Friday, August 30, 2013

தோட்டம் – Nursery Tray-ல் முதல் முயற்சி



பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி), சில நாற்று விட்டு வளர்ந்த பின் நட வேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்து கொண்டு வருவதும் கடினம்.

நான் பொதுவாக நாற்று விட தனியாக ஒரு சிறிய பாத்தி ஒன்றை தயார் செய்து கொஞ்சம் இடைவெளியில் விதைத்து வளர்ப்பது உண்டு. இதில் சில பிரச்சனைகள், தக்காளி, கத்தரி செடிகள் பொதுவாக நெருக்கமாய் வந்து விடும். ஒரு செடி என்று தோண்டி எடுக்க கடினமாக இருக்கும். தவிர வேரோடு தோண்டி எடுத்தாலும் புதிய இடத்தில வேர் பிடிக்கும் வரை ஒரு இரண்டு நாள் நாற்று வாடி பிறகு தான் நன்றாக வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த முறை Nursery Tray மூலமாக நாற்று உற்பத்தி செய்ய முயற்சி செய்து பார்த்தேன். 

போன வருடமே இதை முயற்சி செய்ய நினைத்தது தான். ஆனால் Nursery Tray எங்கும் கிடைக்க வில்லை. இங்கே சில நர்சரி கார்டன்களில் அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்திருந்தார்கள். இந்த முறை இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது Nursery Tray கிடைத்தது.

Nursery Tray பயன்படுத்தும் போது, மணல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் நாரில் இருந்து வரும் தூள் பயன்படுத்த வேண்டும். நான் வீட்டில் கிடந்த தேங்காய் நெட் கொஞ்சம் எடுத்து கையை வைத்தே உதிர்த்து ஓரளவு தூள் தயார் செய்து கொண்டேன். தும்பு/நார் ஏதும் இல்லாமல் வெறும் தூள் மட்டும் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.  வெறும் தூள் மட்டும் போட்டால் சத்து எதுவுமே இருக்காது. எனவே பாதிக்கு பாதி என்ற அளவில் மண்புழு உரம் கலந்து எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு குழியிலும் பாதி அளவு போட்டு, பிறகு வரிசையாக விதைகளை போட்டு மூடிவிடலாம். ஒரு பேப்பர் எடுத்து அதில் நம்ம Nursery Tray க்கு ஒரு லே-அவுட் போட்டு எந்த வரிசையில் எந்த விதை என்று குறித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் முளைத்தத பிறகு குழப்பம் வரலாம் (குறிப்பாக வெள்ளை, வயலட் கத்தரி, நாட்டு, பெங்களூர் தக்காளி என்று சேர்த்து விதைக்கும் போது). கொஞ்சம் வெயில் படும் இடத்தில் வைத்து நீருற்ற நான்கு ஐந்து நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்து. 

முதலில் முளைக்கும் போது பெரிய விதைகள் தேங்காய் தூளை அப்படியே பெயர்த்து கொண்டு வரும். இலை வெளியே வந்ததும் அந்த தூளை மறுபடி அந்த குழியில் போட்டு மூடி விடவும். 

Nursery Tray பயன்படுத்துவதில் நான் கண்ட நன்மைகள்,

·         விதைகளின் முளைப்பு திறன் அதிகமாக இருக்கிறது. பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கும் போது சில விதைகள் முளைக்காது. ஆனால் இதில் எல்லா விதைகளும் முளைத்து விட்டது.
·         சரியாய் திட்டமிட்டு வரிசையாய் நடலாம்.
·         கொஞ்ச இடம் இருந்தால் போதும். இந்த சின்ன Tray-ல் நூறு நாற்றுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்கிறது. இதையே பாதியில் விட்டு வளர்த்தால் நிறைய இடம் தேவை படும்.
·         எடுத்து நட ரொம்ப எளிது. இது லேசாய் செடியை பிடித்து இழுத்தால் அப்படியே தக்கை போல வந்து விடுகிறது. பிடுங்குவதற்கு முன் நீர் தெளித்து விட்டு பிடுங்குவது நல்லது. இல்லாவிட்டால் தேங்காய் நார் தூள் லேசாய் உதிரும்.
·         நாற்று பிடுங்கி நட்டிய பிறகு வாடுவதில்லை. நாற்று அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது. மண்ணில் இருந்து பிடுங்கி நடும்போது லேசாய் வாடி விடும். அந்த பிரச்னை இதில் இல்லை.        

