Showing posts with label Nursery Tray. Show all posts
Showing posts with label Nursery Tray. Show all posts

Saturday, November 28, 2015

மாடித் தோட்டம் – Part-4 நாற்று எடுத்தல் (Video – Nursery Tray)



எனது இரண்டாவது வீடியோ பதிவு. வளர்ப்பு ஊடகம் தயார் செய்து பைகள் எல்லாம் ரெடியானதும் அடுத்தது விதைப்பது தான். அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். நர்சரி ட்ரே பற்றி ஏற்கனவே இந்த பதிவுவில் எழுதி இருந்தேன். மேலும் சில தகவல்கள் சேர்த்து, செய்முறை விளக்கத்தோடு இந்த வீடியோ பதிவை கொடுக்கிறேன்.   

Youtube URL : https://youtu.be/vWB5v8U9qPQ




Monday, July 21, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-3 (நாற்று எடுத்தல்)

ஜூன் சீசனுக்கு மே இரண்டாவது வாரத்தில் நான் ஆரம்பித்தேன்.
முதலில் விதைக்க நேரடி விதைப்பு தேவையா, இல்லை Nursery Tray பயன்படுத்தலாமா என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். விதை ரொம்ப சிறியதாக, அதிக எண்ணிக்கையில் தேவை படும் போது (கீரை, கேரட் மாதிரி) நேரடியாக தான் விதைக்க வேண்டும். முள்ளங்கி, பீட்ரூட் நேரடியாக விதைப்பதுண்டு. கிட்டத்தட்ட மற்ற காய்கறிகள் எல்லாமே நான் Nursery Tray பயன்படுத்தி தான் நாற்று தயார் செய்கிறேன்.

Nursery Tray-யின் ஒரு பயன் என்னவென்றால், மே நடுவில் விதைப்பை ஆரம்பிப்பதால் கோடை வெயில் அதிகமாக இருக்கும். அவரை, வெண்டை போன்றவற்றை நேரடியாக பாத்திகளில் விதைக்கும் பொழுது நிறைய நீர் விட வேண்டிய இருக்கும். தவிர நிறைய வெயிலின் தாக்கமும் இருக்கும். Nursery Tray-ல் நடும் போது தொடக்கத்தில், பாதி நேரம் நிழல் வரும் இடமாய் பார்த்து வைக்கலாம். தண்ணீர் பயன்பாடும் மிக குறைவு. வெயில் ஜூனில் கொஞ்சம் குறைந்து வரும் போது, எடுத்து நட தயாராய் இருக்கும்.

Nursery Tray பயன்பாடு பற்றி இந்த பதிவில் விவரமாய் எழுதி இருக்கிறேன். நமக்கு தேவையான செடிகளை திட்டமிட்ட பிறகு, ஒவ்வொன்றிலும் எத்தனை செடிகள் தேவை என்பதை தோராயமாக (நம் தேவை, தோட்டத்தில் இருக்கும் இடம் போன்றவற்றை பொறுத்து) முடிவு செய்து அதற்கு ஏற்றாற்போல் நாற்று எடுக்க விதைக்கலாம். நான் பொதுவாய் தேவைக்கு இரண்டு மடங்காக விதைப்பதுண்டு. சில செடிகள் முளைப்பு திறன் 50% அளவுக்கு இருக்கும் பட்சத்தில், அது போதுமானதாக இருக்கும். சின்ன சின்ன விதைகள் போடும் போது (கோஸ், காலி ஃப்ளவர் மாதிரி) ஒரே குழிக்குள் இரண்டு மூன்று விதைகள் போடலாம். அத்தனையும் முளைத்தால் ஒன்றை விட்டு விட்டு மற்றதை பிடுங்கி போட்டு விடலாம். இல்லாவிட்டால் நன்றாக வளர்ந்த பிறகு தனி தனி செடியாக பிரித்து வைக்கலாம். 

Nursery Tray-ல் நடும் போது வெறும் Coir Pith மற்றும் மண்புழு உரம் மட்டும் போதும் (1:1 என்ற விகிதத்தில்). செம்மண் கலக்க கூடாது. அப்படி கலந்தால், நாற்று எடுத்து நடும் போது, வேரில் இருந்து எல்லாமும் உதிர்த்து விழும். அப்படியே ஒரு தக்கை போல வராது.

நாற்று ஒரு மாதம் வரை Tray-ல் வைக்கலாம் (செடியை பொறுத்தது. சுரைக்காய் போன்ற பெரிய செடிகளை சீக்கிரமே எடுத்து நடலாம்). நாம் முதலில் கலக்கும் மண்புழு உரம் போதுமானதாக இருக்கிறது. தனியாக ஏதும் Liquid Fertilizer மாதிரி விட தேவை இல்லை.
தினமும் தவறாமல் நீர் ஊற்ற வேண்டும். ஒரு நாள் தவறினாலும், நாற்று வாடி விடும் (இடம் கொஞ்சம் என்பதால், நீர் பிடிப்பு அவ்வளவாய் இருக்காது). நாற்று வந்து இரண்டு வாரத்தில் நல்ல வெயிலில் வைக்கலாம்.

