Monday, May 19, 2014

தோட்ட உலா – மே 2014 (Summer Special)



மா
சம்மர் ஸ்பெஷல் என்றால் மாம்பழம் இல்லாமலா?. எங்க வீட்டு மாமரம் மூன்றாவது வருடம் காய்கிறது. முதல் வருடம் வெறும் மூன்று காய் என்று ஆரம்பித்து, போன வருடம் ஒரு பதினைந்து காய்த்தது. இந்த வருடம் ஐம்பதை தாண்டி விட்டது. இவ்வளவுக்கும் இந்த வருடம் குறைந்தது ஒரு நூறு பிஞ்சாவது உதிர்ந்து இருக்கும். அதையும் தாண்டி இவ்வளவு காய்திருப்பது ஆச்சரியம் தான்.

எல்லா வருடமும் ஏதாவது ஒரு ஜீவன் வந்து எங்களுக்கு ஒரு மாங்காய் கூட மிச்சம் வைக்காமல் மொத்தமாய் திருடி போய்விடும். கடுப்பில் வெளியே போன மொத்த கிளையையும் வெட்டி விட்டேன். இந்த முறை கிட்டதட்ட எல்லாமே மேலேயே காய்த்து விட்டது. கீழே காயத்த சில காய்களையும் சீக்கிரமே பறித்து ஊறுகாய் போட்டு விட்டோம்.

மாங்காய் எல்லாம் நல்ல திரட்சியாய் வந்திருக்கிறது. இப்போது தினமும் எப்படியும் இரண்டு, மூன்று பழங்கள் தவறாமல் கிடைக்கிறது. கொஞ்சம் இனிப்பு குறைவு தான் (புளிப்பு சுத்தமாய் கிடையாது). வெளியே கல் வைத்து பழுக்க வைத்து வரும் பழங்களுக்கு (அதில் பாதி புளிக்க தான் செய்கிறது), நம்ம வீட்டு தோட்டத்திலேயே எந்த வித ரசாயனமும் இல்லாமல் கிடைப்பது நல்லது தானே.   





மாதுளை

இந்த முறை மாதுளை ஒரு பூச்சி தாக்குதலில் கொஞ்சம் திணறி விட்டது. பெரும் போராட்டதிற்க்கு பிறகு விரட்டி விட்டிருக்கிறேன். White Fly (சின்னதாய், வெள்ளையாய் கொசு மாதிரி) கூட்டம் கூட்டமாய் வந்து இலைக்கு அடியில் பவுடர் மாதிரி முட்டை இட்டு செடியை ஒரு வழி ஆக்கி விட்டது. நானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். வேப்பிலை சாறு, சோப்பு கரைசல், நீரை பீச்சி அடிப்பது என்று. ஒன்றும் வேலைக்காகவில்லை. இலை எல்லாம் உயிரற்று போவதால் மரத்தின் காய்ப்பு திறன் ரொம்பவே குறைந்து விடும்.

கடைசியாய், ஒரு பழைய காலண்டர் அட்டையை எடுத்து, அதை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி, இறுக்கமாய் ஸ்டேப்ளர் பின் வைத்து அடித்து ஒரு பளபளப்பான அட்டையாக மாற்றி கொண்டேன். பிடிக்காக நம் கை போகும் அளவுக்கு வெட்டி கொண்டேன். கொஞ்சம் தேங்காய் எண்ணை வாங்கி, இரண்டு பக்கமும் ஒரு மூடி எண்ணையை (தேங்காய் எண்ணை அல்லது கிடைக்கும் எதாவது ஒரு எண்ணை) ஊற்றி நன்றாக படரும் படி தேய்த்து விட்டால் ஆயுதம் தயார். லேசாய் பூச்சி அடைந்து இருக்கும் கிளையை ஆட்டி விட்டு, எண்ணை தடவியை அட்டையை சாமரம் வீசுவது போல அசைத்தால் முக்கால் வாசி பூச்சிகள் அதில் ஒட்டி மடிந்து விடும். ஒரு ஐந்து நாள் தொடர்ச்சியாய் இதை சோம்பல் பார்க்காமல் செய்தேன். இப்போது மிஞ்சிய ஒன்றிரண்டு பூச்சிகளும் இடத்தை காலி செய்து விட்டு போய் விட்டன. ஆர்கானிக் வழியில், சில நேரம் இது போல வன்முறை தான் கை கொடுக்கிறது. இப்போது நன்றாக காய்த்திருக்குகிறது. வழக்கம் போல பழம் ஒவ்வொன்றும் 400 – 500 கிராம் அளவில் வந்திருக்கிறது. இந்த வருடம் அதிகபட்சமாக ஒரு காய் 550  கிராம் வந்திருகிறது. இரண்டு காய் வைத்தால், ஒரு கிலோ வந்து விடுகிறது. 

