Friday, July 11, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-2 (விதை தேர்வு)



பதிவுக்கு போவதற்கு முன், அடுத்த சனி, ஞாயிறு இங்கே கோவையில் அக்ரி இன்டெக்ஸ் (கொடிசியா வளாகத்தில்). நான் ஞாயிறு (20-July) காலை பத்து மணி முதல் பன்னிரண்டு மணி வரை அங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பேன். ஞாயிறு காலை வரும் நண்பர்கள், முடிந்தால் ஒரு Final Confirmation மெயில் அனுப்புங்கள். கொடிசியா வளாகத்தில் சந்திக்கலாம்.


நிறைய நண்பர்கள் விதை வாங்குவது பற்றி கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவு ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 

விதை எனும் போது முதலில் நாட்டு விதைகள், ஹைப்ரிட் விதைகள் என்று இரு பெரும் பகுதிகளாக வரும். வீட்டு தோட்டத்தில் முடிந்தால் (கிடைத்தால்) நாட்டு ரகங்கள் வளர்ப்பது நல்லது. ஆனால் எல்லோருமே நாட்டு விதைகள் என்று தேடுவதை பார்த்து, எங்கு பார்த்தாலும் எல்லாவற்றையுமே நாட்டு விதைகள் என்று தான் சொல்லி விற்கிறார்கள். அதில் எந்த அளவுக்கு நம்பக தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை முக்கிய காய்கறிகளான கத்தரி, தக்காளி மாதிரி செடிகளுக்கு நாட்டு ரகங்கள் முயற்சிக்கலாம்.

நிறைய செடிகளுக்கு நாம் ஹைப்ரிட் ரகங்கள் தான் போக வேண்டிய வரும் (TNAU கொடுப்பது ஹைப்ரிட் மட்டும் தான் ). இணையங்களில் பொதுவாக ஹைப்ரிட் விதைகள் தான் கிடைக்கிறது (சில தளங்களில் நாட்டு விதைகள் என்றும் வைத்திருக்கிறார்கள்).

‘வானகம் நாட்டு விதைகள் - நான் இந்த தடவையில் இருந்து கொஞ்சம் நாட்டு ரகங்களுக்கு மாறலாம் என்று நினைத்திருந்தேன். மறைந்த நம்மாழ்வார் ஐயாவின் ‘வானகம் ஸ்டாலில் ஒரு முறை எல்லா நாடு விதைகளும் கிடைத்தது. சில ரகங்கள் தான் வாங்கி வந்தேன். இந்த முறை தக்காளி, வெண்டைக்காய், அவரை, சீனி அவரை (கொத்தவரை) நாட்டு ரகங்கள் தான்.

BioCarve.com - முதல் முறையாக சில விதைகளை இணையத்தில் ஆர்டர் செய்தேன். அதில் Biocarve.com இணையத்தில் இருந்து தான் எல்லா இங்க்லீஷ் காய்கறிகளும் வேறு சில காய்கறிகளும் ஆர்டர் செய்தேன். கோஸ், சிவப்பு முள்ளங்கி (Red Globe Radish),  கேரட், broccoli, குடை மிளகாய், பெரிய வெங்காயம், Sweet Corn. பாக்கெட் ஒவ்வொன்றும் முப்பது ரூபாய் தான். Shipping Charge-ம் நியாயமாகவே இருந்தது. Net Banking வசதியும் இருக்கிறது. ஆர்டர் செய்து இரண்டு நாளில் அனுப்பி விட்டார்கள். மூன்று நாளில் விதை கிடைத்து விட்டது. Packing ரொம்பவே நன்றாக செய்திருந்தார்கள்.



