Sunday, March 22, 2015

தோட்ட உலா – மார்ச் 2015



முதலில் முன்பு குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாய் வருமா என்று ஒரு செடியை பற்றி சொல்லி இருந்தேன் இல்லையா. அந்த செடி அருமையாய் காய்த்தது. படம் கீழே,


மா
கோடை ஆரம்பித்து விட்டது. மார்ச்சிலேயே வெயில் கொடுமைக்கு அடிக்கிறது. கோவை என்றால் குளுமை என்ற காலம் எல்லாம் போய்விட்டது. இருந்தாலும் சென்னையயோ, நெல்லையையோ ஒப்பிட்டு பார்த்தால் கோவை கொஞ்சம் குளுமையாகவே இருக்கிறது (ஒரு முறை திருநெல்வேலிக்கு போய் விட்டு வந்தால் கோவை எவ்ளோ நல்லா இருக்கு என்று தோன்றும்).

தோட்டத்தில் கோடை ஸ்பெஷல் என்றால் மா தான். போன வருடத்தில் இருந்து முழு வீச்சில் காய்க்க ஆரம்பித்திருக்கும் மரம் இந்த முறையும் ஏமாற்றவில்லை (போன வருட விளைச்சல் கீழே.. கண்ணு போட்ராதிய என்ன !! ).

2013 Yield

ஆனால் இந்த முறை ரொம்பவே தாமதமாக தான் பூத்திருக்கிறது. கிட்டதட்ட இங்கே பார்த்ததில் எல்லா மரமும் இப்போது தான் பூத்து பிஞ்சே பிடித்திருக்கிறது. ஏப்ரல் மே-யில் மாம்பழம் கிடைப்பது கடினம் தான். ஜூன்-ஜூலை தான் பழம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.




இருந்தாலும் எங்க மாமரம் எப்பவுமே சாம்பிளுக்கு ஒரு நாலு காய் முன்னமே காய்த்து விடும். பிறகு ரெண்டு மாதம் கழித்து தான் மொத்தமாய் பூக்கும். அதனால் மே மாதத்தில் நாலு பழம் சாப்பிட்டுக்கலாம்.


ரோஜாக்கள்

தோட்டம் ஆரம்பித்த போது நிறைய ரோஜா செடிகள் வைத்திருந்தேன். நிறைய ஹைப்ரிட் செடிகள் சரியாய் வரவில்லை. வாங்கி வைத்த உடனே தளிர்த்து நன்றாக பூக்கும். அதன் பிறகு எதாவது பிரச்னை வந்து செடி நரங்கி போய் விடும். வைத்த நாட்டு ரோஜா செடிகளை (பன்னீர் ரோஜாக்கள்) கூட சரியாக் கவனிக்க முடியாமல் ஒவ்வொன்றாய் குறைந்து கடைசியாய் ஒரு இரண்டு செடிகள் மட்டும் கவனிப்பே இல்லாமல் நின்று கொண்டிருந்தது.

நமது ப்ளாக் நண்பர் ஒருவர் பழைய பன்னீர் ரோஜா படங்களை பார்த்து ‘எப்படி நீங்கள் அதை கவனிக்காமல் இழக்கலாம்’ என்று கவலைப்பட்டார். அதன் பிறகு இப்போது இருக்கும் இரண்டு செடிகளில் இருந்து குச்சி ஒடித்து வைத்து புதிதாய் கொண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறேன்.  
 
இந்த முறை ஊரில் இருந்து இரண்டு பன்னீர் ரோஜா செடிகள் வாங்கி வந்து வைத்திருக்கிறேன். இப்போது வரும் பன்னீர் ரோஜா பூ இதழ்கள் அவ்வளவாய் நன்றாய் இல்லை. பழைய செடியையும் எப்படியாவது காப்பாற்றி கொண்டு வரவேண்டும்.

ரோஜா செடிக்கு போர் தண்ணீர் விடாமல் நல்ல தண்ணீர் விட்டால் நல்லது (போர் தண்ணீரில் உப்பு அதிகமாக இருக்கும்) என்கிறார்கள். அதனால் இந்த முறை நல்ல தண்ணீர் (பஞ்சாயத்து தண்ணீர் வரும் இல்லையா. அது தான்) மட்டும் விட்டு வளர்த்து வருகிறோம்.

தவிர, இந்த முறை செமெண்ட் தொட்டி இல்லாமல் மண் தொட்டி வாங்கி அதில் வைத்திருக்கிறோம். மண் தொட்டி நல்ல குளிர்ச்சி கொடுக்கும். விலை தான் கொஞ்சம் அதிகம் (ஒவ்வொன்றும் Rs.150).   

