வீட்டுத் தோட்டம் போடும் எல்லோருக்கும் ஒரு பெரிய சவால் பூச்சிகளை
கட்டுப்படுத்துதல் தான். அதுவும் நாம் இயற்கை விவசாயம் முறையில் போகும் போது
இன்னும் சவாலாக இருக்கும். சிலருக்கு தோட்டம் பற்றி வரும் கொஞ்சம் ஆர்வத்தையும்
விரட்டி விடுவது இந்த பூச்சிகள் தான். சிலர் என் தோட்ட்டத்தை பார்த்தவுடன் முதலில்
கேட்கும் கேள்வி எப்படி பூச்சிகளை கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதாக தான்
இருக்கும்.
நான் நிறைய பதிவுகளில் கூறியபடி நானும் இதில் ஜீரோ என்று தான் கூற
வேண்டும். புத்தகங்களிலும், இணையத்திலும் தேடிப் பார்த்தால் எக்கச்சக்கமான இயற்கை
பூச்சிக்கொல்லி முறைகள் கிடைக்கும். ஆனால் அவைகளுக்கு எல்லாம் இப்போது வரும்
பூச்சிகள் ஓடிப் போகிறதா என்பதில் தான் நாம் கற்றுக் கொள்ளும் கட்டமே
ஆரம்பிக்கிறது. நிறைய நேரங்களில், ரசாயன பூச்சிக்கொல்லிகளை சாப்பிட்டு தேறிய
பூச்சிகள் அவ்வளவு எளிதாய் பூண்டு கரைசளுக்கோ, மஞ்சள் கரைசளுக்கோ கட்டுப்படுவது
இல்லை. ஆசையாய் வளர்த்த செடிகளில் கூட்டம் கூட்டமாய், கொத்து கொத்தாய் பூச்சிகள்
வந்து அழித்துப் போகும் போது வெறுத்துப் போய் தோட்டம் மீதான ஆசையே சிலருக்கு போய் விடும்.
எனக்கு தெரிந்த, கற்றுக் கொண்ட சில விவரங்களை இந்த பதிவில்
கூறுகிறேன். ஒரு சுவாரசியாமான தகவல் ஒன்றும் கடைசியில் இருக்கிறது. தொடருங்கள் :-)
வீட்டுத்தோட்டத்தில் பூச்சிக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமானது,
தினமும் செடிகளை ஒரு முறையாவது கவனிப்பது.
நாம் ஒன்றும் ஏக்கர் அளவில் செடிகள் பயிரிடவில்லை. வெண்டையில் பத்து, அவரையில்
பத்து என்று கொஞ்சம் செடிகள் தான் இருக்கும். தினமும் ஒரு பத்து நிமிடம் எல்லா
செடிகளையும் நோட்டம் விட்டாலே நிறைய செடிகளை காப்பாற்றலாம். இது ரொம்ப அவசியமானது.
இரண்டு நாட்கள் கவனிக்காமல் விட்டாலே சில பூச்சிகள் செடிகளை ஒன்றும் இல்லாமல்
ஆக்கிவிடும்.
“தினமும் என்னை கவனி” என்பது பூச்சிக் கட்டுப்படுத்துதளில் முதல் படி.
சின்ன சின்ன பூச்சிகளோ, புழுக்களோ தெரிந்தால் கையாலோ, ஒரு குச்சியாலோ நீக்கி விட்டாலே
கட்டுப்படுத்தி விடலாம். பூச்சிகள் நிறைய இருந்தால், சாம்பல் இருந்தால் அதையும்
தூவி பார்க்கலாம்.
அடுத்தது, மிக முக்கியமான பொருள் வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம்
புண்ணாக்கு. அதன் கசப்பு சுவை தான் நிறைய பூச்சிகளை விரட்ட உதவுகிறது. சில மரங்கள்
நன்றாக இருந்த மாதிரி இருக்கும், திடீரென்று பட்டுப் போகும். வேர் பூச்சி காரணமாக
இருக்கலாம். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு இருபது கிலோ வேப்பம் புண்ணாக்கு வாங்கி,
மரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கிலோ அளவில் ஒரு பக்கெட் நீரில் நன்றால் கரைத்து ஊற்றி
விடுவேன். இதுவரை எந்த மரத்திலும் பிரச்னை வந்ததில்லை.