omaxehybridseeds.com  - Biocarve.com-ல் பீட்ரூட் மட்டும் இல்லை. அதனால் omaxehybridseeds.com  ல் பீட்ரூட் மற்றும் Baby Corn விதைகளை ஆர்டர் செய்தேன். நான் முன்பு வெற்றிகரமாய் கொண்டு வந்த கேரட், கோஸ், காலி ஃப்ளவர் எல்லாம் omaxe seeds  தான். omaxehybridseeds.com- ல் Internet Banking வசதி இல்லை. Credit/Debit Card Accept செய்கிறார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் அவர்களின் Shipping Charges இருக்கிறது. எதை வாங்கினாலும் அதில் 10% தான் Shipping Charges எடுக்கிறார்கள். நாற்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் விதை வாங்கினால் நான்கு ரூபாய் தான் Shipping Charges. எப்படி என்று தெரியவில்லை. நான் இரண்டு பாக்கெட் ஆர்டருக்கு மொத்தம் Rs. 88 ஆனது. (Seed Rs.80 & Shipping Rs. 8) . எக்கச்சக்கமாய் காய்கறி விதைகள், பூ விதைகள் என்று கொட்டி கிடக்கிறது omaxehybridseeds.com  ல்.

ஒரே ஒரு பிரச்னை, Payment ஆன பிறகு சும்மா ‘Payment Successful’ என்றொரு Blank page வந்து அப்படியே நின்று போய் விட்டது. Order Confirmation மெயில் வந்தது. ஆனால் இந்த சைட்டில் சும்மா basket-ல் சேர்த்து check-out Click செய்தாலே Order Confirmation மெயில் வருது. இது அடுத்த பிரச்னை. மூன்று மெயில் அனுப்பி கேட்ட பிறகு அனுப்பியாச்சு என்று ஒரு மடல் (With Tracking Number) அனுப்பி இருந்தார்கள். ஒரு வழியாய் இரண்டு வாரங்கள் கழித்து பார்சல் வந்து சேர்ந்தது. ஓரளவுக்கு கூரியர் பிரச்னை பற்றி அனுப்பிய சில மடலுக்கு பதில் கொடுத்தார்கள் (சென்னைக்கு ஜூன்-21 வந்து சேர்ந்ததாக Tracking-ல் காட்டியது. ஆனால் கோவை வர இரண்டு வாரங்கள். ஜூலை-5 தான் வந்து சேர்ந்தது). சில பிரச்சனைகள் இருந்தாலும், கொஞ்சம் பொறுமை இருந்தால் ஆர்டர் செய்யலாம்.



மற்ற தளங்கள் – விதைகள் கிடைக்கும் மற்ற தளங்கள் என்று பார்த்தால், சிலர் ebay தளத்தை கூறுகிறார்கள். ஆனால் விலை அநியாயத்திற்கு அதிகமாய் இருக்கும். நான் இதுவரை எதுவும் வாங்கியதில்லை. மற்றபடி, www.gardenguru.in தளத்தை கூறலாம். நாட்டு விதைகள் கூட இருக்கிறது. இதிலும் நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.  

TNAU Seeds இங்கே கோவை TNAU-ல் சில அடிப்படை காய்கறி விதைகள் கிடைக்கும். அங்கே இருக்கும் Seed Vending Machine பற்றியும் முன்பு எழுதி இருந்தேன். நிறைய வகைகள் கிடைப்பதில்லை. கத்தரி, தக்காளி, செடி அவரை, கொத்தவரை, சாம்பல் பூசணி, பாகல், சுரைக்காய் எல்லாம் கிடைக்கும். பத்து ரூபாய் தான் பாக்கெட். TNAU Seeds-ஐ பொருத்தமட்டில் முளைப்பு விகிதமும் சரி, விளைச்சலும் சரி ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருக்கும். சரியான Exp. Date போட்டு இருக்கும்.

முன்பு TNAU-ல் விதைகளை நுழைவு வாயிலில் உள்ள ஒரு கடையில் கொடுப்பார்கள். இந்த Vending Machine வந்ததில் இருந்து ஓன்றும் உருப்படியாய் இல்லை. இந்த வாரம் போய் பார்த்ததில் வெறும் கொத்தவரை, வெள்ளை பூசணி,பாகல்  விதை பாக்கெட்டுகளை மட்டும் வைத்து நிரப்பி வைத்திருக்கிறார்கள். ஒரு அடிப்படை காய்கறி விதை கூட இருப்பதில்லை. கொஞ்ச காலமாகவே இப்படி தான் ஏனோ தானோ என்று தான் வைத்திருக்கிறார்கள்.     