செடிகள் ஒவ்வொன்றும் அறுபதில் இருந்து நூற்றைம்பது வரை விலை சொல்கிறார்கள். செடிகள் நன்றாக தளிர்த்து பூக்க ஆரம்பித்து விட்டன. அடுத்த் பருவம் பூப்பதை வைத்து பார்க்க வேண்டும்.






முருங்கை

இந்த முருங்கை மரத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். பெரிதாய் நின்ற ஒரு மரத்தை வெட்டிய பிறகு அதன் வேரில் இருந்து தளிர்த்து வந்து மரமாகி விட்டது. கடந்த மூன்று  வருடத்தில் இந்த முறை தான் நிறைய காய்த்து இருக்கிறது. சின்ன மரம் தான். வாரம் எப்படியும் நாற்பது-ஐம்பது காய் பறிக்கிறோம்.

இது நாட்டு வகை என்பதால் காய் சின்னதாக தான் இருக்கும். முருங்கை இலை நல்ல ருசியாக இருக்கும். எங்க வீட்ல இலை பறித்து முருங்கை இலை கஞ்சி வைப்போம். முருங்கை இலை கீரை வைப்போம்.






இன்னொரு முருங்கை, ரொம்ப காலத்திற்கு முன்பு ஒரு தோட்டக்கலை பயிற்சி வகுப்பு என்று ஒன்றுக்கு போன போது நல்ல ரகம் என்று விதை கொடுத்தார்கள். நானும் ஒரு பையில் போட்டு வைத்தேன். மெதுவாய் வளர்ந்து கொண்டிருந்தது, இப்போது தான் பிஞ்சி பிடித்திருக்கிறது. நம் தோட்டத்தில் பையில் வளரும் முதல் மரம் என்று சொல்லலாம். நான் இந்த செடியில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், எப்படி தான் வருகிறது என்பதற்காக வைத்திருக்கிறேன். 


மாதுளை

இந்த சம்மரில் மாதுளையும் நன்றாக பிஞ்சி போட்டிருக்கிறது. போன முறை பழத்தின் மேல் கருப்பாய் புள்ளியாய் கொஞ்சம் நோய் தாக்குதல் இருந்தது. இந்த முறை ஓரளவுக்கு சரியானது மாதிரி தெரிகிறது.


 
 சிட்ரஸ் (Citrus)

தோட்டத்தில் இருந்து பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கும். நாம கொஞ்சம் அவரைக் காய் கொடுத்தால், ‘ ப்ரண்டு வீட்ல முள் கத்தரிக்காய் செடி இருந்தது, உங்க நியாபகம் தான் வந்தது. ரெண்டு செடி எடுத்துட்டு வந்தேன்’ என்று திருப்பி ஏதாவது கொடுப்பார்கள்.

“இன்று எங்க கல்யாண நாள்” என்று சொல்லி ஏதாவது செடி கொடுப்பார்கள். அப்போது அந்த செடி மேல் நமக்கு இன்னும் அக்கறை வரும். வளர்த்து பெரிதாய் வந்த பிறகு, செடியை அவர்களிடம் காட்டும் போது ‘உங்க கல்யாண நாள்னு கொடுத்தீங்களே’ எனும் போது அவர்கள் முகத்தில் ஒரு சந்தோசம். அதில் நமக்கும் ஒரு சந்தோசம்.    

பக்கத்து வீட்டில் என் அளவுக்கு தோட்டத்தை ஆர்வமாய் செய்யும் அன்னபூரணி அம்மா வீட்டில் இந்த சிட்ரஸ் பழம் மரம் உண்டு. கிட்டத்தட்ட சின்ன எலுமிச்சை சைஸில் ஆரஞ்சு பழம் மாதிரி இருக்கும். ஜூஸ் போட நன்றாக இருக்கும்.

ஒரு வருடத்திற்கு முன்பு சின்னதாய் ஒரு நாற்று கொடுத்தார்கள். அது சரியாய் வராமல் போய் விட்டது. கொஞ்சம் வருத்தமாய் போனது. போன மாதம் மறுபடி ஒரு செடி கொடுத்தார்கள். கொஞ்சம் பெரிய செடியாகவே இருந்தது. இந்த முறை நேரடியாக வைக்காமல் ஒரு சாக்கு பையில் வைத்திருக்கிறேன். வைத்த பிறகு தளிர்விட்டு நன்றாக வளர்ந்து வருகிறது. இதை கூடுதல் கவனம் எடுத்து கொண்டுவர வேண்டும். கொஞ்ச நாள் கழித்து ஒரு இடம் பார்த்து வைக்க வேண்டும்.  


