Saturday, August 3, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – சாத்துக்குடி



சில செடிகளுக்கு நாம் ரொம்பவே கவனம் கொடுத்து நன்றாக கொண்டு வர முயற்சிப்போம். ஆனால், அது சரியாய் வராது (முந்தைய பதிவில் சொன்ன மிளகாய் மாதிரி). அதே நேரத்தில், சில மரங்கள், நாம் கவனமே இல்லாமல் தானாகவே வளர்ந்து கலக்கலாய் காய் கொடுக்கும் (எங்க வீட்டு கொய்யா மரம் மாதிரி). இதில், சாத்துக்குடி இரண்டாவது ரகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் இருந்து மாதுளை, சீத்தா மரக்கன்றுகள் வாங்கி வரும் போது சாத்துக்குடி நாற்று ஒன்றும் ஆசையில் வாங்கி வந்தேன். வழக்கம் போல, வந்தவுடன் ஒரு பெரிய சிமெண்ட் சாக்கில் மண் நிரப்பி எல்லா கன்றுகளையும் வைத்து வளர்த்தேன். ஓரளவு வளர்ந்ததும், மாதுளை, சீத்தாவுக்கு ஒரு இடம் ஒதுக்கி தரையில் வைத்து விட்டேன். ஆனால், சாத்துக்குடிக்கு இடம் இல்லை. 

வைத்த மாதிரியே ரொம்ப மாதங்களாக சாக்கு பையிலேயே இருந்தது. இடம் இல்லாததால், தூக்கி வெளியே போட்டு விடலாம் என்று கூட நினைத்ததுண்டு. பிறகு ஓர் ஓரமாக, மா மரத்தின் அடியில் வைத்து விட்டேன். மா மர நிழலில் ரொம்ப மாதங்களாக அப்படியே நின்று கொண்டிருந்தது. போதாதற்கு பக்கத்தில் இருந்த இரண்டு பப்பாளி மரங்களும் அதற்கு சுத்தமாக வெயில் கிடைக்காமல் செய்து விட்டன.

போன வருடம் இங்கே பெய்தது ஒரே ஒரு மழை. அது ஊரில் இருக்கிற நிறைய மரங்களை காலி செய்து போனது. அதில் அந்த பப்பாளி மரங்கள் இரண்டும் அப்படியே மாடி படியில் சாய்த்து போனது (அதோடு கறிவேப்பிலை மரமும் வேரோடு போனதை முன்பு எழுதி இருந்தேன்). பப்பாளி மரங்களை தூக்கி நிறுத்திய போதும், முன் அளவுக்கு நேராக கொண்டு வர முடியவில்லை. அந்த கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம், வெயிலே கிடைக்காமல் நின்று கொண்டிருந்த சாத்துக்குடிக்கு, பப்பாளி சாய்ந்ததால் நன்றாக வெயில் கிடைக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் வெயில் கிடைத்ததும் இரண்டு மாதத்திலேயே மட மடவென்று பூத்து, பிஞ்சும் பிடிக்க ஆரமித்தது. அதற்கு அப்புறம் அதை வெளியே எடுத்து போட மனம் வரவில்லை. போன்சாய் மரம் மாதிரி, அதிலும் பெரிதாய் ஐந்து சாத்துக்குடி பழங்கள். அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றக் கூட பாத்தி கிடையாது. பப்பாளிக்கு தண்ணீர் விடும் போது, லேசாய் விடுவதோடு சரி. இது வரை உரம் என்று ஓன்று இட்டதில்லை. வேர் போக கூட இடம் இல்லாமல், கீழே ஒரே சரல் மண். எங்கே இருந்து அதற்கு சத்து எடுத்துக் கொண்டதோ, சாத்துக்குடி ரொம்பவே பெரிதாய், பார்க்கவே திரட்சியாய், அழகாய் இருந்தது.

இந்த செடி கடைசியில் எங்களுக்கு ஒரு சென்டிமென்ட் ஆகி போனது (‘நானும் நன்றாக காய்திருக்கிறேன், எனக்கும் ஒரு இடம் கொடுங்கள் என்று நம்மை பார்த்து கேட்பது போல அதை பார்த்தால் தோன்றும்). பழம் இனித்தால் வைத்துக் கொள்ளலாம், ரொம்ப புளித்தால் தூக்கி வெளியே போட்டுட வேண்டியது தான் என்று கடைசி முடிவு.

போன மாதம் தான் அறுவடை. பழம் புளிக்கவில்லை. இனிப்பு கொஞ்சம் குறைவு தான். அதற்கு எந்த சத்தும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாய் இருக்கலாம்.
கடைசியில் அதற்கும் ஒரு இடம் கொடுத்து விட்டோம். இரண்டாவதாய் வைத்த சீத்தா நாற்று ஒன்றை எடுத்து பின்னால் பெரிய சீத்தா மரம் அருகிலேயே வைத்து விட்டு, அந்த இடத்தில் இப்போ சாத்துக்குடி சந்தோசமா நிற்குது :-)












 The new place for it


13 comments:

  1. வாவ்.. அசத்தல். கவனிப்பில்லைன்னாலும் நல்லா விளைச்சல் கொடுத்திருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. சாத்துக்குடி தந்த சந்தோஷம்..!

    ReplyDelete
  3. ஃப்ரெஷ்ஷான சாத்துக்குடி,பார்க்கவே அழகா இருக்கு. வீட்டில் தோட்டம் வைப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உங்கள் ப்ளாக் உதவியாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது எல்லா பதிவுகளையும் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா சுந்தர் அவர்களே. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். நன்றி :-)

      Delete
  4. தொடர்ந்து நான் உங்கள் பதிவுகளை எதிர் பார்த்து படித்து வருகிறேன்.
    தங்களின் அனைத்து பதிவுகளும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல் அவர்களே :-)

      Delete
  5. My first visit here. Beautiful blog I came through valaisaram. I will read your old posts soon.
    www.vijisvegkitchen.blogspot.com

    ReplyDelete
  6. சாத்துக்குடி பார்க்க சந்தோஷமா இருக்கு உண்மையில் செடிகொடிகளும் மனதிற்கு சந்தோசம் தரும் செல்லங்கள் தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் Angelin. :-) . இப்போ மறுபடி கொஞ்சம் பிஞ்சி பிடித்திருக்கு. எப்படி வருதுன்னு பார்க்கணும்.

      Delete