வேப்பம் புண்ணாக்கை ஒரு மெல்லிய துணியில் கட்டி, நீரில் பாதி நாள் ஊற
வைத்து அந்த சாற்றை எடுத்து செடிகளுக்கு தெளிக்கலாம். தக்காளி செடிகளுக்கு காய்களையும்,
பிஞ்சிகளையும் கூண்டோடு காலி செய்யும் ஒரு பெரிய புழு வரும். ஒரே நாளில் பத்து,
பதினைந்து என்று ஓட்டை போட்டு நம்மை திணற வைக்கும் (கீழ் படம்). சிரமம் மாறாமல்
செடி எல்லாம் தேடி அதை கண்டுபிடித்து கொன்றால் தான் தக்காளி தப்பிக்கும். அதன்
பிறகு நீரில் வேப்பம் புண்ணாக்கு கலந்து காய்களிலும் பிஞ்சிகளிலும் நன்றாய்
படும்படி தெளித்து விட்டால் அதன் பிறகு வருவதில்லை (இந்த முறை குடை மிளகாயிலும்
ஓட்டை போட்டு டார்ச்சர் செய்து விட்டது. பிறகு வேப்பம் புண்ணாக்கு தெளித்து தான்
கட்டுப்படுத்த முடிந்தது).
வெண்டையில் பூச்சி தாக்குதல் இரண்டு இலை வருவதற்குள் ஆரம்பித்து
விடும். வெள்ளையாய் சாறு உறிஞ்சும் பூச்சிகள் சரியாய்
இலை குருத்தில் கூட்டமாய் வரும். இரண்டு நாட்கள் பார்க்காமல் விட்டால் செடியை
மறந்து விட வேண்டியது தான். குருத்தில் உயிரே
இல்லாமல் போய் செடி அப்படியே நின்று விடும். வேப்ப எண்ணெய் கொஞ்சம் (ஒரு பத்து
துளி) ஒரு லிட்டர் நீரில் எடுத்து (இரண்டு துளி பாத்திரம் கழுவ படுத்தும் dish washer liquid அல்லது காதர் சோப் சிறிது. இரண்டு துளி போதும். நிறைய கலந்தால்
செடியின் இலை வெந்து போகும்) தெளிக்கலாம். ஆனால் நான் பார்த்தவரையில் அவ்வளவாய்
கட்டுப் படுத்த முடியவில்லை. நான் சின்னதாய் குச்சி ஒன்றை எடுத்து மெதுவாய்
ஒவ்வொரு செடியாய் பூச்சிகளை நீங்கி விட்டு தான் காப்பாற்றி கொண்டிருக்கிறேன். இரண்டு
மூன்று நாள் அப்படி செய்து காலி செய்தால் பிறகு வருவதில்லை. ஆனாலும் தினமும் ஒரு
தடவை செடிகளை பார்த்து கொள்வது அவசியம்.
இப்போது மிக முக்கியமான ஒரு பூச்சிக் கொல்லி. அவரை போட்டவர்களுக்கு
தெரியும் அசுவினி பூச்சிகளின் அட்டகாசம். எப்படி கண்டுபிடிக்கும் என்று
தெரியவில்லை (அது தான் இயற்கை), ஒரு மொட்டு வந்ததும் கூட்டமாய் வந்து கும்மி
அடிக்க ஆரம்பித்து விடும். ஒரு வாரம் பார்க்காமல் விட்டால் அவரைக்காய் கண்ணுக்கே
தெரியாது. கருப்பாய் கூட்டம் கூட்டமாய் அசுவினி தான் தெரியும் (கீழ் படம்). நமக்கு
கண்ணீரே வந்து விடும்.