ARJUN GrowBags Seeds இதை தவிர, கோவையில் ARJUN GrowBags பற்றி முன்பு எழுதி இருக்கிறேன். அவர்களிடமும் கிட்டதட்ட எல்லா விதைகளும் கிடைக்கிறது. காய்கறி விதைகள் பத்து ரூபாய் தான். காரட், கோஸ் விதைகள் கூட கிடைக்கிறது. சில பூ விதைகள் கூட இருக்கிறது (விலை பதினைந்து ரூபாய் தான்). நான் சில விதைகள் வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன். நன்றாக வந்திருக்கிறது.

இது  தவிர இங்கே கோவையில் Sakthi Agro Service கடை பற்றியும் முன்பு ஒரு முறை எழுதி இருக்கிறேன் (வடவள்ளி சிக்னல் அருகில், TNAU க்கு முன், சிக்னல் அருகிலேயே). அங்கேயும் நிறைய விதைகள் (பீட்ரூட் முதல் கொண்டு) கிடைக்கிறது. விலை பத்து ரூபாய் தான்

நல்ல நாட்டு செடி என்றால் நான் பொதுவாய் ஒரு காயை விதைக்கு விட்டு அடுத்த சீசனுக்கு நாற்று எடுத்து கொள்வேன். போன சீசனில் ஊரில் இருந்து கொண்டு வந்த வெள்ளை கத்தரி நன்றாக காய்த்தது. இந்த முறை அதில் இருந்து தான் நாற்று எடுத்து விட்டிருக்கிறேன். செடி நன்றாக வந்திருக்கிறது. இப்படி நாம் வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை செடிகளில் இருந்து விதை எடுத்து அடுத்த சீசனுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். Hybrid Seed-ல் இருந்து கொண்டு வரும் செடிகளில் இருந்து எடுப்பது அவ்வளவாய் பயன் தராது. செடி வரும். ஆனால் காய்க்கும் திறன் மாறுபடும்.

நான் முன்பு கூறியது மாதிரி, காய்கறி விதைகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டியதில்லை. பாக்கெட் பத்து ரூபாய் என்ற அளவில் வாங்கினால் போதும். கிடைக்காத முட்டைகோஸ், ஃப்ளவர், மாதிரி வேண்டுமென்றால் இணையத்தில் முப்பது, நாற்பது ரூபாய்க்கு வாங்கலாம். Ebay மாதிரி இணையத்தில் நூறு ரூபாய் எல்லாம் கொடுத்து வீட்டுத் தோட்டத்திற்க்கு வாங்க தேவை இல்லை.

முளைப்பு திறனை பொருத்தமட்டில் எல்லா கம்பெனி விதைகளிலும் நமக்கு 90%  Germination Rate கிடைக்கும் என்று சொல்ல முடியாது. 50% முளைத்தால் கூட நமக்கு போதும். அதற்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் அதிகமாகவே முளைக்க போட்டுக் கொள்ளலாம். முடிந்த அளவுக்கு விதைகளை அந்த வருடமே பயன்படுத்தினால் நல்லது. நீண்ட நாள் சேமித்து வைத்தால் எதிர்பார்த்த அளவு முளைக்கவும் செய்யாது, விளைச்சலும் கிடைக்காது. அதனால் வீட்டுத் தோட்டத்திற்கு முடிந்த அளவுக்கு சிறிய பாக்கெட் வாங்குங்கள். நாட்டு ரகங்கள் காய்க்கும் போது, கண்டிப்பாய் அடுத்த சீசனுக்கு விதைகள் எடுத்து கொள்ள வேண்டும்.

எந்த கம்பெனி விதைகள் நன்றாக இருக்கும் என்று கேட்டால், எதையும் குறிபிட்டு கூற முடியாது. இந்த முறை முப்பது ரூபாய் கொடுத்து BioCarve.com-ல் வாங்கிய கேரட் விதைகள் பல்லை இளித்து விட்டு போய் விட்டது ( 0% Germination). ஆனால் பிறகு பத்து ரூபாய்க்கு Arjun Growbags-ல் வாங்கிய கேரட் விதை எல்லாமுமே முளைத்து விட்டது (90% Germination இருக்கும்). BioCarve.com-ல் வாங்கிய மற்ற விதைகள் பரவாயில்லை தான். அதனால் நாம் எதையும் குறிபிட்டு கூட முடியாது. முளைப்பு திறனும், விளைச்சலும் நமக்கு கிடைக்கும் விதையின் தரத்தை பொறுத்தே அமையும்.

