Thursday, February 28, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கீரைகள்


கீரைகள் வீட்டுத் தோட்டங்களில் முக்கியமாக வளர்க்க வேண்டிய ஓன்று. இப்போது இருக்கும் நவீன விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டிற்க்கு ஒன்றும் குறைவில்லை. நிறைய விளைச்சல் எடுப்பதற்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி பற்றி நிறைய எழுதலாம் (பிறகு). இது கீரைகளில் தெளிக்கும் போது அது இலைகளில் உறிஞ்சிக் கொள்ளும் விகிதம் காய்கறிகளை ஒப்பிடும் போது அதிகம். அதனால் தான் கடைகளில் கீரைகள் ரொம்ப பிரெஷ்ஷா பூச்சி அரிப்பு ஓன்று கூட இல்லாமல் கிடைக்கிறது. லேசாய் பூச்சி அரித்தாலும் நாம் வாங்குவதும் இல்லை. ஆனால் பொதுவாய் கீரைகளை நிறைய பூச்சிகள் வந்து சாப்பிடும். பூச்சியே சாப்பிட தகாத இலையில் எவ்வளவு ரசாயன மருந்துகள் இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளுங்கள். 

இங்கே வீட்டில் முடிந்த அளவுக்கு கீரைகள் தோட்டத்தில் இருந்து தான் பயன்படுத்துவோம். கீரைகள் வளர்ப்பது மிகவும் எளிது. சில கீரைகள் (புதினா, பொன்னாங்கண்ணி) நமக்கு தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும். மாடி தோட்டங்களிலும் எளிதாக வளர்க்கலாம். ஊடு பயிராக மற்ற செடிகளின் இடைவெளியில் போட்டு வைக்கலாம்.  
 
ஏற்கனவே மணத்தக்காளி கீரை பற்றி தனியாக ஒரு பதிவில் எழுதி இருந்தேன். அதனால் மற்ற கீரைகள் பற்றி பார்க்கலாம்.

சிறுகீரை மற்றும் அரைக்கீரை
     இதன் விதைகள் பொதுவாக எல்லா உரக்கடைகளிலும் கிடைக்கிறது.  கீரைகளில் ரொம்ப ருசியான கீரை என்று இதை சொல்லலாம். ஒரு பாத்தியில் கிளறி விதைகளை தூவி விட்டால் போதும். வளர்ந்தவுடன் போதும் என்ற அளவுக்கு பிடுங்கி கொள்ளலாம். குட்டீஸ்களுக்கு பொதுவாய் கீரை என்றால் பிடிப்பது இல்லை. ஆனால் இந்த கீரைகளை கொஞ்சம் பருப்பு எல்லாம் போட்டு கடைந்து எடுத்தால் சாப்பிட்டு விடுவார்கள். இந்த கீரை வகையில் தண்டங்கீரையும் அடங்கும். ஆனால் அம்மா தண்டங்க்கீரை அவ்வளவாய் நல்ல கீரை இல்லை என்பார்கள். அதனால் வளர்ப்பது இல்லை.

     அரைக்கீரையில் சில நேரம் பூச்சி வந்து இலையை அரித்து விடும். நான் பொதுவாக சாம்பலை செடிகளுக்கு மேலே தூவி விடுவேன் (விறகு எரித்து வரும் சாம்பல்). ஓரளவுக்கு கட்டுபாட்டில் வரும்.    
 

 



பொன்னாங்கண்ணி கீரை
 நிறைய சத்துள்ள ஒரு கீரையாக பொன்னாங்கண்ணி கீரையை சொல்லலாம். கண் பார்வைக்கு ரொம்ப நல்ல கீரை. இங்கே கோவையில் வேறு ஒரு கீரையை தான் பொன்னாங்கண்ணி கீரை என்கிறார்கள். பச்சையும், முழு பிங்க் நிறத்திலும் இந்த கீரை வரும். செடியில் இருந்து பறித்த கீரையில் இருந்து ஒரு குச்சியை வைத்தால் வளர்ந்து விடும். வேண்டும் போது தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பிறகு தளிர் விட்டு வளர்ந்து விடும்.
     பொன்னாங்கண்ணி கீரையில் பூச்சி அரிப்பு வந்து இலையில் சின்ன சின்னதாய் ஓட்டை விழும். தண்ணீர் விடும் போது வேகமாக நீரை செடி மீது பீச்சி அடிப்பதன் மூலம் அந்த பிரச்சினை கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது. 
 


