Friday, May 24, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – கொண்டை கடலை



இங்கே கோவையில் ஆபிசுக்கு வரும் வழியில் நிறைய விளைநிலங்களை பார்க்கலாம். ஆனால் பெரிதாய் ஏதும் நடுவதில்லை. பொதுவாய் கால்நடை தீவன பயிர்கள் அல்லது கொண்டை கடலை. இவை இரண்டும் தான். நீர் ஆதாரம் அவ்வளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். இந்த கொண்டை கடலை செடியை ‘இது என்னவாய் இருக்கும் என்று வரும் போதெல்லாம் பார்த்துக்கொண்டே வருவேன். செடியில் சின்னதாய் குண்டு குண்டாய் தொங்கி கொண்டிருக்கும் பை போன்ற காய்கள். அந்த பைக்குள் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. ஒருநாள் வரும் போது பைக்கில் இருந்து வயலில் இறங்கி காயோடு இரண்டு செடிகளை பறித்து வந்தேன். பார்த்தால் கொண்டை கடலை. நான் கொண்டை கடலை பீன்ஸ் மாதிரி காய்க்கும், உள்ளே வரிசையாய் கடலை இருக்கும் என்று நினைத்திருந்தேன். இப்படி தனி தனி கடலைக்கு கவர் எல்லாம் போட்டு இருக்கும் என்று நினைக்கவில்லை :-) . அதை பறித்து வந்து இங்கே Project  மக்களிடம் ஒரு போட்டி வேறு வைத்தேன். யாருமே கண்டுபிடிக்கவில்லை (என்னடே, கோவில்ல நல்லா சுண்டல் வாங்கி திங்கறீங்க. சுண்டல் எப்படி காய்க்கும்னு தெரியாதா :-) )

தோட்டத்தில் ஒரே வகை காய்கறிகளை பயிரிட்டால் நிலம் மேம்படாது. ஒவ்வொரு செடியும் வெவ்வேறு சத்துக்களை நிலத்தில் இருந்து எடுக்கும், அதே சமயம் வெவ்வேறு சத்துக்களை நிலத்திற்கு அளிக்கும். அதனால் ஒரே இடத்தில் வேறுவேறு செடிகளை பயிரிடுவது அவசியமாகிறது. அப்போது தான் நல்ல மகசூல் கிடைக்கும். நிலமும் பன்பட்டிருக்கும். ஒரு முறை தக்காளி போட்டால், அடுத்த முறை அதே இடத்தில் அவரை போடலாம், அடுத்த முறை வெண்டை. இப்படி பயிர் சுழற்சி (crop rotation) மிக அவசியம்.

பட்டாணி, அவரை, கொண்டை கடலை பயிர்களில் வேர்முண்டுகள் (root nodules) பற்றி படித்திருப்போம். இவைகள் மண்ணில் நைட்ரஜன் சுழற்சிக்கு (Nitrogen fixation) பெரிதும் உதவுகின்றன. பயிரிடப்படும் மண்ணுக்கு மீண்டும் நைட்ரஜன் சக்தியை மீட்டு வளர்ந்த மண்ணை வளமாக்கும். இவற்றின் வேர்களில் வளரும் ஒருவித பாக்டீரியா காற்றில் உள்ள நைட்ரஜனை செடிகளுக்கு தேவையான சத்துக்களாக மாற்றி வேர் முண்டுகளில் (root nodules) சேர்த்து வைக்கும். அதனால் பயிர் சுழற்சியில் இவைகள் முக்கியமான பயிர்கள்.

நான் கொண்டை கடலை பயிரிட்டது இந்த காரணமாக தான். மற்ற படி கொஞ்சமாய் பயிரிடும் போது பெரிதாய் மகசூல் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு செடியில் பத்தில் இருந்து இருபது வரை மட்டுமே கடலை காய்க்கிறது. இவைகள் வறட்சியை தாங்கி வளரும் செடி. அதனால் இங்கே பாசனம் இல்லாமலேயே அறுவடை செய்கிறார்கள். மழை காலத்தில் விதைக்கிறார்கள். நீர்பாசனமே கிடையாது. மழையிலும், டிசம்பர் மாத பனிபொழிவில் வளர்த்து விடுகிறது.

