Monday, December 30, 2013

தோட்ட உலா – டிசம்பர் 2013



அடுத்த சீசன் – ஜனவரி To ஜூன்
அடுத்த சீசனுக்கான காய்கறி தோட்டம் தயாராகி கொண்டிருக்கிறது. வழக்கம் போல ஒரு பட்டியல் போட்டு, ஒவ்வொரு காய்கறிக்கும் இட ஒதுக்கீடு போட்டு ஒரு Layout தயார் செய்தேன். பொதுவாய் டிசம்பர், ஜனவரி-ல் நாற்று எடுத்து விட்டால் வளர்ந்து மார்ச் வாக்கில் காய்க்க ஆரம்பிக்கும். ஏப்ரல் – ஜூன் வரை நல்ல  விளைச்சல் கிடைக்கும் (காய்கறியை பொறுத்து). நல்ல வெயில் காலம் என்பதால் விளைச்சல் நன்றாகவே இருக்கும். 2014- க்கான காய்கறி பட்டியல் என்று பார்த்தால்,
   
வழக்கமான காய்கறிகள் - தக்காளி, கத்தரி, மிளகாய், செடி அவரை, வெண்டை, புடலை, பாவற்காய், சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்  

புதிதாய் சேர்த்திருக்கும் காய்கறிகள் – சுரை , மிதி பாவற்காய், தர்பூசணி (சிறியது), பீன்ஸ், முலாம் பழம் (Musk Melon), கேரளா சிறிய கார மிளகாய், தட்டை பயறு, முள்ளங்கி

இவற்றில் எத்தனை சரியாய் வருகிறதென்று பார்க்கலாம். தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற சிறிய விதை செடிகளை நாற்று எடுத்து நடலாம். அதற்கு Nursery Tray பயன்படுத்தலாம். இல்லை என்றால் தனியாய் ஒரு சிறிய பாத்தி தயார் செய்து நடலாம். ஓரளவுக்கு வளர்ந்த பிறகு எடுத்து தகுந்த இடைவெளி விட்டு பெரிய பாத்திகளில் நடலாம். நான் இந்த முறை தனியாய் ஒரு பாதியில் விதை போட்டு எடுத்து நட்டேன். அவரை, வெண்டை போன்ற பெரிய விதைகளை நேரடியாக தகுந்த இடைவெளி விட்டு விதைக்கலாம். 

பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கு போது முளைக்கும் விகிதம் கொஞ்சம் குறைவு. Nursery Tray-ல் வளர்க்கும் போது அந்த பிரச்னை வராது.  





இந்த மாத அறுவடை 

சின்ன நெல்லி – இந்த மரம் வைத்து இரண்டு வருடமாகிறது. இது வரை காய்க்கவில்லை. ‘உனக்கு இன்னும் ஒரு வருடம் தான் டைம். அதுக்குள்ள   காய்க்கலன்னா நீ காலிஎன்று கொஞ்சம் மிரட்டி வைத்திருந்தோம் :-). ஊரில் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க ‘மரம் காய்க்கலன்னா வெளக்குமாற வெச்சி மரத்த அடிக்கணுமாம். அது ரோசம் வந்து காய்ச்சிருமாம்:-). அதே மாதிரி, மரம்/செடி வைக்கும் போது ஒரு நாலணா,எட்டணா அந்த குழில போட்டு அப்புறம் செடிய வைக்கணும் என்பாங்க. அப்போ அது நெறைய காய்க்குமாம். பொழுதடைஞ்ச (இருட்டின) பிறகு மரத்தில் இருந்து ஒரு இலை பறித்தாலும் திட்டு விழும். மரம் தூங்கும் போது தொல்லை பண்ண கூடாது என்பார்கள். இதெல்லாம் அர்த்தமில்லாமல், காமெடியா தெரிந்தாலும், பெரியவங்க எவ்வளவு இயற்கையோடு ஒன்றிய ஒரு வாழ்க்கையை கொண்டிருந்தார்கள் என்று புரியும்.

நம்ம நெல்லியை போன வாரம் சும்மா பார்த்துக் கொண்டிருந்த போது, ஆச்சரியமாய் ஒரே ஒரு காய் கண்ணில் தட்டுபட்டது. இந்த வருடம் இந்த ஒரு காய் தான் காய்திருக்கிறது :-). வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோசம். அடுத்த வருடம் நிறைய காய்க்கும் என்று நினைக்கிறேன்.         


