Saturday, October 10, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் - வெள்ளரிப்பழம்



முலாம்பழத்தை அடுத்து இந்த சீசனின் அடுத்த புது வரவு. இது வெள்ளரிக்காய் பதிவாக வரவேண்டியது, பழமாகி போனது ஒரு சின்ன குழப்பத்தில். அந்த குழப்பத்தால் ஒரு அருமையான பழத்தை பல வருடங்களுக்கு பிறகு ருசிக்க முடிந்தது.  

இந்த ஜூன் சீசன் தொடக்கத்தில் வெள்ளரியையும், சுரைக்காயையும் ஒரு பாத்தியில் போட்டு விட்டிருந்தேன். வெள்ளரி நன்றாக பிடித்து வளர்ந்து வந்தது. சுரைக்காய் இலையும் கிட்டதட்ட வெள்ளரி இலை போலவே இருந்ததால் பெரிதாய் இரண்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெள்ளரி பூத்தாலும் பூ பிஞ்சி ஏதும் பார்க்க முடியவில்லை.

ஒரு நாள் கீழே படத்தில் இருக்கும் பிஞ்சி ஓன்று கண்ணில் பட்டது. அதன் வடிவத்தை பார்க்க ஏக குழப்பம். வெள்ளரிக்காய் மாதிரி இல்லை. கொஞ்சம் குடுவை வடிவத்தில் சுரைக்காய் மாதிரி இருந்தது. அதனால் அப்படியே விட்டுவிட்டேன். ஒரு கட்டத்தில் அதன் காம்பு பகுதியை பார்த்தால் வெம்பி விடும் என்று தான் நினைத்திருந்தேன். அப்படி ஏதும் நடக்காமல் காய் பெரிதாகிக் கொண்டே வந்தது. நன்றாக முற்றிய பிறகு தான் அது சுரைக்காய் இல்லை என்று தெரிந்தது. அதன் பிறகு அதை பறித்து பயனில்லை என்று அப்படியே விட்டுவிட்டேன்.




அதுவும் முற்றி நிறம் கொடுக்க ஆரம்பித்தது. அப்படி ஒரு மஞ்சள் நிறம். ஒரு மஞ்சள் பையை, மேலே ஒரு முடிச்சு போட்டு கட்டித் தொங்க விட்டால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது பழம். பொதுவாய் கடைகளில் கிடைக்கும் வெள்ளரி அவ்வளவு மாவு தன்மை இருக்காது. அதனால் பழமும் அப்படி தான் இருக்கும் என்று நினைத்து பெரிதாய் ஏதும் எதிர்ப்பார்க்கவில்லை.

நல்ல மஞ்சள் நிறம் கொடுத்ததும், லேசாய் அழுத்தி பார்த்து பழுத்து விட்டதென்று தெரிந்ததும் பறித்து வெட்டினால் ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. பழம் அவ்ளோ மாவாய் வெண்ணை மாதிரி, நல்ல மணத்தோடும். ஒரு ஸ்பூன்-அ வச்சி அப்படியே வெட்டி வெட்டி சாப்பிடலாம்.  

‘இந்த மாதிரி ஒரு பழத்தை சாப்பிட்டு ஒரு இருபது வருடம் இருக்கும்’ என்று எங்க வீட்டில் ஒரே சந்தோசம். எனது பள்ளிக் காலங்களில் ஊரில் பக்கத்து கிராமங்களில் (ஆழ்வார் தோப்பு, திருக்களூர்) இருந்து நார் பெட்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சி விற்க வருவார்கள். அப்போ சிலநேரம் இந்த மாதிரி வெள்ளரிப்பழத்தை ஒரு வாழை இலையில் சுற்றி கொண்டு வருவார்கள். அதை வாங்கி, சின்ன சின்னதாய் வெட்டி சீனி போட்டு சாப்பிடுவோம். எங்களுக்கு அவ்ளோ ருசியான ஒரு பண்டம் அது. பல காலங்களுக்கு பிறகு அப்படி ஒரு பழம் பார்க்க முடிந்ததில் இந்த சீசன் ஒரு சிறப்பு பெற்று விட்டது. அதுவரை சிலவற்றை பிஞ்சாக பறித்துக் கொண்டிருந்தோம். இந்த பழம் பறித்த பிறகு, எல்லாவற்றையும் பழுக்க விட்டே பறிக்க ஆரம்பித்தோம்.

