Saturday, November 8, 2014

மாடித் தோட்டம் (with DIY Kit) – கீரைகள்



நிறைய நண்பர்கள் DO IT YOURSELF KIT வாங்கி மாடி தோட்டம் முயற்சிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் ஆர்வ மிகுதியில் வாங்கி விட்டு ரெண்டு கத்தரி தான் கிடைச்சது, ஆயிரம் ரூபாய் ண்டம் என்று சில புகார்களையும் கேட்க முடிந்தது. சிலருக்கு வெறும் Coir Pith-ஐ வைத்து கொண்டு என்ன செய்வது, வேறு என்ன கலக்க வேண்டும், எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று குழப்பம் (இது சரியாக DO IT YOURSELF KIT-ல் கொடுக்கவில்லை. வெறும் சூடோமொனாஸ் கலந்து வைத்தால் செடி வந்து விடுமா என்ன?). கெமிக்கல் முறையில் நீங்கள் செய்ய நினைத்தால் NPK Solution வைத்தே செய்யலாம் என்று நினைக்கறேன் (அதையும் DO IT YOURSELF KIT-ல் கொடுத்தார்கள்). நம்ம தோட்டத்தில் எப்பவுமே இயற்கை வழி விவசாயம் தான். எந்த மாதிரி கலவையை முயற்சிக்கலாம் என்பதை இந்த பதிவில் முன்பு விளக்கமாக கொடுத்து இருந்தேன். பாருங்கள்.


பதிவு1

பதிவு2

முதன்முறை மாடி தோட்டம் முயற்சிப்பவர்களுக்கு கீரைகள் ஏற்றதாக இருக்கும். நல்ல விளைச்சலும் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான கீரைகளை எளிதாக எடுக்க முடிக்கும் (வெளியே கிடைக்கும் கீரைகள் எப்படி நம்பி வாங்குவது என்று தெரியவில்லை. பூச்சி அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளித்து இருக்கலாம், எப்படி பட்ட நீரில் வளர்த்தார்கள் இப்படி நிறைய யோசனைகளை வருகிறது. இதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம்). நம் வீட்டிலேயே ரொம்ப எளிதாக எல்லா கீரைகளையும் எடுக்க முடியும். அதுவும் நிறைய கீரைகள் விதைத்து மூன்று – நான்கு வாரத்திலேயே அறுவடைக்கு தயாராக இருக்கும். கொஞ்சம் திட்டமிட்டு விதைத்தால் வருடம் முழுவதும் கீரை தாராளமாய் கிடைக்கும்.

நான் DO IT YOURSELF KIT-ஐ வைத்து கீரை தோட்டம் தான் போட்டிருக்கிறேன். அதை ஒவ்வொரு கீரையை விவரமாய் பார்க்கலாம்.  

வீட்டில் என்ன என்ன கீரை வளர்க்கலாம் என்று பட்டியலிட்டு பார்த்தால், இவைகளை கூறலாம் (விடுபட்ட கீரைகளை நண்பர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்)

பாலக் கீரை
தண்டங் கீரை
பருப்புக் கீரை (பச்சை மற்றும் சிவப்பு)
புளிச்சக் கீரை
பொன்னாங்கண்ணி கீரை
வல்லாரை கீரை
அகத்திக் கீரை
வெந்தயக் கீரை
பசலை கீரை
கொத்த மல்லி
புதினா


இவற்றில் சிலவற்றை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இப்போது DO IT YOURSELF KIT கொண்டுவந்த கீரை தோட்டத்தை பற்றி பார்க்கலாம் (நண்பர்கள் முயற்சிக்கவும் பயனுள்ளதாக இருக்கும்)

புளிச்சக் கீரை (Gongura)

ஆந்திரா மெஸ்ல சாப்பிடவங்களுக்கு இந்த கோங்குரா ஊறுகாய் தெரிந்திருக்கும். கொஞ்சம் புளிய இலையை கடைந்து காரம் சேர்த்த மாதிரி ஒரு சுவை இருக்கும். சென்னையில் இருக்கும் போது ஆந்திரா மெஸ்ல சாப்பிடும் போது அது ஒரு கீரை என்று தெரியாது. கீரை விதைகளை முதலில் வாங்கிய போது (இங்கே ARJUN Growbags-ல்) கிடைத்த அத்தனை கீரையையும் வாங்கியதில் இந்த புளிச்ச கீரையும் வந்தது. இரண்டு பையில் போட்டு விட்டேன்.

