Monday, May 5, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – சாம்பல் பூசணி



ஒரு பக்கம், நிறைய திட்டமிட்டு, நிறைய கவனம் செலுத்தி, உரம் எல்லாம் போட்டு கொண்டு வந்தாலும் சின்னதாய் ஒரு பூச்சி கூட்டம் வந்து எல்லாவற்றையும் காலி செய்து போய்விடும் (இந்த முறை அவரைக்கு இந்த நிலை தான் ஆனது). இன்னொரு பக்கம், எந்த கவனமும் இல்லாமல் அதுவாகவே வளர்ந்து பக்காவாய் பலன் கொடுக்கும்.

தோட்டத்தில் வருடத்திற்கு ஒரு செடி எப்படியும் தானாகவே வளர்ந்து பலன் கொடுத்து விடுகிறது. போன முறை, ஒரு தர்பூசணி செடியை பற்றி எழுதி இருந்தேன். இந்த வருடம், ஒரு சாம்பல் பூசணி (Ash Gourd).
நாங்கள் சாம்பல் பூசணியை பயன்படுத்தியது கிடையாது. மஞ்சள் பூசணி மட்டும் ஒரு முறை எதிர்வீட்டில் இருந்து, தோட்டத்தில் காய்த்ததாக கொடுத்தார்கள். இந்த செடி முளைத்து வந்த போது, அந்த விதை விழுந்து மஞ்சள் பூசணி என்று வருகிறது என்று நினைத்திருந்தேன்

இந்த மாதிரி கொடி வளர்ப்பதில் ஒரு பிரச்னை, இதற்கு நிறைய இடம் தேவை. கன்னா பின்னாவென்று கிளை விட்டு கிடைத்த இடம் எல்லாம் அதன் கிளைகளை பரப்பி விடும். அதனால் நான் இதை இதுவரை பட்டியலில் சேர்த்தது கிடையாது. இந்த செடி தானாய் வளர்ந்தததால், இரண்டு இலை வந்தபோதே ரொம்ப செழிப்பை தெரிந்ததால் விட்டுவிட்டேன்.

தவிர, தக்காளி, மிளகாய் பாத்தி எல்லாம் முடியும் தருவாயில் இருந்ததால் அதில் படர்ந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டேன். செடி, படத்தில் பார்ப்பதை விட இன்னும் ஒரு மடங்கு (இன்னொரு பக்க கிளையோடு) இருந்தது. எங்க வீட்டு நாய் குட்டி பாதி செடியை அதற்கு விளையாட ஆட்டையை போட்டு விட்டது (பிறகு வாங்கிய அடியில் மிச்ச பாதியை விட்டுவிட்டது)

பூசணிகாய், பலூன் மாதிரி தான், தினமும் ஒரு வளர்ச்சி. பிஞ்சி பிடித்து இரண்டு வாரத்தில் காய் பறிக்கும் அளவுக்கு வந்து விட்டது. ஒரே ஒரு காய் தான் பிடித்திருந்தது. முற்றிவிட கூடாது என்பதால் கொஞ்சம் சீக்கிரமே பறித்து விட்டேன். இன்னும் கொஞ்சம் விட்டிருக்கலாம். பூசணியின் மேலே வெள்ளையாய் ஒரு படலம் இருக்கிறது. தொட்டால் கையில் லேசாய் குத்துகிறது (கரும்பின் நுனியில் இருப்பது போல). அந்த வெள்ளை படலம் போகும் வரை காயை விடலாம் என்றார் எதிர்வீட்டில் இருப்பவர். இருந்தாலும் ஒரே ஒரு காய் என்பதால், நல்ல தரம் வந்ததும் பறித்து விட்டேன். எடை, ஏழு கிலோ இருந்தது. வழக்கம் போல அக்கம் பக்கம் எல்லோருக்கும் கொடுத்தோம். நாங்களும் இரண்டு மூன்று நாள் சாம்பார் வைத்துக் கொண்டோம். நமக்கு தோட்டம் கொடுத்த இந்த வருடத்தின் போனஸ் இது தான்.













 

28 comments:

  1. பகிர்ந்து கொண்டது சிறப்போ சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. :) எதிர்பாராத சந்தோஷங்கள் என்றும் இனிமைதான்! :)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மஹி. அதுவாகவே வளர்ந்து பலன் கொடுக்கும் போது ஒரு சந்தோசம் தான் :-)

      Delete
  3. நல்ல போனஸ்தான் கிடைத்திருக்கு.
    இதை எங்க ஊருல நீற்றுப்பூசணி (நீறு+பூத்த+பூசணி), நீத்துப்பூசணி எனச்சொல்வார்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா. இதை தடியங்கா என்றும் எங்க ஊர்ல சொல்லுவாங்க :-)

      Delete
  4. நல்ல பதிவு. நன்றி

    ReplyDelete
  5. நாங்கள் வளர்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இடம் இருந்தால் வளர்க்கலாம் அரவிந்த். அவ்வளவாய் கவனம் ஏதும் தேவை இல்லை. நோய் தாக்குதலும் இல்லை. முடிந்தால் முயற்சித்து பாருங்க

      Delete
  6. எனக்கும் ஒரு பங்கு அனுப்பக்கூடாதா? ஓலன் செஞ்சு ஜமாய்ச்சு இருக்கலாமே!

