Friday, June 20, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – Carnation மற்றும் Dianthus

நம் தோட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு வரிசை. பொதுவாய் நான் காய்கறி செடிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. பூக்கள் என்று பார்த்தால், பிச்சிப் பூ (ஜாதி பூ), முல்லை, நாட்டு ரோஜா, மல்லி, சாமந்தி தவிர பெரிதாய் ஏதும் வைக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, நாம் எங்காவது கண்ணை கவரும் விதை பாக்கெட்டை பார்த்துவிட்டால் கை நம நம என்று அரிக்கும். அதை வாங்கி நமது கலெக்க்ஷனில் சேர்த்தால் தான் நிம்மதி. அப்படித் தான், ஒரு கண்காட்சியின் போதும் கண்ணை கவரும் நிறைய நம்தாரி (Namdhari Seeds – NS) பூ விதைகள் கலெக்ஷனில் வந்து சேர்ந்தது. அப்படி கிடைத்தது தான் இந்த Carnation மற்றும் Dianthus பூ விதைகள். விதை வாங்கிய பிறகு தான் எங்கே வைக்க என்று இடம் தேடுவது எல்லாம் நடக்கும்.வீட்டை சுற்றி நாம் தோட்டத்திற்க்கு இடம் கைப்பற்றுவதே பெரிய கதையை இருக்கும். ஒவ்வொரு செடியாய் வர வர, மண்வெட்டியை வைத்துக்கொண்டு நாமும் சுற்றி சுற்றி எங்கே பாத்தி எடுக்கலாம் என்று நடந்து கொண்டிபோம். ‘துணி காய போடும் இடத்தையாவது விட்டு வைங்க. என்னால மாடிக்கெல்லாம் தினமும் நடக்க முடியாது என்று பதறி போய் வீட்டில் ஓடி வருவாங்க. நாமும் முடிந்த அளவுக்கு கொஞ்சமாய் நடக்க மட்டும் இடம் விட்டு எப்படியும் ஒரு பாத்தி அதிலும் ரெடி செய்து விடுவோம்.    

Carnation மற்றும் Dianthus பூக்களை பற்றி கூற வேண்டும் என்றால், இரண்டுமே கிட்டதட்ட ஒரே இனம் தான், மிக சில வித்தியாசங்களை தவிர. Dianthus செடியின் இலைகள் கொஞ்சம் கரும்பச்சை நிறத்தில், புல் போல நீளமாய் இருக்கும். Carnation செடி இலை, இளம் பச்சை நிறத்தில், இலை கொஞ்சம் அகலமாய் இருக்கும். Dianthus செடி கொஞ்சம் கொடி போல நீளமாய் போகிறது. பூவில் பெரிதாய் வித்தியாசம் இல்லை.
Carnation Plant

Dianthus Plant


இந்த முறை, முதல் தடவையாய் plastic Container-ல் முயற்சிக்கலாம் என்று சின்ன தொட்டியில் இருந்து கொஞ்சம் பெரிய தொட்டி வரை வாங்கினேன். இவைகளை நர்சரிகளில் வாங்குவதை விட, சில Departmental Store-ல் விலை மிக குறைவாக கிடைக்கிறது (நான் இங்கே Kannan Departmental Store-ல் வாங்கினேன்). விலை பத்து ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் வரை ஆனது.


இரண்டு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பித்தன. விதைகள் கொஞ்சம் பெரிதாகவே இருப்பதால் நாம் தனி தனியாக Nursery Tray-ல் போடலாம். இரண்டுமே 100% முளைப்பு திறன் இருந்தது ஆச்சரியம்.


செடிகளுக்கு Coir Pith & Compost  கலவையையே தொட்டிகளில் எடுத்துக் கொண்டேன். செடிகள் கொஞ்சம் வளர்ந்ததும் plastic Container-ல் மாற்றி விட்டேன். எதிர்பார்த்ததை விட எளிதாகவே வளர்ந்தது. பூக்கள் நிறைய நிறத்தில், Double shaded எல்லாம் வந்திருக்கிறது. இதை இன்னும் பெரிய தொட்டிகளில் மாற்றி நன்றாக கொண்டு வர வேண்டும்.
நாம் கிளைகளை அவ்வப்போது வெட்டி விட, செடி நன்றாகவே தளிர்த்து வரும்.
   Carnation செடிகள் பொதுவாகவே எளிதாய் வரும். ரொம்ப எளிதாய் படர்ந்து விரியும். எளிதாய் கிளையை ஒடித்து வைத்து புதிய நாற்று தயாரிக்கலாம் (நான் இன்னும் முயற்சிக்கவில்லை).