   
எலுமிச்சை – இந்த மாதம் அறுவடை செய்தாகி விட்டது. ஐந்து கிலோ மொத்தம் கிடைத்து. இன்னும் கொஞ்சம் காய் கிடக்கிறது. இந்த எழுமிச்சையையும் அதன் விளைச்சலையும் பார்க்கும் எல்லோரும் கேட்கும் ஒரு கேள்வி ‘என்ன உரம் போடுகிறீர்கள் என்று. இது வரை இந்த செடிக்கு விசேஷமாய் எந்த உரமுமோ, பூச்சி மருந்தோ அடித்து இல்லை. எப்போதாவது கொஞ்சம் மண்புழு உரம் (ஆறு மாதத்திற்கு ஒரு முறை) வைப்பதோடு சரி. அதனால் இந்த செடி நம்ம தோட்டத்தின் ஒரு தனித்துவமான செடியா போய் விட்டது.   


மிளகாய் – அடுத்த சீசனுக்காக பாத்தி ரெடி பண்ணுவதற்காக மொத்தமாய் பறித்து விட்டேன். இந்த முறை மிளகாய் விளைச்சல் கலக்கலோ கலக்கல். கடைசியாய் பறித்தது மொத்தம் ஒரு கிலோ வந்தது. பறிக்க கொஞ்சம் தாமதமாய் போனதால் கொஞ்சம் பழுத்து விட்டது. 


டெக்னாலஜி

Nursery Pouch
      இங்கே ஒரு நாள் தோட்டக் கலை பயிற்சிக்கு போன போது வாங்கினேன். Nursery Tray-க்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். அரிதான, விலை அதிகமான செடியின் விதையில் இருந்து நாற்று கொண்டு வர இதை பயன்படுத்தலாம். சாதாரணமாக நாற்று எடுக்கவும் பயன்படுத்தலாம். இது Coir Pith (தேங்காய் நார் தூள்) மற்றும் Compost (உரம்) கலந்து Compress செய்யபட்டு ஒரு மாத்திரை வடிவில் கிடைக்கிறது. கொஞ்சம் நீர் விட்டதும் உப்பி பெரிதாய் வரும். அதில் விதையை போட்டு கொஞ்சம் நீர் தெளித்து வந்தால் செடி அட்டகாசமாய் வளர்ந்து வரும். நன்றாய் வளர்ந்ததும் அப்படியே எடுத்து நட வேண்டியது தான். ஒரு வில்லையின் விலை 2 ரூபாய் தான்.  


  

2014 Plans

என்னுடைய நீண்ட கால திட்டம் மாடியில் பெரிதாய் ஒரு தோட்டம் அமைப்பது (Terrace Garden) . இதை 2015 திட்டமாக வைத்திருக்கிறேன். வெறுமனே மாடியில் செடி வைத்தால் சரியாய் வருவதில்லை. முக்கிய காரணம் அதிக வெயில் மற்றும் வேகமாய் காற்று அடிப்பது. அதனால் செடி சீக்கிரம் வறட்சி ஆகி விடுகிறது. வளர்ச்சியும் சரியாய் இல்லை. சாதாரணமாய் கீழே வரும் செடி, மாடியில் வைத்தால் சரியாய் வருவதில்லை. 

Terrace Garden-ன் முதல் கட்டமாய் 2014-ல் சிறியதாய் செய்து பார்க்க திட்டம். முக்கியமாய் Soilless Gardening பற்றி சில முயற்சிகள். Soilless Gardening என்றால் மணல் இல்லாமல் Coir Pith (தேங்காய் நார் தூள்) கொண்டு அமைப்பது. இதில் முக்கியமான நன்மை என்று பார்த்தால், எளிதாக செடி வளரும் (வேர் போக எளிது), வேண்டிய சத்துக்களை எளிதாய் எடுத்து கொள்ளும். கிழங்கு வகைகள் நன்றாக வரும். கீரைகள் நன்றாக வரும். பிரச்னை என்று பார்த்தால், Coir Pith–ல் சத்து எதுவுமே கிடையாது. வெறும் சக்கை தான். மண்ணில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் எதுவும் செடிக்கு கிடைக்காது. அத்தனை சத்துக்களையும் நாம் உரமாகவோ, மற்ற மீடியம் மூலமாகவோ கொடுக்க வேண்டும்.