Google Image

Google Image



மாதுளையில் பிஞ்சி பிடித்து கொஞ்சம் பெரிதானதும் அதை சுற்றி துணி ஒன்றை கட்டி விடுவது அவசியம். இல்லாவிட்டால் அணில் வந்து கடித்து சாப்பிட்டு விடுகிறது. பிஞ்சி காயாய் இருந்தாலும் கூட விட்டு வைப்பதில்லை. துணி கட்டி விட்டால் அது கண்டு கொள்வதில்லை. துணியை காயை சுற்றி ரொம்ப இருக்கமாய் கட்ட கூடாது. காய் பெரிதாவதற்க்கு ஏற்றால் போல் கொஞ்சம் தளர்வாய் கட்ட வேண்டும்.  




இப்போது இன்னொரு மாதுளை நாற்றும் வைத்து விட்டிருக்கிறேன். ஊரில் இருந்து கொண்டு வந்த அதே மாதுளை வகை தான் (சிவப்பு கிடையாது. பச்சை/மஞ்சள்). நன்றாக வந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வருடத்தில் பலன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 


முருங்கை

இந்த சீசனில் காய்க்காத முருங்கையே இல்லை எனலாம். சரியான மழை இல்லாத காரணத்தினாலோ என்னவோ, இத்து போன மரம் கூட காய்த்து கொட்டிவிட்டது. இதில் எங்கள் வீட்டு மரமும் அடக்கம். வீட்டில் முருங்கை மரம் என்று ஒன்றும் பெரிதாய் கிடையாது. முன்பு வெட்டி விட்ட மரத்தில் இருந்து அப்போ அப்போ சில துளிர்கள் தரையில் இருந்து தளிர்த்து வரும். நாங்களும் கடந்த இரண்டு வருடமாய் அதில் இருந்தே தேவையான கீரையை பறித்து வருகிறோம். இந்த முறை ஒரு தளிர் மட்டும் கொஞ்சம் வளர்ந்து விட்டது. அந்த ஒற்றை கொம்பு கொஞ்சம் மரம் மாதிரி வளர்ந்து, பூத்து காய்த்தும் விட்டது. அதுவும் அளவுக்கு அதிகமாகவே. 




சீத்தா, எலுமிச்சை & கொய்யா   

கோடை சீசன் என்றால் சுவிச் போட்ட மாதிரி சீத்தா தளிர்த்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து விடும். எலுமிச்சையும் அதே போல தான். ஆனால் எலுமிச்சை ஏப்ரல்-மே –யில் காய் கொடுத்தால் வெயிலுக்கு ஜூஸ் போட நன்றாக இருக்கும். ஆனால் இது எப்பவுமே ஜுன்-ஜூலை தான் காய் ரெடியாகிறது.




இந்த கோடையில், நாட்டு கொய்யா (சிவப்பு கொய்யா) நன்றாக பிஞ்சி பிடித்திருக்கிறது. போன முறை சில பிஞ்சிகள் மேல் சொரசொரப்பாய் புள்ளிகள் போல வந்து விட்டது. வேப்பம் புண்ணாக்கு வைக்க தவறிவிட்டேன். இந்த முறை தொடக்கத்திலேயே வைத்து விட்டேன். நான் பார்த்ததில் வேப்பம் புண்ணாக்கு கொய்யாவிலும் மாதுளையிலும் நன்றாகவே வேலைசெய்கிறது. ஒரு பக்கெட்டில் பாதி அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு, வேப்பம் புண்ணாக்கு இரண்டு கிலோ அளவுக்கு எடுத்து நன்றாக கரைத்து, அந்த கரைசலை மரத்திற்கு ஊற்றி விடுவேன். பூச்சி தொல்லை இல்லாத மற்ற பிரச்சனைகள் நிறைய இதனால் சரி ஆகி இருக்கிறது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்படி ஊற்றி விடலாம். நல்ல பலன் இருக்கிறது. 