காய்கறிகளுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பதால், இது போல நிறைய முயற்சிப்பது இல்லை. இந்த செடிகள் வெற்றிகரமாய் வந்திருப்பதை பார்க்கும் போது கொஞ்சம் தேடி, வீட்டைச் சுற்றி இன்னும் கொஞ்சம் இடத்தை ஆட்டையை போடலாம் என்று தான் தோன்றுகிறது (வீட்டைச் சுற்றி நடக்க கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தானே) J
இது வரை கிடைத்திருக்கும் வண்ணங்கள்இவை Carnation மலர்கள் கீழே உள்ளவைகள் Dianthus மலர்கள்,30 comments:

 1. ஆகா...! அட்டகாசம்...!

  உங்களின் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அழகுப்பூக்கள்! :)

  நான் கார்னேஷன் பூக்கள் வளர்த்ததில்லை,(இங்கே நர்சரிகளில் இம்மலர்ச்செடிகளைப் பார்த்தது போல் நினைவும் இல்லை, ஆனால் பூங்கொத்துகளில் கார்னேஷன் மலர்கள் வரும்) Dianthus பூக்கள் சிலபல முறைகள் வளர்த்திருக்கேன். வெள்ளை நிறம் மற்றும், டபுள் கலரில் இன்னொரு செடி. இந்த முறை வீடு மாற்றும்போதும் வெற்றிகரமாகக் கொண்டுவந்திருந்தேன், ஆனால் வெயில் சூடு தாங்காமல் கருகிப்போய்விட்டது. உங்க வீட்டில அருமையாக வருகிறது, பத்திரமாப் பாத்துக்குங்க! :) :)

  //(வீட்டைச் சுற்றி நடக்க கொஞ்சம் இடம் இருந்தால் போதும் தானே) // ஆஹா! எதேஷ்டம்! ;))
  ஊருக்கு வருகையில் கட்டாயம் உங்க தோட்டத்தைப் பார்க்கணும்ங்க..வரலாமா? :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி மஹி. இந்த பக்கம் வந்தீங்கன்னா தோட்டம் பக்கம் கட்டாயம் வாங்க.

   Dianthus வளர்தீங்களா? நல்லது. Carnation - முயற்சி செய்து பாருங்க. நல்லா எளிதா வருகிறது. கார்நெஷன் நன்றாக வெயில் தாங்கும் என்று நினைக்கிறேன். இந்த கோடையில் என் வீட்டு மாடியில் தான் வைத்திருக்கிறேன். நன்றாக தான் இருக்கிறது.

   //பத்திரமாப் பாத்துக்குங்க! // கண்டிப்பா :-)

   Delete
 3. என்னே ஒரு அழகு பூக்கள் எல்லாமே. பூமரங்களும் வேணும் சிவா.இன்னும் நல்ல பூக்களை வையுங்கள். ஆரம்பித்தாச்சு இனி தொடர்வீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ப்ரியா :-)

   எல்லாமே வைக்கலாம். இடம் வேணுமே ;-)

   இந்த வெற்றிக்கு அப்புறம் தொடரலாம் என்று தான் ஆசை. :-)

   Delete
 4. கூகுளில் வேறு ஒன்று தேடி வந்த நான், எதேச்சையாகத்தான் தங்கள் வலைப்பூ பக்கம் வந்தேன். ஒரு பதிவினைப் படித்த போது ஏற்பட்ட ஈர்ப்பால் நான் தேடியதை விட்டுவிட்டு ஐந்தாறு பதிவுகளை ஒரே மூச்சில் படித்துவிட்டேன். நேரம் அமையும் இன்னொரு நாளில் தங்கள் வலைப்பூ முழுதும் படிக்க உள்ளேன்.

  தங்கள் வலைப்பூவில் வீட்டுத்தோட்டம் / மாடித்தோட்டம் அமைக்க உள்ளவர்களுக்கு உபயோகமான பல விபரங்கள் உள்ளன.

  தங்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே. மற்ற பதிவுகளையும் படித்தால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். - நன்றி

   Delete
 5. தோட்டம் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள் நன்றிகள் என் தோட்டத்தில் வெள்ளரி பாகல் பூக்கிறது காய்ப்பதில்லை என்ன செய்யலாம்

  ReplyDelete
  Replies
  1. ஹாய் சுரேஷ். செடி ஆரோக்கியாமாய் தெரிகிறதா? இலை ஏதும் பழுப்பாய், வாடினது போல தெரிகிறதா? செடிக்கு சராசரியாக எவ்வளவு நேரம் வெயில் கிடைக்கும்? விதை எங்கே வாங்கினது? எப்போது வாங்கினது? கூற முடியுமா?