முதன்முதலாய் மாடியில் அவரை போட்ட போது, செடிகள் அவ்ளோ நன்றாய் வந்து
இருந்தது. செடியை பார்த்தாலே பூச்செடி மாதிரி பளிச்சென்று வெள்ளையாய் தெரியும். வழக்கம்
போல அசுவினி கூட்டம் ஓன்று மோப்பம் பிடித்து கூட்டமாய் வந்து ஆண்டுக் கொண்டன. நானும்
என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். பசுமை விகடனில் ‘”3G” கரைசல்
என்றொரு விவரம் கொடுத்திருந்தார்கள். அதவாது பூண்டு, இஞ்சி, மிளகாய் எல்லாம்
மொத்தமாய் போட்டு மிக்சியில் போட்டு அடித்து, நீரில் கரைத்து தெளிக்க சொல்லி
இருந்தார்கள். நானும் தெளித்து பார்த்தேன். அசுவினி பூச்சிகள் எல்லாம் அதில்
குளித்து தலை துவட்டி கொண்டன. ஒன்றுமே வேலைக்காக வில்லை. நானும் தெளித்து கையால்
லேசாய் தேய்த்து பூச்சிகளை காலி செய்து பார்த்தேன். பூக்கள் உதிர்ந்தது தான்
மிச்சம். கீழே உதிர்ந்த பூக்களை அள்ளினால் இரண்டு கை நிறைய வரும். அப்படி கொட்டி
போனது. நானும் குப்பையை தூவி பார்த்தேன், மஞ்சளை தெளித்து பார்த்தேன். கதர் சோப்
வாங்கி தெளித்து பார்த்தேன். ஒன்றுமே பலன் இல்லாமல் கடைசியாக எல்லா செடிகளையுமே
விளைச்சலே எடுக்காமல் அப்படியே பிடுங்கி போட்டேன் (உனக்கும் இல்ல.. எனக்கும்
இல்ல.. போங்கடே.. என்பது மாதிரி ஒரு மனநிலை தான் :-) )
ஒரு முறை ப்ளாக் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருந்த போது கோலா பானம்
தெளித்து பாருங்கள் என்றார். அது எப்படி வேலை செய்யும் என்று முதலில் நான் நம்பவில்லை.
நாட்டில் மக்கள் தொகை கட்டுப்படுத்த அரசாங்கம் முதலில் ‘நாம் இருவர்.
நமக்கு இருவர்’ என்றது, பிறகு ‘நாம் இருவர். நமக்கு ஒருவர்’ என்றது. அதுவும்
வேலைக்காகாமல், நாட்டின் கதவை தொறந்து விட்டு கோலா கம்பனிகளை உள்ளே விட்டு,
குடிச்சாவது சாவுங்க மக்கா. அப்படியாவது மக்கள் தொகை குறையுதா என்று பார்த்தது. எட்டணா
பெறாததை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி, நக்கிக் கொண்டு அலைவதை பெருமையாக நினைக்க
வைக்க நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை கூப்பிட்டு கூவ விட்டு சமூக சேவை செய்ய
வைத்தார்கள் (கொஞ்ச காலத்திற்கு பிறகு அந்த கோலாவையே எதிர்த்து நரம்பு புடைக்க வீர
வசனம் பேசி கல்லா கட்ட முடியும் என்பதும் ஒரு நல்ல lateral thinking தான்). ஆனால் அந்த கோலாவில் இப்படி ஒரு பூச்சிக்கொல்லி நன்மை இருக்கும்
என்பது நான் நினைத்தே பார்க்கவில்லை.
நண்பர் சொன்ன போது நான் நம்பவில்லை. இஞ்சி பூண்டு கரைசலுக்கு எல்லாம்
அசைந்து கொடுக்காத அசுவினி பூச்சி இனிப்பா இருக்கும் இந்த பானத்திற்கு அசையுமா
என்று நினைத்தேன். ஆனால் தெளித்து பார்த்தபோது வந்த ரிசல்ட்டை பார்த்து ஆச்சரியம்.
ஒரு அரை லிட்டர் வாங்கி hand sprayer-ல் (நீர்
கலக்காமல் அப்படியே எடுத்து கொண்டு) வைத்து அசுவினி மொய்த்துக் கொண்டிருக்கும்
மொட்டு, காய்களில் தெளித்து, ஒரு கையால் பூச்சிகளை குளிப்பாட்டுவது போல தேய்த்து
விட்டால் போதும். இருக்கிற பாதி பூச்சிகள் செத்து போய்விடும். மிச்சம் இருக்கும்
கொஞ்சமும் ‘என்ன கருமத்தடா அடிச்சீங்க’ என்ற ரீதியில் உயிர் பிழைத்தோம் என்று ஓடி
விடும். இதில் நான் ரொம்ப ஆச்சரியப் பட்ட விஷயம், ஒரு முறை இருக்கும் இருக்கும்
இடம் எல்லாம் தெளித்து விட்டால், அப்புறம் மீண்டும் வருவதே இல்லை.