பருப்புக் கீரை
கோவை வந்து தான் இந்த கீரை பற்றி கேள்விப்பட்டேன். இங்கே விவசாய கல்லூரியில் விதை கிடைத்தது. பருப்பு போட்டு கடைந்து கூட்டு வைத்தால் செம ருசியாக இருக்கிறது. போன வருடம் கத்தரியில் ஊடு பயிராக போட்டிருந்தேன்.
 


முருங்கை கீரை
 ஊரில் எல்லாம் இது ஒரு முக்கியமான கீரை. வாரம் ஒரு தடவையாவது முருங்கை கஞ்சி வைப்பார்கள். அவ்ளோ ருசியா இருக்கும். கூட்டும் வைக்கலாம். இங்கே கோவையில், ஒரு பெரிய மரம் இருந்தது. அது முறிந்து விழுந்த பிறகு, தோண்டி எடுத்து விட்டு மாதுளை வைத்து விட்டேன். இருந்தாலும் அந்த மரம் வேரில் இருந்து தளிர்த்து வளர்த்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகிவிட்டது. வெட்ட வெட்ட இன்னமும் தளிர்த்து கொண்டே இருக்கிறது. நாங்களும் கீரைக்காக வளர்த்து பிறகு வெட்டி விட்டுவோம். இந்த மரத்தால் எங்கள் வீட்டில் முருங்கை கீரைக்கு பிரச்சனை இல்லை. 



புதினா
புதினா கீரை ஒரு சிறந்த மூலிகை செடி. வீட்டில் புதினா சட்னி, துவையல் நிறைய செய்வதுண்டு. கடையில் புதினா வாங்கும் போது தூர எறியும் குச்சிகளை நட்டு வைத்தால் போதும், ஒரு வாரத்தில் தளிர் விட ஆரம்பித்து விடும். வளர்ந்தவுடன் தேவையான அளவு வெட்டி எடுத்து கொள்ளலாம். பிறகு தளிர்த்து விடும். தொட்டிகளில் வளர்க்க ஏற்ற கீரை புதினா. 



கொத்தமல்லி
புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி விட்டால் போதும். வளர்ந்து  விடும். நன்றாக வளர்ந்ததும் பிடுங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். பூப்பதற்கு முன் பறிப்பது நல்லது.  
இதை தவிர, அகத்திக் கீரை, புளிச்சக் கீரை, பாலக்கீரை, வல்லாரை, வெந்தயக்கீரை என்று இன்னும் நிறைய கீரைகள் உண்டு. இதில் பாலக்கீரை இங்கே தோட்டத்தில் போன வருடம் சரியாக வரவில்லை. நிறைய பூச்சி வந்து சாப்பிட்டுவிட்டு போய் விட்டது. மீண்டும் முயற்சித்து பார்க்க வேண்டும். மற்ற கீரைகளும் அடுத்த முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

17 comments:

  1. எல்லாக்கீரைகளும் அருமையா வந்திருக்குங்க. வீட்டில் வளர்த்தாலே தனி ருசிதான்! :)

    நான் புதினா மட்டுமே தொட்டியில் வளர்க்கிறேன். மற்ற கீரைவிதைகள் இங்கே கிடைப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகி. ஊருக்கு வரும் போது கொஞ்சம் விதைகள் வாங்கி கொள்ளலாமே..

      Delete
    2. Illainga, Inge US- customs seeds, produce ellam allow panna maattaanga. I miss all these greens. Rarely I get "murungai keerai & thandu keerai" in Chinese market here.