இந்த விதை நாட்டு விதைகள் என்று நண்பர் பரமேசிடம் வாங்கியது. அவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இனி எல்லா சீசனிலும் தவறாமல் இடம் பெற போகும் ஒரு செடியாகி விட்டது. இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு.









 













Sunday, October 4, 2015

மாடித் தோட்டம் – Part-1 (தொடங்குவதற்கு முன்)



(புதிதாய் மாடித் தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டம் ஆரம்பிக்கும் நண்பர்களுக்காக இந்த குறுந்தொடரை ஆரம்பிக்கிறேன். இது உங்களுக்கு சிறிதளவாவது பயன்பட்டால் சந்தோசமே)

விகடனிலும் புதியதலைமுறையிலும் எனது ப்ளாக் பற்றி வந்த கட்டுரைகளை பார்த்து வந்த நிறைய அழைப்புகளில் இருந்து சில விஷயங்கள் புரிந்தது. ‘மாடித் தோட்டம்’ என்பது ஊடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. எங்கு பார்த்தாலும் ‘ஆர்கானிக்’ ‘இயற்கை விவசாயம்’ என்ற கூக்குரல்கள். இங்கே வாங்கும் காய்கறி எல்லாமே விஷம். நீங்களே காய்கறியை வீட்டில் விளைவித்தால் தான் தப்பித்தீர்கள், இல்லாவிட்டால் எல்லா நோய்களும் உங்களுக்கு தான் என்பது போலான விளம்பரங்கள், விவாதங்கள். இங்கே தோட்டம் ஆரம்பிக்கிறேன் என்று வரும் கூட்டத்தில் பாதி இந்த மாதிரி விவாதங்களை கேட்டு பயந்து வரும் கூட்டமாக இருப்பது வருத்தப்படும் விசயமாகவே இருக்கிறது.

தோட்டம் என்பது ஒரு கலை. பொழுதுபோக்கு. ஆங்கில Gardening site  பார்த்து நிறைய ஆச்சரியப் பட்டிருக்கிறேன். அங்கே யாரும் ‘ஆர்கானிக்’ ‘ஆர்கானிக்’ என்று அலறுவதில்லை. ஒவ்வொரு காய்கறியையும், பூக்களையும் அவர்கள் முயற்சிப்பது, கற்றுக்கொள்வது, அதை ஒரு ‘Gardening Community’ வைத்து பகிர்ந்து கொள்வது என்று அதை hobby என்ற அளவில் செய்வது அழகு. இவ்வளவு அருமையான ஒரு பொழுதுபோக்கை கூட அதற்குண்டான ரசனையை அழித்து அதையும் ஒரு வியாபார வட்டத்தில் கொண்டு வந்து விட்டார்கள். நாம் இங்கே ‘ஆர்கானிக்’ பற்றி கவலைப்பட நிறைய காரணங்கள் இருந்த போதும், அது மட்டுமே தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணமாக நிறைய பேர் எடுத்து கொள்வதில் தான் பிரச்னை.

