Saturday, August 15, 2015

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – Part – 2 (பூ மற்றும் பிஞ்சி)


ஜூன் மாதத்தில் தொடங்கிய இந்த சீசன் செடிகளின் தற்போதைய நிலவரத்தை பார்க்கலாம். நிறைய பேர் இந்த ஆடி பதினெட்டில் (ஆடிப்பெருக்கு) விதைத்து இந்த சீசனை ஆரம்பித்து இருப்பீர்கள். நான் பொதுவாக மே மாதத்திலேயே ஆரம்பித்து விடுவேன். ஆடிக்கு காத்திருப்பதில்லை.

செடிகள் எல்லாம் இப்பொது பூத்து பிஞ்சி பிடிக்க ஆரம்பித்து இருக்கின்றன. தோட்டத்தின் தற்போதைய நிலவரம்,



வெண்டை, அவரை செடிகளில் இன்னும் ஒரு வாரத்தில் காய் பறிக்கலாம். இன்னும் ஒரு மாதத்தில் கத்தரி, தக்காளி, மிளகாய் செடிகளில் காய் பறிக்க ஆரம்பிக்கலாம்.








தக்காளியில் மூன்று வகை (நண்பர் பரமேசிடம் வாங்கிய மஞ்சள், நாட்டு தக்காளி மற்றும் பழைய ஹைப்ரிட் US Seeds (DIY Kit-ல் கொடுத்தது. இதில் மஞ்சள் தக்காளி கலக்கலாய் வந்திருக்கிறது. செடியை பார்த்தாலே அவ்ளோ செழிப்பாக இருக்கிறது. தொடக்கத்தில் நாட்டு தக்காளி செடிகள் கொஞ்சம் சுமாராக தான் தெரிந்தது. இப்போது கொஞ்சம் செழிப்பாக தெரிகிறது. ஹைப்ரிட் செடி ரொம்பவே சுமார். எதிர்பார்த்தது தான். ஹைப்ரிட் விதைகள் காலாவதி ஆகி விட்டது. இருந்தாலும் போட்டு விட்டேன். மிச்சம் இருப்பதை தூர போட்டு விட வேண்டும்.



கத்தரியில் மூன்று வகை. நண்பர் பரமேசிடம் வாங்கிய பச்சை கத்தரி, ஓடவை ஊதா கத்தரி மற்றும் நான் வருடா வருடம் விதை எடுத்து பயன்படுத்தும் வெள்ளை கத்தரி. மூன்றுமே பட்டையை கிளப்புகிறது. செடிகளை பார்த்தாலே அவ்ளோ செழிப்பு. அவ்ளோ பெரிய இலைகள். பொதுவாக ஒரு செடியின் ஆரோக்கியத்தையும், விளைச்சலையும் நான்கு இலைகள் வரும் போதே சொல்லி விடலாம். இந்த கத்தரி செடிகளின் இலைகள் ஒரு வாழை இலை போல அவ்ளோ பெரிய, திரட்சியான இலைகள். விளைச்சல் கண்டிப்பாக நன்றாக இருக்கும். அதை தான் ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்றார்கள். சுமாரான விதையை போட்டுவிட்டு நாம் என்ன தான் உரமாக அள்ளிப் போட்டு குட்டிக்கரணம் போட்டாலும் விளைச்சல் எடுக்க முடியாது.




மிளகாயில் மூன்று வகை. நண்பர் பரமேசிடம் வாங்கிய சீனி மிளகாய், சம்பா மிளகாய் மற்றும் DIY Kit-ல் வந்த பழைய ஹைப்ரிட் US Seeds. நாட்டு வகை இரண்டும் நன்றாக வந்திருக்கிறது. காலாவதியான ஹைப்ரிட் விதை சுமார் தான். கொஞ்சமாவது காய்க்கும் என்று நினைக்கிறேன்.  




இந்த சீசனின் முதல் பதிவில் சொன்ன மாதிரி, வந்த ஒரே ஒரு கண்டங்கத்தரி, தூதுவளை செடிகளை வெற்றிகரமாக தேற்றி இப்போது பெரிய பைகளில் வைத்திருக்கிறேன். பிறகு தான் அவைகளுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும். 



