Friday, August 1, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-4 (தோட்டம் – தற்போதைய நிலைமை)

பதிவிற்கு போவதற்கு முன் ஒரு தகவல். நமது ப்ளாக் நண்பர் சேர்மராஜ் பகிர்ந்து கொண்டது. நன்றி சேர்மராஜ்

"சென்னை அண்ணா நகரில் இருக்குற தமிழ்நாடு விவசாய பல்கலை கழகத்தின் சென்னை தகவல் மற்றும் பயிற்சி மையம், வர்ற ஆகஸ்ட் 14ம் தேதி (14.8.14) "சமையலறை தோட்டம்" (Kitchen Gardening) அப்படிங்கற தலைப்புல ஒருநாள் பயிற்சி நடத்துது. நேரம் 9.30 am 5.00 pm.

பயிற்சி கட்டணம் 400 ரூபாய். மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு ஆகியவையும், பயிற்சி நிறைவு சான்றிதழும் கொடுக்குறாங்க.

தொடர்பு எண்: 044-26263484

மண்புழு உரமும் அங்கே கிடைக்கிறது. கிலோ 15 ரூபா.' 

பயிற்சி வகுப்புக்களை நான் பொதுவாய் சிபாரிசு செய்வதில்லை. அதுவும் நானூறு ஐநூறு செலுத்தி போவது. நானே போய் நொந்திருக்கிறேன். TNAU -ல் என்பதால் கொஞ்சம் ஒருபடியாய் இருக்கலாம். விருப்பம் இருந்தால் போய் பாருங்கள்.  

________________________________________________________________________

இந்த சீசனின் தற்போதைய நிலவரத்தை, செடிகளின் நிலைமையை பார்க்கலாம். மே கடைசியில் ஆரம்பித்த செடிகளின் இப்போதைய வளர்ச்சியை பார்க்கலாம்.  

இந்த சீசனின் மிக பெரிய பிரச்னை காற்று தான். பொதுவாய் ஆடி மாதம் தான் காற்று பேயாட்டம் ஆடும். இப்போதெல்லாம் ஜூன் தொடக்கத்தில் இருந்தே (ஆனி மாதம்) அடிக்கும் காற்று ஆளையே தூக்கி போய்விடும் போல. இந்த வருடம் அநியாயத்திற்கு காற்று அடிக்கிறது.24 மணி நேரமும் ஓய்வில்லாமல் அடிக்கிறது. செடி என்ன தான் பண்ணும். மாடியில் ShadeNet வைத்து அமைத்த அமைப்பை எல்லாம் காற்று கம்போடு பிடுங்கி போட்டுவிட்டது. இவ்வளவுக்கும் நன்றாக சிமெண்ட் எல்லாம் போட்டு உறுதியாக தான் போட்டேன். சவுக்கு கம்புகளை உடைத்தே போட்டுவிட்டது. 

நிறைய அவரை செடிகளை அசைத்து வேரோடு பிடுங்கியே போட்டுவிட்டது. சில செடி, கொடிகளின் தளிரை அப்படியே ஒடித்து போட்டுவிட்டது. இவ்வளது சேதாரத்தை எதிர்பார்க்கவில்லை. அடுத்த சீசனை கொஞ்சம் தாமதமாய் ஆரம்பிக்க யோசித்து கொண்டிருக்கிறேன் (ஆடியில் விதைக்கலாம் என்று). ஆனால் ஜூன்-ஜூலை மாதம் வேஸ்டா போய் விடும். இப்போதே நல்ல அறுவடை கிடைக்க ஆரம்பித்து விட்டது. அது ஓன்று தான் யோசனை.

காற்று பிரச்னை இருந்தாலும் இந்த சீசன் எதிர்பார்த்தது போல ரொம்ப நன்றாகவே வந்திருக்கிறது.