எந்த வித அடிப்படை ஆர்வமோ, அதற்குண்டான நேரமோ ஒதுக்காமல் மாடித் தோட்டம் ஆரம்பிக்கும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இது வழக்கம் போல ஒரு சிலரால் ஒரு பெரிய  வியாபார வட்டத்தை உருவாக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் நோக்கம் ‘ஊரெல்லாம் பூச்சிக்கொல்லி தெளித்த காய்கறிகள். அத சாப்பிட்டுட்டு சாவாதீங்க. கவலைப்படாதீங்க. நாங்க இருக்கோம்’ என்பது தான். மக்கள் எல்லாம் இப்போது கொஞ்சம் செழிப்பாக இருப்பதால் காசை பற்றி கவலைப்படாமல், நல்லதா ஆர்கானிக் கத்தரிக்கா நாலு கெடைச்சா போதும் என்று 20,000-ம், 30,000-ம் என்று செலவு பண்ணி ட்ரிப் செட் எல்லாம் போட்டு ஒரு பத்து அடி தள்ளி நின்று ஆர்கானிக் கத்தரிக்காய்க்கு காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள்.

சிலர் ‘டெய்லி ஒரு பத்து நிமிடம் செலவழிச்சா போதுமா’ என்று கேட்கிறார்கள். மக்கள் அவ்ளோ பிசியாகி விட்டார்கள் போல என்று நினைத்துக் கொள்வேன். சென்னை அப்பார்ட்மென்ட் வாழ்க்கையில் இருந்து கோவை வந்த பிறகு நான் ஒழித்துக் கட்டிய இரண்டு விசயங்கள். ஓன்று கிரிக்கெட் பார்ப்பது. இரண்டாவது டி.வி நிகழ்ச்சிகள் பார்ப்பது. இப்போது எனக்கு நிறையவே நேரம் கிடைக்கிறது. (காலையில் நான் வார நாட்களில் 1 ½ மணி நேரமும், வார இறுதி நாட்களில் 4 மணி நேரமும் தோட்டத்திற்க்காக செலவழிக்கிறேன்). தோட்டம் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது அரைமணி நேரம் செலவிட முடியுமா என்று பாருங்கள். வார இறுதி நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும். அப்போது தான் உங்களால் தோட்டத்தில் உருப்படியாக எதாவது கொண்டுவர முடியும்.  

ஆர்கானிக் காய்கறிகள் வேண்டும் என்பது மட்டும் தான் தோட்டம் ஆரம்பிக்க ஒரே காரணம் என்றால் இப்போது ஐயா நம்மாழ்வார் படத்தை ஒட்டிக்கொண்டு, மூன்று மடங்கு விலையோடு ‘இயற்கை விளைபொருளகம்’ என்ற பெயரில் எக்கச்சக்க ஆர்கானிக் ஸ்டோர் முளைத்து இருக்கிறது. அங்கே உருப்படியாக ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கலாம். சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் மக்களுக்கு திடீரென்று இயற்கை மீது அதீத பற்று வந்து எங்கு பார்த்தாலும் மணத்தக்காளி சூப், தூதுவளை சூப் என்று நிறைய சூப் கடைகள் முளைத்தன. பிறகு காணமல் போய்விட்டன. அதே போல் இப்போது மாடித் தோட்டம் சீசன்.

இங்கே இயற்கையை காப்பாற்ற கிளம்பி இருக்கும் சில முகநூல் குழுக்கள் கூட Gardening Kit என்ற பெயரில் எதையாவது மக்கள் தலையில் கட்டவே பார்க்கிறார்கள். தோழி ஒருவர் ‘சென்னை மாடித்தோட்டம் முகநூல் குழு ஓன்று பத்து பைகள் அடங்கிய Gardening Kit ஓன்று Offer-ல் Rs.1800 –ல் கொடுக்கிறார்கள். வாங்கவா சிவா’ என்று என்னிடம் கருத்துக் கேட்டார். ஆடித் தள்ளுபடி போல.  (இதில் நிறைய கதைகள் இருக்கிறது. அடுத்த பதிவில் நிறைய பார்க்கலாம்). உங்களிடம் நிறைய காசு இருந்தா என்னிடம் கொடுங்கள். கஷ்டபட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள். ஏதாவது உதவி செய்யலாம் என்று சொல்லி வைத்தேன். சிலரின் வியாபார நோக்கத்திற்காக உருவாக்கப்படும் வட்டத்தில் மாட்டி, தொடக்கத்தில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிஜமான ஆர்வம் உள்ள நிறைய நண்பர்கள் தோற்று பின்வாங்குவது கவலை தரும் விசயமாக இருக்கிறது.