இங்கே போன மாதம் Horti Tech 2013 ல் Coir Pith block கிடைத்தது. முதல் முயற்சியாக சில கிழங்கு வகை பூ செடிகள் (Gerbera, Dahlia) வைத்து விட்டிருக்கிறேன். சில செடிகள் முளைத்து விட்டன. நீண்ட கால செடிகளுக்கு Coir Pith based garden எப்படி வருகின்றது என்பதை இந்த வருடம் கற்று கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் Terrace Garden அமைக்க ஆரம்பிக்கலாம். 

அடுத்த பதிவில் இதை பற்றி விவரமாய் எழுதுகிறேன்.


15 comments:

  1. பயனுள்ள பசுமை பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  2. வரும் 2014 ஆண்டில் மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்களை பகிர்த்து கொள்வதற்கும் நன்றி.

      Delete
  3. மிக அழகான அருமையான திட்டங்கள். வாழ்த்துக்கள். எங்க வீட்டு நெல்லி மரமும் இப்படித்தான் ஒரு காய் காய்த்து,பின் அடுத்த வருடம் நிறைய காய்கள் காய்த்தது.
    உங்க திட்டங்கள் அடுத்த வருடம் நன்றாக நிறைவேற என் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியா அவர்களே. உங்க வீட்டிலும் முதலில் ஒரு நெல்லி தானா. அப்போ எங்க வீட்டிலும் அடுத்த முறை நிறைய காய்க்கும். தகவலுக்கு நன்றி :-)

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  4. coirpith block எவ்வளவு ரூவாய்க்கு விக்கிறார்கள் கோவையில்? எத்தனை கிலோ? அங்கே கண்டிப்பா மலிவாத்தான் இருக்கும்? தேங்காநார் பாதி மண்பாதின்னு கீரைவகை போடலாம் மாடியில்.அதே கலவையாக கிழங்குகளும் போட்டுட்டா கீழே உள்ள இடத்தில் மற்ற மரங்களுக்கு இடம் கிடைச்சிருமே...

    ReplyDelete
    Replies
    1. இங்கே ஐந்து கிலோ ப்ளாக் 45 ரூபாயில் இருந்து 100 வரை சொல்கிறார்கள். அடுத்த பதிவில் விவரமாக எழுதுகிறேன்.

      ஆமாம். கீழே இடம் இருந்தால் மரங்களை வளர்த்து விட்டு மாடியில் காய்கறிகளை வளர்க்கலாம். முதல் முயற்சி எப்படி வருகிறதென்று பார்ப்போம்.

      Delete
  5. உங்கள் திட்டமிடல் நன்றாக உள்ளது. நானும் காப்பி அடித்துவிட்டேன். இங்கே எங்கள் ஊரில் (யாழ்பாணம்) நிறைய பேர் தேங்காய் மட்டைகளையும் நார்களையும் சும்மா மண்ணில் உக்கவிட்டு விடுவார்கள். அதை நீங்கள் கூறியது போல செடி வளர்க்க பயன்படுத்தலாம். தகவலுக்கு நன்றி. கிழங்கு வகை பூக்களில் என்னை கவர்ந்தது சம்பங்கி. இங்கே இலங்கையில் நான் தேடாத இடமில்லை. ஒரு இடத்திலும் கிழங்கு வாங்க முடியவில்லை. யாரவது இதனை கூரியர் மூலமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப முடியுமா???

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைதேகி அவர்களே. தேங்காய் மட்டை/நார் பயன் படுத்த கூடாது. வெறும் அந்த தூளை தான் பயன் படுத்த வேண்டும். என்னுடைய அடுத்த பதிவில் எழுதி இருக்கிறேன். பாருங்கள்.

      சம்பங்கி கிழங்கு பற்றி எனக்கு தெரியவில்லை. இங்கே விசாரித்து பார்க்கிறேன்.

      Delete
  6. வலைச்சரம் மூலம் இந்த வலைப்பூ இன்று அறிந்தேன்.அருமையான பணி. .பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசியா அவர்களே

      Delete
  7. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. வலைச்சரம் அறிமுகம் வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. நன்றி மாதேவி அவர்களே

    ReplyDelete