வெண்டை, அவரை, கொத்தவரை

     காற்றில் ஒன்றிரண்டு செடிகள் போனாலும், செடிகள் எல்லாமே நன்றாகவே வந்திருந்தது. இந்த வருடத்தில் ஒரு சிறப்பு என்னன்னா, இந்த மூன்றுமே நாட்டு செடிகளாக கொண்டு வந்தது. அடுத்த பருவத்திற்கு விதைக்கும் சில காய்களை விட்டு வைத்திருக்கிறேன். நாட்டு அவரை காய்  வழக்கமாய் இங்கே TNAU-ல் வரும் அவரையை விட கொஞ்சம் சின்னதாய், கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது. அதனால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாய் பறித்தால் தான் கூட்டுக்கோ, குழம்புக்கோ சேர்க்கிறது. அவரை ருசி உண்மையிலேயே வழக்கமாக இருப்பதை விட நன்றாக இருக்கிறது. நன்றாக பூத்திருந்தது, காற்றில் நிறைய பூ உதிர்ந்து விட்டது. 

    

தக்காளி, கத்தரி, மிளகாய்

     தக்காளி தான் ரொம்பவே காற்றில் மாட்டிக் கொண்டது. அதனால் இந்த முறை பெரிதாய் விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. இதுவும் நாட்டு செடி தான். ஓரளவுக்கு காய்திருக்கிறது. நிறைய பூ உதிர்ந்து விட்டது. ஆடி முடிவதற்குள் ஒரு வழியாகி விடும் போல (சரியாக காற்றடிக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டது).

                கத்தரி, மிளகாய் நன்றாக வந்திருக்கிறது. கத்தரியில் வெள்ளை மற்றும் ஊதா இரண்டுமே காய்க்க ஆரம்பித்து விட்டது.




கோஸ், காலி ஃப்ளவர், Broccoli, முள்ளங்கி, கேரட், பீட்ரூட்   

     நம்ம English Garden எதிர்பார்த்ததை விட ரொம்பவே நன்றாக வந்து கொண்டிருக்கிறது. கோஸ், காலி ஃப்ளவர், Broccoli மூன்றுமே செழிப்பாக வளர்ந்திருக்கிறது. மாடிக்கு கொஞ்சம் கீழ் தளத்தில் அமைத்ததனால் காற்றில் இருந்து தப்பித்துக் கொண்டது. மாடி சுவர் ஒரு அரண் போல அமைந்து விட்டது.

பூக்கும் போது பூச்சி தாக்குதல் ஏதும் இல்லை என்றால் நல்ல அறுவடை கிடக்கும். கொஞ்சம் கவனமாகவே பார்த்து கொள்கிறேன். முள்ளங்கி அறுவடை எடுத்தாச்சு. பீட்ரூட்-ம் கேரட்டும் இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறது.



கொடிகள்

     மாடியில் அமைத்த கொடி காற்றில் போய் விட்டது. அதற்காக ஐநூறு ரூபாய் செலவழித்து ShadeNet எல்லாம் அமைத்து இந்த முறை எப்படியும் மாடியில் கொடிகளை கொண்டு வந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். கடைசியில் காற்று எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போய்விட்டது. புடலையும் பாகலும் நன்றாக அப்போது தான் மொட்டு விட ஆரம்பித்தது. கடைசியில் மிஞ்சியது ஒரு புடலை காயும், சில பாகற்காயும் தான்.     

     முன்னால் அமைத்த கொடியில் பீர்க்கையும், பாகற்காயும் அழகாய் படர்ந்து இருக்கிறது. பாகல் காய்க்க ஆரம்பித்து விட்டது. பீர்க்கை இப்போது தான் மொட்டு வைத்திருக்கிறது.

     அடுத்த கொடியில் நாட்டு புடலை (குட்டை மற்றும் நெட்டை) இப்போது தான் பந்தலை தொடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. கொஞ்சம் செழிப்பு குறைவாக தான் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் கவனம் தேவை படும் என்று நினைக்கிறேன்.