   Delete
  2. நன்றிகள் சிவா நாள் முழுவதும் வெயில்தான் செடி பசுமையாக இருக்கிறது நன்கு பூக்கிறது விதை பலசரக்குகடையில் வாங்கியது நல்ல விதை எங்கே வாங்கலாம்

   Delete
  3. செடி ஆரோக்கியமா நல்லா பூக்குது என்றால், என்னவென்று சரியா தெரியலையே. விதையின் தரம் கூட பிரச்னையாக இருக்கலாம். சத்து குறைவா இருக்கலாம். நிறைய காரணங்களை கூறலாம். கொஞ்சம் மண்புழு உரம் கிடைத்தால் போட்டு விடுங்கள் (உடனே பலன் கிடைக்க வாய்ப்பில்லை). முயற்சி செய்து பாருங்கள். நானும் இன்னும் கற்று கொண்டு தான் இருக்கிறேன்.

   விதை பற்றி அடுத்த பதிவில் விரிவாக கொடுக்கிறேன் சுரேஷ்

   Delete
 6. உங்கள் ஆர்வம் புன்னகையையும், உழைப்பு ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது - வழக்கம்போலவே. அனேகமாக ஒரு நாள் நாம் சந்திப்போம் என்றே நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே. கண்டிப்பாய் சந்திக்கலாம். :-)

   Delete
 7. என்னே ஒரு அழகு உங்க தோட்டத்தைப் பார்க்கணும்ங்க......

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா அரவிந்த். நீங்க எங்கே இருக்கீங்க இந்த பக்கம் வந்தீங்கன்னா சொல்லுங்க..

   Delete
 8. மலர்கள்..
  மனத்தைக் கவர்கிறது
  அழகோ அழகு....!
  இது போல் நான் எங்கள் வீட்டு தோட்டத்தில் நடக்க இடம் விட்டு சுற்றி சுற்றி போட்டது நினைவிற்கு வருகிறது. வாழ்த்துக்கள். உங்கள் தோட்ட மலர்கள் கண்களைக் கவர்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி காயத்ரி மேடம்.

   //இது போல் நான் எங்கள் வீட்டு தோட்டத்தில் நடக்க இடம் விட்டு சுற்றி சுற்றி போட்டது நினைவிற்கு வருகிறது// :-)) இந்தியாவிலா..இல்லை நீங்க இப்போ இருக்கிற இடத்திலா?

   Delete
 9. நானே சொல்லணுமுன்னு இருந்தேன் சிவா. வயித்துக்கு விருந்து உணவு தரும்போது கண்ணுக்கும் கொஞ்சம் தர முயற்சி செய்யுங்கன்னு! இப்பப் பாருங்க அழகழகான நிறங்களில் பூக்கள்!

  இந்த காரனேஷனும் டயந்தஸும் நம்ம வீட்டிலும் நிறையத்தான் வருது. ஆனால் குளிர் வந்து பனி விழுந்தவுடன். செடிகள் சோர்ந்துவிடும்:( இளவேனில்தான் பிடிக்குமாம். கோடையும் (எங்க பக்கத்துக் கோடை!) ஓக்கேதான். இதை ஸ்வீட் வில்லியம்ஸ்ன்னும் இங்கேசொல்றாங்க. பூத்து முடிச்சதும் கொத்தாப்பிடிச்சு நறுக்கி விட்டுட்டால் இன்னொரு ஈடும் பூக்கும். இப்படியே ஏழெட்டுமுறைகள்.

  காரநேஷன் இதே வகைதான் என்றாலும் பூக்கள் அடர்த்தியாவும் பெருசாவும் இருக்கும். கட் ஃப்ளவருக்கு நல்லது. பூச்சாடியில் வச்சால் கொஞ்சநாள் நிக்கும்.

  சொல்றேனே தவிர எனக்குப் பூக்களை பறிக்கப்பிடிக்காது. செடியிலேயே விட்டால் அதுக்கு ஆயுசு சிலநாட்கள் கூடுதலா
  இருக்கும்தானே?

  சாமிக்கும் பூ பறிச்சுப் போடமாட்டேன். பூக்கள் மலர்ந்தவுடன், நம்மூட்டு சாமிக்கு 'அங்கே இன்று பூத்தவை உமக்கே'ன்னு சொல்லிருவேன்:-)))

  ReplyDelete
  Replies
  1. முடிந்த அளவுக்கு எனக்கும் இன்னும் வண்ணம் சேர்க்க ஆசை தான் டீச்சர். இட பிரச்னை தான் நிறைய செய்ய முடிவதில்லை. மாடியில் முழுவதும் தோட்டம் அமைத்த பிறகு இது போல இன்னும் நிறைய பூக்கள் முயற்சி செய்ய நினைத்திருக்கிறேன்.