இப்போது அவரையில் வரும் அசுவினி பிரச்சனை இந்த கோலா பானத்தால்
முழுவதும் தீர்ந்து விட்டது. இதை ஆர்கானிக் முறை என்று சொல்ல முடியாது. இருந்தாலும்,
காய் பறித்து சமைப்பதற்கு முன்பு கழுவிட்டு பயன்படுத்துங்க :-)
நண்பர்கள் நலனுக்காக ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இங்கே
சரவணம்பட்டியில் ஒரு புகழ்பெற்ற டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர். நான் ஏதோ ஒரு பொருள்
வாங்க போய் இருந்தேன். என் முன்னால் ஒருவர் ஒரு கூடை நிறைய கருப்பாய் அரை லிட்டர்
கோலா பானங்கள். ‘ஏதோ கடன் பிரச்சனை. தற்கொலை பண்ணிக்க போறார் போல’ என்று
நினைத்துக் கொண்டேன். அவர் பில் போடும் பெண்ணிடம் பேரம் பேச ஆரம்பித்த பிறகு தான்
தெரிந்தது அவர் அதை ஒரு ஹோட்டலுக்காக வாங்க வந்திருக்கிறார் என்று. ‘பத்து
ரூபாய்க்கு எல்லாம் தரமுடியாது சார். இன்னும் எக்ஸ்பயரி ஆக ரெண்டு நாள் இருக்கு.
வேணும்னா அஞ்சு ரூபா கம்மி பண்ணலாம்’ இது பில் போடும் பெண். அட பாவிங்களா.
எக்ஸ்பயரி ஆனா சரக்க கம்மி விலைல வாங்கி டீசண்டா ஒரு கண்ணாடி தம்ளர்ல ஊத்தி
கொடுத்து லாபம் பாக்கறீங்களா. நான் நினைத்து கொண்டேன்.
அதனால் ஹோட்டலுக்கு போய் ஏதும் குளிர்பானம் சாப்பிட்டா, பாட்டிலோடு
வாங்கி, எக்ஸ்பயரி தேதி பார்த்து குடிங்க. காலாவதியானதை சாப்பிட்டு நம்ம எக்ஸ்பயரி
தேதியோடு விளையாடாதீங்க :-)
மொத்தத்தில் நான் சொல்ல வர்ற கருத்து என்னவென்றால், கோலா குடிச்சி
சாவாதீங்க என்பது இல்லை, அவரையில் அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த கோலா வாங்கி
தெளிச்சி சந்தோசமா அறுவடை பண்ணுங்க. அவ்ளோ தான்.
நம்ம நாட்ல இவ்ளோ விலை குறைவா எந்த பூச்சிக் கொல்லியும் கிடைக்காது (இஞ்சி பூண்டு
எல்லாம் ரொம்ப விலை). சில சமயம் முக்கா லிட்டர் பாட்டிலுக்கு அரை லிட்டர்
இலவசம் என்று ஆபர் எல்லாம் வரும். விட்ராதிய.
அப்புறம், கப்சியை விட அக்கா மாலா தான் நல்ல பலன் கொடுக்கும். நம்ம
தோட்டத்தில் நான் அதை தான் பயன்படுத்துகிறேன். I strongly recommend AKKA MAALAA to all our blog
friends. Enjoy
நல்ல ஒரு பதிவு சிவா. ஏனெனில் இப்பூச்சியினால் வரும் பிரச்சனை பெரிய பிரச்சனை. அஸ்வினி பூச்சி எனக்கு போயே போச்சு. செம்பருத்தியில் நிறைய இருந்தது. மற்றைய பூமரங்களுக்கும் பரவியது அக்கா மாலா நல்ல உதவி. -நன்றி-
ReplyDeleteநன்றி ப்ரியா :-)
Deleteகொஞ்சம் பெரிய மரங்களில் செம்பருத்தியில் தான் பூச்சிகள் அடிக்கடி வருகின்றன. சில வண்டுகள் வந்து மொட்டுக்களை கூட சாப்பிட்டு விடுகின்றன. பூச்சி அரித்த கிளைகளை முறித்து அழித்து விட்டால் கட்டுப்படுத்த முடிகிறது.