கீரை தோட்டம்

                பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, புளிச்சகீரை, அரைக்கீரை, சிறுகீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, கொத்தமல்லி என்று அத்தனையையும் வைத்து அமைத்து. அருமையாய் வந்துகொண்டிருக்கிறது. கிட்டதட்ட எல்லா கீரைகளிலும் அறுவடை எடுத்தாச்சு. கீரை தோட்டத்தை பற்றி விவரமாய் ஒரு பதிவில் எழுதுகிறேன்.  



(தொடரும்)






8 comments:

  1. வணக்கம்

    நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... யாவருக்கும் பயன்பெறும் பதிவு பகிர்வுக்கு நன்றி
    என்பக்கம்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. எனக்கு வீட்டில் இடம் மிகக் குறைவு அதை நிரப்பி விட்டேன்.... BIO BLOOMS ல் ஒரு 5 பிளாஸ்டிக் பைகள் வாங்கி தென்னை நாரும் அங்கேயே வாங்கி செடிகளை வைத்தேன். இது இரண்டும் கோவையில் வேறு எங்கே கிடைக்கிறது என்ற தகவல் சொல்ல முடியுமா? உங்களின் பதிவில் படித்த ஞாபகம் . அக்ரி இண்டெக்ஸில் வாங்கிக்கொள்ளலாம் என விட்டுவிட்டேன். அங்குதான் ஒன்றுமே வாங்க முடியவில்லையே... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் கோவையில் கேட்டால் Arjun Grow Bags-ஐ தான் சிபாரிசு செய்வேன். ஒரு பதிவில் அவர்கள் அலுவலகத்தின் முகவரி, மேப் கொடுத்திருக்கேன் (தகவல் பற்றி ஒரு பதிவில்). Arjun Grow Bags சுங்கம் ரவுண்டான இருக்கு இல்லையா.. நிர்மலா காலேஜ். அதன் அருகில் தான். இந்த வாரம் கூட ஒரு ஆறு காயிர் பித் பிளாக், ஒரு பத்து Grow Bags-ம் ஆர்டர் செய்துள்ளேன். வாங்கி நம்ம விஜய் தம்பிக்கு காரைக்காலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களிடம் விதையும் நன்றாக இருக்கிறது. விலை நியாயமான விலையாகவே தெரிகிறது . மேலும் விவரம் வேண்டும் ஒரு மெயில் அனுப்புங்க எழில்.

      Delete
  3. நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...பதிவுக்கு நன்றி.,.,...

    ReplyDelete
  4. தோட்டத்தில் எல்லாமே நல்லா வளர்ந்திருக்கு வீட்டுதோட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள உங்கபதிவை தொடர்தால் போதும் கொத்தமல்லியை எப்படி வளர்க்கிறீர்கள் விதை மல்லி போட்டால் வளரவே மாட்டேங்கிறது பீர்க்கு பிஞ்சிலே வெம்புவது ஏன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      வீட்டில் இருக்கும் மல்லியை இரண்டாக உடைத்து போட்டு பார்த்தீர்களா? (மொத்தமாக வைத்து நொறுக்கி உடைத்து கொள்ளலாம்). முழுதாக போட்டாலும் கூட முளைக்கும். நான் இந்த முறை பயன்படுத்தியது இங்கே DO IT YOURSELF KIT-ல் கொடுத்தது. பொதுவாய் கடையில் சமையலுக்கு வாங்கும் மல்லி வளர்ந்து கொஞ்சம் இலை வருவதற்குள் பூத்து விடும். இந்த விதை அப்படி இல்லை. நன்றாக இலை விட்டு வருகிறது.

      பீர்கைகாய் வெம்புவது சத்து குறைவாக கூட இருக்கலாம். மண் சத்துள்ளதாக இருக்கிறது. வெம்புவது பற்றி இன்னும் கொஞ்சம் பார்த்து விட்டு கூறுகிறேன்.

      Delete
  5. நன்றி சிவா உங்கள் நேரத்தை ஒதுக்கி பதில் தந்ததுக்கு

    ReplyDelete