Showing posts with label home gardening. Show all posts
Showing posts with label home gardening. Show all posts

Monday, September 29, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-6 (விளைச்சல் – கொடிகள் & English Vegetables)

இந்த சீசனின் மிக பெரிய சொதப்பல் இந்த ஏரியா தான். மூன்று பந்தல் தயார் செய்தும் ஒன்றிலும் சாதிக்க முடியவில்லை. புடலை, பாகல், சுரை, பீர்க்கங்காய் என்று அனைத்தையும் முயற்சி செய்து அதனையும் ஊற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மற்ற காய்கறிகள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தாலும் கொடி என்னமோ சரியாய் வருவதில்லை.

செடிகள் பொதுவாய் சரியான வெயில், நல்ல மண், சரியான தண்ணீர் இருந்தால் வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு பூப்பதிலும், பிஞ்சி பிடிப்பதியும் பெரிதாய் பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் கொடிகள் அப்படி இல்லை. முதலில் வளர்ந்து வருவதில் இருந்தே பிரச்னை ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஐந்து-ஆறு இலைகள் வந்த பிறகு அப்படியே நரங்கி போய் விடுகிறது. சில நம் உயரத்திற்கு வளர்ந்த பிறகு அதன் குருத்து உயிரே இல்லாமல் கொடியின் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடுகிறது. புடலை செடியும், சுரையும் இப்படி தான் போனது. எவ்வளவோ முயற்சி எடுத்தும் தேற்ற முடியவில்லை.


அடுத்தது பீர்க்கங்காய். இங்கே வேற பிரச்னை. மூன்று கொடிகள் விட்டிருந்தேன். அவ்வளவு செழிப்பாக வளர்ந்தது. கொஞ்சம் ஓவராகவே வளர்ந்தது. இங்கே பிரச்னை காய்ப்பதில். கிட்டதட்ட மூன்று மாதம் ஆகியும் மொட்டு எதுவுமே வைக்க வில்லை. பிடுங்கி போட்டு விடலாம் என்று நினைக்கும் போது மொட்டு வைக்க ஆரம்பித்தது. நிறைய காய் மொட்டுகள் வைத்தாலும் பிஞ்சி பிடித்தது என்னமோ ஒன்றே ஓன்று தான். மற்ற எல்லாமே வெம்பி விடுகிறது, இல்லை பூப்பதே இல்லை. சாம்பிளுக்கு ஒரு காய் மட்டும் கிடைத்தது. அவ்ளோ தான். இவ்வளவு செழிப்பாய் வந்தும் இங்கே ஊற்றிக் கொண்டது.





ஊற்றிய தண்ணீருக்கும், செலவிட்ட நேரத்திற்கும் கொஞ்சம் உருப்படியாய் வந்தது பாகல் மட்டும். ஆனால் இங்கே வேற மாதிரி பிரச்சனை. செடி நன்றாக காய்த்தாலும் பீர்க்கங்காய் கொடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அமுங்கி போய் விட்டது. அதனாலயே சரியாய் இடம் கிடைக்காமல், வெயில் கிடைக்காமல் காய் குறைந்து விட்டது (பீர்க்கங்காய் இப்படி அநியாயத்துக்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை)


