இருக்கும் மண்பானை கடைகளில் ஆர்டரின் பேரில் செய்து கொடுப்பார்களாம். விலை பொதுவாக மூன்றடுக்கு கம்பா Rs.1500 க்கும், ‘Leave it Pot’ Rs. 1000 க்கும் கிடைக்கும். கிட்டதட்ட Rs.2500 செலவு செய்தால் அமைக்கலாம். இப்போதைக்கு இங்கே மண்பானையும் அந்த பாக்கெட்டும் தான்  :-)

மேலும் விவரங்களுக்கு http://www.dailydump.org/ பாருங்கள்
          




20 comments:

  1. பயனுள்ள செய்திகள் ...பகிற்விற்கு நன்றி

    ReplyDelete
  2. அருமையாக உரம் தயாரிக்கும் விதம் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் நன்றி சகோ

    ReplyDelete
  3. இங்கு சிறு நிலம் உள்ள வீடுகளில் இம் முறையை பின்பற்றுகிறார்கள்.
    பிளாஸ்டிக்கில் செய்த 60 லீற்ரர் கொள்கலன் 25 யூரோவுக்குக் கிடைக்கிறது.இங்கு எலும்புகள், முட்கள், தோல்கள் கொட்டத் தடை.
    2 வருடத்தில் இருந்து இந்த உரம் பூமரங்களுக்கும், சிறு தோட்டங்களுக்கும் பாவிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எலும்புகள் கூட கொட்ட தடையா. இரண்டு வருடம் என்பது ரொம்ப காலம் ஆகிட்டே. அதுவரை கிளறி விட்டுகொண்டேயா இருக்க வேண்டும்?

      Delete
  4. pot la compost super idea anna.....nan oru cement thottiyil kaikari kuppaikalai kotti adil manpuzukkalai vittu uram thayarithu kondu irukiren anna...

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருக்கிற விஜய்?

      மண்புழு வைத்து செய்கிறாயா.. நல்லது. எங்கே மண்புழு கிடைத்தது? நன்றாக வருகிறதா?

      Delete
  5. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த பதிவு நன்றி நண்பரே நானும் முயற்சி செய்கிறேன், இங்கு Microbes பவுடர் கிடைக்கிறதா என்று முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந்த். வேண்டும் என்றால் ஒரு மடல் அனுப்புங்கள். முடிந்தால் நான் வாங்கி அனுப்புகிறேன்.

      Delete
    2. Mr. Aravind you can try sour butter milk ( curd ) instead microbes.

      Delete
  6. இங்கு குளிரதிகம் அதனால் கழிவுகள் உக்கிப் பசளையாகக் காலமெடுக்கும்.
    எலும்புகளால் இலையான் பெருகும் அவை வேறு தொல்லைகளை உருவாக்குமென்பதால் தடை.

    ReplyDelete
  7. Hi Siva how are you!. I been composting for the past six months, the end product never comes black always coffee brown why? I had used it for the plants nothing went wrong, and yield remains the same.

    ReplyDelete
    Replies
    1. Hi Srini, what kind of set-up you have? Khamba or some other set-up?. Does it have enough air flow? Are you mixing it well everyday (even after transferred to Leave it pot)? Have we mixed enough dried leave? It usually take 45 - 60 days (2 months) to get into a black color

      For me, It is coming perfect even with the simple set-up I have.

      Delete
  8. compost microbes எங்கு கிடைக்கும்? முகவரி சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எந்த ஊரில் கேட்கிறீர்கள் மேடம்?. கோவை என்றால் பதிவில் விவரம் கொடுத்திருக்கிறேன். மற்ற ஊரில் தெரியவில்லை. http://www.dailydump.org/ இணையத்திலேயே கிடைக்கிறது. ஆர்டர் செய்து கொள்ளலாம்.

      Delete
  9. நான் மதுரையில் இருக்கிறேன் இங்கு கிடைக்கவில்லை அண்ணா

    ReplyDelete
    Replies
    1. உங்களால் இணையத்தில் ஆர்டர் செய்ய முடியுமா என்று? இல்லை என்றால் இங்கே கோவையில் வாங்கி அனுப்ப முயற்சிக்கிறேன். தனி மடல் ஓன்று அனுப்புங்கள். விவரமாக பேசலாம்.

      Delete
  10. நன்றி அண்ணா எனது தம்பி coimbatore இல் வேலை பார்க்கிறார். வரும் பொழுது வாங்கி வர சொல்லி இருக்கிறென் முகவரியும் தந்துஇருக்கிறென்
    மிக்க நன்றி

    ReplyDelete
  11. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete
  12. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,

    ReplyDelete