Friday, August 30, 2013

தோட்டம் – Nursery Tray-ல் முதல் முயற்சி



பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி), சில நாற்று விட்டு வளர்ந்த பின் நட வேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்து கொண்டு வருவதும் கடினம்.

நான் பொதுவாக நாற்று விட தனியாக ஒரு சிறிய பாத்தி ஒன்றை தயார் செய்து கொஞ்சம் இடைவெளியில் விதைத்து வளர்ப்பது உண்டு. இதில் சில பிரச்சனைகள், தக்காளி, கத்தரி செடிகள் பொதுவாக நெருக்கமாய் வந்து விடும். ஒரு செடி என்று தோண்டி எடுக்க கடினமாக இருக்கும். தவிர வேரோடு தோண்டி எடுத்தாலும் புதிய இடத்தில வேர் பிடிக்கும் வரை ஒரு இரண்டு நாள் நாற்று வாடி பிறகு தான் நன்றாக வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த முறை Nursery Tray மூலமாக நாற்று உற்பத்தி செய்ய முயற்சி செய்து பார்த்தேன். 

போன வருடமே இதை முயற்சி செய்ய நினைத்தது தான். ஆனால் Nursery Tray எங்கும் கிடைக்க வில்லை. இங்கே சில நர்சரி கார்டன்களில் அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்திருந்தார்கள். இந்த முறை இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது Nursery Tray கிடைத்தது.

Nursery Tray பயன்படுத்தும் போது, மணல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் நாரில் இருந்து வரும் தூள் பயன்படுத்த வேண்டும். நான் வீட்டில் கிடந்த தேங்காய் நெட் கொஞ்சம் எடுத்து கையை வைத்தே உதிர்த்து ஓரளவு தூள் தயார் செய்து கொண்டேன். தும்பு/நார் ஏதும் இல்லாமல் வெறும் தூள் மட்டும் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.  வெறும் தூள் மட்டும் போட்டால் சத்து எதுவுமே இருக்காது. எனவே பாதிக்கு பாதி என்ற அளவில் மண்புழு உரம் கலந்து எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு குழியிலும் பாதி அளவு போட்டு, பிறகு வரிசையாக விதைகளை போட்டு மூடிவிடலாம். ஒரு பேப்பர் எடுத்து அதில் நம்ம Nursery Tray க்கு ஒரு லே-அவுட் போட்டு எந்த வரிசையில் எந்த விதை என்று குறித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் முளைத்தத பிறகு குழப்பம் வரலாம் (குறிப்பாக வெள்ளை, வயலட் கத்தரி, நாட்டு, பெங்களூர் தக்காளி என்று சேர்த்து விதைக்கும் போது). கொஞ்சம் வெயில் படும் இடத்தில் வைத்து நீருற்ற நான்கு ஐந்து நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்து. 

முதலில் முளைக்கும் போது பெரிய விதைகள் தேங்காய் தூளை அப்படியே பெயர்த்து கொண்டு வரும். இலை வெளியே வந்ததும் அந்த தூளை மறுபடி அந்த குழியில் போட்டு மூடி விடவும். 

Nursery Tray பயன்படுத்துவதில் நான் கண்ட நன்மைகள்,

·         விதைகளின் முளைப்பு திறன் அதிகமாக இருக்கிறது. பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கும் போது சில விதைகள் முளைக்காது. ஆனால் இதில் எல்லா விதைகளும் முளைத்து விட்டது.
·         சரியாய் திட்டமிட்டு வரிசையாய் நடலாம்.
·         கொஞ்ச இடம் இருந்தால் போதும். இந்த சின்ன Tray-ல் நூறு நாற்றுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்கிறது. இதையே பாதியில் விட்டு வளர்த்தால் நிறைய இடம் தேவை படும்.
·         எடுத்து நட ரொம்ப எளிது. இது லேசாய் செடியை பிடித்து இழுத்தால் அப்படியே தக்கை போல வந்து விடுகிறது. பிடுங்குவதற்கு முன் நீர் தெளித்து விட்டு பிடுங்குவது நல்லது. இல்லாவிட்டால் தேங்காய் நார் தூள் லேசாய் உதிரும்.
·         நாற்று பிடுங்கி நட்டிய பிறகு வாடுவதில்லை. நாற்று அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது. மண்ணில் இருந்து பிடுங்கி நடும்போது லேசாய் வாடி விடும். அந்த பிரச்னை இதில் இல்லை.        

இப்போது பீன்ஸ் நாற்று மட்டும் எடுத்து பாத்திகளில் நட்டிருக்கிறேன். இன்னும் Tray-ல் கத்தரி, வெண்டை, கொத்தவரை, புடலை, பாகல் நிற்கிறது.