மொத்தத்தில் இந்த சீசனில் கொடி ஏரியா செம ஊத்தல். நிறைய பிரச்சனைகள். அவற்றில் சில

·         நாம் பொதுவாய் நாற்று விடும் போது ஐந்து செடியாவது விடுவோம். பிறகு அதில் ஓன்று-இரண்டு செடி மட்டும் வைக்காமல் அத்தனையையும் வைத்து விடுவோம் (தூர ஏறிய மனம் இல்லாமல்). இனி ஓன்று இரண்டு செடியோடு விட்டு விடனும்.
·         சில செடிகள் முளைத்து வரும் போதே ஒரு செழிப்பற்ற, உயிரற்ற ஒரு தோற்றத்திலேயே வளர்கிறது. விதை தரமற்றதாக, பழையதாக இருக்கலாம். இப்படி வரும் செடியை அவ்வளவு எளிதாக தேற்ற முடிவதில்லை. பிடுங்கி போட்டு விட்டு உடனே அடுத்த செடியை நடுவது நேரத்தை மிச்சப் படுத்தும்.
·         கொடிகளில் மட்டும் தான் இரண்டு விதமான பூக்கள் வரும் (காய் மொட்டு, வெறும் பூ மொட்டு – Male & Female flowers). காய் மொட்டு நிறைய வராமல் பிரச்னை வரும். இதற்கு எதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
·         கொடிகளில் இன்னொரு பிரச்னை தண்டு தடித்து போகுதல். பாகலில் பொதுவாய் இந்த பிரச்னை வரும். தண்டு பகுதி தடித்து போய் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடும். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். விவரமாய் பிறகு எழுதுகிறேன்.

கோஸ், காலி ஃப்ளவர் மற்றும் Broccoli

 இந்த ஏரியாவும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டது என்று தான் சொல்லவேண்டும். முக்கிய காரணம் தேவையான சத்து பற்றாக்குறை. முதன் முதலாக Grow Bag-ல் முயற்சித்தது. செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பகவே வந்திருந்தது. பிரச்னை எங்கே வந்தது என்றால், பூ வைக்கும் பருவத்தில். பொதுவாக காலி ஃப்ளவர் மற்றும் Broccoli-ஐ ‘heavy eater என்பார்கள். அதாவது இவைகள் நிறைய சத்தை உறிஞ்சும். Grow Bag-ல் வைத்ததனால் முதலில் போட்ட உரம் எல்லாம் இவை வளர்வதற்கே காலி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். Broccoli-ல் முதல் பூ ரொம்ப சிறிதாக வந்த போதே இது தெரிந்தது. ஆனால் பிறகு நாம் மண்புழு உரம் போட்டு, அதை செடி கிரகிப்பதர்க்குள் செடி எல்லாம் பூத்து விட்டது. காலி ஃப்ளவர்–ம் அதே கதை தான். Chemical Fertilizer பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை வராது. நாம் உரம் போட்டதும் செடிக்கு சேர்ந்து விடும். Organic முறையில் போகும் போது, மண்புழு உரம் போட்டவுடனே செடிக்கு போய் சேராது. கொஞ்சம் காலம் எடுக்கும். அடுத்த முறை கொஞ்சம் திட்டமிட்டு வைக்க வேண்டும்.



காலி ஃப்ளவர் ஒரு வருடத்திற்கு முன்பு தரையில் போட்ட போது நன்றாகவே வந்திருந்தது (கீழே படம்)
Cauliflower in 2012 in my garden
இந்த முறை கோஸ் Grow Bag-ல் நன்றாகவே வந்தது. ஒரு ஐந்து பூ கிடைத்தது.     


வழக்கம் போல முள்ளங்கி நன்றாக வந்திருந்தது.  
   


(அடுத்த பதிவில் கீரை தோட்டம் எப்படி வந்திருந்தது என்று எழுதுகிறேன்)   








Friday, August 29, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – பிடி கரனை


‘வெற்றி வெற்றி வெற்றி என்று ‘ஆயிரத்தில் ஒருவன் முதல் காட்சியில் எம்.ஜி.ஆர் சொல்வாரே அப்படி தான் இருந்தது இந்த அறுவடையின் வெற்றியும். ஒரு ஐடியாவும் இல்லாமல் கிச்சனில் முளைத்து கிடந்த இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கும் மேலே அறுவடை எடுத்தால் அப்படித் தானே இருக்கும் J. அதுவும் பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சரியான பருவத்தில் அறுவடை எடுப்பது வெற்றி தானே.

பிடி கரனை முதல் பாகம் இங்கே. விதைத்த மூன்று கிழங்கில் ஒன்றை மட்டும் ஒரு Grow Bag-ல் வைத்து விட்டு, இரண்டு நாற்றுகளை தரையில் நட்டு விட்டேன். Grow Bag-ல் வைத்ததற்கு காரணம், அப்போ அப்போ லேசா தோண்டி கிழங்கு வருதா, நிலவரம் எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் என்று தான். தவிர, எதாவது ஒரு மீடியாவில் ஒரு செடியாவது உருப்படியாய் வரும் என்று ஒரு ஆசை தான்.

