நிறைய நண்பர்கள் என்னிடம் தோட்டம் பற்றி பேசும் போது கேட்ட பொதுவான
கேள்விகளை ஒரு தொகுப்பாக கொடுக்கிறேன். மற்ற நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்
என்று நினைக்கிறேன். உங்களுக்கும் ஏதும் கேள்விகள் இருந்தால் கூறுங்கள், எனக்கு தெரிந்ததை
பகிர்ந்து கொள்கிறேன்.
விதைகளை எவ்வளவு ஆழத்தில் இட வேண்டும்? எவ்வளவு நாளில் முளைக்கும்?
பொதுவாய் இவ்வளவு ஆழத்தில் நட வேண்டும் என்று கணக்கு எல்லாம் போட
வேண்டியதில்லை. அவரை, வெண்டை போன்று கொஞ்சம் பெரிய விதைகளை 1 – 1½ இஞ்ச் ஆழத்தில்
இடலாம். கத்தரி, தக்காளி, கீரை போன்று சிறிய விதைகளை கொஞ்சம் கிளறி விட்டு தூவி
விட்டு மூடி விட்டால் போதும் (ஒரு ½ இஞ்ச்). பெரிய
கிழங்கு வகைகளை (பிடி கரணை மாதிரி) இன்னும் ஆழத்தில் நட வேண்டும் (3 – 4 இன்ச்). விதை முளைக்கும் போது மண்ணை விட்டு வெளியே வரும் அளவுக்கு ஒரு
மனக்கணக்கு வைத்து விதைக்க வேண்டியது தான்.
கீரை மாதிரி செடிகள் விதைத்து இரண்டு-மூன்று நாளிலேயே முளைத்து
விடும். மற்ற காய்கறி விதைகள் ஐந்தில் இருந்து ஏழு நாட்கள் வரை ஆகும். நாம் இந்த
நாட்களை பெரிதாய் அலட்டிக் கொள்ள தேவை இல்லை. ஒரு பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்
கொண்டால், விதையில் ஏதோ பிரச்சினை என்று நினைத்துக் கொள்ளலாம். கிழங்கு வகைகள்
இரண்டு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை கூட எடுக்கும்.
எத்தனை நாளுக்கு ஒரு முறை நீர் விடுவது?
இது நாம் எந்த growing media-வில் வளர்கிறோம்
என்பதை பொறுத்தது. வெறும் தரையில் வளர்க்கும் போது நன்றாக வளர்ந்த செடிகளுக்கு
மூன்று – நான்கு நாட்களுக்கு ஒரு முறை நீர் விட்டால் போதும். Coir Pith மீடியா என்று போகும் போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விட வேண்டியது
வரும்.
முதலில் நாற்று எடுத்து நட்ட பிறகு செடி ஓரளவுக்கு பெரிதாக வரும் வரை
தினமும் நீர் விட வேண்டும். சின்ன செடிகளில் வேர் ஆழமாய் போய் இருக்காது. அதனால்
தினமும் நீர் விட வேண்டிய வரும். பைகளில் வைக்கும் ரொம்ப சிறிய செடிகளுக்கு (கீரை,
தக்காளி மாதிரி) ஒரு சின்ன கப்பில் நீர் எடுத்து உள்ளங்கையில் கொஞ்சமாய் எடுத்து
செடிகளுக்கு விடலாம். பூ வாளியில் அப்படியே தெளித்து விட்டால் நிறைய செடிகள்
வேரோடு சரிந்து போய் விடும்.
செடி பெரிதாய் வளர்ந்த பிறகு தினமும் நீர் விடுவது நல்லதில்லை. அப்படி
விடும் போது செடியின் வேர் நிலத்தின் மேலேயே பரவி விடும். ஆழமாய் போகாது. அதனால்
தேவையான சத்துக்களை பெற முடியாமல் போகலாம். வேர் எவ்வளவு ஆழமாய் போகிறதோ செடி
அவ்வளவு ஆரோக்கியமாய் வரும்.