   உங்க ஊர்ல ஒரே பிரச்னை பனி தான். இல்லையா. அந்த வகையில் இங்கே நமக்கு வருடம் முழுதும் செடி வரும்.

   //காரநேஷன் இதே வகைதான் என்றாலும் பூக்கள் அடர்த்தியாவும் பெருசாவும் இருக்கும். கட் ஃப்ளவருக்கு நல்லது// சரி தான். ஆனால் இதையும் கார்நெஷன் என்று தான் கொடுத்தார்கள். நானும் பூங்கொத்துகளில் இருக்கும் பூக்கள் இன்னும் அடர்த்தியாக பெரிதாக இருக்க பார்திருக்க்றேன்.

   //சாமிக்கும் பூ பறிச்சுப் போடமாட்டேன். பூக்கள் மலர்ந்தவுடன், நம்மூட்டு சாமிக்கு 'அங்கே இன்று பூத்தவை உமக்கே'ன்னு சொல்லிருவேன்// அடடா. நல்லா இருக்கே.. ஏதோ ஒரு படத்தில் விஜய் பிள்ளையாரை தூக்கி ரோஜா தோட்டத்தில் வைத்து கொள்வார். அது போல நீங்களும் சாமியை ஒரு ஐந்து நிமிடம் ஷிப்ட் செஞ்சிருவீங்க போல :-)) . சூப்பர்.

   Delete
 10. சிவா !
  சளைக்காத தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
  இந்த பூ, எனக்குப் பிடித்த பூக்களில் ஒன்று. பெரிதாக நோய், பூச்சி பிரச்சனையற்றது. பனிப் பொழிவையும் தாக்குப்பிடித்து,தொடர்ந்து பலவருடங்கள் படர்ந்து கொண்டே இருக்கும். நான் தொட்டியில்
  வளர்த்தேன். இங்கு இரண்டை நிறங்களுடன் சுமார் 20 நிறப்பிரிவில் கிடைக்கிறது. ஓரங்கள், தொங்கு சாடிகளுக்கு அதிகம் இதை நடுகிறார்கள்.அதிக நீர் தேவையில்லை. பூ அலங்காரச் சாடிக்கான வெட்டுப்பூக்களுடன் சேர்த்து அழகுபடுத்த விரும்புவார்கள்.
  இதன் முற்றிய பூக்கள், செவ்வந்திப்பூப் போல் விதையாகும். அதை உடைத்தால் எள்ளுப் போல் விதைகள் இருக்கும். இவ்விதைகளை நட்டால் அதன் கன்றுகள் பூக்க 2 ஆண்டுகள் எடுப்பது, சற்று அதிகமே!
  நமது நாட்டு வெப்பநிலைக்கு இது நன்கு வளருமென நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி யோகன்.

   நீங்கள் கூறுவது உண்மை தான். நம்ம ஊர் வெப்பநிலைக்கு நன்றாக வருகிறது. நோய் தாக்குதல் வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

   நானும் பார்த்தேன். எள்ளு போல விதைகள். அதை போட்டால் இரண்டு ஆண்டுகள் எடுக்குமா.. இந்த விதைகள் உடனே பூத்து விட்டனவே. ஒரு வேலை Specially Treated-a இருக்குமோ? முடிந்தால் செடியில் இருந்து வரும் விதைகளையும் போட்டு பார்கிறேன்.

   Delete
 11. //செடிகளுக்கு Coir Pith & Compost கலவையையே தொட்டிகளில் எடுத்துக் கொண்டேன்//

  செம்மண் எதுவும் சேர்க்கவில்லையா? முன்னார் காய்கறிகளுக்கான தொட்டியில் செம்மண்ணும் சேர்ப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்?

  செம்மண் இல்லாமலும் செடிகள் நன்றாக வளருமா?

  ReplyDelete
  Replies
  1. இந்த கலவையில் செம்மண் அளவு கொஞ்சமாய் சேர்த்திருந்தேன். நிறைய பேர் வெறும் Coir Pith & Compost மட்டும் கலந்தும் செய்கிறார்கள். நான் செம்மண் கலந்தேன். செம்மண் செடிக்கு தேவையான மினரல் போன்ற சத்துக்களை கொடுக்க உதவும்.

   Delete
 12. அழகானபூக்கள். கண்களுக்கு விருந்து.

  ReplyDelete