    பார்க்கவே எவ்ளோ அழகா இருக்கு, பாருங்க!!!

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிடலாம் டீச்சர் :-) . முகவரி கொடுத்திருங்க.. 'ஓலன்'-ஆ அது என்ன?
      இப்போ மறுபடி ஒரு பிஞ்சி மொட்டு விட்டிருக்கு. எங்க நாய்குட்டி வாய்க்கு தப்பினால் இன்னொரு காய் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

      Delete
  7. பார்க்க மிக சந்தோஷமாக இருக்குங்க சிவா .
    சென்ற வருடம் நான் விதை போட்டு நன்கு வளர்ந்து வந்த நேரம் மீண்டும் குளிர் காலம் வந்து விட்டது
    மனசுக்கு கவலையாக போச்சு ..குறுகிய கால பயிர்கள் தான் இம்முறை போட்டிருக்கேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி ஏஞ்ஜெலின்.
      இங்கே நமக்கு அந்த பிரச்னை இல்லை. வருடம் முழுவதும் ஒரே கால நிலை தான்.. வெயில்...வெயில்.. வெயில்

      குறுகிய கால பயிர் என்றால், என்ன என்ன?

      Delete
  8. சென்னையில் ஆஸ்பாரகஸ் கிடைக்குதா சிவா ..அந்த விதை கிடைக்கும் இடம் தகவல் தர முடியுமா

    ReplyDelete
    Replies
    1. Please Try Biocarve seeds website

      Delete
    2. தகவலுக்கு நன்றி அரவிந்த்.

      ஆமாம் ஏஞ்ஜெலின். இப்போதெல்லாம் இணையத்திலேயே எல்லா விதைகளும் கிடைக்கிறது. Biocarve-ல் இந்த வாரம் தான் நானும் பீட்ரூட், கேரட் என்று ஒரு செட் ஆர்டர் செய்திருக்கிறேன். நீங்களும் பாருங்க. Omaxe website-ஐயும பாருங்க.

      Delete
    3. @Aravind and Siva

      Thanks for the information .one of my friend asked me about this asparagus ..

      Delete
    4. Hello siva ,

      Can you give your phone number, I want to see your garden.

      Thanks

      Delete
    5. Hi Laskmi, please send a mail to gsivaraja@gmail.com. I will send my contact number. Thanks for checking

      Delete
  9. பார்க்க பார்க்க ஆசையா இருக்கு..நம்மளும் வீட்டுத்தோட்டம் அமைக்கனும்னு..முடியலயே.. உங்களோட போஸ்ட் பார்க்கிறதே எனக்கு மகிழ்ச்சி.. நன்றிகளுடன் யாசர்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாசர். நீங்க எந்த ஊரில்/நாட்டில் இருக்கீங்க ? மாடி தோட்டம் வாய்ப்பும் இல்லையா?

      Delete
  10. ஓ! இது தான் சாம்பல் பூசனியா? தொட்டியில் இரு செடிகள் வளர்ந்துள்ளன ஆனால் காய்பிடிக்குமா என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. தொட்டியில் இருந்து வளர்கிறதா. பரவாயில்லை. அது தரையில் படர இடம் இருக்கிறது தானே. நிறைய காய் பிடிக்கவில்லை எனக்கு. சில பிஞ்சிலேயே வெம்பி விடும். ஓன்று இரண்டு கிடைத்தாலும் சந்தோசம் தான். பூவின் அடியிலேயே பிஞ்சி இருக்கும். அதை பார்த்தாலே காய் வருமா என்று தெரிந்து விடும். பாருங்கள்.

      Delete
  11. நன்றாக வளர்ந்து காய்த்திருக்கிறதே....சூப்பர்

    ReplyDelete
  12. சிவா!
    நீங்கள் கலக்குகிறீர்கள். செடிகொடியும் உங்களை வெகுவாக மதிக்கின்றன. அதனாலேயே உங்கள் ஊக்கத்துக்கு ஒரு காயாவது தருகின்றன.
    இதை இலங்கையில் பிரியசகி கூறுவதுபோல் நீற்றுப்பூசணி என்போம். சாம்பாருக்குப் போடுவோம். இதைக் கறியாகச் சமைப்பது மிகக் குறைவு. அடுத்த தேவை "திருஸ்டி"க்குக் கட்டுதல், வெட்டுதல்.
    இங்கு கிடைக்கிறது கிலோ 3.90 யூரோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன் :-)

      //அதனாலேயே உங்கள் ஊக்கத்துக்கு ஒரு காயாவது தருகின்றன// எப்படியும் காய் கொடுத்து விடுகிறது :-)) சந்தோசம் தான்..இப்போது இங்கே TNAU Seed pack-ல் இந்த செடி விதையும் கிடைக்கிறது. வளர்க்க இடம் தான் நிறைய வேண்டும்.

      இங்கே கிலோ இருபந்தைந்து ரூபாய் ஆகிறது. உணவில் சேர்த்தல் ரொம்ப நல்லது என்கிறார்கள்.

      ஆமாம். 'திருஷ்டிக்கு' முக்கிய காயாக இருக்கிறது. எது நிறைய காய்க்கிறதோ, அதை விற்க முடிவதில்லையோ, இப்படி ஒரு வழியை கண்டு பிடித்து வியாபாரம் செய்ய வேண்டியது தான். :-))

      Delete