நான் இப்போது 50 குழிகள் இருக்கும் Tray தான் பயன்படுத்துகிறேன். 98 குழிகள் இருக்கும் Tray அவ்வளவாய் நன்றாக இல்லை (ரொம்ப சிறிய குழிகள் என்பதால், செடி கொஞ்சம் வளர்ந்த பிறகு வேர் போக இடம் இருப்பதில்லை. நீர் பிடிப்பும் ரொம்ப குறைவு).

நாற்றுகளை ஒரு இரண்டு அல்லது மூன்று இலை அடுக்குகள் வந்த பிறகு அதற்கான பாத்திகளில் எடுத்து நடலாம். ரொம்ப நாள் Tray-ல் விட்டுவிட கூடாது. செடி வளர்ச்சி குன்றி போய் விடும். நடுவதற்கு ஒரு நாள் முன்பு கொஞ்சம் குறைவாக நீர் விட்டால், Tray-ல் இருந்து எடுக்க எளிதாக இருக்கும். லேசாய் ஒவ்வொரு குழியையும் கீழேயும், பக்கவாட்டிலும் அழுத்தினால் ஓட்டிகொண்டிருப்பது விட்டுவிடும். பிறகு செடியை பிடித்து மெதுவாய் இருத்தால் அப்படியே தக்கை போல வந்துவிடும். முடிந்த அளவுக்கு முழுதாய் எடுக்க முயற்சிக்கலாம். சிறிய செடிகளில்  வேர் அவ்வளவாய் வந்திருக்காது. அப்போது பாதியை உடைந்து வரும். அது பிரச்னை இல்லை. மேல் பகுதி உடைந்து விடாமல் எடுத்தால் போதும்.






ஜுன் சீசன் லே-அவுட்
வழக்கம் போல முக்கிய காய்கறிகளான தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, அவரை, கொத்தவரை ஆகியவற்றை மெயின் பாத்திகளில் நட்டேன். இந்த முறை வெண்டை, அவரை, கொத்தவரை வரிசையாக நடாமல், கலந்து (ஒரு வெண்டை, ஒரு அவரை, ஒரு கொத்தவரை என்று மாற்றி மாற்றி) நட்டு விட்டேன். ஒவ்வொரு பருவத்திலும் பயிர் சுழற்சி முறையையும் கடை பிடிக்க வேண்டும் (போன முறை தக்காளி வைத்த இடத்தில் இந்த முறை அவரை, இந்த மாதிரி).



முட்டைகோஸ், காலி ஃப்ளவர், Broccoli இந்த மூன்றையும் மாடியில் தனி தோட்டமாய் Grow Bags அமைத்து விட்டேன் (ஒவ்வொரு பையிலும் ஒரு செடி). அதோடு முள்ளங்கி, காரட், பீட்ரூட் மூன்று நீண்ட பைகளில் அதே தோட்டத்தில் வைத்தேன்.



கீரையை மொத்தமாய் மேலே மாடியில் அமைத்து விட்டேன். 



பாகல், மிதி பாகல், பீர்க்கங்காய் மூன்றையும் வீட்டின் முன்னால் அமைத்த புதிய கொடியில் விட்டேன். பக்கவாடில் முன்பு அமைத்த கொடியில் புடலை, சுரை. மாடியில் உள்ள கொடியில் சுரை, பாகல் (மிச்சம் இருந்த செடிகள்) மற்றும் வெள்ளரி. இது இந்த சீசனில் கொடிகள்.



இந்த முறை, இந்த மொத்த தோட்டம் அமைப்பில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொரு காய்கறியின் விளைச்சல் காலம் எவ்வளவு, எவ்வளவு விளைச்சல் எடுக்கலாம், எந்த மாதிரியான பூச்சி தாக்குதல் வருகிறது, ஒவ்வொரு செடியின் பராமரிப்பு – இப்படி நிறைய விவரங்களை சேகரித்து கற்றுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். அதை ஒவ்வொன்றாய் வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்)

Friday, August 30, 2013

தோட்டம் – Nursery Tray-ல் முதல் முயற்சி



பொதுவாய் சில விதைகள் நேரடியாக விதைக்கலாம் (வெண்டை, அவரை மாதிரி), சில நாற்று விட்டு வளர்ந்த பின் நட வேண்டும் (தக்காளி, கத்தரி மாதிரி). செடிகளின் விதையோ, நாற்றோ ரொம்ப சிறியதாக இருக்கும் பட்சத்தில், நாற்று விட வேண்டியது அவசியம், இல்லாவிட்டால் தொடக்கத்தில் பெரிய பாத்திகளில் நீர் விட்டு வளர்ப்பது கடினம். தவிர தகுந்த இடைவெளி விட்டு விதைத்து கொண்டு வருவதும் கடினம்.

