Friday, September 27, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – தர்பூசணி

சில செடிகள் நல்ல விதையாக போட்டு, உரமாக அள்ளி போட்டு, என்ன தான் சூடம் ஏத்தி விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும், ஒழுங்கா வருவேனா என்று அப்படியே நின்று போய் விடும். சில செடிகள், காட்டு செடி மாதிரி, அது பாட்டுக்க வளர்ந்து காய்த்து கிடக்கும்.

தர்பூசணி, இரண்டு முறை விதை எல்லாம் வாங்கி போட்டு ஒன்றும் வேலைக்காகவில்லை. ஓரளவு வளர்ந்ததும் நோய் வந்தது மாதிரி அப்படியே வளர்ச்சி இல்லாமல் நின்றுவிடும். இந்த முறை கோடையில் (ஜுன் வாக்கில்) வாங்கி சாப்பிட்ட பழத்தில் இருந்து விழுந்த விதை ஓன்று வெங்காய பாத்தியில் இருந்து முளைத்து வந்தது. வீட்டில் காட்டுசெடி என்றார்கள் (தர்பூசணி இலை மாதிரியே ஒரு காட்டுசெடி ஒன்றும் இங்கே வளர்கிறது). ஆனால் எனக்கு இலையை பார்க்க கொஞ்சம் பெரிதாய் தர்பூசணி செடி மாதிரி தான் தெரிந்தது. சரி, காய்க்கும் வரை வளர்த்து பார்த்திடலாம் என்று அப்படியே விட்டுவிட்டேன்.

அதற்கென்று தனி பாத்தியும் கிடையாது. கவனிப்பும் கிடையாது. கொஞ்சம் வளர்ந்த பிறகு வெங்காய செடிகளுக்கு இடையே அது எங்கே இருந்து வருகிறது என்றே தெரியவில்லை. நான்கு வாரத்திலேயே மொத்த இடத்தையும் கைப்பற்றி அடுத்ததாய் மிளகாய், கீரை பாத்தி என்று அது பாட்டுக்கு இருக்கும் இடம் எல்லாம் தர்பூசணி இலையாய் போனது.

கொஞ்ச நாளிலேயே இரண்டு பிஞ்சு பிடித்தது. அது ஓரளவுக்கு சாத்துக்குடி அளவுக்கு வந்த பிறகு தான் வீட்டில் அது தர்பூசணி என்று நம்பினார்கள். கொஞ்சம் பெரிதானது, நான் சும்மா இருக்காமல் சகதி தரையில் பட்டால் காய்  அழுகி விடுமோ என்று நினைத்து, காயை லேசாய் தூக்கி ஒரு காய்க்கு அடியில் கொஞ்சம் வேப்பிலை குவியலை வைத்தேன். இரண்டு நாளில் அந்த காய் அழுகி விட்டது :-(. மிஞ்சியது ஒன்று தான். அதை எந்த தொந்தரவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

ஒரு மாதத்திலேயே நல்ல வளர்ச்சி. அடுத்தது பெரிய பிரச்சனை, தர்பூசணி பழுத்து விட்டதா என்று எப்படி கண்டு பிடிப்பது என்று?. கடைசில கிடைத்த ஒரே பழத்தையும் தப்பாய் சீக்கிரம் பறித்து, வெட்டிப் பார்த்து, உள்ளே வெள்ளையாய் இருந்தால் என்ன செய்ய?. ஒரு ஓட்டையை போட்டு கொஞ்சம் எட்டணா, ஒரு ரூபாய் அள்ளி போட்டு, திருஷ்டி வேணும்னா சுத்தி போடலாம் (தோட்டத்துக்கு தான் :-) ). அப்புறம் இந்த மொத்த காத்திருத்தலும் தண்டமாய் போகும்.

இணையத்தில் ‘How to find ripe watermelon’ என்று தட்டினால், ஒரு பத்து முறைகள் கூறி இருந்தார்கள். அதில் முதலில் தர்பூசணியை புரட்டி பார்த்து அதன் அடிப்பகுதி நிறத்தை பார்த்து கண்டுபிடிப்பது. ஏற்கனவே கை வைத்து தான் ஓன்று போச்சு, அதனால் இந்த சோதனையை கடைசில் வைத்துக்கொண்டேன். நான் எடுத்துக்கொண்ட முறைகள் இவைகள் தான்,