நீர் விடும் போது இலைகளில் படாமல், அடிபகுதியை சுற்றி விடுவது நல்லது
(நாம் பொதுவாக செடியின் மேல் தெளித்து ஒரு fresh feel
கிடைப்பது மாதிரி செய்வோம்). இலைகளில் தெளிக்கும் போது அந்த ஈரத்தால் பூஞ்சை
போன்று சில பிரச்சனைகள் செடிகளுக்கு வரலாம்.
அதிகாலையில் நீர் விடுவது நல்லது. நல்ல வெயில் வந்து நிலம் சூடான
பிறகு நீர் விடுவதை தவிர்க்க வேண்டும். மாலையில் நீர் விடுவதும் நல்லதில்லை என்றே
சொல்கிறார்கள். மாலையில் நீர் விடும் போது மேல் ஈரம் அப்படியே காயாமல் இருப்பதால்
சில பூஞ்சை சார்ந்த நோய் தாக்குதல் வரலாம் என்கிறார்கள்.
ஒரு செடி நல்ல ஆரோக்கியமாய் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?
ஒரு செடியின் ஆரோக்கியம் நிறைய காரணிகளை சார்ந்து உள்ளது.
முதலில் நல்ல விதையாய் இருக்க வேண்டும். ரொம்ப நாளைக்கு விதைகளை
வைத்து பயன்படுத்த வேண்டாம். ஒரு வருடத்திற்கு மேல் இருந்தால் தூர போட்டு விட்டு
புதிதாய் வாங்கி பயன்படுத்தவும்.
அடுத்தது, மிக முக்கியமாய் செடிக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் சூரிய
வெளிச்சம் கிடைக்கிறது என்பது. குறைந்தது ஐந்து மணி நேரமாவது நல்ல (நிழல்
இல்லாமல்) சூரிய வெளிச்சம் வேண்டும். அதற்க்கு மேல் எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு
ஆரோக்கியமாய் செடி இருக்கும். சூரிய வெளிச்சம் குறைவாக கிடைக்கும் இடத்தில வைத்து
நாம் என்ன தான் உரத்தை அள்ளி போட்டாலும் பயனில்லை.
மூன்றாவது, நிலத்தின் தன்மை (growing media) மற்றும்
சத்துக்கள். செடிகளுக்கு நீருக்கு (Hydrogen, Oxygen) அடுத்த படியாக முதன்மை சத்துக்கள் என்றால் NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்). இதை தான் தழைச்சத்து (N), மணிச்சத்து (P), சாம்பல்சத்து (K) என்கிறார்கள். இதை தவிர கால்சியம், மக்னீசியம், சல்பர் ஓரளவுக்கு
செடிக்கு வேண்டும். இன்னும் சில தனிமங்களும் (boron (B), copper (Cu), iron (Fe), chloride (Cl), manganese
(Mn), molybdenum (Mo) and zinc (Zn) )
குறைந்த அளவில் தேவைபடுகிறது. இதில் எதாவது தேவையான அளவுக்கு குறைவாக கிடைக்கும் போது
செடிகள் அதற்கான அறிகுறிகளை காட்டும் (இலைகள் வெளிறி போவது, பூ உதிர்வது, பிஞ்சி பிடிக்காமல்
போவது மாதிரி).
நாற்று விடும் போதே நல்ல சத்துள்ள மீடியாவாக வைத்துக் கொள்வது நல்லது.
முதலில் சரியாய் வராத செடி (நிறம் வெளிறி போன, வளர்ச்சி குன்றி போன செடி) நாம்
மறுபடி உரம் போட்டால் உடனே நல்ல நிலைக்கு வருவது கடினம். கொஞ்சம் காலம் எடுக்கும்.
