Sunday, August 26, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – கொய்யா

என் வீட்டுத் தோட்டத்தில் – கொய்யா
ஊரில் வீட்டுக்கொரு கொய்யா மரம் எப்படியும் இருக்கும். பள்ளிக்கூடம் போகும் வயதில், அதில் ஏறி, பழமாக தேடி பறித்து சாப்பிடுவது ஒரு சந்தோசமான விஷயம். அதிலும் அணில் கடித்த பழம் என்றால் கூடுதல் ருசி என்று (அணிலுக்கு தான் தெரியுமாம் எந்த பழம் ருசியானது என்று) அதற்கு சண்டை போட்டுக் கொள்வோம். இப்படி மற்ற பழ மரங்கள் நிறைய இருந்தாலும் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடித்தது கொய்யா தான். வெள்ளை பழம் என்றால் சீனி கொய்யா என்போம். சிவப்பு என்றால் கருப்பட்டி கொய்யா என்போம். இப்போதெல்லாம் சிவப்பு கொய்யா இங்கே அவ்வளவாக கிடைப்பது இல்லை. எல்லாம் ஹைப்ரிட் வகை வெள்ளை கொய்யா தான் பார்க்க முடிகிறது.

வீடு வாங்கிய பொழுது இந்த கொய்யா, ரொம்ப சின்ன செடியாக வேப்பமரம் பக்கத்தில் இருந்தது. தானாக முளைத்தது என்று நினைக்கிறேன். ஒரு சின்ன பாத்தி பிடித்து நீருற்ற, அதே இடத்திலேயே வளர்ந்து வந்தது. 


அது என்ன வெரைட்டி, காய்க்கும என்று எந்த ஐடியாவும் இல்லாததால் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. வேப்பமரம் நிழலில் நின்றதால் வெயிலுக்கு இடம் தேடி நின்று கொண்டிருந்தது. போர் போட வேப்பமரத்தின் ஒரு பெரிய கிளையை வெட்ட, கொய்யாவுக்கு வெயில் கிடைக்க வேகமாக வளர ஆரம்பித்தது. 

பிளான் பண்ணி வைக்காததால், கொஞ்சம் இடைஞ்சலான இடத்திலேயே இருந்தது. பேசாமல் மரத்தை எடுத்து விடலாம் என்று நினைத்த போது , போன வருடம் சாம்பிளுக்காக ஒரு 5 காய் காய்த்தது. பார்த்தால், சிவப்பு கொய்யா ,ரொம்ப சந்தோஷமாகி விட்டது. மரத்தை வெட்டும் ஐடியாவை விட்டு விட்டு, நன்றாக பாத்தி கட்டி, உரம் எல்லாம் போட்டு தனி கவனம் செலுத்த வைத்து விட்டது இந்த மரம்.

இந்த வருடம் சம்மரில் கொத்து கொத்தாக பூத்து காய்க்க ஆரம்பித்தது. ஜூலையில் பழுக்க ஆரம்பித்தது. எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் எல்லோருக்கும் தானாய் வளர்ந்த இந்த மரம் நான் முதல் பாராவில் எழுதிய அதே சந்தோசத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.


Wednesday, August 15, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – தக்காளி

தக்காளி நம்ம ஊரில் ரொம்ப முக்கியமான ஒரு காய்கறி. தக்காளி இல்லன்னா நம்ம ஊர்ல சமையலே இல்லை எனலாம். வைக்கிற குழம்பில் இருந்து. ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி மயம் தான். தக்காளி ரொம்ப எளிதாக வளரும் செடி. காய்கறி செடின்னு ரெண்டு செடி வைத்தாலும் அதில் தக்காளி இருக்கும். 

தக்காளியில் இரண்டு வகை கிடைக்கிறது. இதில் ஓன்று, நாட்டு தக்காளி, நிறைய சாறு இருக்கும். இரண்டாவது, பெங்களுரு தக்காளி அவ்வளவாக எளிதாக கனிவதோ, அழுகுவதோ இல்லை. அதனால் அது தான் நிறைய கிடைக்கிறது. 

நான் பொதுவாக இரண்டு வகைகளுமே வளர்ப்பதுண்டு. இங்கே கோவை விவசாய கல்லூரியில் ஒரு ஹைப்ரிட் விதை ஓன்று கிடைக்கும். பெங்களூர் தக்காளி மாதிரி ரொம்ப முரடாக இருப்பதும் இல்லை. நாட்டு தக்காளியும் இல்லை. ரொம்ப நன்றாக வருகிறது. நாட்டு தக்காளிக்கு நன்றாக பழுத்த பழம் ஒன்றை வைத்தே நாற்று கொண்டு வரலாம்.     

