Showing posts with label Gooseberry. Show all posts
Showing posts with label Gooseberry. Show all posts

Sunday, February 14, 2016

என் வீட்டுத் தோட்டத்தில் – சொடக்கு தக்காளி



தேவையான காய்கறிகள் விளைவிப்பது தவிர்த்து வீட்டுத் தோட்டத்தின் இன்னொரு முக்கிய பங்கு குழந்தைகளுக்கு இயற்கை மீது ஈடுபாடு கொண்டு வருவது. அதற்காக குட்டீஸ்களுக்கு தோட்டத்தில் வைத்து பாடம் எல்லாம் எடுத்தால் ஓடி விடுவார்கள். அவர்களை செடிகள் மீதான ஈடுபாட்டை அவர்களுக்கு பிடித்த விசயங்களை தோட்டத்தில் கொண்டு வருவதன் மூலம் உருவாக்கலாம். எங்க வீட்டுக்கு வரும் குட்டீஸ் முதலில் கொய்யா மரத்தை பார்ப்பார்கள். பிறகு மணத்தக்காளி பழுத்து கிடந்தால் அதை பறிப்பார்கள். அடுத்தது சொடக்கு தக்காளி செடியை உலுப்பி பழம் தேடுவார்கள். இப்படி தோட்டத்தில் குழந்தைகளுக்கு பிடித்த செடிகள் வைப்பது இன்னும் தோட்டத்தை அழகாக்கும். 

சொடக்கு தக்காளி. இது நிறைய பேருக்கு ஒரு புது பெயராக இருக்கும். கீழே பார்க்கும் பழத்தை உங்க ஊரில் என்னவென்று சொல்வீர்கள் என்று தெரியவில்லை.




எங்க ஊரில் சொடக்கு தக்காளி. இதன் காய் ஒரு பலூன் போல இருக்கும். உள்ளே பழம் பொதிந்து இருக்கும். நாங்கள் இதை வாயில் வைத்து ஊதி அதை அடுத்தவன் மண்டையில் ஓங்கி அடிப்போம். சொடக்கு விடுவது போல சத்தத்தோடு வெடிக்கும். அதனால் இதற்கு சொடக்கு தக்காளி என்று பெயர். எங்கள் விளையாட்டுகளுள் இதுவும் ஓன்று. தவிர நாங்கள் வீட்டில் இருந்ததை விட தேரிக்காட்டுக்குள் சுற்றியதும், ஊரை சுற்றி கருவேலங்காட்டுக்குள் காட்டுப்பயல்களாக சுற்றியதும் தான் அதிகம். அது ஒரு தொலைந்து போன சொர்க்கம். சொடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காட்டில் பழுத்து கிடக்கும் அத்தனை பழங்களையும் இஷ்டத்துக்கு பறித்து சாப்பிட்டுக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்போம். இதை பற்றி எழுத ஆரம்பித்தால் போய்க் கொண்டே இருக்கும், So.. Back to gardening..

சொடக்கு தக்காளியில் இரண்டு வகை உண்டு. ஓன்று சாதாரணமாக பச்சை நிறத்தில் இருக்கும்.  இது பொதுவாக ஊரில் எல்லா இடத்திலும் முளைத்து கிடக்கும். நிறமும் ருசியும் கொஞ்சம் குறைவு.




இன்னொன்று ‘நெய்’ தக்காளி என்போம். அதன் பழம் கொஞ்சம் வரி எல்லாம் போட்டு இருக்கும். பழமும் கூடுதல் ருசியோடு இருக்கும். (அதனால் நாங்கள் ‘நெய்’ தக்காளி என்போம்). இதில் நெய் தக்காளி இங்கே கோவையில் தோட்டத்தில் நிறைய தானாக வளரும். நானும் ஒரு சில பைகளில் விட்டு வைத்து நிறைய பழம் பறிப்போம். 




இதில் மூன்றாவது வகை தான் இந்த பதிவில் கொடுத்திருப்பது. இதன் இலை கொஞ்சம் பவுடர் பூசியது போல மென்மையாக இருக்கும். பழமும் கொஞ்சம் மஞ்சள்-ஆரஞ்சு கலரில் இருக்கும்.           

நான் பொதுவாய் ebay இணையதளத்தில் விதைகள் வாங்க பரிந்துரைப்பதில்லை. பத்து ரூபாய்க்கு கிடைக்கும் விதைகள் ebay-ல் ஐம்பது ரூபாய் இருக்கும். தனி நபர் வர்த்தகம் என்பதால் கூரியர் செலவு,பேக்கிங் செலவு என்று பார்த்தால் அவர்கள் பத்து ரூபாய்க்கு விற்க முடியாது தான். ஆனால் நிறைய ஏமாற்று வேலை தான் நடக்கும். ‘வாங்கின விதை ஒரு மாசமாச்சு...முளைக்கவே இல்லை’ என்று நூறு ரூபாய் கொடுத்து விதை வாங்கினவன் ஒரு Negative Feedback கொடுத்து சாணி அடிச்சா, அங்கே இருந்து விற்றவன் ‘Germination depend on so many factors and weather condition. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்து இருக்கலாமே. மூஞ்சில குத்தறதுக்கு முன்னாடி (negative comment) சொல்லிட்டு குத்தவும்’ என்று இவனும் இங்கே இருந்து சாணி அடிப்பான். நிறைய ebay பரிமாற்றங்கள் இப்படி தான் இருக்கும்.

