நிறைய
பேர் தோட்டம் பற்றி கேட்கும் போதெல்லாம் என்ன காய்கறி போட்டிருக்கிறீர்கள் என்று
கேட்பார்கள். நான் ‘என்ன போடவில்லை’ என்று கேளுங்க என்பேன். இடம் இருக்குதோ,
இல்லையோ, நம்ம இடத்துக்கு வருதோ இல்லையோ, முடிந்த அளவுக்கு எல்லா காய்கறிகளையும்
வைக்க முயற்சிப்பது, அதில் ஓன்று இரண்டு சொதப்பினாலும் ஓரளவுக்கு வெற்றி பெறுவது
என்று தான் ஒவ்வொரு சீசனும் போவதுண்டு.
நான்
பொதுவாய் வருடத்தில் இரண்டு சீசன் வைத்து நடுவது உண்டு. ஓன்று ஜுனில் ஆரம்பித்து
அக்டோபர் வரை போகும் (சில செடிகள் அதையும் தாண்டி டிசம்பர் வரை போவதுண்டு). பிறகு
நவம்பரில் ஆரம்பித்து ஏப்ரல் வரை போகும். இதில் ஜூன் தான் முக்கிய சீசனாக
இருக்கும். கோடை முடிந்து வெயில் கொஞ்சமாய் குறைந்து செடி வளர ஏற்றதாய் இருக்கும்.
மழையை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. எங்கே பெய்கிறது :-(. அப்படி பெய்தால் செடிகளுக்கு நல்லது
தான். மே மாதம் தொடக்கத்தில் விதைத்து விட்டால், ஜூன் தொடக்கத்தில் நாற்று எல்லாம்
நட தயாராய் இருக்கும். நட்டி விட்டால் ஜூலை தொடக்கத்தில் இருந்து நமக்கு காய்கள்
கிடைக்க ஆரம்பிக்கும். ஒரு நான்கு மாதம் காய்கறி கடைக்கு போக தேவை இல்லை :-)
கடந்த
மூன்று ஆண்டுகளாக தோட்டம் போட்டாலும், இந்த ஜூன் சீசனை கொஞ்சம் விரிவாக, திட்டமிட்டு
முயற்சிக்க முடிவு செய்து ஆரம்பித்தேன். நண்பர்கள் நீங்கள் கொடுக்கும் ஊக்கமும்
ஒரு முக்கிய காரணம், இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று ஒரு ஆர்வத்தை
கொண்டு வந்திருக்கிறது.
முடிந்த
அளவுக்கு எல்லா காய்கறிகளையும் இந்த சீசனில் கொண்டு வந்துவிடும் ஒரு முடிவோடு
ஆரம்பித்தேன். Coir Pith
Based Terrace Garden ஆரம்பித்த
பிறகு இடப்பிரச்சனை கொஞ்சம் குறைந்திருக்கிறது. சில காய்கறிகளை மாடிக்கு ஷிப்ட்
செய்ததால் நினைத்த அளவுக்கு இடம் எடுக்க முடிந்தது.
முதலில்
இந்த சீசனின் பட்டியலை பார்க்கலாம்,
முக்கிய
அடிப்படை காய்கறிகள்
– தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டைக்காய், அவரை, சீனி அவரை (கொத்தவரை)
கொடிகள் – புடலை (குட்டை மற்றும் நீண்ட நாட்டு
வகை), பாகல் (ரெகுலர் மற்றும் மிதி பாகல்), பீர்க்கங்காய், சுரைக்காய், வெள்ளரி
இங்க்லீஷ்/கிழங்கு
வரை காய்கறிகள்
– கோஸ், காலி ஃப்ளவர், Broccoli,
கேரட், பீட்ரூட்,
குடை மிளகாய், பீன்ஸ்
கீரை
வகைகள் –
அரை கீரை, சிறு கீரை, பாலக் கீரை, பருப்புக் கீரை, புளிச்சக் கீரை (gongura), வெந்தயக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணி,
மணத்தக்காளி, கொத்தமல்லி, புதினா
இதர
வகைகள் –
தட்டை பயறு, Sweet Corn, இஞ்ஜி
இடம் திட்டமிடல் - எந்த இடத்தில எந்த செடியை வைக்கலாம் என்று. பட்டியல் தயாரானதும் ஒரு
பேப்பரில் தோட்டத்தில் இருக்கும் இடத்தை சின்னதாய் ஒரு மேப் போட்டு காய்கறியை ஒவ்வொரு
பகுதிக்கும் குறித்து, நம் பட்டியல் அதில் அடங்குகிறதா என்று பார்க்கலாம்.
