Friday, September 12, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-5 (விளைச்சல் – அடிப்படை காய்கறிகள்)

பதிவுக்கு போவதற்கு முன்பு, கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். இந்த வாரம் (இன்றும், நாளையும் – 13, 14 Sep 2014) இங்கே Vijaya Trade Center-ல் (சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில்) அக்ரி எக்ஸ்போ ஓன்று போய் கொண்டிருக்கிறது. Grow Bags, Coir Pith Bock, Seeds கிடைக்கும். முடிந்தால் போய் பாருங்கள்.  

இந்த சீசனை தொடங்கி மூன்று மாதம் முடிந்து விட்டது. கொஞ்சம் தோட்டம் பக்கம் போய் தற்போதைய நிலவரம், அறுவடை பற்றி பார்க்கலாம்.

இந்த சீசன் எப்படி என்றால், பரவாயில்லை என்று தான் சொல்ல முடிகிறது. ‘ரொம்ப சூப்பர் என்று சொல்ல முடியவில்லை. ஓவராய் காற்று, கொஞ்சம் பூச்சி தொல்லைகள் என்று சில சவால்கள் இருந்தன. சில செடிகள் ரொம்பவே சொதப்பி விட்டன. ஆனால் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை பிரச்னை இல்லாமல் எடுக்க முடிந்தது. அதனால் தேவை பூர்த்தியானது மாதிரி தான்.

கடந்த இரண்டு மாதமாக வெங்காயம், தக்காளி இரண்டை தவிர வேறு ஒன்றும் கடையில் நாங்கள் வாங்க வில்லை (உண்மையாகவே). அப்படி பார்த்தால் வெற்றி தான். (தக்காளி கொஞ்சம் சொதப்பி விட்டது. நம்ம ஆளுங்க வெங்காயம் பயன்படுத்தும் அளவுக்கு நிரந்தர அறுவடை வேண்டும் என்றால் இன்னும் ஒரு கிரவுண்டு இடம் வேண்டும் J. வேறு வழி இருக்கிறதா என்று பார்க்கலாம்)

கீழே பார்ப்பது ஒரு நாளின் அறுவடை. ஒரு கூடை கொண்டு போய் தோட்டத்தில் இன்றும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தால் அரை கிலோவில் இருந்து ஒரு கிலோ வரை எதாவது காய்கறி கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பறித்து எடுத்த படங்களோடு ஒவ்வொரு ஏரியாவா பார்க்கலாம்.

தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்

கத்தரியில் வெள்ளை, வயலெட் இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. இந்த வெள்ளை கத்தரி இரண்டு வருடத்திற்கு முன்பு ஊரில் வாங்கி வந்த விதையில் இருந்து கொண்டு வந்தது. ஒவ்வொரு முறையும் ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து கொள்வேன். அதை அடுத்த முறை பயன்படுத்தி கொள்வேன். இது வரை விளைச்சலில் எந்த பிரச்னையும் இருந்ததில்லை.
வயலட் கத்தரி இங்கே DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் செடி. காய் ரொம்ப பெரிதாய் இருக்கும் என்று நினைத்தேன் (முன்பு TNAU-ல் இதே போல ஒரு வெரைட்டி கிடைக்கும். அது காய்த்து கொட்டும். காயும் பெரிதாய் இருக்கும்). இந்த வெரைட்டி நன்றாக காய்க்கிறது. காய் போக போக கொஞ்சம் சிறிதாகி விட்டது.

கத்தரி நீண்ட நாள் விளைச்சல் கொடுக்கும். இன்னும் இரண்டு மாதத்திற்கு விளைச்சல் இருக்கும் என்று நினைக்கிறேன்.
தக்காளி இந்த முறை பெரிய சொதப்பல் என்று தான் சொல்லணும். ஜூன் மாதத்தில் அடிக்க ஆரம்பித்த காற்று இன்னும் விட்ட பாடில்லை. சரியாய் காற்றடிக்கும் வழியில் மாட்டிகொண்டது.

பாதி செடி வானகம் ஸ்டாலில் வாங்கிய நாட்டு வகையும் பாதி DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் வகையும் போட்டு விட்டிருந்தேன். நாட்டு வகை சரியாய் வரவில்லை. காய் ரொம்பவே சின்னதாய் வந்திருக்கிறது (சில பழங்கள் முன்னால் செர்ரி தக்காளி எல்லாம் தோற்று விடும் அவ்ளோ சின்னது). ஹைப்ரிட் தான் ஊற்றிய தண்ணீருக்கு ஏதோ தக்காளியை கண்ணில் காட்டியது.
மிளகாய், DIY-ல் கொடுத்த ஹைப்ரிட் வகை. ஐந்து செடி தான் விட்டிருந்தேன். வீட்டு தேவைக்கு சரியாய் காய்த்துக் கொண்டிருக்கிறது. காயும் நீளமாய் நல்ல திரட்சியாய் இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் விளைச்சல் வரும் என்று நினைக்கிறேன்.வெண்டை, அவரை மற்றும் கொத்தவரை    
      
நம்ம வீடு சமையலின் அடுத்த முக்கிய காய்கறிகள். இந்த மூன்றுமே இந்த முறை நாட்டு வகைகள் (வானகம்).