நான் முன்பு எழுதிய மாதிரி, கிழங்கு வகைகளில் பெரும் பிரச்னை, பூமிக்கு அடியில் நடக்கும் ஒன்றையும் பார்க்க முடியாது. நாமும் ஆறு மாதம் தவறாமல் நீருற்றி, கடைசியில் வெறும் வேர் கூட இருக்கலாம். கிழங்கு வகை செடிகளை வைக்கும் போது முடிந்த அளவுக்கு நன்றாக தோண்டி மண்ணை நன்றாக தளர்த்தி பிறகு நடுவது, கிழங்கு வர எளிதாக இருக்கும் (நன்றாக இடம் இருந்தால் Raised Bed மாதிரி அமைத்து வைத்தால் நன்றாக வரும்)

பிடி கரனை செடியை வைத்த பிறகு உடனடி ஆராய்ச்சி ‘எப்போது அறுவடை செய்ய வேண்டும்? ‘அறுவடைக்கு உண்டான அறிகுறிகள் என்ன? என்பது தான். இணையத்தில் தேடி பார்த்தபோது நிறைய Elephant FootYam (சேனை கிழங்கு – வாழை கிழங்கு மாதிரி இருக்குமே) விவரங்கள் தான் பார்க்க முடிந்தது. பிடி கரனையும் கிட்டதட்ட அதே வகை தான். அதனால் அந்த விவரங்களையே எடுத்துக் கொண்டேன். நடவு செய்து கிட்டதட்ட ஐந்து மாதங்களில் கிழங்கு தயாராக இருக்கும். இலைகள் பழுப்பு நிறமாகி லேசாக காய தொடங்குவது கிழங்கு அறுவடைக்கு தயார் என்பதன் ஒரு அடையாளம்.

இந்த செடிகளில் முதலில் வரும் இலைக்கு பிறகு, தளிர் என்பதோ, புது இலை என்பதோ கிடையாது. செடி வந்து ஒரு மாதத்தில் பக்க கிளை ஓன்று வந்தது. அதுவும் கிழங்கில் இருந்து மொட்டு மாதிரியே வந்த குடை மாதிரி விரிந்து கொண்டது. அடுத்த ஒரு மாதத்தில் மூன்றாவதாக ஒரு பக்க கிளையும் வந்தது. என்னடா இது, இடமே இல்லமால் பக்க கிளை வந்துகிட்டே இருக்கே ஒரு வேலை கிழங்கு வச்சி அதுவும் முளைக்க ஆரம்பித்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். கடைசியில் மூன்று கிளைகளோடு நின்று விட்டது.

தரையில் வைத்த செடி இரண்டும் நல்ல செழிப்பாக வந்தது. Grow Bag-ல் வாய்த்த செடி சுமாராக தான் வந்தது. சரியான வெயில் இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். தவிர அவ்வப்போது லேசாய் coir pith-ஐ லேசாய் தோண்டி ஏதும் கிழங்கு வைக்கிறதா என்று அந்த செடியை டார்ச்சர் செய்து கொண்டிருந்தேன்.

பெப்ரவரி 28-ல் முளைக்க போட்ட கிழங்கு, ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 3-ல் முளைத்தது. ஏப்ரலை கணக்கில் எடுத்தால் ஆகஸ்டோடு ஐந்து மாதம் முடிந்திருந்தது. முதலில் வந்த கிளை லேசாய் பழுப்பு நிறத்தில் மாறி காய ஆரம்பித்திருந்தது. முடிவாக coir pith-ல் வைத்த செடியை தோண்டி பார்த்தபோது கிழங்கு ஒன்றும் சரியாக வரவில்லை. எல்லாமே ஒரு நெல்லிக்காய் அளவு கூட இல்லை. அதை பார்த்த போது இன்னும் ஐந்து மாதம் ஆகும் என்று தோன்றியது. எங்கேயோ தப்பு நடந்திருக்கு (coir pith-ல் போதுமான சத்து இருக்காமல் போய் இருக்கலாம், சூரிய வெளிச்சமும் அந்த செடிக்கு குறைவு) தரையில் இருப்பதை தோண்டி பார்த்திட வேண்டியது தான் என்று லேசாய் மேற்பரப்பில் கிளறி பார்த்ததில் கிழங்கு நன்றாகவே தெரிந்தது.