நன்றாக வளர்ந்த பிறகு தான் கீரையை என்ன செய்வது என்ற நமது கூகிள் தேடல் தொடங்கியது. தெளிவாக ஒரு செய்முறை வீடியோ ஓன்று Youtube-ல் கிடைத்தது. அதை பார்த்த பிறகு தான் அடடே இது நம்ம ஆந்திரா மெஸ் துவையல் மாதிரி இருக்கே என்று. வீட்டில் உடனே இலையை பறித்து ரெசிபி படி செய்தும் கொடுத்துவிட்டார்கள். நல்ல ருசி. நிறைய நாள் வைத்து ஊறுகாயாக வைத்து சாப்பிடலாம். 








பாலக் கீரை

முன்பு பாலக் கீரையை தரையில் முயற்சித்து சரியாக வராமல் போய், வந்த ஓன்று இரண்டும் பூச்சி சாப்பிட்டுவிட்டு போக, பிறகு முயற்சிக்கவே இல்லை இப்போது Coir Pith மீடியா வந்த பிறகு நிறைய செடிகள் எளிதாக வருகிறது. அதில் ஓன்று பாலக் கீரை. பாலக்கீரை விதை எல்லா கடைகளிலும் கிடைக்கிறது (Biocarve மாதிரி இணையத்தில் இதை Spinach என்று போட்டு விலை முப்பது-நாற்பது என்று விற்கிறார்கள். அது பாலக் கீரை தான். அது உள்ளூர் விதை கடைகளிலேயே பத்து ரூபாய்க்கு கிடைக்கும். அதை வாங்கினால் போதும்)

பாலக்கீரையை வீட்டில் முட்டை எல்லாம் போட்டு ஒரு கீரை கூட்டு வைப்பார்கள் நன்றாக இருக்கிறது.

பாலக்கீரையை அறுவடை செய்யும் போது கீழே இருக்கும் பாகத்தை அப்படியே வேரோடு விட்டுவிட்டால் நமக்கு அது தளிர்த்து இரண்டாவது அறுவடையும் கிடைக்கும்,





பருப்புக் கீரை

எளிதாக வரும் இன்னொரு கீரை. கொஞ்சம் கிளறி தூவி விட்டால் போதும், மூன்று வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். வீட்டில் இதை சாம்பார் (பருப்பு குழம்பு) வைக்கும் போது போட்டு வைப்பார்கள். நன்றாக இருக்கும். 

இதில்  சிவப்பு நிறத்தில் பருப்பு கீரை ஒன்றும் கிடைக்கிறது. அதை இந்த பதிவில் எழுதி இருந்தேன்.





பொன்னாங்கண்ணி

இது சிவப்பு பொன்னாங்கண்ணி. இது ஊரில் இருந்து கொண்டு வந்த ஒரு குச்சி, வைத்து விட்டால் அதுவாக மடமடவென்று தளிர்த்து கொள்ளும். நாம் வேண்டும் போது வெட்டி எடுத்துக் கொள்ளலாம். உடனே குப்பென்று தளிர்த்து விடும். 

Coir Pith–ல் சரியாக வருமா என்று நினைத்தேன். முன்பு மண்ணில் வைத்ததை விட நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் அறுவடைக்கு பிறகு நிறைய தளிர் வந்து அடர்த்தியாக ஆகி விடும். அப்போது மீண்டும் பிடுங்கி விட்டு, புதிதாய் அதில் கொஞ்சம் குச்சிகளை வெட்டி வைத்தால் வந்து விடும்.

