Sunday, December 30, 2012

என் வீட்டுத் தோட்டத்தில் – சீத்தா


 சீத்தாப்பழம் (Custard Apple), அவ்வளவாக கண்டுகொள்ளப் படாத  ஒரு பழம். விதைகள் நிறைய இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ருசியிலும், அதில் அடங்கி இருக்கும் சத்துக்களிலும் மற்ற பழங்களை விட குறைந்தது இல்லை.  ஊரில் எல்லோர் வீட்டிலும், தோட்டங்களிலும் இருக்கும். இதன் பூவையும் பறித்து சாப்பிட்டுக் கொண்டு திரிவோம்.

இதுவும் எங்க ஊர் சந்தையில் இருந்து வாங்கி வந்த செடி தான். வைத்து ஒரு வருடத்தில் காய்க்க தொடங்கி விட்டது. ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் காய்க்கிறது. இந்த தடவை ஒரு 25 – 30 காய் கிடைத்தது. 

சீத்தா எளிதாக வளரும் ஒரு மரம். நோய் ஏதும் தாக்காது. குறைந்த நீர் இருந்தாலும் நன்றாக வரும். தனி கவனம் எடுத்து ஏதும் கவனிக்க வேண்டியதில்லை. எல்லா மரத்திற்கும் உரம் வைக்கும் போது இதற்கும் கொஞ்சம் வைத்து விட்டால் போதும்.  

நன்றாக பழுத்த பழத்தின் ருசியே தனி தான். ஆனால் ரொம்ப கனிந்து விட்டால் சிதைந்து விடும் அளவுக்கு அதன் தோல் மென்மையாகி விடும். அதனால் தான் கடைகளில் கிடைக்கும் பழங்கள் காயாகவே பறித்து விற்பனைக்கு வருகிறது. அவைகள் பழுக்கும் போது அவ்வளவு ருசி இருப்பதில்லை. இங்கே வீட்டு செடியில் நன்றாக பழுக்கும் வரை விட்டு பறிப்போம். நன்றாக பழுத்து விட்டால் பழம் தானாகவே கீழே விழுந்து சிதைந்து விடும். நன்றாக பழுக்கும் திரட்சி வந்ததும், ஒரு துணியை வைத்து கிளையோடு கட்டி விட்டால் இதை தவிர்க்கலாம்.

எங்கள் வீட்டில் இருக்கும் பழ மரங்களில் ரொம்ப பிடித்த பழம் இது தான். இந்த தடவை ஊருக்கு பொங்கலுக்கு ஊருக்கு போகும் போது இன்னும் ஒரு செடி கொண்டு வந்து வைக்கலாம் என்று இருக்கிறேன்.









 

11 comments:

  1. ஆஹா.. இதன் இனிமை சொல்லி முடியாது. அவ்ளோ ருசியானது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. ரொம்ப கனிந்த பழம் அவ்ளோ இனிப்பா இருக்கும். நான் சொன்ன மாதிரி கடைகளில் அப்படி கிடைப்பது இல்லை.

      Delete
  2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !


    ReplyDelete
  3. அருமையான பழம்! முதலில் எங்க (சொந்த) வீட்டில் நிறைய மரங்கள் இருந்தன. இப்ப இருக்கும் வீட்டிலும் ஒரு மரம் இருக்கிறது. நான் செப்டம்பரில் ஊருக்கு வந்தபொழுது எடுத்துவந்த படங்களில் சீத்தாப் பழமும் இருக்கிறது. :) உங்க படங்களைப் பார்க்கையில் ஊர் ஞாபகம் நிறைய வருகிறதுங்க! ஐ மிஸ் கோவை!

    அழகான புகைப்படத் தொகுப்பு! சொன்னமாதிரி கடைகளில் கிடைக்கும் பழங்கள் அரிதாகவே இனிக்கும்.

    ReplyDelete
  4. முற்றிய சீதாப் பழம் அருமையாக இருக்கின்றது.

    எமது ஊரில் அண்ணமுண்ணா பழம் என்று சொல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. அண்ணமுண்ணா பழமா .. நான் கேள்வி பட்டதே இல்லையே :-)

      Delete
  5. ஹைய்யோ!!!!! என் மகளுக்கு ரொம்பவு பிடித்த பழம் இது!

    எப்போ இந்தியாவுக்கு வந்தாலும் இதைத்தேடி அலைவதுண்டு. போனவருசம் புள்ளையார் சதுர்த்தி சமயம் சென்னையில் இருந்தோம்.பழமுதிர்சோலையில் கிடைத்தது. ஆனால் அவ்வளவா ருசி இல்லை. ஆனாலும் தின்னோமுன்னுதான் சொல்லணும்.

    ஒருமுறை சிட்னியில் கிடைச்சது. நல்லா இருந்துச்சு. நியூஸிக்குக் கொண்டு வரமுடியாது என்பதால் ஃபுட் கோர்ட்டில் உக்கார்ந்து தின்னுட்டுதான் வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் அதே.. என் மகளுக்கும் ரொம்ப பிடித்த பழம் இது தான்.. :-)

      //
      ஒருமுறை சிட்னியில் கிடைச்சது. நல்லா இருந்துச்சு. நியூஸிக்குக் கொண்டு வரமுடியாது என்பதால் ஃபுட் கோர்ட்டில் உக்கார்ந்து தின்னுட்டுதான் வந்தோம்.// Nice. :-)

      Delete
  6. இலங்கையில் இதை அன்னமுன்னா என்போம்; இதில் முள்ளில்லாத வகையைப் பறங்கி அன்னமுன்னா என்பர்.வேலியோரம் எந்தப் பாராமரிப்புமற்ற ஆடுமாடுகூடத் தீண்டாத மரம். ஊரில் விலையின்றிக் கிடைப்பதால், மவுசு குறைவு. ஆனால் சுவை அதிகம்.நன்கு உண்டு மகிழ்ந்துள்ளேன்.
    படங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி யோகன். அன்னமுன்னாவா.. மேலே மாதேவியும் அதையே சொல்லிருக்காங்க :-)

      ஆமாம்..மவுசு குறைவு.. ஆனால் அருமையான பழம்..

      Delete