நேரம், ஆர்வத்திற்கு அடுத்தபடியாக தேவை நமது சொந்த முயற்சி. இது ரொம்பவே முக்கியம். தொடக்கத்தில் அடிப்படை விவரங்களுக்கு மற்ற நண்பர்களின் முயற்சி பற்றிய விவரங்கள் நிறையவே பயன்படும். ஆனாலும் நம் சொந்த முயற்சிகளும் அதன் வெற்றி தோல்விகளும் தான் தோட்டத்தை சுவாரசியம் ஆக்கும். சில நண்பர்கள் என்னிடம் முதலில் விடுக்கும் வேண்டுகோளே ‘ஏதாவது புத்தகம் இருந்தா கொடுங்க. இல்லன்ன ஏதாவது PDF Document-ஆவது இருந்தா கொடுங்க’ என்பது தான். எல்லாவற்றையுமே step-by-step procedure-அகவே  (இரண்டு நிமிடம் மேகி நூடுல்ஸ் செய்வதில் இருந்து) செய்து பழக்கப்பட்டுவிட்ட நமக்கு தோட்டத்திற்கும் அதே போல ஒரு எதாவது இருந்தால் வேலை எளிதாக முடியும் என்றே நினைக்க தோன்றுகிறது. இயற்கை நம்மை அவ்வளவு எளிதாக விடுவதில்லை. சும்மா ரெண்டு புத்தகம் படித்து இத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த உரம் போட்டால் இந்தனை கிலோ அறுவடை செய்யலாம் என்று எல்லாம் எளிதாக செய்ய முடியாது. இன்றைக்கும் நான் தவறாமல் ஆப்பு வாங்கி கொண்டிருக்கும் சில காய்கறிகள் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக தோட்டம் என்பது கடினமும் அல்ல. நல்ல விதையில் இருந்து நாற்று எடுத்து, நல்ல வெயில் படும் இடத்தில், நல்ல வளமான மண்ணோ, வளர்ப்பு ஊடகமோ வைத்து, நாம் ஆர்வமாய் வளர்க்கும் செடி நன்றாகவே வரும்.

நான் மேலே கூறியபடி நீங்கள் உண்மையிலேயே ஆர்வத்தில் தோட்டம் ஆரம்பிக்க நினைத்து, உங்களால் தேவையான நேரம் ஒதுக்க முடியும் என்றால் எளிதாக வெற்றி பெறலாம். இல்லாவிட்டால் ‘இரண்டாயிரம் ரூபாய் செலவளித்தேன். கடைசியில் ஒரு கிலோ தக்காளி கூட கிடைக்கலை’ என்று ஒரு புலம்பலோடு உங்கள் தோட்டம் ஒரு ஓரமாய் ஒதுங்கிவிடும்.  

அடுத்த பதவில் ‘வளர்ப்பு ஊடகம்’ (Growing Media) பற்றி விவரமாக பார்க்கலாம்.

(தொடரும்)           

Friday, September 18, 2015

என் வீட்டுத் தோட்டத்தில் – முலாம் பழம்



சைக்கிள் கேப்ல ஏதாவது வளர்த்து அறுவடை எடுத்தால் சந்தோசம் தானே. அப்படித் தான் இந்த முறை மாடியில் ஏற்கனவே நெருக்கமாய் இருந்த பைகளுக்கு இடையில் இரண்டு முலாம்பழம் கொடியையும் விட்டேன். விதை Omaxe Hybrid Seed (இணையத்தில் வாங்கியது). வழக்கமான 1 அடி X  1 அடி பையில் ஒவ்வொரு செடி வைத்து விட்டேன்.