அடங்கவில்லை என்றால், போன பதிவில் சொன்ன மாதிரி ஆக்கிரமிப்பு தான். அப்படியே ஒரு
எட்டு வீட்ட சுத்தி வந்தீங்கன்னா, எப்படியும்
தேவையான இடத்தை தேற்றி விடலாம்.
ஒவ்வொரு
செடியிலும் நமது தேவைக்கு ஏற்ற மாதிரி எத்தனை வேண்டும் என்று முடிவு செய்யணும். சில
நேரம் சில செடிகளை அளவுக்கு அதிகமாய் போட்டு (குறிப்பாய் கத்தரி, தக்காளி) கிலோ
கணக்கில் காய்த்து கொட்டும். ஆனால் மற்ற செடிகளுக்கு இடம் இல்லாமல் போய் விடும்.
இந்த
சீசனுக்கு கொடி வகைகள் நிறைய இருந்ததால், இருக்கும் ஒரு கொடி பத்தாது. மாடியில் போன
சீசனில் ஒரு கொடி அமைத்தும், வெயிலுக்கும், காற்றுக்கும் போட்ட எல்லாமே ஊற்றி
கொண்டது. அதை இந்த முறை கொஞ்சம் Shade Net வாங்கி
தற்காலிகமாய் ஒரு வேலி அமைத்து காற்றின் தாக்கத்தை கட்டுபடுத்தி தயார் செய்தேன். மூன்றாவதாக,
வீட்டின் முன்புறம் உள்ள முதல் பாதியில் வருடத்தின் ஒரு பாதி தான் வெயில் விழும்,
பிறகு நிழல் வந்து விடுகிறது. கொஞ்சம் உயரமாய் இருந்தால் வெயில் வரும். அதிலும்
ஒரு கொடி அமைக்க ரொம்ப நாளை நினைத்தது, அதையும் செய்து முடித்தேன். மொத்தம் மூன்று
கொடிகள் இந்த சீசனுக்கு தயார்.
நிலம்
தயார் படுத்துதல்
– நாம் தொடந்து நிலத்தில் விளைச்சல் எடுப்பதால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து
கொண்டே வரும். முதலில் நன்றாக ஒரு மண் வெட்டியில் கொத்தி கிளறி விட வேண்டும். நான்
நிறைய உரம் எல்லாம் போடுவதில்லை. எனக்கு தெரிந்த ஒரே உரம், இங்கே TNAU-ல் கிடைக்கும் மண்புழு உரம் தான். அதுவும்
வருடத்திற்கு இரு முறை வாங்கி ஒவ்வொரு பாதிக்கும் ஐந்து கிலோ போல்
போட்டு விடுவேன் (நிலம் தயார் செய்யும் போது).
இந்த
முறை சில மெயின் பாத்திகளில் புதிதாக மண்ணையே மாற்றி விட்டேன். தோட்டம்
ஆரம்பித்தபோது அந்த பாத்திகளில் அவ்வளவாய் செம்மண் போடவில்லை. அதனால் புதிதாய்
செம்மண் வாங்கி போட்டுவிட்டேன். அதனால் உரம் ஏதும் இந்த முறை போடவில்லை.
வழக்கம்
போல மாடி தோட்டத்திற்க்கு Coir
Pith, Vermi Compost, செம்மண
கலவை தான்.