விதை என்று தனியாக வாங்க வேண்டியதில்லை. கடையில் வாங்கும் கொண்டை கடலையில் கொஞ்சம் எடுத்து விதைக்க வேண்டியது தான். நான் கருப்பு கடலை எடுத்து விதைத்தேன். எடுத்து அப்படியே விதைக்க வேண்டியது தான். வாரம் ஒரு முறை லேசாய் நீர் விட்டால் போதும். காய்த்து செடிகள் எல்லாம் காய ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வேறு எந்த பராமரிப்பு தேவை இல்லை. முக்கியமாக அறுவடைக்கு பிறகு வேரோடு செடியை அதே பாத்தியில் தோண்டி வைத்து விடவும்.

தோட்டத்தில் இருந்து சில படங்கள்
















19 comments:

  1. படத்துடன் விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. அட! இதுவரை நான் முயற்சி செய்து பார்க்கலையே!!!!

    பூனாவில் இருந்தபோது கொண்டைக்கடலை சீஸன் வந்தால் செடியோடு அப்படியே விற்பாங்க. நாங்க ஒரு கட்டு வாங்கி கடலையைப்பிரிச்சுத் தின்னுக்கிட்டே நடப்போம். கடலை காலியானதும் கையிலிருக்கும் செடி எதிரில் வரும் எதாவதொரு மாட்டுக்கு:-)

    வியாழக்கிழமை சன்னா மாலை செஞ்சு கொண்டுவந்து நம்ம வீட்டு சாமிக்குப் போட்டாங்க தோழி.

    இன்னிக்கு அதைப் பார்த்ததும் என்ன செய்யலாமுன்னு யோசிச்சேன். உங்க பதிவு வழி காமிச்சுருக்கு. பேசாம எடுத்து நட்டு வைக்கப்போறேன்.

    பரிசோதனை!!!

    ReplyDelete
    Replies
    1. நல்லது டீச்சர். கொண்டை கடலை அப்படியே சாப்பிட விற்பாங்களா.. நல்ல இருக்கே.. அப்படியே சாப்பிட நல்லா இருக்குமா..

      முயற்சி செய்தது பாருங்க... ஆனா ரொம்ப விளைச்சல் எல்லாம் எடுக்க முடியாது. ஒரு பத்து செடி வைத்தால், மேல காட்டியிருக்கிற அளவுக்கு கடலை கிடைக்கிறது..

      Delete
  3. விதைப்பிலிருந்து அறுவடை வரை எவ்வளவு நாளாகிறது? நன்றி பதிவுக்கு...

    ReplyDelete
    Replies
    1. நான்கு மாதங்கள் ஆகிறது. ஜனவரி இறுதியில் விதைத்தது, இப்போது அறுவடைக்கு வந்துள்ளது.

      Delete
  4. நண்பரே, உங்கள் தோட்ட முயற்சிகளை தொடர்ந்துப்படித்து வருகிறேன். இங்கு சென்னையில்
    மாடியில் சில செடிகள் வைத்துள்ளேன். உங்களிடம் சில ஆலோசனைகள் தேவை.
    1- செடிக்கு உரம் என்ன போடுகிறீர்கள்?.

    2-செம்பருத்தி, பவளமல்லி, அரளி செடிகளில் மாவு பூச்சி மண்டுகிறது. அவைகளை எப்படி
    கட்டுப்படுத்துவது? செடிகளை சுற்றி நிறைய எறும்பு புற்றுகள். அவைகளை எப்ப்டி ஓட்டுவது?

    3- மிக நன்றாய் இருந்த சாதாரோஜா செடியும், அடுக்கு மல்லியும் இலைகள் காயத்தொடங்கி அப்படியே
    செடி காய்ந்துவிட்டது. கார்ணம் என்னவாய் இருக்கும்?

    நான் செடிகள் வளர்க்க இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளேன். அதனால் இத்தனை சந்தேகங்கள். உங்கள்
    பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹாய் உஷா. எப்படி இருக்கீங்க? ( 2005-2006 களில் என்னுடைய சிவபுராணம் ப்ளாக் மூலம் உங்களை தெரியும். உங்களுக்கு நியாபகம் இருக்கா என்று தெரியவில்லை)

      1. செடிக்கு உரம் என்று பெரிதாய் ஏதும் போடுவது இல்லை. ஒரு வருடத்திற்கு முன்பு இங்கே கோவை விவசாய கல்லூரியில் கிடைக்கும் மண்புழு உரம் வாங்கி போடுவேன். இப்போதைக்கு இங்கே மரங்களில் இருந்து விழும் இல்லை சருகுகளே மக்கிய உரமாக பயன்படுகிறது. தவிர கிச்சன் காய்கறி கழிவுகளை உரமாக போடுவேன். மற்ற படி ரசாயன உரம் சுத்தமாக தவிர்க்கிறேன். இப்போதைக்கு செடிகள் நன்றாக வருகிறது. மாடி தோட்டம் என்றால் உரம் தேவை படும். மண்புழு உரம் கிடைத்தால் போடுங்கள்.