முல்லை

கோடை சீசன் என்றால் முல்லை சரியாக பூக்கிறது. வழக்கமான பிச்சி பூ (ஜாதி பூ) ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தான் பூக்கும். வீட்டில் முல்லை கொடியும் இருக்கும் பட்சத்தில் நமக்கு கோடையில் பூ கிடைத்துக் கொண்டிருக்கும்.

முல்லை இந்த வருடம் தான் நன்றாக பூக்க ஆரம்பித்திருக்கிறது. சீசன் முடிந்தவுடன் கிளைகளை கொஞ்சம் வெட்டி விடுவது அவசியம். முல்லை கொடிக்கும் சரி, பிச்சி பூ செடிக்கும் சரி பூச்சி தாக்குதலோ, வேறு எந்த கவனமும் தேவை இல்லை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொஞ்சம் உரம் (மண்புழு உரம்) வைத்தால் போதுமானதாக இருக்கிறது.     







நீட்ட புடலை

இந்த பதிவில் ஒரே ஒரு காய்கறியை மட்டும் பார்த்து விடலாம். நீண்ட காலமாய் நீட்ட புடலை (நாட்டு புடலை) கொண்டு வர முயற்சித்து ஒன்றும் வரவில்லை. சரியான விதை கிடைக்கவில்லை. அப்படி நீட்ட புடலை என்று நம் தலையில் கட்டிய விதையும் கடைசியில் குட்டை புடலையை தான் கொடுக்கும். இந்த முறை கொடி காய்கறிகள் (புடலை, பாகல்) போட்டதில் ஏகப்பட்ட குழப்பம். கொஞ்சம் சரியாய் வரவில்லை. எங்கே வாங்கின விதையை போட்டேன் என்பதிலும் குழப்பம். சரியாய் குறித்துக் கொள்ளவில்லை. அப்போ அப்போ எதாவது காய்க்கும். கிடைத்தவரை லாபம் என்று பறித்துக் கொள்வோம். ஒரு நாள் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீளமாய் ஒரு பிஞ்சி ஓன்று இருந்தது. யோசித்து பார்த்ததில் நீட்ட புடலையாய் தான் இருக்கும் என்று சின்னதாய் ஒரு கல்லை கட்டி விட்டேன். அடுத்ததாய் ஒரு பிஞ்சும் வந்து இரண்டு காய்கள் கிடைத்தது. இந்த முறை நாட்டு விதை (வானகம் ஸ்டாலில் வாங்கியது), இப்போது தான் முளைத்து இருக்கிறது. நன்றாக வரும் என்று நினைக்கிறேன். வந்தால் ‘என் வீட்டுத் தோட்டத்தில் காய்கறியில் தனி பதிவை போட்டுடலாம்.                              







20 comments:

  1. ஹைய்யோ!!!! கோபால் இந்தப் படங்களைப் பார்த்துட்டு, கட்டாயம் உங்க வீட்டுக்கு விஸிட் அடிக்கணுமுன்னு தீர்மானமாச் சொல்லிட்டார்:-)

    பெரிய தோட்டக்காரரா இருக்கீங்கன்னு அவருக்கு வியப்பு!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர். சார்கிட்டேயும் தோட்டத்தை காட்டியாச்சா. ரொம்ப சந்தோசம். கண்டிப்பா கோவைக்கு ஒரு டிரிப் போடுங்க. ரொம்ப சந்தோஷ படுவேன்.