மாடியில் குடைமிளகாய் இப்போது தான் மொட்டு வைத்திருக்கிறது. 




கிடைத்த கொஞ்ச இடைவெளியில் மாடியில் வைத்த முலாம் பழம் இரண்டு பிஞ்சி பிடித்திருக்கிறது. சீக்கிரம் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ முலாம் பழம் இடம் பெறலாம். பார்க்கலாம்.


பேபி கார்னும், ஸ்வீட் கார்னும் செழிப்பாக வளர்ந்து நிற்கிறது. இன்னும் கதிர் பிடிக்கவில்லை.




வழக்கமான பிரச்சனை கொடிகள் தான். செடி என்று வைத்த கொடி அவரை செழிப்பாக சுற்று சுவற்றில் படர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. சீக்கிரம் மொட்டு வைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் முக்கியமாய் எதிர்பார்த்த புடலை பூவாய் பூத்து தள்ளுகிறது. ஆனால் பிஞ்சி ஏதும் பிடிக்க மாட்டேன்கிறது. உரம், மண் எல்லாம் நன்றாக தான் இருக்கிறது. போட்ட விதை சரி இல்லை என்று நினைக்கிறேன். இன்னும் ஒரு மாதம் பார்த்துவிட்டு பிடுங்கி போட்டுவிட்டு புதிதாய் தான் போட வேண்டும். மிதி பாகல் காய்க்க ஆரம்பித்து இருக்கிறது. ஆனால் பெரிதாய் விளைச்சல் கிடைக்காது என்று நினைக்கிறேன் (ஐந்து செடிகள் நிற்கிறது). பெரிய பாகல் ஓன்று இனி தான் விதைக்க வேண்டும். 

வெள்ளரி கொடியில் பிஞ்சி தெரிகிறது. காய் பறிக்கும் அளவுக்கு வருகிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சுரைக்காய் மெதுவாய் தான் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் பந்தலை எட்டிப் பிடிக்கவில்லை. மொத்தத்தில் வழக்கம் போல கொடிகளில் சொதப்பல் இந்த சீசனிலும் தொடர்கிறது.




முட்டைக்கோஸ் தொட்டியில் வைத்ததும், தரையில் வைத்ததும் நன்றாக வந்துகொண்டிருக்கிறது. கோஸ் வந்தால் தான் விளைச்சலை பற்றி கூற முடியும்.

 
வெங்காயம் கொஞ்சம் சொதப்பல் தான். போன முறை விளைச்சல் எடுத்த Omaxe விதை மீதம் இருந்ததில் ஓன்று கூட முளைக்கவில்லை. விதை காலாவதி ஆகவில்லை. ஒரு வேலை சரியாக திறந்த பாக்கெட் விதைகளை பாதுக்காக்கவில்லை என்று நினைக்கிறேன். அந்த விதை பாக்கெட் கூட திறக்காமலேயே வைத்திருந்த இன்னொரு வகை பெரிய வெங்காயம் கூட ரொம்ப குறைவாகவே முளைத்தது (ஒரு அறுபது விதைகளில் பதினைந்து தான் முளைத்தது – 25% germination rate தான்). இந்த விதையும் காலாவதி ஆகவில்லை. ஆனாலும் சரியாக முளைக்கவில்லை.

இந்த முறை அக்ரி இன்டெக்ஸ்-ல் TNAU-ல் வாங்கிய சின்ன வெங்காயம் நன்றாக முளைத்திருக்கிறது. இனி தான் எடுத்து நட வேண்டும். இன்னும் இந்த அக்ரி இன்டெக்ஸ்-ல் வாங்கிய ஒரு பாக்கெட் வெள்ளை பெரிய வெங்காயமும், சிவப்பு பெரிய வெங்காயமும் விதை இருக்கிறது. இந்த வாரம் நடலாம் என்று இருக்கிறேன்.  