 

  

17 comments:

  1. வணக்கமுங்க‌,

    சிவப்பு குடைமிளகாய் வித்தியாசமா பிரவுன் நிறத்தில் இருக்கே? ஹைபிரிட் ஆஆ?
    //கண்ணு போட்ராதிய என்ன !! ).// பார்த்தவுடனே பட்டுடுச்சே என்ன‌ செய்ய‌?
    வேண்டுமென்றால் சுத்திப்போட்டுடுங்க‌.....
    உங்கள் பன்னீர் ரோஜா ஒரு காலத்தில் எங்க‌ வீட்டில் இருந்த‌ ரோஜா தோட்டத்தை ஞாபகப்படுத்துது! ஆரஞ்சு ரோஜா நான் முதன் முதலில் வைத்த‌ ரோஜாச்செடியை ஞாபகப்படுத்துது!அனைத்தும் அருமை!
    மாதுளையில் பூச்சு பிடிக்காமல் இருக்க‌ ஒவ்வொரு பழத்துக்கும் பிளாஸ்டிக் கவர் கட்டிவிடச்சொன்னார்கள் (ஊரில்)....
    நீங்கள் படத்தில் காண்பித்திருக்கும் சிட்ரஸ் பழங்கள் போலவே இங்கு (UK வில்) நிறைய‌ பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.

      குடைமிளகாய் ஹைப்ரிட் தான். Biocarve Seeds. பச்சை நிறத்தில் இருந்து பிரவுன் நிறமாகி பின்பு சிவப்பாய் மாறும். அதற்க்கு முன்னமே பறித்து விட்டோம். அதனால் தான் அப்படி :-)

      //வேண்டுமென்றால் சுத்திப்போட்டுடுங்க‌// :-) எங்க வீட்டு முருங்கையை பார்த்து நானே வீட்டில் சுத்திப்போட சொல்லி கொண்டு இருந்தேன் :-)
      //மாதுளையில் பூச்சு பிடிக்காமல்// பிஞ்சி உதிராமல் இருக்க என்று சொல்கிறீர்களா. எனக்கென்னமோ பிளாஸ்டிக் பையை செடியில் பார்த்தாலே ஒரு அலர்ஜி. இயற்கையையும் அதை அழிப்பதையும் ஒன்றாய் பார்ப்பதில் ஒரு ஒவ்வாமை :) . அணில் கடிக்காமல் இருக்க துணியை சுற்றி விடுவோம்.


      Delete
    2. //மாதுளையில் பிஞ்சி உதிராமல் இருக்க என்று சொல்கிறீர்களா.// பிஞ்சு, பழம் இரண்டிலும் கருப்பாக‌ ஓட்டைகள் இருந்தன‌. உள்ளேயும் பாதி பழம் நன்றாக‌ இல்லை. இந்த‌ பிரச்சனைக்கான‌ தீர்வாகத்தான் பிளாஸ்டிக் பேக் கட்டச் சொன்னார்கள்.

      //இயற்கையையும் அதை அழிப்பதையும் ஒன்றாய் பார்ப்பதில் ஒரு ஒவ்வாமை :)// இப்படிப்பட்ட‌ ஒவ்வாமை அனைவருக்குமே வரவேண்டும்! :))

      Delete
  2. புகைப்படங்கள் அழகென்றால் ஒவ்வொன்றிற்கும் நீங்கள் அளித்துச் சென்றிருக்கும் விளக்கம் அழகிற்கு அழகு சேர்க்கிறது.
    பயனுள்ள பதிவு.

    தொடருங்கள்.

    ReplyDelete
  3. வணக்கம்
    யாவரும் பயன் பெறும் பதிவு பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. முதலில் படங்களைப் பார்த்துட்டுத்தான் பதிவுக்கே வருவேன். அதனால ஒவ்வொரு படத்துக்குமென தனித்தனியா கண்ணு வச்சிட்டு பதிவைப் படிக்கும்போதுதான் பார்த்தேன் நீங்கள் கேட்டுக்கொண்டதை. வச்ச கண்ணை எப்படி எடுப்பதுன்னு அடுத்த பதிவுல சொல்லிடுங்க :)

    மாமரத்தின் கொழுந்துஇலைகள், பூவிலிருந்து வரும் வாசனையை படங்களில் உணர முடிந்தது. உழவர் சந்தையிக்கு வரும் மிளகாய்கள் இப்படித்தான் இருக்கும். புது ஆரஞ்சு என்பதால் பளிச் என இருக்கிறது. பன்னீர் ரோஜாவுக்கு இணை கிடையாதுதான். முருங்கையின் பூக்களும் காய்களும் மீண்டும் கண்ணு வைக்கத் தோன்றுகிறது.