(தொடரும்)





                         

6 comments:

  1. வணக்கம்
    ஒவ்வொருவரும் அறிய வேண்டியவிடயங்கள் பகிர்வுக்கு நன்றி தொடருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஆன் லைனில் விதை டிரை பண்ணிப் பார்க்கிறேன்....நன்றி சிவா....இங்கே சென்னையில் மாடித் தோட்டத்தில் திராட்சை (கறுப்பு) விதை போட்டேன் முளைத்து வளர்ந்துள்ளது...பார்க்கலாம் திராட்சை வருகிறதா என்று.....

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஒரு திராட்சை கொடி வைக்க வேண்டும் என்று ஆசை தான். பழம் எப்படி வருகிறது என்று சொல்லுங்கள். பூச்சி மருந்து அடிக்காமல் இயற்கையாய் வருமா என்றும் சொல்லுங்கள்.

      Delete
  3. வணக்கம் நண்பர்களே,

    … எனக்கும் மாடி வீட்டுத்தோட்டத்தில் சிறிய ஆர்வம் உண்டு. வீடு மாடியில் முருங்கை (புதிய முயற்சி), முல்லை,செம்பருத்தி, ரோஜா, கீரை (அவ்வபோது) & கத்தாழை வளர்க்கிறேன்.

    சமீபத்தில் வளர்த்த முளைக்கீரை செடிகள் அனைத்தும் மாவு பூச்சியினால் பாதிக்கப்பட்டன. புகையிலையை ஊற வைத்து எடுத்த சாறு, வேப்பெண்ணை & சிறிய வெங்காயம் அரைத்து எடுத்த சாரும் கலந்து தெளித்து பார்த்தேன். பின்பு 10 நாட்கள் இடைவெளியில் வேப்பெண்ணை & சோப்பு கலந்தும் தெளித்து பார்த்தேன். ஒன்றும் கட்டுப்படவில்லை. அதனால் எல்லா செடிகளையும் களையவேண்டி வந்தது. மிகவும் வருத்தமடைந்தேன்.

    ஆனாலும் மனம் தளரவில்லை. தற்போது, TNAU விலிருந்து வெண்டை & கொத்தவரை விதைகள் வாங்கிவந்து ஊன்றியிருக்கிறேன். பாரக்கலாம்.

    சிவா மற்றும் அனைத்து ப்ளாக் நண்பர்களையும் அக்ரி இன்டெக்ஸ்ல் காணலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஞாயிற்று கிழமை சென்னை செல்லவேண்டியுள்ளதால், சனிக்கிழமை அக்ரி இன்டெக்ஸ் (கொடிசியா வளாகத்தில்) செல்லவுள்ளேன்.

    கடந்தமுறை வேப்பெண்ணை உபயோகித்ததில் SPRAYER (பழைய COLIN BOTTLE தான்) தற்போது சரிவர வேலை செய்யவில்லை. அதனால் புதிதாக வாங்க வேண்டும். ebay & Flipcart ல் உள்ள sprayer களின் quality பற்றி தெரியாததால், நண்பர்கள் யாராவது உபயோகித்ததில் நல்ல quality, BRAND & MODELபற்றி விபரம் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். (Mail id - idhayam@gmail.com)

    சிவா, தங்களின் BLOG மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி.

    - இதயன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இதயன்.

      SPRAYER ஓன்று நானும் வாங்க நினைத்திருக்கிறேன். மருந்து தெளிக்க சாதாரண hand sprayer வாங்க நினைத்திருக்கிறேன். கொடிசியா வந்தால் நிறைய கம்பெனிகள் இருக்கும். பார்த்து வாங்கலாம். எனக்கு நல்ல BRAND & MODEL பற்றி விவரம் இல்லை. கொடிசியா வந்தால், முடிந்தால் உங்கள் நம்பர் எனக்கு ஒரு மடல் தட்டி விடுங்கள்.

      அன்புடன்,
      சிவா

      Delete