முலாம்பழம் வெள்ளரி செடி மாதிரி தான். எளிதாக வளரும் செடியாகவே இருக்கிறது. ஒரு பத்து இலை வந்ததுமே மொட்டு வைக்க ஆரம்பித்து விட்டது. நிறைய மொட்டுக்கள் காய் மொட்டுகளாக வந்து, பிஞ்சும் பிடித்தது. பரவாயில்லையே என்று நினைக்கும் நேரத்தில் கூட்டம் கூட்டமாய் எறும்பு வந்து பூக்கள், இலை என்று ஓன்று விடாமல் மேய ஆரம்பித்தது. இலை, பூ, பிஞ்சி என்று எதில் பார்த்தாலும் எறும்பு கூட்டம் தான்.

அந்நேரத்தில் நமது ப்ளாக் நண்பர் தாராபுரத்தில் இருந்து என்னை பார்க்க வந்திருந்தார். அவர் தான் பார்த்துவிட்டு இலையின் அடியில் நிறைய இலைப்பேன் போன்ற பூச்சிகள் இருப்பதாக கூறினார். அதை நீக்கினால் எறும்பு தானாக போய் விடும் என்றும் கூறினார்.

பிறகு ஒரு லிட்டர் அளவுக்கு நீரில் இரண்டு உள்ளங்கை அளவுக்கு வேப்பம் புண்ணாக்கு கரைத்து, பொறுமையாக ஒவ்வொரு இலைக்கும் அடியில் உள்ள பூச்சிக் கூட்டத்தை கையை வேப்பம் புண்ணாக்கு நீரில் நனைத்து நன்றாக இலைகளை தேய்த்து விட்டேன். கொஞ்சம் நேரம் எடுத்தாலும் ரொம்ப தாக்குதல் இருக்கும் போது செடியை காப்பாற்ற இந்த முறை தான் உடனே பலன் கொடுக்கும். வீட்டுத் தோட்டத்தை பொருத்தமட்டும் நாம் எல்லா நேரங்களிலும் ஒரு Sprayer-ல் வைத்து தெளித்துக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. தாக்குதல் அதிகமாக இருக்கும் போதும், நம்மால் கைகளால் பூச்சிகளை நீக்கி விட முடியும் என்றால் அதை செய்துவிட்டு, பிறகு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு தெளித்து விட்டால் பூச்சி தாக்குதல் அத்தோடு நின்று விடும். இரண்டு நாள் தொடர்ந்து இதே போல இலைகளை வாஷ் செய்த பிறகு, பூச்சிகள் நிரந்தரமாய் போய் விட்டது. பெரிய ஆச்சரியம், கூட்டமாய் வந்த எறும்புகள் எல்லாம் இடத்தை காலி செய்து விட்டு போய் விட்டன.

என்னுடைய கவனக் குறைவினால் நிறையவே பூச்சிகள் இருந்ததால் முதலில் பிடித்த நிறைய பிஞ்சிகள் அப்படியே வெம்பி, உதிர்ந்து போய்விட்டது. செடிக்கு ஒன்றாக மொத்தம் இரண்டு காய்கள் தான் தப்பித்து வந்தது.

முலாம்பழம் பழுத்தவுடன் அதன் தோலின் நிறம் நல்ல மஞ்சள் நிறமாய் மாறும். நிறம் மாறிய பிறகு லேசாய் அழுத்தி பார்த்தும் பழுத்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளலாம். மாடியில் வெறும் சிமெண்ட் தரையில் கொடிகள் விடும்போது காய்களுக்கு, பிஞ்சி விடும் போதே தேங்காய் நார் கொண்டு சின்னதாய் ஒரு படுக்கை அமைத்து விடலாம். இதனால் சிமெண்ட் தரை வெப்பமோ, தரையில் உரசி காய்களுக்கு ஏதும் பாதிப்போ வரமால் பார்த்துக் கொள்ளலாம்.   