இந்த சீசனில் பூச்சி தாக்குதல் என்று பார்த்தால், அசுவினி பூச்சிகள் அவரை செடி  விதையில் இருந்து வெளியே எட்டிப் பார்பதற்கும் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. வழக்கம் போல கோலா பானம் தான் நமக்கு கை கொடுக்கிறது. இரண்டு முறை பூச்சிகள் வந்தது. கோலா தெளித்து விட்ட பிறகு எந்த பிரச்னையும் இல்லை. இந்த International பிராண்ட்டுகளில் கருப்பு கோலாவுக்கு மட்டும் தான் இந்த மகத்துவம் இருக்கிறதா இல்லை ஆரஞ்சு கலர், ஆப்பிள் கலர் என்று மற்ற வகைகளிலும் இந்த மகத்துவம் இருக்கிறதா என்று ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யலாம் என்று இருக்கிறேன் :) .

வெண்டையில் வெள்ளை சாறுரிஞ்சும் பூச்சிகள் ஒரே ஊரு செடியில் வர ஆம்பித்தது. எல்லாவற்றையும் கையால் நீக்கி விட்ட பிறகு இப்போது பிரச்னை இல்லை. ஆனாலும் வெண்டையை தினமும் கவனித்து வருவது அவசியம். செடிகளின் மீது ஏதும் எறும்பு நடமாட்டம் இருந்தால் உடனே கவனிக்க வேண்டும்.

முலாம் பழத்தில் இலைப்பேன் தாக்குதல் நிறையவே வந்து விட்டது. அதனாலேயே செடி கொஞ்சம் திணற ஆரம்பித்து விட்டது. நீரில் வேப்பம் புண்ணாக்கு கலந்து தெளித்து ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இலைகளின் அடியில் தான் பூச்சிகள் இருப்பதால் கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக ஒவ்வொரு இலையாக திருப்பி வைத்து வேப்பம் புண்ணாக்கு நீரை தெளிக்க வேண்டிய இருக்கிறது. எப்படியும் கட்டுக்குள் கொண்டு வந்து அறுவடை எடுத்து விடலாம்.

கோவை நண்பர்கள் சிலர் தோட்டம் பார்க்க வரலாமா என்று சீசனின் தொடக்கத்தில் கேட்டு இருந்தார்கள். நான் அவர்களிடம் விளைச்சல் ஆரம்பித்தவுடன் பார்த்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன். முடிந்தால் செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிறு காலை ஒரு விசிட் வைத்துக் கொள்ளலாம். கோவை நண்பர்களின் சந்திப்பாக வைத்துக் கொள்ளலாம்.

41 comments:

  1. Vanakam anna, colavirku pathilaga neer more karaisal, agni asthram veetil thayar saithu payan patuthalama?

    ReplyDelete
    Replies
    1. இங்கே நண்பர் ஒருவர் நீர்மோர் கரைசல் பற்றிக் கூறினார். அவைகள் வளர்ச்சி ஊக்கிகள் தானே? பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுமா என்ன?

      Delete
  2. மிக,மிகவும் அருமை தொடரட்டும்

    ReplyDelete
  3. சிவா விதைகளை எவ்வளவு நாள் வைத்து பயன் படுத்தாலாம் என் விதைகள் பரமேஸிடம் போன வருடம் வாஙுகியது முளைப்புதிறன் ரொம்ப குறைவாக ுள்ளது.அப்பறம் செம்மண் இங்கே கிடைப்பது சிரமமாக ுள்ளது மாற்று வழி என்ன?செடிகள் வழக்கம் போல் அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.

      ஹைப்ரிட் விதைகள் ஒன்பது மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை தேதி இட்டு வருகிறது. நாட்டு விதைகளை ஒரு வருடம் வைத்து பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆனால் நாட்டு விதைகள் வாங்கும் போது அது நமக்கு கொடுப்பதற்கு முன் எவ்வளவு நாள் வைத்திருந்தார்கள் என்று தெரிவதில்லை. பாதி முளைப்பு திறன் இருந்தாலும் அதில் இருந்தே விதை எடுத்தால் அடுத்த வருடத்தில் இருந்து நாம் நூறு சதவீதம் அதில் இருந்து முளைப்பு திறன் பார்க்கலாம்.