    படங்களுக்கான விளக்கங்களும் அருமை !

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம்.

      //வச்ச கண்ணை எப்படி எடுப்பதுன்னு அடுத்த பதிவுல சொல்லிடுங்க// :-) முதல் வரியே போட்டுடலாம். இல்ல ஒரு படம் போட்டுடலாம் :-)

      //புது ஆரஞ்சு என்பதால் பளிச் என இருக்கிறது// ஆமாம். இது அந்த மேடம் முதலில் ஒரு செடி கொடுக்கும் போது பழமும் கொடுத்தார்கள். பார்க்கவே ரொம்ப அருமையாக இருந்தது. உடனே படம் எடுத்து கொண்டேன். எப்படியும் இப்போதுள்ள செடியை காப்பாற்றி கொண்டு வந்து இப்படி பழம் பறிக்க வேண்டும்.

      Delete
  5. ஆஹா. படங்கள் ஒவ்வொன்றும் உங்க பிரயாசை,முயற்சிக்கான பரிசுகள். படங்கள் போடமுன் திருஷ்டி பூசணி படம் போட்டுவிடுங்கோ சிவா. கொடுக்கல்,வாங்கல்களில் சந்தோசம் அதிகமிருக்கும்.
    அருமையான விளக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. திருஷ்டி பூசணி நாமே வளர்த்து போட்டுடலாம் ப்ரியா :-)

      //கொடுக்கல்,வாங்கல்களில் சந்தோசம் அதிகமிருக்கும்// ஆமாம். எல்லோர் வீட்டிலும் செடியோ மரமோ இருப்பதில்லை. நாமே கொண்டு போய் கொடுத்தால் சந்தோசம் தான்.

      Delete
  6. உங்கப் பதிவைப் பார்கும் போதெல்லாம் உத்வேகம் பொங்கும் இன்னமும் கொஞ்சம் சேர்த்து வளர்க்கணும்னு ஆனா பராமரிக்க நேரம் அமைவதில்லை இந்த சிவப்பு பன்னீர் ரோஜாவை வளர்க்க நானும் ரொம்பவே கஷ்டப்படறேன் கண்டிப்பா ஒருநாள் உங்க வீட்டுக்கு வரணும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா ஒரு நாள் வாங்க.

      //ஆனா பராமரிக்க நேரம் அமைவதில்லை// இது தான் ரொம்ப சிக்கலாகி போகிற ஒரு விஷயம். சில நேரம் ஆபீஸ் வேலையில் தொடர்ந்து மாட்டிக் கொண்டால் போதிய நேரம் கிடைக்காமல் திணறி போய் விடுகிறோம். இருந்தாலும் முடிந்த அளவுக்கு நேரம் ஒதுக்காமல் விட்டால் தோட்டம் சரியாய் வராது.

      Delete
  7. in my home pomegranates flowers lot, also very big in size.-, but never becomes a fruit. Do you know why? is there anything like male tree-female tree?
    Just curiosity-how big is yoiur garden?
    Rajan

    ReplyDelete
    Replies
    1. hi Rajan. As far as I know, only in Papaya we have male female tree. I don't think anything like that in pomegranate. The fruiting issue could be due to some nutrient issue. What kind of fertilizer you are using? Does it get sufficient sun-light (Duration)?

      My garden is not big one as you might think (seeing the pictures). It is just around my home in the space available in a nearly one ground space (6 cents) :-)

      Delete
    2. Hello Siva, My pomegranates are planted very well in sun light. The plant (rather tree) is 8 years old. In the initial years I used to feed cow manure, but last few years I have not given any specific fertilizer. What do you recommend? It flowers regularly in summer. The flowers attract lots of bees also, but never bear a fruit.


      You have grown so many plants, so i guessed you may have good size garden. I plant eggplants and okra. Besides I have orange trees as well. For plants I feed only organic (mostly veggie peels and cow manure). I get reasonably good yield for veggies.

      Thanks for your time to reply
      Rajan

      Delete
    3. Hi Rajan, I am not very sure about the problem. Can you give a try with this one?. Because it is almost 8 year old, can you replace the sand to the possible depth with a new fresh RED sand mix?. If you can get vermi compost mix it with RED sand while replacing. Dumping veggie peel directly without composting may not help much. Not sure if you are composting cow dung and veggie peels before placing.

      Just replace the sand with fresh RED sand. Prune the plant (not fully) and let it grow fresh. Then we will see if we see any change there.

      Delete