Saturday, August 3, 2013

என் வீட்டுத் தோட்டத்தில் – சாத்துக்குடி



சில செடிகளுக்கு நாம் ரொம்பவே கவனம் கொடுத்து நன்றாக கொண்டு வர முயற்சிப்போம். ஆனால், அது சரியாய் வராது (முந்தைய பதிவில் சொன்ன மிளகாய் மாதிரி). அதே நேரத்தில், சில மரங்கள், நாம் கவனமே இல்லாமல் தானாகவே வளர்ந்து கலக்கலாய் காய் கொடுக்கும் (எங்க வீட்டு கொய்யா மரம் மாதிரி). இதில், சாத்துக்குடி இரண்டாவது ரகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊரில் இருந்து மாதுளை, சீத்தா மரக்கன்றுகள் வாங்கி வரும் போது சாத்துக்குடி நாற்று ஒன்றும் ஆசையில் வாங்கி வந்தேன். வழக்கம் போல, வந்தவுடன் ஒரு பெரிய சிமெண்ட் சாக்கில் மண் நிரப்பி எல்லா கன்றுகளையும் வைத்து வளர்த்தேன். ஓரளவு வளர்ந்ததும், மாதுளை, சீத்தாவுக்கு ஒரு இடம் ஒதுக்கி தரையில் வைத்து விட்டேன். ஆனால், சாத்துக்குடிக்கு இடம் இல்லை. 

வைத்த மாதிரியே ரொம்ப மாதங்களாக சாக்கு பையிலேயே இருந்தது. இடம் இல்லாததால், தூக்கி வெளியே போட்டு விடலாம் என்று கூட நினைத்ததுண்டு. பிறகு ஓர் ஓரமாக, மா மரத்தின் அடியில் வைத்து விட்டேன். மா மர நிழலில் ரொம்ப மாதங்களாக அப்படியே நின்று கொண்டிருந்தது. போதாதற்கு பக்கத்தில் இருந்த இரண்டு பப்பாளி மரங்களும் அதற்கு சுத்தமாக வெயில் கிடைக்காமல் செய்து விட்டன.

போன வருடம் இங்கே பெய்தது ஒரே ஒரு மழை. அது ஊரில் இருக்கிற நிறைய மரங்களை காலி செய்து போனது. அதில் அந்த பப்பாளி மரங்கள் இரண்டும் அப்படியே மாடி படியில் சாய்த்து போனது (அதோடு கறிவேப்பிலை மரமும் வேரோடு போனதை முன்பு எழுதி இருந்தேன்). பப்பாளி மரங்களை தூக்கி நிறுத்திய போதும், முன் அளவுக்கு நேராக கொண்டு வர முடியவில்லை. அந்த கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம், வெயிலே கிடைக்காமல் நின்று கொண்டிருந்த சாத்துக்குடிக்கு, பப்பாளி சாய்ந்ததால் நன்றாக வெயில் கிடைக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் வெயில் கிடைத்ததும் இரண்டு மாதத்திலேயே மட மடவென்று பூத்து, பிஞ்சும் பிடிக்க ஆரமித்தது. அதற்கு அப்புறம் அதை வெளியே எடுத்து போட மனம் வரவில்லை. போன்சாய் மரம் மாதிரி, அதிலும் பெரிதாய் ஐந்து சாத்துக்குடி பழங்கள். அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றக் கூட பாத்தி கிடையாது. பப்பாளிக்கு தண்ணீர் விடும் போது, லேசாய் விடுவதோடு சரி. இது வரை உரம் என்று ஓன்று இட்டதில்லை. வேர் போக கூட இடம் இல்லாமல், கீழே ஒரே சரல் மண். எங்கே இருந்து அதற்கு சத்து எடுத்துக் கொண்டதோ, சாத்துக்குடி ரொம்பவே பெரிதாய், பார்க்கவே திரட்சியாய், அழகாய் இருந்தது.

இந்த செடி கடைசியில் எங்களுக்கு ஒரு சென்டிமென்ட் ஆகி போனது (‘நானும் நன்றாக காய்திருக்கிறேன், எனக்கும் ஒரு இடம் கொடுங்கள் என்று நம்மை பார்த்து கேட்பது போல அதை பார்த்தால் தோன்றும்). பழம் இனித்தால் வைத்துக் கொள்ளலாம், ரொம்ப புளித்தால் தூக்கி வெளியே போட்டுட வேண்டியது தான் என்று கடைசி முடிவு.

போன மாதம் தான் அறுவடை. பழம் புளிக்கவில்லை. இனிப்பு கொஞ்சம் குறைவு தான். அதற்கு எந்த சத்தும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணமாய் இருக்கலாம்.
கடைசியில் அதற்கும் ஒரு இடம் கொடுத்து விட்டோம். இரண்டாவதாய் வைத்த சீத்தா நாற்று ஒன்றை எடுத்து பின்னால் பெரிய சீத்தா மரம் அருகிலேயே வைத்து விட்டு, அந்த இடத்தில் இப்போ சாத்துக்குடி சந்தோசமா நிற்குது :-)












 The new place for it