      செம்மண்ணும் இனி கிலோ இவ்வளவு என்று மாறி விடும் போல. சாதாரண தோட்ட மண் கிடைத்தாலும் பயன்படுத்தி பாருங்கள்.

      Delete
  4. Super sir. I am eagerly waiting for your permission to visit your garden. Kindly confirm the date sir

    ReplyDelete
    Replies
    1. Sure Madam. I will confirm the date. Mostly by Mid of Sep, the garden will show good yield in all plants. That will be ideal time to visit.

      Delete
  5. அருமையான பதிவு அண்ணா ஒரு சந்தேகம் பொதுவாக தக்காளி கத்தரிக்காய் எவ்வளவு மாதத்தில் காய்ப்பு வரும்.திருப்பூர் சரவணக்குமார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணகுமார்.

      கத்தரி, தக்காளி எல்லாம் விதைத்து இரண்டரை - மூன்று மாதத்தில் விளைச்சல் கொடுக்கும். இவைகள் எல்லாம் ஜூன் நடுவில் விதைத்தது. செப்டம்பர் தொடக்கத்தில் பறிக்க தயாராக இருக்கும்.

      Delete
  6. வாழ்த்துக்கள்....அருமையான தோட்டம்

    ReplyDelete
  7. தோட்டம் சிவா அண்ணா வணக்கம்
    படங்களை பார்க்கும்போதே உங்கள் தோட்டத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது... விரைவாக தேதியை சொல்லுங்க..... அடுத்த பதிவில் தெரிவிப்பீர்களா..... எப்படி.... நன்றி அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இசக்கி. தக்காளியும் பழுக்க ஆரம்பிக்கட்டும் :) . செப்டம்பர் நடுவில் ஒரு ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்ளலாம். அடுத்த பதிவில் உறுதி செய்கிறேன்.

      Delete
  8. செடிகள் அருமையாக வளர்ந்துள்ளது. நானும் பரமேசிடம் வாங்கிய விதைகளின் முளைப்புத் திறன் அருமையாக உள்ளது .

    ReplyDelete
    Replies
    1. சில விதைகள் சுத்தமாக முளைக்க வில்லை (கொத்தவரை, பழு பாகல்). அதை பற்றி நண்பர் பரமேசுக்கு ஒரு மடல் அனுப்ப வேண்டும். மற்றபடி எல்லாமே அருமையாக வந்திருக்கிறது. இனி நாட்டு செடிகளாக சீக்கிரம் மாற்றி ஹைப்ரிட் செடிகளுக்கு குட்-பை சொல்லி விடலாம் :)

      Delete
  9. நீங்கள் தோட்டம் போடுவது கூட பெரிதில்லை. அனால் அதை பொறுமையாக படம் பிடித்து முழுமையாக டைப் செய்து சுவாரசியமாகவும் எழுதவது மிகவும் பெரிது.அருமை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே :)

      Delete
  10. தோட்டத்தைப் பார்க்கவே அதிலும் புதிதாக முளைக்கும் செடிகளைப் பார்க்கவே கண்ணுக்குக் குளிர்ச்சியாக உள்ளது. கோவை நண்பர்களின் சந்திப்பு இனிமையாக அமையட்டும் !!

    மீண்டும் ஒரு புலம்பல், மிதி பாகல் பற்றியதுதான். காய்கள் காய்க்க ஆரம்பிப்பதோடு சரி, பெருசாகாமல் அப்படியே இருந்து பழுத்து காய்ந்து போகிறது. பிடுங்க மனமில்லாமல் விட்டுவிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம் :)

      மிதிபாகல் பிஞ்சிலேயே வெம்பி விடுகிறதா? இங்கே நன்றாக காய்க்கிறது. ஆனால் வெறும் ஐந்து ஆறு காய்களை வைத்து என்ன செய்ய. ஐந்து செடிகள் இருக்கிறது. ஆனால் காய் ரொம்பவே குறைவு. இப்போது பெரிய பாகல் மீண்டும் போட்டிருக்கிறேன்.