நல்ல செம்மண்ணில் தேவையான சத்துக்கள் செடிக்கு எளிதாக கிடைக்கும். ஆனால்
சிறிது காலம் கழித்து அவை தீர்ந்த பிறகு உரம் இடுவது அவசியம் ஆகிறது. இந்த தனிமங்களை
தனி தனியாக வாங்கி போட முடியாது (ரசாயன விவசாயத்தில் NPK உரம் உப்பு மாதிரி கிடைக்கிறது. அதை போட்டு தான் நிலத்தில் மண்புழுவில்
இருந்து நுண்ணுயிர் வரை எல்லாவற்றையும் காலி செய்து நவீன விவசாயம் நடந்து
கொண்டிருக்கிறது). இயற்கை விவசாயம் என்று போகும் போது நாம் முக்கியமாய் மண்புழு உரம்,
சாணம் சார்ந்த உரத்தை தான் நம்பி இருக்கிறோம். அதை தவிர காய்கறி கழிவை மக்க வைத்து
உரமாக்கி போடலாம். இலை சருகுகளை மக்கவைத்து போடலாம். மொத்தத்தில் நிலத்தில்
மண்புழுக்களும், நுண்ணுயிகளும் செழிப்பாக இருக்கும் படி பார்த்துக் கொண்டாலே
போதும்.
Coir Pith மீடியா போகும் போது கண்டிப்பாக நிறைய மண்புழு உரம் தேவை. தவிர கொஞ்சம்
செம்மண் கலப்பதும் அவசியம். அப்போது தான் அத்தனை தனிமங்களும் கிடைக்கும். வெறும் Coir Pith என்பது வெறும் மக்கு தான். அதில் ஒன்றுமே கிடையாது. நாற்று எடுக்க
கூட வெறுமனே அதை மட்டும் பயன்படுத்த வேண்டாம். செடி முளைக்கும். ஆனால் அதற்க்கு
ஒரு சத்து கூட கிடைக்காது. செடி முளைத்த உடனேயே குன்றி போய் விடும்.
எந்த எந்த காலங்களில் எந்த காய்கறி பயிரிட வேண்டும்?
ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு பருவம் சொல்கிறார்கள். அந்த காலங்களில்
அவைகள் நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆனால் வீட்டுத் தோட்டம் என்று போகும் போது
நமக்கு வருடம் முழுவதுமே விளைச்சல் தேவை. ஆங்கில காய்கறிகளை மட்டும் (முட்டை கோஸ்,
காலி ஃப்ளவர் மாதிரி) ஜூன்-ஜூலை-யில் விதைத்து நவம்பர்-டிசம்பரில் அறுவடை செய்வது
போல பார்த்துக் கொள்ளலாம். அவைகள் இங்கே கோடை வெயிலுக்கு எல்லாம் வராது. மற்ற படி நாம்
பொதுவாய் ஜூன்-ஜூலையில் ஒரு பருவமும், ஜனவரி-யில் இன்னொரு பருவமும் ஆரம்பிக்கலாம்.
இடையில் தேவைக்கேற்ற படி நடவு செய்யலாம். பருவத்திற்கு ஏற்றபடி சிலநேரம்
காய்கறிகளின் விளைச்சல் மாறுபடலாம். அதனால் ஒன்றும் பெரிதாய் யோசிக்க தேவையில்லை.
படமே இல்லாமல் தோட்டம் பதிவா... தோட்டம் பற்றி இல்லை...நான் முன்பு
எனது Digital Camera-வில்
எடுத்த சில படங்கள், உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Camera - Sony H2, 2006-ல் வாங்கியது. ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் இது தான் எனது தோட்டத்தை
படம் எடுக்கிறது.
![]() |
Sun Set |
கீழே உள்ளது ஊருக்கு அருகே உவரி பக்கத்தில் காலையிலேயே போய் காத்திருந்து எடுத்தது.
Sun Rise |
இந்த பறவை ஒரு நாள் தெரியாமல் வீட்டுக்குள் வந்து விட்டது. அதை கொஞ்ச நேரம் கதவை எல்லாம் சாத்தி house arrest செய்து எடுத்த படம்,