சுற்றி நன்றாக தோண்டி பிறகு செடி மொத்தமாய் எடுத்து பார்த்ததில் ஒவ்வொரு செடியிலும் ஐந்து-ஆறு கிழங்குகள். நல்ல திரட்சியாய். இரண்டாவது செடியிலும் நல்லதாய் அதே மாதிரி கிழங்குகள்.

இந்த செடிகளுக்கு தனியாக உரம் ஏதும் வைக்கவில்லை. பூச்சி தாக்குதல் ஏதும் இல்லை. சரியான நேரத்தில் அறுவடை செய்து, வெறும் ஐம்பது கிராம் அளவில் இரண்டு கிழங்குகளை வைத்து ஒரு கிலோவுக்கு கிழங்கு எடுத்திருப்பது வெற்றி தானே.

கொஞ்சம் காலி இடம் இருந்தால் தாராளமாக இரண்டு கிழங்குகளை நட்டி விடுங்கள். மாதா மாதம் இரண்டு/மூன்று செடி வைத்து விட்டால் வருடம் முழுவதும் கிழங்கு கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளலாம் (இடம் தான் வேண்டும்). கிழங்கு முளைத்து ஐந்து மாதத்தில் அறுவடை என்று கணக்கில் வைத்து கொள்ளலாம்.

கிழங்கு அறுவடை செய்த உடனேயே குழம்பு வைக்க பயனபடுதாமல் ஒரு வாரம் உலர விட்டு பயன்படுத்தினால் அதில் இருக்கும் காரல் தன்மை குறையும் என்று கூறினார்கள். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.




















    
       






Friday, August 15, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – சிவப்பு உருண்டை முள்ளங்கி (Red Globe Radish)

ஜூன் சீசனில் இருந்து முதல் ‘என் வீட்டுத் தோட்டத்தில் வருகிறது. முதலாய் கொஞ்சம் வித்தியாசமாக Red Globe Radish.

முள்ளங்கி பற்றி ஏற்கனவே விரிவாக முன்பு ‘என் வீட்டுத் தோட்டத்தில் வரிசையில் எழுதி இருந்தேன். முட்டைகோஸ், காலி ஃப்ளவர் விதை வாங்க Biocarve.com –ல் பார்த்த போது இந்த Red Globe Radish-ம் கண்ணில் சிக்கியது. பார்க்க அழகாய் இருக்கிறதே, வழக்கமான முள்ளங்கிக்கு இது கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும் என்று இதையும் சேர்த்து ஆர்டர் செய்தேன்.

நீண்ட Growbag-ல் (1 by 3 feet ) பாதிக்கு இந்த சிவப்பு முள்ளங்கியும், பாதிக்கு வழக்கமான வெள்ளை முள்ளங்கியும் போட்டு விட்டேன். இந்த முள்ளங்கியும் ரொம்பவே எளிதான செடியாகவே இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்ந்தது. செடி வெள்ளை முள்ளங்கி மாதிரி தான் இருக்கிறது. பெரிதாய் ஒன்றும் வித்தியாசம் இல்லை.


Biocarve விதைகளின் முளைப்பு திறன் 50% தான் இருந்தது. மற்றபடி செடிகளின் வளர்ச்சி நன்றாக இருந்தது. வழக்கம் போல Coir pith, vermin compost, செம்மண் கலவை தான் Growing media. பூச்சி தாக்குதல் ஒன்றும் இல்லை. விதைத்து 45 நாளில் அறுவடைக்கு வந்துவிடும். ரொம்ப நாள் விட்டுவிட்டால் முற்றி விடும். விதைத்து 45 - 50 நாட்களுக்கும் பார்த்து பறித்து விட வேண்டும்.