Wednesday, August 1, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – மாதுளை


இப்போதெல்லாம் ஒரு ஜூஸ் கடைக்கு போய் மாதுளை பழம் ஜூஸ் சொன்னால், பக்கத்தில் இருப்பவர்கள் ‘இவரு ரொம்ப வசதியான பார்ட்டி போல என்று நினைக்கும் அளவுக்கு மாதுளை விலை போய் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் கிலோ ரூ. 200 எல்லாம் தாண்டி போனது.  அதனால் மாதுளையை ரொம்ப பார்த்து பார்த்து வளர்க்க வேண்டிய இருக்கிறது.
  
வீடு வாங்கும் போதே ஒரு மாதுளை மரம் இருந்தது. அதன் பழம்  கிட்டத்தட்ட ஒரு புளியங்கொட்டை மாதிரி அவ்வளவு கடினமாக இருக்கும். அதை சாப்பிடவே ஒரு டம்ளர் குளுக்கோஸ் சாப்பிடனும். அது தவிர ரொம்ப நோய் விழுந்து காய் எல்லாம் கருப்படிக்க ஆரம்பித்து விட்டது. எனவே அதை எடுத்து விட்டேன்.

பிறகு, எங்க ஊர் (திசையன்விளை) சந்தையில் இருந்து அருமையாக ஒரு கன்று கொண்டு வந்தேன். பொதுவாக இங்கே கோவையில் நர்சரி கார்டனில் பூக்களும், குரோட்டன்களும் தான் நல்ல செடியாக கிடைக்கிறது. பழசெடிகளை அவ்வளவாக கிடைப்பது இல்லை. பழசெடி என்றால் ஊரில் இருந்து தான் கொண்டு வருவது வழக்கம் (மாதுளை, சீதாமரம், சப்போட்டா, நெல்லி). 

இது ஒரு நல்ல seedless மாதுளை. வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. காய் நல்ல பெரிதாக வந்திருக்கிறது (ஒவ்வொன்றும்  ஒரு 300 – 400 கிராம் இருக்கிறது).  பழம் ரொம்ப தித்திப்பாக நிறைய சாருடன் இருக்கிறது. 

பூச்சி, நோய் தொல்லை எல்லாம் பெரிதாக இல்லை. அணில், குருவிகளிடம் இருந்து காப்பாற்ற, காயாய் இருக்கும் போதே ஒரு துணியை சுற்றி கட்டி விடலாம். ஆனால் இந்த கட்டெறும்பு தான், கூட்டம் கூட்டமா வந்து பூவில் இருந்து காய் வரை கூடு கட்டி கும்மி அடித்து விடுகிறது. இதை எப்படி கண்ட்ரோல் செய்வது என்று தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இது வரை ஒன்றும் வேலைக்காகவில்லை.
உரம் என்றால், கோவை விவசாய பண்ணையில் கிடைக்கும் Vermi Compost அல்லது சாணி உரம் போதுமானது. வேர் பூச்சி வராமல் இருக்க, சிறிதளவு வேப்பம் புண்ணாக்கும் கலந்து போடுவதுண்டு.

மாதுளை வருடம் முழுவதும் காய்க்கிறது. காய்கள் பழுக்க ஆரம்பிக்கும் போதே மறுபடி பூக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் சரியாக பராமரித்து வந்தால் வருடம் முழுவதும் பலன் கிடைக்கும்.

14 comments:

 1. ஹைய்யோ! பேசாம உங்க வீட்டுக்கே வந்துடலாம் போல இருக்கே!!!!!

  மாதுளை நம்ம வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். அதென்ன Seedless? இதுவரை கேள்விப்படலை!!!

  நம்ம ஊர் குளிரில் இது வராது:( நம்மூட்டுப் பழமரம் என்றால் ஆப்பிள்தான்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியா வந்தீங்கன்னா கண்டிப்பா வாங்க துளசி மேடம்,
   Seedless என்றால் மாதுளை முத்துக்கள் சாப்பிட மிருதுவாக இருக்கும். சில மாதுளை ரொம்ப கடினமாக இருக்கும். மற்றபடி எல்லாவற்றிலும் முத்துக்கள் இருக்கும். இல்லன்னா எங்கே இருந்து மாதுளை வர :-)

   Delete
 2. வீட்டு தோட்டம் போடா நினைக்கும் எவருக்கும், உங்கள் பதிவுகள், நிச்சயம் ஒரு வரபிரசாதம். தொடர்ந்து எழுதவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி விருச்சிகன்.

   Delete
 3. சார், ரெம்ப சூப்பர் எல்லாமே ஆச்சர்யமா இருக்கு வீட்டு தோட்டம் கிட்சேன் கர்டேனு நிறைய பேசி தன கேள்வி பட்ருக்கேன் எல்லாமே ரெம்பா தித்திப்பான சந்தோஷம் ல எது எல்லாம் உங்க முயற்சியோட அறுவடை அதுலையும் உங்க பொண்ணோட உருளைகிழங்கு யோசனை ரெம்ப சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி :-) . பெயர் சொல்லாமலே விட்டுடீங்களே.

   Delete
 4. இப்போது மாதுளை ஒரு costly பழமாகத்தான் ஆகி விட்டது. நான் சிருவனாக இருந்த போது என் தாத்தா வீட்டில் தேடுவாறற்று ஒரு மாதுளம் மரம் இருந்தது. அது பழுக்கும் வரை காத்திராமல் காயாகவே பறித்து சாப்பிட்டு விடுவோம். இனிப்பே இருக்காது. அந்த துவர்ப்பிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்தது. ஆனால் அக்தில் நிறைய கொட்டையாகத்தான் இருக்கும். seedless என்றால் சிரமமில்லாமல் சாப்பிட்டு விடலாம். அப்போதெல்லாம் அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இப்போது அது அனைவரும் தேடும் ஒரு பழமாகி விட்டது. வீட்டிலேயே வளர்ப்பது குறித்து மிக மகிழ்ச்சி.

  G. Sivakumar

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா. மாதுளை ரொம்ப costly தான் இப்போ. எல்லா பழங்களும் விலை அதிகமாகி கொண்டே தான் வருகிறது (கொய்யா கூட. சப்போட்டா தான் இன்னும் விலை கம்மியாக இருக்கிறது).
   தாத்தா வீட்டில் கொய்யா, முருங்கை மரம் தான் எனக்கு நியாபகம் இருக்கிறது.

   Delete
 5. இன்றுதான் உங்கவீட்டுத்தோட்டம் பார்க்க வந்தேன். அழகான பழத்தோட்டம்.

  ReplyDelete
 6. இங்கு நிலத்தில் வளராது ஆனால் இஸ்ரேலில் இருந்தும்; மொரொக்கோவில் இருந்தும் பெருவாரியாக இறக்குமதி செய்கிறார்கள். யூதர்களும், வட ஆபிரிக்கர்களும் விரும்பி உண்பார்கள். சந்தையில் கிலோ 2.50 யூரோவுக்குக் கிடைக்கும் சுமார் 3 பழம் இருக்கும். ஆசியர்களும் வாங்குவார்கள்; பிரான்சியர் அவ்வளவு அக்கறையில்லை.
  உங்கள் தோட்டப்பழம் அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி யோகன் அவர்களே. கிட்டத் தட்ட என்னுடைய எல்லா பதிவுகளையும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

   இங்கு ரொம்ப காஸ்ட்லியான ஒரு பழமாக தான் இருக்கிறது.

   Delete