      Delete
  2. படங்களுடன் தங்கள் பதிவு
    தங்கள் தோட்டத்தில் உங்களுடன் உலவிய உணர்வைத் தந்தது
    பயனுள்ள பல தகவல்களுடன் கூடிய பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமைங்க! பதிவைப் படித்ததும் உங்களுடன் தோட்டத்தில் உலா வந்தது போன்ற ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  4. தொட்டியில் போட்டு பந்தலில் ஏற்றிவிட்டாலும் எங்கள் வீட்டு புடலை காய் வைக்கவில்லை. பூ மட்டுமே வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. புடலை எளிதாக காய்க்கணுமே. விதை எங்கே வாங்கினீங்க?. பழைய விதையா இருக்குமோ?

      Delete
  5. எல்லாம் மிக அருமை !!! தோட்ட விஷயங்கள் நிறைய சொல்லித்தரீங்க .மிக்க நன்றி .
    வாயில்லா ஜீவன்கள் அனுபவித்து போக நிறைந்த அறுவடை மாங்காயில் ..பார்க்க சந்தோஷமாக இருக்கு .
    எங்களுக்கு கிடைத்த கொஞ்ச வெயில் காலத்துகேற்ற செடி வகைகளை நானும் போட்டிருக்கேன் .
    மிக அருமையான பதிவு .
    நான் ரோஜா செடிக்கு கீழேயுள்ள லிங்கில் சொன்னபடி செய்தேன் .நீங்களும் முயற்சிதுபாருங்க ..
    அதில் சொன்ன படி லேடிபக்ஸ் ஒரு இடத்தில இருந்து பெட்டியில் எடுத்து வந்து எங்க allotment தோட்டத்தில் ரிலீஸ்
    செய்தோம் ..மிக நல்ல பலன் கிடைத்தது .ladybugs are best beneficial insects ..

    http://www.ghorganics.com/whiteflies.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்ஜலின். வாயில்ல ஜீவன் இல்லை. எல்லாம் தெருவில் நடந்து போகும் மக்கள் தான். நாம கஷ்டபட்டு பார்த்து பார்த்து வளர்த்து கொண்டிருப்போம். ஒரு காய் கூட விட்டு வைக்காமல் மொத்தமாய் மொட்டை அடித்து போவதில் அப்படி என்ன சந்தோசமோ.. வாயில்ல ஜீவன் பற்றி கேட்டுடீங்க. அடுத்த பதிவில் அதையும் விலாவாரியாய் சொல்லிடறேன்.

      லேடிபக்ஸ் பற்றிய தகவல் ரொம்ப ஆச்சரியம். ஏதும் விரிவாக பதிவு ஏதும் எழுதி இருக்கிறீர்களா? அது விட்டால் அப்படியே ஒரே இடத்தில தங்குமா? இங்கே அதெல்லாம் வேலை செய்யுமா ?

      Delete
  6. பயனுள்ள பதிவுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல பயனுள்ள செய்திகள் தெரிவிப்பதற்கு நன்றிகள் பல

    ReplyDelete
  8. Dear Siva - Thanks a lot for your updates, I have to learn a lot from you. I came across your post accidentally through a google search, now I have bookmarked it for regular visit. Can you let me know where I can get the 'veppam punnakku' in Coimbatore? I am living in Vadavalli. Also, from your posts, I assume your house is somewhere near Vadavalli, let me know if I can visit you based on your convenience.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your words Hari. I sent a detailed mail to your mail id.

      Regarding 'Veppam Punnakku', I am buying from a Ura kadai in Annur Only. There is a shop near the Market (Santhai), just Opp to the entrance. The price is around Rs.18/kg.

      Delete
  9. படங்களைப் பார்க்கும்போது ஊர்ஞாபகம் வந்துவிட்டது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மா மரத்தை சொல்றீங்களா :-)

      Delete
  10. pudalangai nandraga ullathu enn vettu thotathil kuttaiyagathan valaruthu
    vinoj

    ReplyDelete
    Replies
    1. ithu naaddul pudalai.. length-a thaan varum. ippo ellame kuddai ragam than varuthu..

      Delete
  11. shiva r u in coimbatore, address pls.

    ReplyDelete