      Delete
  2. பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு. எங்கூட்லயும் பொன்னாங்கண்ணி, சிறுகீரை,பாலக்ன்னு வளர்ப்பதுண்டு. நம்ம வீட்ல விளைஞ்சதுன்னா பூச்சி மருந்து பயமில்லாம சாப்பிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. கீரையில் பூச்சி மருந்து என்பது ரொம்ப கொடுமையான விசயம்.

      Delete
  3. அரைக்கீரை, செம்பருத்தி, துளசி, முருங்கை மரம் - இவை உண்டு...

    படங்களைப் பார்த்தாலே மனம் எவ்வளவு குளிர்ச்சியடைகிறது...!

    நன்றி... பகிர்கிறேன்... G+

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் அவர்களே.

      Delete
  4. கீரை வகை பற்றிய குறிப்பு நன்றாக இருந்தது நானும் மொட்டைமாடியில் காய்கறி செடிகள் வளர்கிறேன் பெரிய அளவில் இல்லை கடந்த மூன்று வருடங்களாக இதற்க்குமுன் பூ செடி மட்டுமே வளர்த்துள்ளேன் எனக்கு ஒரு சந்தேகம் நான் இப்பொழுது போட்டு வைத்திருக்கும் மிளகாய் செடி தளிர்விட்டு நன்கு வந்து திடீர்ரென்று அதன் இலைகள் சுருண்டு போவது போலும் தள தள ப்பு குறைந்தும் விடுகிறது ஏன் என்ன செய்யலாம் மற்ற செடிகளும் சில சமயம் அப்படியே நரங்கி போய்விடுகிறது முடிந்தால் உதவுங்கள் இந்த தளம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நன்றி மலர். மிளகாவில் நானும் அதே பிரச்சனையை தான் சந்தித்து கொண்டிருக்கிறேன். நானும் விதைகளை மாற்றி பார்த்தேன். பருவத்தை பாற்றி பார்த்தேன். ஆனால் செடி ஓரளவுக்கு மேல் வளர்ச்சி இல்லாமல் நின்று விடுகிறது. பிரச்சினையை அறிந்து கொண்டால் தங்களுக்கும் சொல்கிறேன்.

      Delete
  5. கீரைகளின் தொகுப்பு அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சேகர் அவர்களே.

      Delete
  6. சத்தான கீரைவகைகள். அனைத்துமே அருமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  7. ஹைய்யோ!!!!

    அருமை.

    இங்கே புதினா மட்டும்தான் நம்ம வீட்டில். மற்ற கீரை விதைகள் கிடைக்காது. ஒருமுறை ஃபிஜியில் இருந்து வரும் கீரைகளில் இலைகளை மடும் கிள்ளிவிட்டு அந்த தண்டை நட்டு வளர்த்ததில் அவை வளர்ந்து விதை விட்டன. பத்திரமாகஎடுத்து வச்சுருக்கேன்.அடுத்த ஸ்ப்ரிங் சீஸனில் விதைச்சுப் பார்க்கணும்.

    எவ்ளோ நாளாச்சு சொளகு பார்த்து!!!!! சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர்.

      ஆமாம். புதினா தண்டு ரொம்ப எளிதா முளைக்குது.

      /எவ்ளோ நாளாச்சு சொளகு பார்த்து!!!!! சூப்பர்!/ :-))

      Delete
  8. சிவா அவர்களுக்கு நன்றி ! முயற்சியை நான் பாராட்டுகிறேன் ! வளர்ச்சிக்கு அறிகுறி இது ! புளிச்சக்கீரையை நானே Commons wikimedia- வில் போட்டிருக்கிறேன் ! தமிழர் வாழ்வோடு நெருக்கம் கொண்டது கீரைகள் ! -
    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
    எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
    சென்னை-33

    ReplyDelete
    Replies
    1. சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. விக்கியை நானும் பார்கிறேன். வேறு ஏதும் தோட்டம் சம்பந்தமாக தகவல்களோ கருத்துக்களோ இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

      Delete