இங்கே buy one get one free ..சோ கோடையில் பவர்புல் ரவுண்ட் அப் மாலா அக்கா தான் ..நான் கியாரண்டி
ReplyDeleteவீட்டு க்ரில் கதவு துரு பிடிச்சா அப்புறம் ரெஸ்ட் ரூம் wc க்ளீனர்னு சர்வ நிவாரணி தான் :)
//சர்வ நிவாரணி தான்// ஹாஹாஹா.. ஆமாம். ஹார்பிக் -க்கு இவங்க நல்ல போட்டி கொடுக்கலாம். ஏன் அதற்கு விளம்பரம் செய்வது இல்லை ( Two in One மாதிரி விற்கலாமே :-) ). ஏன் என்று தெரியவில்லை
Deleteஅக்கா மாலா-வுக்கு இப்படி ஒரு பயன்பாடா??? ஹஹஹஹா!! :) உபயோகமான பகிர்வுங்க..நன்றி!
ReplyDeleteஆமாம் மகி. இது மிகை படுத்த பட்டது இல்லை. நான் பயன்படுத்து பலன் அடைந்ததை பகிர்ந்து இருக்கிறேன். அவ்வளவே :-)
Deleteவணக்கம்
ReplyDeleteவிவசாயிகள் பயன் பெறும் பதிவு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// பசுமை விகடனில் ‘”3G” கரைசல் என்றொரு விவரம் கொடுத்திருந்தார்கள். அதவாது பூண்டு, இஞ்சி, மிளகாய் எல்லாம் மொத்தமாய் போட்டு மிக்சியில் போட்டு அடித்து, நீரில் கரைத்து தெளிக்க சொல்லி இருந்தார்கள். நானும் தெளித்து பார்த்தேன். அசுவினி பூச்சிகள் எல்லாம் அதில் குளித்து தலை துவட்டி கொண்டன //
ReplyDeleteஹா...ஹா..ஹா. இந்த பதிவு முழுவதும் நகைச்சுவையோடு நல்ல பல கருத்துக்களையும் கலந்து எழுதியுள்ளீர்கள். தங்கள் பகிர்வுகள் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ராஜா :-)
Deleteஅக்கா மாலா - what is this? coco-cola?
ReplyDelete:-) 23-ம் புலி கேசி பார்த்தால் புரியும்
Deleteசெம்பருத்தி செடியில் வரும் பூச்சிகளுக்கும் கோகோ கோலா நல்ல தீர்வாகுமா? " அக்கா மாலா " என்றால் கோகோ கோலாவா?
ReplyDelete:-) 23-ம் புலி கேசி பார்த்தால் புரியும்
Deleteசெம்பருத்தி செடியில் பொதுவாய் பூச்சி இருக்கும் கிளைகளை ஒடித்து அழித்து விட்டாலே போதும். கோலா தெளிக்கும் அளவுக்கு தேவை படாது. இருந்தாலும் தெளித்தும் பார்க்கலாம் (சர்வ நாச பூச்சிக் கொல்லி தான் அது. வேலை செய்யும் )
பதிவின் இறுதியில் எனக்கு ஒரே குழப்பம். அதாங்க யாராவது ஒருவராவது 'அக்கா மாலா, தங்கை கப்சி'யைப் பற்றி சந்தேகம் கேட்பார்கள் என்று பார்த்தால் ! எல்லோருக்குமே தெரிந்திருக்கிறதே !
ReplyDeleteசென்ற வருடம் தக்காளி செடிகள் பூச்சி பிடித்ததனால் இந்த வருடம் வைக்கவில்லை. இப்படின்னு தெரிஞ்சிருந்தா செடிக்காகவாவது வாங்கியிருக்கலாம். ரோலிபோலி தொந்தரவினால் ஒரு தடவை வெந்தயம் அரைத்து தெளித்தேன், நல்ல பலன்.
:-) ஆமாம். கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் தான் அப்படியே எழுதி விட்டேன். முன்பு போல் இல்லாமல் இப்போது அக்கா மாலா, கப்சி குடிப்பது மக்களிடையே நிறைய குறைந்திருக்கிறது, நல்ல விஷயம்.
Deleteவெந்தயம் அரைத்து தெளித்தீர்களா. புதிதாக இருக்கிறதே. விளக்கமாக கூற முடியுமா?