அடுத்த
பதிவில், விதை தேர்வு பற்றி எழுதுகிறேன். முடிந்த அளவுக்கு இந்த தொடரை சீக்கிரம்
முடிக்க முயற்சிக்கிறேன் (இல்லாவிட்டால் அடுத்த சீசனே வந்து விடும்)
நண்பர்களில்
எத்தனை பேர் உங்கள் வீடுகளில் தோட்டம் போட்டிருகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்த சீசனில்,
அப்படி தோட்டம் போட்டிருக்கும் நண்பர்களின் தகவல்களையும் எதிர்பார்கிறேன். முடிந்தால்
படங்களுடன் உங்கள் தோட்டம் பற்றியும், நீங்கள்
கற்று கொண்ட விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றாய் தோட்டம் பற்றி
நிறைய கற்றுக் கொள்ளலாம்.
(தொடரும்)
Terrace - Spinach Garden |
Terrace - English Vegetables |
Front - for Creepers |
Terrace - ShareNet - for Creepers |
சிவா! இந்த மாவு பூச்சி தொல்லை தாங்கலை. கீரையில் கூட வருது. மிளகாயில் கருப்பாய் ஒரு பூச்சி. கத்திரியில் வெள்ளை பேஸ்ட் மாதிரி வந்து செடியே போச்சு. என்ன செய்ய? செடி வைக்கும் ஆசையே போச்சு. இன்னும் ஆர்கானிங் என்று பிடிவாதமாய் இருக்கிறேன். நீம் சக்தி என்று ஒன்று வாங்கி வேஸ்ட். எறும்பு பவுடர் லேசா இலைகள் மீது தூவியதில் செடி செம்பருத்தி அப்படியே இலை வாடிக் கொண்டு இருக்கு. செடியும் அவுட் என்று நினைக்கிறேன். வேப்பெண்ணை, லிக்விட் சோப் கலந்து தெளித்தும் ஒன்றும் பலனில்லை :-(
ReplyDeleteபிரச்சனை ஆரம்பிசிடுச்சா உஷா :-( .. ம்ம்ம்ம்..
Deleteபோன பருவத்தில் நானும் ரொம்ப போராடி தோல்வி தான் மிஞ்சியது. அவரை அவ்ளோ கொத்து கொத்தா பூத்திருந்திச்சி. வேப்பெண்ணை, பிறகு காதி சோப்பு கரைசல், அப்புறம் இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல். ஒண்ணுமே வேலைக்ககல. கடைசியில் சகிக்கமா செடி மொத்தமும் பிடிங்கி போட்டு விட்டேன்.
ஆனால் இந்த வருடம் நமது ப்ளாக் நண்பர் ஒருவர் பேசும் போது கோக் முயற்சி செய்து பார்க்க சொன்னார் (ஆமாம்... கோக் தான்) . செடி மொட்டு வைக்க ஆரம்பித்தவுடன் இந்த முறையும் உடனே பூச்சிகள் வந்து விட்டன. பூச்சி மேல கொஞ்சம் அப்படியே ராவா ஒரு தெளிப்பான் வச்சி அடிச்சி விட்ட, வேலை செய்யுது. இந்த முறை வெண்டைக்காய், அவரை ரெண்டுமே காப்பாதியாச்சு. தினமும் லேசா ஒரு தெளிப்பு.. மொட்டிலும், செடி குருதிலும் அடிச்சி பாருங்க.. முயற்சி பண்ணுங்க. :-) :-) :-) இப்போதைக்கு இது ஒன்னு தான் எனக்கு வேலை செய்யுது.
‘என்ன போடவில்லை’ சிவா.? அப்பாடி கேள்வி கேட்டாச்சு.ஒரு காய்கறியும் மிச்சமில்லை போல. உங்கள் திட்டமிடுதலும், பயிர்செய்வதற்கான மெனக்கெடலும் ,தேடலும் பிரமிக்க வைக்கிறது.மிகவும் பயனுள்ள பகிர்வை பகிர்ந்திருக்கிறீங்க. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி ப்ரியா :-)
Deleteஅருமையா இருக்கு ...உங்கள் பதிவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இன்னம் செய்யணும்னு ஆர்வமா இருக்கு.
ReplyDeleteநன்றி எழில்
Deleteஉங்க பிளானை நானும் பலோ பண்றதா இருக்கேன் நன்றி சிவா
ReplyDeleteநல்லது சுரேஷ். ஆரம்பிச்சா?
Deleteநன்றி ரூபன். நானும் போய் பார்த்து விட்டு வந்தேன்.
ReplyDelete