இப்போது பீன்ஸ் நாற்று மட்டும் எடுத்து பாத்திகளில் நட்டிருக்கிறேன். இன்னும் Tray-ல் கத்தரி, வெண்டை, கொத்தவரை, புடலை, பாகல் நிற்கிறது.









8 comments:

  1. எல்லா நாற்றுகளும் நல்லபடியாய் வளர்ந்து அமோக விளைச்சலைத் தர வாழ்த்துக்கள்ங்க! :)

    இங்கே இது போன்ற டிரேக்கள் சர்வசாதாரணமாய்க் கிடைக்கின்றன. நான் இதுவரை விதை போட்டு செடிகள் வளர்க்கலை, அப்படி வாங்கி முயற்சித்த விதைகளும் தரமானதாக இல்லாமல் செடி சரியாய் வரலையோஎன எனக்கு சந்தேகம், அதனால நாற்றுகளாகத்தான் வாங்கி வளர்க்கிறேன். இந்த முறை கத்தரி-குடைமிளகாய்-தக்காளி-மிளகாய் நாற்றுகள் நட்டிருக்கேன். :)

    ஹேப்பி கார்டனிங்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மஹி.

      எனக்கு விதை தரம் பற்றி அவ்வளவாய் ஒன்றும் பிரச்சனை இல்லை. இந்த வெண்டை விதை எல்லாம் நானே போன பருவத்தின் காய்களை விதைக்கு விட்டு எடுத்தது தான். விளைச்சலும் நன்றாக தான் வருகிறது.

      நாற்று வாங்கி நாட்டினால் விலை அதிகம் ஆகுமே (இங்கே ஒரு கண்காட்சியில் வெறும் கத்தரி தக்காளி நாற்று ஒன்றே ஏழு ரூபாய் என்றார்கள்).

      நானும் குடை மிளகாய் நானும் நட்டிருக்கிறேன். பார்க்கலாம்

      Delete
  2. பயனுள்ள பதிவு. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்க தோட்டம் பற்றிய விளக்கங்கள், படங்கள் நன்றாக இருக்கு. தேங்காநார் பதில் வேறேதும்
    சாய்ஸ் இருக்கா. ஊரிலிருந்தால் நிச்சயம் செய்த்திருப்பேன். ஜேர்மனியில் நாருக்கு எங்கே போவேன். மிகவும் பயனுள்ள விடயங்களை தாறீங்க. நன்றி. உங்க தோட்டம் நன்றாக வர என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ப்ரியசகி.

      ஜெர்மனியில் இருக்கீங்களா. தேங்காய் நார் நீரை உறிஞ்சி கொள்ளும் தனமைக்க்காகவும், வேர் போக எளிதாக இருக்கும் காரணத்திற்காகவும் பயன் படுத்துகிறோம். அதற்கு மாற்றாகாக இலை துகள்கள், தவிடு மாதிரி ஏதும் வைத்தும் முயற்சி செய்து பார்க்கலாம்.

      Delete
  4. வணக்கம் சிவா அவர்களே.. நான் உங்கட பதிவு வாசித்த பிறகுதான் எங்கட வீட்டிலும் (யாழ்ப்பணத்தில்) தோட்டம் செய்ய தொடங்கியுள்ளேன். மிகவும் பயனுள்ளதாகவும் எங்களையும் ஊக்கப்படுத்துவது போல இருக்கும் உங்கட பதிவுகள். என்ர சந்தேகம் என்னவென்றால்...அவரை, பாகல் போன்றவற்றை நாற்று மேடையில் உற்பத்திசெய்து பிடுங்கி நட்டால் பிரச்சனையிலாம வளருமோ??

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப சந்தோசம் பாலா அவர்களே.

      அவரை, பாக்கள் நாற்று எடுத்து நாடுவதால் ஒன்றும் பிரச்னை வராது. நானும் புடலையும் பாக்களும் விட்டிருக்கிறேன். இனி தான் எடுத்து நட வேண்டும்.

      Delete