நான் பொதுவாக நாற்று விட தனியாக ஒரு சிறிய பாத்தி ஒன்றை தயார் செய்து கொஞ்சம் இடைவெளியில் விதைத்து வளர்ப்பது உண்டு. இதில் சில பிரச்சனைகள், தக்காளி, கத்தரி செடிகள் பொதுவாக நெருக்கமாய் வந்து விடும். ஒரு செடி என்று தோண்டி எடுக்க கடினமாக இருக்கும். தவிர வேரோடு தோண்டி எடுத்தாலும் புதிய இடத்தில வேர் பிடிக்கும் வரை ஒரு இரண்டு நாள் நாற்று வாடி பிறகு தான் நன்றாக வரும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க இந்த முறை Nursery Tray மூலமாக நாற்று உற்பத்தி செய்ய முயற்சி செய்து பார்த்தேன். 

போன வருடமே இதை முயற்சி செய்ய நினைத்தது தான். ஆனால் Nursery Tray எங்கும் கிடைக்க வில்லை. இங்கே சில நர்சரி கார்டன்களில் அவர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் வைத்திருந்தார்கள். இந்த முறை இங்கே அக்ரி இன்டெக்ஸ் போன போது Nursery Tray கிடைத்தது.

Nursery Tray பயன்படுத்தும் போது, மணல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தேங்காய் நாரில் இருந்து வரும் தூள் பயன்படுத்த வேண்டும். நான் வீட்டில் கிடந்த தேங்காய் நெட் கொஞ்சம் எடுத்து கையை வைத்தே உதிர்த்து ஓரளவு தூள் தயார் செய்து கொண்டேன். தும்பு/நார் ஏதும் இல்லாமல் வெறும் தூள் மட்டும் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.  வெறும் தூள் மட்டும் போட்டால் சத்து எதுவுமே இருக்காது. எனவே பாதிக்கு பாதி என்ற அளவில் மண்புழு உரம் கலந்து எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு குழியிலும் பாதி அளவு போட்டு, பிறகு வரிசையாக விதைகளை போட்டு மூடிவிடலாம். ஒரு பேப்பர் எடுத்து அதில் நம்ம Nursery Tray க்கு ஒரு லே-அவுட் போட்டு எந்த வரிசையில் எந்த விதை என்று குறித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் முளைத்தத பிறகு குழப்பம் வரலாம் (குறிப்பாக வெள்ளை, வயலட் கத்தரி, நாட்டு, பெங்களூர் தக்காளி என்று சேர்த்து விதைக்கும் போது). கொஞ்சம் வெயில் படும் இடத்தில் வைத்து நீருற்ற நான்கு ஐந்து நாட்களிலேயே முளைக்க ஆரம்பித்து. 

முதலில் முளைக்கும் போது பெரிய விதைகள் தேங்காய் தூளை அப்படியே பெயர்த்து கொண்டு வரும். இலை வெளியே வந்ததும் அந்த தூளை மறுபடி அந்த குழியில் போட்டு மூடி விடவும். 

Nursery Tray பயன்படுத்துவதில் நான் கண்ட நன்மைகள்,

·         விதைகளின் முளைப்பு திறன் அதிகமாக இருக்கிறது. பொதுவாய் மண்ணில் நேரடியாய் விதைக்கும் போது சில விதைகள் முளைக்காது. ஆனால் இதில் எல்லா விதைகளும் முளைத்து விட்டது.
·         சரியாய் திட்டமிட்டு வரிசையாய் நடலாம்.
·         கொஞ்ச இடம் இருந்தால் போதும். இந்த சின்ன Tray-ல் நூறு நாற்றுகள் எந்த பிரச்னையும் இல்லாமல் வளர்கிறது. இதையே பாதியில் விட்டு வளர்த்தால் நிறைய இடம் தேவை படும்.
·         எடுத்து நட ரொம்ப எளிது. இது லேசாய் செடியை பிடித்து இழுத்தால் அப்படியே தக்கை போல வந்து விடுகிறது. பிடுங்குவதற்கு முன் நீர் தெளித்து விட்டு பிடுங்குவது நல்லது. இல்லாவிட்டால் தேங்காய் நார் தூள் லேசாய் உதிரும்.
·         நாற்று பிடுங்கி நட்டிய பிறகு வாடுவதில்லை. நாற்று அப்படியே பிரஷ்ஷாக இருக்கிறது. மண்ணில் இருந்து பிடுங்கி நடும்போது லேசாய் வாடி விடும். அந்த பிரச்னை இதில் இல்லை.        

இப்போது பீன்ஸ் நாற்று மட்டும் எடுத்து பாத்திகளில் நட்டிருக்கிறேன். இன்னும் Tray-ல் கத்தரி, வெண்டை, கொத்தவரை, புடலை, பாகல் நிற்கிறது.