வானகம் விதைகள் முளைப்பு திறன் ரொம்பவே குறைவாகவே இருந்தது. 30% - 50% தான். பத்து விதைகள் போட்டால் மூன்று அல்லது நான்கு தான் முளைக்கிறது. அதனால் செடி பற்றாக்குறைக்கு வெண்டையில் மட்டும் கொஞ்சம் ஹைப்ரிட் விதைகள் போட்டு விட்டேன் (DIY-ல் கொடுத்தது).
மூன்றுமே நன்றாக வந்தது. நமது வார தேவைக்கு போக கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது.   

நாட்டு காய்களின் தரம் என்பதை இந்த செடிகளில் தான் காண முடிந்தது. குறிப்பாக அவரை. ஹைப்ரிட் அவரை பொதுவாய் ஒரு காய்ப்புக்கு ஓய்ந்து விடும். ஆனால் இந்த நாட்டு காய் அதே காயத்த கிளையில் இருந்தே மறுபடி மொட்டு வந்து மறுபடி காய்க்கிறது. விளைச்சல் நீண்ட காலம் கிடைக்கிறது. காயும் அவ்ளோ ருசி (ஹைப்ரிட் காய் வெறும் நார் போல இருக்கும். இவை ரொம்ப திரட்சியாய் ஒரு நல்ல ருசியோடு இருக்கிறது. எங்களிடம் வாங்கி சமைத்த சொந்தங்கள் கூட அடுத்த முறை பார்க்கும் போது ‘அவரை ரொம்ப நல்ல இருந்திச்சி. என்ன காய்? என்று விசாரித்ததில் நாட்டு காயின் அருமை தெரிந்தது). கொஞ்சம் விதைக்கும் விட்டு எடுத்து வைத்திருக்கிறேன்.

வானகம் விதை முளைப்பு திறன் குறைவாக இருந்ததின் காரணம் கொஞ்சம் பழைய விதையாக இருந்திருக்கலாம். நான் விதைக்கு எடுத்த வெண்டை விதைகளில் 100% முளைப்பு திறன் கிடைத்தது.

மெதுவாய் நாட்டு ரகங்களுக்கு மாறுவது தான் எனது நீண்டகால திட்டம். அதன் ஒரு முயற்சியாகவே இந்த வெண்டை, அவரை, கொத்தவரை தோட்டத்தை அமைத்து இருந்தேன். நாட்டு ரகங்களின் வித்தியாசத்தை நன்றாகவே உணர முடிகிறது (வளர்ச்சியிலும் சரி, காயின் ருசியிலும் சரி). இதை அடுத்த முறையும் தொடர வேண்டியது தான். மற்ற செடிகளையும் மெதுவாய் மாற்ற வேண்டும்.


அடுத்த பதிவில் ஆங்கில காய்கறிகள், கீரைகளின் விளைச்சல் பற்றி கொடுக்கிறேன்.     10 comments:

 1. பயனுள்ள தகவலுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 2. அன்பின் திரு சிவா,
  தங்களுக்கு versatile blogger என்கிற பதிவுலக விருதை என் வலைப்பதிவு மூலமாக அளிப்பதில் உவகை கொள்கிறேன். பார்க்கவும் - http://wp.me/p2IK8Q-Bh

  அன்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி. நான் உங்கள் ப்ளாக் வந்து பார்த்தேன். ரொம்ப சந்தோசம். உங்கள் விருதுக்கு ரொம்ப நன்றி நண்பரே

   Delete
 3. அமோக மகசூல்!!! அசதிட்டிங்க போங்க !!!
  உங்கள் முயற்சிக்கும் எங்களது வாழ்த்துக்கள் , எங்களுக்கு வழிகாட்டுதலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 4. சிவா மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு நானும் கத்தாிக்காய் விதைத்துள்ேளன் இப்போது தான் செடிவளா்ந்துள்ளது ,

  ReplyDelete
  Replies
  1. நன்றி வினோஜ். கத்தரிக்காய் கொஞ்ச காலம் எடுத்து தான் காய்க்கும். விளைச்சல் எடுத்தும் சொல்லுங்க.

   Delete
 5. எனக்கு கிடைத்த VERSATILE BLOGGER AWARD ஐ உங்களுடன் பகீர்வதில் மிகவும் மகிழ்ச்சி ....

  http://anu-rainydrop.blogspot.in/2014/09/blog-post.html
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங்க. சுத்தமாக ப்ளாக் உலகத்தில் உலவாத என்னையும் கண்டு கொண்டு விருது எல்லாம் கொடுக்கறீங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு.

   Delete