      2. இங்கேயும் செம்பருத்தியில் மாவு பூச்சி வந்தது. கொஞ்சம் சிக்கலானது தான். முதலில் உடனே செய்யவேண்டியது பாதிக்கபட்ட கிளைகளை வெட்டி, மொத்தமாக எரித்து விடுங்கள். இல்லாவிட்டால் மொத்த செடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். நான் இப்பிடி தான் கட்டுபடுத்தினேன். இப்போது செம்பருத்தி நன்றாக பூக்கிறது. மற்றபடி நான் வேப்பிலை, இஞ்சி கரைசல் தெளித்து பார்ப்பது உண்டு. நான் பூச்சி கட்டுபடுத்ததில் இன்னும் கற்று கொண்டு தான் இருக்கிறேன்.

      3. செடி காய்ந்து போனால் வேர்பூச்சி காரணமாய் இருக்கலாம். நான் பொதுவாக ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு வாங்கி, நீரில் கரைத்து எல்லா செடிகளுக்கும் ஊற்றி விடுவேன். எந்த பிரச்சனையும் இல்லை. முயற்சித்து பாருங்கள்.

      நன்றி

      Delete
  5. உங்க ஆர்வம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு.. அதோடு நாமும் இது போல முயற்சிக்கணும் என்று ஆசை.

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரி. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நன்றி.

      Delete
  6. தங்களை பார்த்து நானும் தொட்டிகளில் உருளை தக்காளி பீன்ஸ் ஆகியவற்றை வளர்கிறேன் நன்றாக வந்துள்ளது .நன்றி அடுத்த பதிவு எபொழுது காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இதை கேட்பதற்கு ரொம்ப சந்தோசம் ஜெயகுமார் அவர்களே. பீன்ஸ் நன்றாக வருகிறதா. நல்லது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete
  7. மும்பையிலும் சங்கராந்தி சமயங்கள்ல கொண்டைக்கடலை செடியோடு கிடைக்கும். கடலைக்காய்களைப் பிரிச்செடுத்து வாணலியில் போட்டு வாட்டியும் சாப்பிடலாம், நல்லாவே இருக்கும். இங்கே தள்ளுவண்டியில் விற்பனை கொடிகட்டிப் பறக்கும். எங்க வீட்டிலும் ஆசைக்கு ரெண்டு செடி வெச்சு வளர்த்தேன். ஏழெட்டு கடலை கிடைச்சது :-)

    ReplyDelete
    Replies
    1. நல்லது. எல்லோருமே பச்சையாய் சாப்பிடவும், வாணலியில் வறுத்து சாப்பிடவும் நன்றாக இருக்கும் என்று சொல்றீங்க. இதற்காகவே இந்த முறை மறுபடி ஒரு தடவை விதைக்கலாம் போல.

      வீட்டில் கூட இரண்டு செடி வச்சு விடுங்க. அப்போ தான் சுண்டல் செய்ய கடலை கிடைக்கும்.

      Delete
  8. மழையிலும், டிசம்பர் மாத பனிபொழிவில் வளர்த்து விடுகிறது.

    இதற்கு பனிக் கடலை என்ற பெயரும் உண்டு..!

    ReplyDelete
    Replies
    1. 'பனி கடலை' பெயர் பொருத்தமா தான் இருக்கு. :-)

      Delete
  9. அருமையான பதிவு.
    எனக்கு பூச்செடிகள் தான் ரொம்ப பிடிக்கும்.
    இருந்தாலும் மிளகாய் தக்காளி என்று வைத்துப் பார்த்தேன்.
    பலன் ஒன்றும் இல்லை.
    உங்களின் பதிவு மேலும் ஆசையைத் துாண்டிவிடுகிறது.
    திரும்பவும் முயற்சிக்கிறேன்.
    நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருணா செல்வம் அவர்களே. இந்த முறை தக்காளி சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது என் தோட்டத்தில். மீண்டும் முயற்சித்து பாருங்கள்.

      Delete
  10. வாவ், அற்புதமான படம்,வீட்டில் விளைந்த பொருளை சாப்பிடும் சுகம் அலாதியானது.

    கார்த்திகேசன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்திக்கேசன்

      Delete