நான் பொழுது போகவில்லை என்றால் ebay-ல் தோட்டம் சம்பந்தமான பொருட்கள், விதைகள் பட்டியலை பார்த்துக் கொண்டிருப்பேன். Rainbow ரோஸ், 12 கலரில் ரோஸ் (அதுவும் விதையாகவே கிடைக்கும்) என்று பார்த்தாலே கலர்புல்லா இருக்கும். அப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சொடக்கு தக்காளி விதையும் கண்ணில் பட்டது. அமெரிக்காவில் இருக்கும் போது அங்கே உழவர் சந்தையில் இதை ஒரு பண்டமாக விற்பதை பார்த்திருக்கிறேன். சாதாரண சொடக்கு தக்காளியை விட பெரிதாக, நல்ல நிறமாக இருக்கும். விலையை கேட்டால் 5 டாலர் என்பார்கள். போன வேகத்தில் திரும்பி வந்து விடுவோம். அமெரிக்கா போய் சேர்ந்தவுடன் நம்ம மண்டைல ஒரு டாலர்-to-ரூபாய் கால்குலேசன் ஓன்று ஒட்டிக் கொள்ளும். எதை பார்த்தாலும் அது நாற்பதால பெருக்கி பார்த்து கொள்ளும் நமது புத்தி. சொடக்கு தக்காளிக்கு இருநூறு ரூபாயா என்று எட்டிப்பாராமல் வந்து விடுவேன் (அப்போது டாலர் விலை Rs.38 – Rs.40 தான் இருந்தது). இருந்தாலும் நாம் சாதரணமாய் பறித்து சாப்பிட்டு சுற்றிக் கொண்டிருந்த ஓன்று அமெரிக்காவில் ஒரு பண்டமாய் பார்த்ததில் சந்தோசம். 

Farmers Marker - Minneapolis (USA)

Farmers Marker - Minneapolis (USA)


அதையே இங்கே ebay-ல் பார்த்த போது வாங்கி முயற்சித்து தான் பார்க்கலாமே என்று இருந்தது. Ground Cherry அல்லது Gooseberry  என்கிறார்கள். வெறும் பத்து விதைக்கே விலை Rs.120 என்று இருந்தது. விதை இங்கே கொடைக்கானலில் இருந்து விற்கிறார்கள் என்று தெரிந்ததும் ஓரளவுக்கு நம்பிக்கை வந்து ஆர்டர் செய்து விட்டேன். (இதன் விதை இப்போது Omaxe தளத்தில் கூட கிடைக்கிறது). ஒரு வாரத்திலேயே விதை வந்துவிட்டது. பத்து விதை என்று சொன்னாலும் இருபது விதை வரை பாக்கெட்டில் இருந்தது. கூடவே இலவசமாய் ஒரு காரட் விதை பாக்கெட்டும்.

அதிக விலை கொடுத்து வாங்கியதால் கொஞ்சம் அதிக அக்கறையோடு ஒரு நர்சரி ட்ரேயில் போட்டு நீர் ஊற்றி வந்தேன். விதை முளைக்குமா, இல்லை நாமும் ஒரு கூடை சாணி அடிக்க வேண்டுமா என்று ஒரு சின்ன கவலை. முதலில் நினைத்தது மாதிரி நிறைய விதைகள் முளைத்தது. இருபதில் பதினைந்து போல முளைத்தது. அவற்றை ஓன்று விடாமல் காப்பாற்றி தனி தனி பையில் வைத்து விட்டேன் (ஒரு அடி அகல HDPE Grow Bags).

முதலில் நன்றாக வந்து கொண்டிருந்த செடிகள், ஒரு அளவுக்கு மேல் இலை சுருட்டு நோய் தாக்கியது போல ஆனது. சரி, இது கொடைக்கானல் மாதிரி மலைபிரதேசத்திற்கு தான் லாயக்கு போல என்று நினைத்த வேளையில் தொடர் மழை வந்து காப்பாற்றியது. ஒன்றுமே செய்யவில்லை, இரண்டு நாள் மழைக்கே இலை சுருட்டல் எல்லாம் போய் செடிகள் எல்லாம் செழிப்பாகி விட்டது. இப்படி நிறைய சூழ்நிலைகளில் மழை வந்து காப்பாற்றுவது உண்டு.

இலை சுருட்டல் நோய்  

மழைக்கு முன்


மழைக்கு பின் - செழிப்பாய் செடிகள் 


பழத்தின் ருசி என்று பார்த்தால் ரொம்ப விசேசமாய் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என் தோட்டத்தில் சாதாரணமாய் வளர்ந்து காய்க்கும் ‘நெய்’ தக்காளியே இதைவிட இனிப்பாக இருக்கும். இருந்தாலும் ஆசையாய் வாங்கி வளர்த்து வெற்றிகரமாய் பழம் பறித்து சாப்பிட்டதில் சந்தோசமே.