இந்த முறை பெரிதாய் விளைச்சல் எடுக்க முடியவில்லை என்றாலும், முதல் முயற்சி என்ற வகையில் இந்த அறுவடை வெற்றியே. தவிர ஒரு பெரிய பாடம் ஒன்றையும் கற்றுக் கொண்டேன். நாம் பொதுவாய் எறும்பு கூட்டம் செடியில் உலாவுவதை பார்த்தால், எறும்பை தான் கட்டுப்படுத்த நினைப்போம். இலைகளிலும், காய்களிலும் வெள்ளையாய் தெரிவதை எறும்பு தான் ஏதோ கூடு கட்டி முட்டை போடுகிறதோ என்று நினைப்போம். இந்த பிரச்சனை சீத்தா மரம், வெண்டை செடிகளில் பார்க்கலாம். ஆனால் அவைகள் எல்லாம் எறும்புக்கு சம்பந்தம் இல்லாதவை, பூச்சி தாக்குதல் என்று நண்பர் சிவகுமார் தான் விளக்கினார். அந்த பூச்சிகள் சுரக்கும் ஒருவித இனிப்பு சுவைக்காக தான் எறும்புகள் கூட்டமாய் செடிகளை ஆக்கிரமிக்கின்றன. எறும்புகள் அந்த பூச்சிகளை செடியின் மற்ற இடங்களுக்கும் பரவ உதவுகிறது. இப்படி இரண்டு பேருக்கும் ஒரு கொடுக்கல்-வாங்கல் டீல் இருக்கிறது. முடிந்தால் எறும்புகளை கட்டுப்படுத்தினால் பூச்சிகள் பரவாமல் தடுக்கலாம். இல்லை பூச்சிகளை ஒழித்தால் எறும்புகள் தானாகவே அந்த இடத்தை காலி செய்து போய் விடும். முலாம்பழத்தை வைத்து கற்றுக் கொண்ட பாடம் இது தான்.

கீழே பார்க்கும் பூச்சி தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கிறதென்று பார்த்தாலே தெரியும். ஒரே ஒரு வேப்பம் புண்ணாக்கு வாஷ் தான், பிறகு எந்த தொல்லையும் இல்லை.



செடி எளிதாகவே வருவதால், மீண்டும் முலாம்பழம் செடியை தரையில் போட்டு விட்டிருக்கிறேன். இந்த முறை கொஞ்சம் கவனம் எடுத்து நிறையவே காய் பறிக்க முடியும் என்று நினைக்கிறேன்.














Friday, September 11, 2015

பசுமை விகடனில் தோட்டம்



பசுமை விகடனில் இருந்து இரண்டு மாதத்திற்கு முன்னமே அழைத்து தோட்டம் பற்றி கேட்டார்கள். அப்போது தான் சீசனை ஆரம்பித்து இருந்ததால் செடிகள் எல்லாம் சிறியதாக இருப்பதால் பெரிதாய் ஏதும் செடிகளை பார்க்க முடியாது, ஒரு இரண்டு மாதம் கழித்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்து சின்னதாய் ஒரு பேட்டியும் எடுத்து, குடும்பத்தோடு படமும் எடுத்து சென்றார்கள். இந்த வாரம் பசுமை விகடனில் வந்திருக்கிறது. நண்பர்கள் முடிந்தால் பசுமை விகடன் வாங்கி பாருங்கள். 

அவள் விகடனில் முதன் முதலாய் தோட்டம் வலைப்பூ பற்றி எழுதி, இப்போது எனது தோட்டத்திற்கு ஒரு விரிவான கவரேஜ் கொடுத்த விகடன் குழுவுக்கு மிக்க நன்றி


நன்றி - பசுமை விகடன்

நன்றி - பசுமை விகடன்