      Delete


    2. "ஐந்து ஆறு காய்களை வைத்து என்ன செய்ய" _____ இங்கு பெருசா ஒரு காய் காய்ச்சால்கூட‌ போதும், விதை எடுத்துக்கொள்வேன்.

      ஆமாம் சிவா, பிஞ்சிலேயே வெம்பி விடுகிறது. கொண்டைக்கடலை சைஸ்கூட இல்லை. செடி முழுவதும் பிஞ்சுகள் நிறைய உள்ளன. 'ஒன்னாவது பெருசாகாதா' என நினைக்கத் தோன்றுகிறது.

      ஒரு பெரிய மிளகாய்ச் செடியைப் பற்றிப் படர்ந்திருக்கிற‌து. எவ்வளவு நாட்கள் இருக்குமோ இருக்கட்டும், பிடுங்கமாட்டேன். நன்றி சிவா.

      Delete
  11. முட்டைகோஶ் செடி பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.

    கட் எறும்புகள் செடிகளுக்கு நண்பணா எதிரியா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.

      கட்டெறும்புகள் நல்லது செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால் நேரடியாக செடிகளுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை என்றே தெரிகிறது. ஆனால் அவை மற்ற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை தேடி செடிகளிலும் மரங்களிலும் கூட்டமாய் வந்து விடுகிறது. நண்பர் சிவகுமார் கூறி தான் எறும்பு நிறைய இருந்தால் ஏதோ பூச்சி தாக்குதல் இருக்கும் என்பதையே அறிந்து கொண்டேன். நான் இது வரை ஏதோ எறும்பு தான் முட்டை இட்டு செடிகளை நாசம் செய்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பூச்சிகளை காலி செய்தால் அவைகள் தானாக இடத்தை காலி செய்து விடுகின்றன

      சிவப்பு எறும்புகள் சிலநேரம் செடிகளின் வேரின் அடியிலேயே துளை இட்டு வர ஆரம்பித்து விடுகின்றன. அப்போது வேர் பாதித்து சில நேரம் செடி செத்து விடுகிறது. அவற்றை உடனே கட்டுப்படுத்த வேண்டிய இருக்கிறது.

      Delete
    2. Hi Siva, Thanks for your reply

      Delete
    3. வாழ்த்துக்கள் நண்பரே .
      மண்புழு உரம் சிறப்பாக உள்ளது கண்டிப்பாக நீங்கள் முயற்சி செய்யலாம் .நான் 6 x 3 பிளாஸ்டிக் சீட் ல தேங்காய் உரித்த மட்டை அடுக்கி விட்டு மாட்டு சாணம் மேல போட்டு தண்ணீர் தெளித்து அதில் மண்புழு 1/2 கிலோ போட்டு டு அதன் மேலே மாட்டு சாணம் போட்டு டு தண்ணீர் தெளித்து வந்தேன் 10 நாட்களில் மண்புழு உரம் படிய ஆரம்பித்து விட்டது . முழுமையாக ரெடி ஆனபிறகு எடுத்து கொள்வோம் என்று வைத்து உள்ளேன் .எறும்பு தொந்தரவு உள்ளது இது வரை மண்புழு இறந்ததாக தெரிய இல்லை .

      Delete
    4. நன்கு மக்கிய காய்கறி கழிவு மற்றும் நன்கு மக்கிய இலைகள் இவற்றை கொண்டும் மண்புழு உரம் தயாரிக்கலாமாம் .மண்புழு சுறுசுறுப்பாக இருப்பதால் எறும்பு ஒன்னும் செய்ய முடியாதம் மண்புழு உரம் தயார் செய்து குடுக்கும் நண்பர் சொன்னார் .

      Delete
    5. அருமை முடிந்தால் படம் எடுத்து அனுப்புங்கள். ஐயப்பன். காய்கறி கழிவுகளை மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாமா? மண்புழுக்கள் அவைகளை உண்ணுமா?.