இரண்டு நாள் முன்பு வீடுத்தோட்டம் பற்றி வீடியோக்களில் பார்த்தேன், வீடுத்தோட்டம் பூச்சி தாக்குதலை பற்றியது, உங்கள் நியாபகம் வந்தது சிவா. அதற்கேற்றார் போல் உங்கள் பதிவு, அருமையான பூச்சிக்கொல்லி மருந்து. நல்ல மெஸேஜ்,நல்ல தகவல்.
ReplyDeleteநன்றி ராஜேஷ். முடிந்தால் pesticide residuals பற்றி வீடியோ கிடைத்தால் பாருங்கள். ரசாயன பூச்சிக்கொல்லி பற்றி உண்மை தெரியும்.
Deletegood message thanks siva
ReplyDeleteThanks
Deleteவணக்கம். நான் செல்வராஜ், பொள்ளாச்சியில் இருந்து. பதிவு கண்டேன். இதற்கு முன்பு நண்பருடைய சில பதிவுகளை படித்துள்ளேன். நானும் ஒரு பதிவை பதித்துள்ளேன். www.anbudane.blogspot.in. புதிய வீடு கட்டி வந்து சுமார் 2 வருடங்கள் ஆகிறது. மாடித் தோட்டமும் அமைத்துள்ளேன். வெகு நாட்களாகவே அதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தும் இன்னும் எழுத முடியவில்லை. நிறைய சோம்பேறித்தனம்.
Deleteபூச்சிகளை விரட்ட பல வழிகளில் முயன்றும் முழு வெற்றியில்லை. நிறைய செடிகளை பிடுங்கி எறிந்ததுண்டு. சுமார் 4 மாதங்கள் முன்பு Sathyam Bio P Ltd ன் பொள்ளாச்சி கிளையில் இருந்து Sakthi Triple Action என்ற இயற்கை பூச்சிக்கொல்லியை கால் லிட்டர் வாங்கி வந்தேன்.(ரூ 150). ஒரு லிட்டர் தண்ணீரில் 3 மிலி.யுடன் 3 மிலி. வேப்ப எண்ணை கலந்து தெளித்தேன். மிக ஆச்சர்யம். அசுவினி, மாவுபூச்சி போன்ற பூச்சிகள் அனைத்தும் பொடிப்பொடியாகிவிட்டன. நல்ல பலன் கிடைத்தது.
தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே. Sakthi Triple Action பற்றி இன்னும் விவரம் இருந்தால் கூறுங்கள். அதில் என்ன கலவை இருக்கிறது, இணையத்தில் கிடைக்குமா என்பது பற்றி. உங்கள் வீட்டுத்தோட்டம் பார்த்தேன். அருமை. விரிவாக படித்து பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி
DeleteSema
ReplyDelete:-)
Deleteவழக்கம் போல் பயனுள்ள தகவல் அக்கமாலா பற்றிய செய்தி அருமை எனக்கு எது என்ன பூச்சி என்று தெரியவில்லை அசுவினியை நீங்கள் படத்துடன் போட்டதால் தெரிந்து கெண்டேன்.என் தோட்டத்தில் வெள்ளையாய் மாவுபோல் பூச்சி எல்லா செடியையும் தாக்குது.மற்ற பூச்சிகளின் படங்களுடன் போட்டால் உதவியாய் இருக்கும்
ReplyDeleteநன்றி. நானும் இன்னும் பூச்சிக்களை பற்றி கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கும் பெரிதாய் பூச்சிகளின் பெயர் கூட தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொண்டு தெரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
Deleteதங்களின் பதிலுக்கு நன்றி. sakthi triple action பூச்சிக்கொல்லி பற்றிய விளக்க பிரசுரத்தை தங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். நிறுவனத்தின் தள முகவரி www.sathyambio.org
ReplyDeleteவிவரம் கிடைத்தது நண்பரே. நன்றி.
Deleteநன்றி மேடம். உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள். பெரிய முயற்சி என்று எல்லாம் நினைக்க வேண்டாம். நேரம் ஒதுக்கி ஒரு ஈடுபாட்டோடு செய்யுங்கள். எல்லாம் நன்றாய் வரும். ஏதும் சந்தேகம் இருந்தால் ஒரு மெயில் அனுப்புங்கள்.
ReplyDeleteAkkka mala is also useful as toilet cleaner. It has phosphoric acid which is good for cleaning.
ReplyDeleteI will take you idea and spray in my garden.
Rajan
Rajan
I never tried. It should work as a cleaner also :-) . Nice tips..