தக்காளி முதலில் ஒரு பாத்தியில் நாற்று எடுத்து, ஓரளவு வளர்ந்த பிறகு பிரித்து நடலாம்.  நடும்போது பொதுவாக மாலை வேளையில் எடுத்து நடுவது நல்லது. காலையில் நட்டால், மதியம் வெயிலுக்கு நாற்று வேர் பிடிப்பதற்குள் வாடி விடும். மாலையில் நடும் போது இரவு நிறைய நேரம் இருப்பதால், அடுத்த நாள் காலையில் செடி நன்றாக வந்துவிடும். 

தக்காளி செடி அவ்வளவாக உறுதியான செடி இல்லை. எளிதாக சாய்ந்து விடும். அதனால் நன்றாக வளர்ந்தவுடன் ஒவ்வொரு செடிக்கும் உறுதிக்காக கம்பு ஒன்றை சேர்த்து கட்டி விடுவது நல்லது. இந்த தடவை உயரமாக ஒரு படுக்கை அமைத்து வைத்திருக்கிறேன். செடிகள் அதன் மேல் அப்படியே படர்த்து விடும். காய்களும் நீரில் பட்டு அழுகாது. 


தக்காளி செடிக்கு நிறைய வெயில் தேவை. மழை காலத்தை விட வெயில் காலத்தில் நிறைய காய்க்கும். தக்காளியில் நோய் பிரச்சினை அவ்வளவாக வராது. ரொம்ப அரிதாக சில செடிகள் வளர்ச்சி கம்மியாக, இலைகள் சுருண்டு போவதுண்டு. அதை எடுத்துவிட்டு வேறு செடி வைத்து விடுவேன். என் தோட்டத்தில் இருந்து சில படங்கள்,Wednesday, August 1, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – மாதுளை


இப்போதெல்லாம் ஒரு ஜூஸ் கடைக்கு போய் மாதுளை பழம் ஜூஸ் சொன்னால், பக்கத்தில் இருப்பவர்கள் ‘இவரு ரொம்ப வசதியான பார்ட்டி போல என்று நினைக்கும் அளவுக்கு மாதுளை விலை போய் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கிலோ ரூ. 200 எல்லாம் தாண்டி போனது.  அதனால் மாதுளையை ரொம்ப பார்த்து பார்த்து வளர்க்க வேண்டிய இருக்கிறது.
  
வீடு வாங்கும் போதே ஒரு மாதுளை மரம் இருந்தது. அதன் பழம்  கிட்டத்தட்ட ஒரு புளியங்கொட்டை மாதிரி அவ்வளவு கடினமாக இருக்கும். அதை சாப்பிடவே ஒரு டம்ளர் குளுக்கோஸ் சாப்பிடனும். அது தவிர ரொம்ப நோய் விழுந்து காய் எல்லாம் கருப்படிக்க ஆரம்பித்து விட்டது. எனவே அதை எடுத்து விட்டேன்.

பிறகு, எங்க ஊர் (திசையன்விளை) சந்தையில் இருந்து அருமையாக ஒரு கன்று கொண்டு வந்தேன். பொதுவாக இங்கே கோவையில் நர்சரி கார்டனில் பூக்களும், குரோட்டன்களும் தான் நல்ல செடியாக கிடைக்கிறது. பழசெடிகளை அவ்வளவாக கிடைப்பது இல்லை. பழசெடி என்றால் ஊரில் இருந்து தான் கொண்டு வருவது வழக்கம் (மாதுளை, சீதாமரம், சப்போட்டா, நெல்லி). 

இது ஒரு நல்ல seedless மாதுளை. வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. காய் நல்ல பெரிதாக வந்திருக்கிறது (ஒவ்வொன்றும்  ஒரு 300 – 400 கிராம் இருக்கிறது).  பழம் ரொம்ப தித்திப்பாக நிறைய சாருடன் இருக்கிறது. 

பூச்சி, நோய் தொல்லை எல்லாம் பெரிதாக இல்லை. அணில், குருவிகளிடம் இருந்து காப்பாற்ற, காயாய் இருக்கும் போதே ஒரு துணியை சுற்றி கட்டி விடலாம். ஆனால் இந்த கட்டெறும்பு தான், கூட்டம் கூட்டமா வந்து பூவில் இருந்து காய் வரை கூடு கட்டி கும்மி அடித்து விடுகிறது. இதை எப்படி கண்ட்ரோல் செய்வது என்று தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது வரை ஒன்றும் வேலைக்காகவில்லை.
உரம் என்றால், கோவை விவசாய பண்ணையில் கிடைக்கும் Vermi Compost அல்லது சாணி உரம் போதுமானது. வேர் பூச்சி வராமல் இருக்க, சிறிதளவு வேப்பம் புண்ணாக்கும் கலந்து போடுவதுண்டு.

மாதுளை வருடம் முழுவதும் காய்க்கிறது. காய்கள் பழுக்க ஆரம்பிக்கும் போதே மறுபடி பூக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் சரியாக பராமரித்து வந்தால் வருடம் முழுவதும் பலன் கிடைக்கும்.