      எங்க வீட்டில் மண்புழு என்றாலே அலறுகிறார்கள் :) . அது ஓன்று தான் இப்போதைக்கு ஆரம்பிக்காமல் இருக்கிறேன். ஆனால் இங்கே மண்புழு கிடைப்பதற்குள் பெரும் பாடாகி விடுகிறது. நாமே தயாரித்தால் தான் வேலைக்காகும் போல

      Delete
    6. உங்கள் வீட்டில் எதனால் பயபடுகிரர்கள் என்பது தெரியவில்லை . மண்புழு உள்ளே தான் இருக்க போகுது மேல உரத்தை அள்ளி விட்டு மீண்டும் சாணத்தை யோ காய்கறி கழிவுகலையோ மேல போடா போகிறோம் .அவளவு தான் .

      Delete
    7. :) நீங்க சொல்றது சரி தான். ஆனா பொதுவாகவே மண்புழு என்றால் கொஞ்சம் அருவருப்பாக தான் பார்கிறார்கள். இல்லையா. மற்றபடி வேறு பயன் ஒன்றும் இல்லை.

      Delete
    8. முதல் முயற்சி மண்புழு உரம்

      முதல் முயற்சி மண்புழு உரம் தயாரிக்க இணையத்தில் படித்ததை வைத்து கொண்டு ஆரம்பித்தேன் .மண்புழு என்றால் நம்ம வீட்டுல பாத்திரம் துலக்கும் இடத்தில இருக்கும் அதை பிடித்து போடவேண்டியது தானே . வெட்டி பார்த்தால் மண்புழு அவளவாக இல்லை காரணம் .பாத்திரம் விளக்க சோப்பு பயன் படுத்துவதால் என் நண்பரின் அம்மா சோப்பு பயன் படுத்துவது இல்லை அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் பாத்திரம் துலக்கும் இடத்தில் 2 மணி நேரம் செலவு செய்து மன்புழுகளை சேகரித்து கொண்டு வந்தேன் . முன்பே ஒரு தொட்டி போன்று அமைத்து வைத்து அதில் மாட்டு சாணி மற்றும் நன்கு மக்கிய காய்கறி கழிவு போட்டு வைத்து இருந்தேன் .அதில் மண்புழுக்களை விட்டு விட்டு தினமும் தண்ணீர் தெளித்து வந்தேன் .ஒரு வாரம் ஆகியும் மண்புழு உரம் என் கண்ணில் தென்படவில்லை .அப்புறம் விசாரித்து பார்த்தால் நம்ம புழு இந்த வேளைக்கு ஆகாது ஆப்பிரிக்கன் மண்புழு தான் வேண்டும் . முதல் முயற்சி தோல்வி அடைந்தது .


      இரண்டாவது முயற்சி மண்புழு உரம் .
      பக்கத்து ஊரில் ஒரு நண்பர் மண்புழு தருவதாக சொன்னார் . நாளைக்கு வாங்க என்று சொல்வார் போன் செய்தால் நான் வெளிய இருக்கேன்நாளைக்கு வாங்க என்பார் அது ஆகாது என்று விட்டு விட்டு மண்புழு உரம் வாங்க முயற்சி செய்து 20 கிலோ மீட்டர் தூரம் சென்று ஒரு நண்பரிடம் மண்புழு உரம் வாங்கினேன் .அவரிடம் மண்புழு கேட்டேன் அவரும் ரொம்ப யோசிச்சி 2 நாட்கள் போகட்டும் என்றார் அவரிடம் இயற்கை விவசாயம் பற்றி பேசி கொண்டு இருந்தேன் .நான் உரத்தை வாங்கி கொண்டு வந்து விட்டேன் .அவராக போன் செய்து நீங்கள் சின்ன வயதில் ரொம்ப ஆர்வமாக இருகிங்க இயற்கை விவசாயத்தின் மீது இது வரை யாருக்கும் நான் மண்புழு குடுத்துது இல்லை என்று சொல்லிவிட்டு .நாளைக்கு வாங்க தருகிறேன் என்றார் . தொட்டி இல் அந்த மண்புழு இருப்பதால் இதற்கு தனியாக ஒரு பெட் அமைத்தேன் என்னிடம் பிளாஸ்டிக் ஷீட் 6 x 3 அளவில் இருந்தது அதை கீழே போட்டு அதன் மேலே தேங்காய் உரித்த மட்டை அடுக்கி அதன் மீது 2 இன்ச் அளவிற்கு மாட்டு சாணத்தை நன்கு உதிர்த்து விட்டு தண்ணீர் தெளித்து விட்டு மண்புழு வாங்க சென்றேன் .மண்புழு வாங்கி வந்து பெட்டில் போட்டு விட்டு அதன் மீது 4 இன்ச் அளவிற்கு மாட்டு சாணத்தை உதிர்த்து விட்டேன் .ஒரு வாரத்திலேயே மண்புழு உரம் மேல படிய ஆரம்பித்து விட்டது .