DeleteHello sir,
ReplyDeleteI am very interested in gardening after seeing your blog, I knew this blog from aval vikadan july 2015 edition. I lived in a rental house and i have a small bolcony, is it possible to grow some greens in this place. Please guide me sir. And your experience about cola drink is very shocking and also very useful message for our people.
Nice job sir.
Thanks madam.
DeleteIn the balcony how much sunlight it gets? (Duration?). We will need atleast 5 hrs of sunlight for vegetable. We can give a try with spinach if it gets less sunlight.
About cola drink, everyone knows that it got lot of chemicals and pesticides (including the company and govt). It is just one of the proof that pests run away for it if we spray (and govt allows it and we drink it :)
Akka mala has carbonic acid, citric acid , phosphoric acid, also little teeth dissolving hydrofluoric acid.. In European and Arab countries people take daily non veg as chicken mutton beef and they have to digest these flesh items by some means and they need to drink akka mala..or kapsi..ஆனானப் பட்ட ஆட்டுக்கறி மாட்டுக்கறியே அவிஞ்சி போகும் போது அய்யோ பாவம் அசுவுணி..அம்புட்டுத் தான்..Toilet cleaner aa ... Intha 4 acid combination certainly will work out.. Thanks Siva.
ReplyDeleteAs a green lover your blog more useful to me
நன்றி அண்ணா.
Delete//carbonic acid, citric acid , phosphoric acid, also little teeth dissolving hydrofluoric acid// இவ்வளவு தானா.. இன்னும் இருக்கா .. கொஞ்சம் Sulfuric acid-ம் கலந்தா இன்னும் ரிசல்ட் நல்ல இருக்கும் (மொத்தமா குடல் அவிஞ்சி போய் விடும் :))..
இலைவழி தெளிக்கப்படும் 4 சதவிகித யூரியா கரைசல் உளுந்துப் பயிருக்கு நேரடியாக தழைச்சத்தை அளித்து ஊட்டமளிக்கும். ஒரு பரிட்சாத்த முயற்சியாய் எங்கள் வீட்டுச் செம்பருத்திக்கு சுமார் 5 சதவிகித சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் கரைசலைத் தெளித்தேன். பல நாட்களாய் செடிகளைத் தின்று தீர்த்த எந்த மருந்துக்கும் கட்டுப்படாத வெள்ளைப்பேன்.. அசுவுணி எல்லாம் மாயமாய்ப் போச்சு.. இந்த உரத்திலும் 5 சதவிகித பாஸ்பாரிக் அமிலம் உள்ள படியால் அதன் புளிப்புச்சுவை பூச்சிகளை விரட்டி விடுகின்றன..முயற்சித்துப் பாருங்கள்.. சுமார் 50 கிராம் உரம் ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஸ்ப்ரே செய்யலாம்.. ஸ்பிரேயர் இல்லாத அன்பர்கள் வேப்பிலைக் கொத்தை கரைசலில் முக்கிக்
ReplyDeleteகையால் தெளிக்கலாம்..
இது எல்லாம் கெமிக்கல் ஐட்டம் போல தெரியுதே அண்ணா.. இதற்கு மாற்றாக இயற்கையாக ஏதும் உண்டா? தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
DeleteNice writing Siva, just a month before I started terrace garden now my palak amarathas plant are white color creatures like (முட்டை புச்சி) are found, I don't know the exact names of the species as I'm new to gardening.
ReplyDeleteFurther the even after a month the growth is not good as they said amarathas just need 1 month for maturing. Last week I put some urea for it.
What shall I do now?
Are you using Urea? hmm.. Not good.. What is your growing media mix? (IN terrace with grow bag or just on ground)?. WHat is the generic fertilizer you are using in your garden?
DeleteHi Siva,
DeleteThank you for the immediate reply.
Its coco peat given by the govt. Its in the terrace i have kept with ample daylight and green net to give shade in the afternoon.
I have added vermi compost initially along with Pseudomonas Verdi, phospho bacteria, Trichoderma and asosphylium mixture as per govt instructions.
Today i noticed lots of white மூட்டை பூச்சி & வெள்ளை சிலந்தி in it and white powder like under the leaves.
So i Googled today for solutions.
Just few days back i had planted some tomato, brinjal and pepper saplings given by the govt. in the grow bags.
Thank you in advance