1. Spoon Leaf – எல்லா இலை காம்பும் தொடங்கும் இடத்தில் சின்னதாய் இன்னொரு இலையும் இருக்கும். அதன் வடிவத்தை வைத்து ‘Spoon Leaf’ என்கிறார்கள். காய் வந்திருக்கும் இலையில் வந்திருக்கும் Spoon Leaf, காய் பழுக்க ஆரம்பிக்கும் போது பழுப்பு நிறமாய் மாறி, பின் காய்ந்து விடும். பச்சையாய் இருந்தால் இன்னும் காய் பழுக்கவில்லை என்று அர்த்தம். நான் இதை தான் முதலில் பார்த்துக்கொண்டேன்.
2. அடுத்தது, அந்த இலை அருகில் கொடிக்காக சுருளாய் வரும் கொடி சுருள் (tendril) வைத்து சொல்லலாம். Spoon Leaf மாதிரி தான் இதுவும். பழுப்பாய் மாறி காய்ந்து இருக்க வேண்டும். நான் பறித்த போது பக்கத்து இலை சுருள் எல்லாம் காய்ந்து இருந்தது ஆனால் காய் இருந்த சுருள் காயாமல் கொஞ்சம் பழுப்பு நிறமாய் இருந்தது.
3. முதலில் சொன்னது மாதிரி, தரையில் பட்டிருக்கும் காயின் அடிப்பகுதியின் நிறம். அது மஞ்சளாகவோ, இளம் மஞ்சளாகவோ இருக்க வேண்டும். வெள்ளையாகவோ, இளம் பச்சையாகவோ இருந்தால் இன்னும் பழுக்கவில்லை என்று அர்த்தம். ஆனால் அடிக்கடி புரட்டி பார்த்தால் காய் வாடி போகலாம். கவனம்.  நாம் கடையில் பழம் வாங்கும் போதும் இதை பார்த்து வாங்கலாம்.
நான் முதலில் Spoon Leaf-ஐ பார்த்தேன். அப்போது தான் பழுப்பாக ஆரம்பித்திருந்தது. மூன்று நாளில் காய்ந்து விழுந்து விட்டது. அதன் பிறகு ஒரு ஐந்து நாள் கழித்து, லேசாய் காய் புரட்டி பார்த்தேன். இளம் மஞ்சள் நிறம் தெரிந்தது. தர்பூசணியை ரொம்ப பழுக்க விட்டாலும் அது ஒரு மாதிரி சுவை இல்லாமல் போய் விடும். இன்னொன்று, தர்பூசணி மற்ற பழங்கள் மாதிரி பறித்து வைத்த பிறகு பழுக்காது. மேலே சொன்ன சகுனம் எல்லாம் சரியாக இருக்க, இந்த வாரம் பறித்து விட்டோம்.

வெட்டும் போது ஆர்வமாய் தான் இருந்தது. பழம் perfect-ஆக பழுத்திருந்தது. நல்ல நிறம். மொத்த எடை ஐந்து கிலோ (நல்ல தரம் தான்). அதுவாகவே வளர்ந்த செடியில் பழம் பறித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோசம் :-).  இப்போது கொஞ்சம் மழை காலம் என்பதாலும், சில மழை பெய்திருந்ததாலும், பழம் இன்னிப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்ல இனிப்பு.இதில் இருந்து விதை எடுத்து கொஞ்சம் செடி கொண்டு வந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

அதே செடியில் இன்னும் கொஞ்சம் பிஞ்சு பிடித்திருக்கிறது. எப்படி வருகின்றதென்று  பார்க்கலாம்.
8 comments:

 1. கலக்குங்க!
  இங்கு இப்போது தான் இதன் விற்பனைக் காலம் முடிகிறது. குளிர் தொடங்கிவிட்டது.
  இதை ஈழத்தில் வத்தகப்பழம் என்போம்.

  ReplyDelete
 2. வாவ்!!!! தானே முளைச்சதுக்கு ருசி கூடுதலாகவே இருக்கும். இஷ்டப்பட்டு முளைக்குது பாருங்க அதான்:-)

  நமக்கு ட்ராப்பிகல் செடிகள், பழங்கள் எல்லாம்....மூச். வாயைத் தொறக்கப்டாது,

  கடையில் வாங்கி முழுங்கிக்கணும்..

  அடுத்த ஆண்டு பலன் கூடுதலாகக் கிடைக்க வாழ்த்துகின்றேன்.

  ReplyDelete
 3. அதுவாகவே வளர்ந்த செடியில் பழம் பறித்து சாப்பிடுவது ஒரு தனி சந்தோசம் :-).

  அருமையான தோட்டம் ..!

  ReplyDelete
 4. அருமை! சரவணம்பட்டில தர்பூசணி கொடி வளர்த்து பழமும் பறிச்சு சாப்ட்டுட்டீங்க, சூப்பர்! அடுத்த சீசனில் இன்னும் நிறையப் பழங்கள் வர வாழ்த்துக்கள்! :)

  தானாவே வந்த செடி என்றால் அதுமேல ஒரு தனிப்பாசம்தான்! :)

  ReplyDelete
 5. படங்களுடன் பதிவு அழகா இருக்கு.கவனிப்பு இல்லாமல் தானாக வளர்ந்து பிடித்த பழத்தைக் கொடுக்கிறது என்றால் அதன்மேல் தனிப்பாசம் வரத்தானே செய்யும்!இந்தப் பதிவில்தான் தர்பூசணி செடியையேப் பார்க்கிரேன்.

  ஊரில் இருந்தவரைக்கும் தர்பூசணியை வாங்கி சாப்பிட்டதைவிட நிறைய ஏமாந்ததுதான் அதிகம்.இப்போதெல்லாம் பளபளப்பில்லாமல் & டல்லடிக்கிற நிறத்தில், தட்டிப்பார்த்து,சூரிய ஒளி படாத பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருப்பதை வாங்கி, இஷ்டத்திற்கும் சாப்டாச்சு.

  ReplyDelete