      எறும்பு தொல்லை இருந்தது வேப்பம் புண்ணாக்கு பெட்டை சுற்றி துவுனேன் .மண்புழுவை எறும்பு ஒன்றும் செய்ய இயலாதாம் மண்புழு சுறுசுறுப்பாக இருப்பதால் .மண்புழு பெட் அமைக்கும் போது கவனிக்க வேண்டியவை . தண்ணீர் தேங்கத இடமாக இருக்க வேண்டும். தவளை, ஓணான் ,எலி இவைகள் மண்புழு பெட்டிற்கு வராமல் பார்த்து கொள்ளவேண்டும் . நிழலான இடமாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் காற்றொட்டமான இடமாக இருக்கவேண்டும் .தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தெளிக்க வேண்டும் .இரண்டாவது முயற்சி வெற்றி அடைந்து உள்ளது.
      -- வசந்த் .ஐயப்பன் .

      Delete
    9. http://www.vasanthmedia.blogspot.in/ இந்த தலத்தில் மண்புழு உரம் தயாரிப்பு சம்மந்தமான படங்கள் பதிவு செய்து உள்ளேன் பார்த்திர்களா? 2 நாட்களாக இனைய வசதி சரியாக இல்லை .உங்களுக்கு அனுப்பும் பதிவு வருகிறதா என்றே தெரியவில்லை

      Delete
    10. தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள். உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சாணம் எப்படி கிடைக்கிறது? இங்கே வெறும் சாணம் விலைக்கு கேட்டாலே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.

      Delete
    11. நன்றி நண்பரே !. நான் கிராம பகுதி என்பதால் அனைவரின் வீட்டிலும் மாடு இருக்கும் எங்கள் வீடில் மாடு இல்லை .பக்கத்துல வாங்குனேன் .1 டிராக்டர் சாணி ரூ 3000 .ஒரு நாட்டு மாடு வளர்த்தால் போதும் இயற்கை விவசாயத்திற்கு சரியாக இருக்கும் . உங்கள் ஊர் அருகில் உள்ள கிராம பகுதிகளில் வசாரித்து பாருங்க

      Delete
    12. இங்கே மாடு வளர்க்கும் அளவுக்கு இடம் இல்லை. வருங்காலத்தில் கிராமத்திற்கு திரும்பும் போது பார்க்கலாம் :)

      Delete
    13. கிராம பகுதிகளில் சாணி கேட்டு பாருங்கன்னு சொன்னேன் .

      Delete
    14. கேட்டுப் பார்க்கிறேன் ஐயப்பன் :)

      Delete
  12. சிவா,

    எங்க வீட்டு மிதி பாவக்கா செடி பதிவாகியிருக்கு, நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க. நன்றி.

    http://chitrasundars.blogspot.com/2015/08/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டேன். படங்கள் அருமை. உங்கள் ஆர்வத்திற்கு அடுத்த முறை மிதிபாகல் நன்றாக பலன் தர வாழ்த்துகள்.

      Delete
  13. hello...we have terrace garden in our home in kodambakkam. how to get rid of katerumbu from our thattakai plant?

    ReplyDelete
    Replies
    1. Hi, I sent a reply to you for your mail. I don't have any proper control method now to control ants. If any friends have idea, please share it

      Delete