இதை தவிர பச்சை இலையோடு இன்னொரு பொன்னாங்கண்ணி கீரையும் இருக்கிறது. அதை இன்னும் முயற்சிக்க வில்லை.       





வெந்தய கீரை

மற்றும் ஒரு எளிதான கீரை. சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் கொஞ்சம் எடுத்து தூவி விட்டால் போதும், தனியாக விதை வாங்க வேண்டியதில்லை (இதையும் Methi என்று விதையாக விற்கிறார்கள். அது நமக்கு தேவையில்லை). தூவி விட்டு இரண்டு நாளில் முளைத்து செழிப்பாக வளர ஆரம்பித்து விடும். எங்க வீட்டில் இதை பறித்து லேசாக வதக்கி மாவில் கலந்து சப்பாத்தி சுடுவார்கள். கசப்பு லேசாய் இருந்தாலும் நல்ல ருசி. உடலுக்கும் ரொம்ப நல்ல கீரை. இப்போது தவறாமல் தோட்டத்தில் போட்டு விடுகிறேன்.  





மல்லி

வெந்தயம் மாதிரி இதுவும் கொஞ்சம் மல்லியை எடுத்து தூவி விட்டால் முளைத்து விடும் (பாதியாக உடைத்து போட்டால் எளிதாக முளைக்கிறது). பொதுவாய் நாம் வீட்டில் இருக்கும் மல்லியை போட்டால் செடி கடையில் கிடைப்பது போல பெரிதாக வருவதில்லை. சின்னதாய் இருக்கும் போதே பூ பூத்து விடும். இந்த முறை DO IT YOURSELF KIT-ல் கொடுத்த விதையை போட்டேன். நன்றாக வந்திருந்தது.






.

Wednesday, November 5, 2014

Horti Intex 2014 (Coimbatore)

கோவை நண்பர்களுக்கு ஒரு தகவல். 'HORTI INTEX 2014' என்றொரு தோட்டக்கலை கண்காட்சி (7 - 9 November) கொடிசியா வளாகத்தில் இந்த வார இறுதியில் நடக்கிறது. கடந்த ஜூலையில் கொடிசியாவில் நடந்த 'AGRI INDEX 2014' செம சொதப்பலாக இருந்தது (அலைகடலாக மக்கள் திரண்டு வந்து எவனையும் மூச்சு கூட விடாமல் விரட்டினார்கள்). பிறகு Vijaya Trade Center-ல் நடந்த 'HORTI  TECH 2014', ஆளே இல்லாமல் காத்து வாங்கியது. இப்போது வருட இறுதியில் 'HORTI INDEX 2014'. கொடிசியா வளாகத்தில் என்பதால் பிரமாண்டமாய், நிறைய ஸ்டால்கள் இருக்கும். இந்த முறை வீக் எண்ட்டில் பொழுது போகாத மக்களுக்கு கடவுள் வேறு வழி ஏதாவது காட்டட்டும் என்று வேண்டிக்கொண்டு நானும் போகலாம் என்று இருக்கிறேன். நீங்களும் வாருங்கள்

    

Friday, October 17, 2014

என் வீட்டுத் தோட்டத்தில் – பேபி கார்ன் (Baby Corn)

இந்த சீசனின் சோதனை முயற்சியாக பேபி கார்ன் போடலாம் என்று விதைக்கு இணையத்தில் தேடிய போது omaxehybridseeds.com -ல் கிடைத்தது. Omaxe seeds பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆர்டர் செய்து ஒரு வாரத்தில் வந்து விட்டது.    
   
இந்த முறை எக்கச்சக்கமான செடிகள் பட்டியலில் வந்து விட்டதால் எங்கு பார்த்தாலும் இடப் பற்றாக்குறை. பேபி கார்ன்க்கு தரையில் இடம் இல்லை. மாடியில் போடலாம் என்றால் காற்று பிரச்னை. அதனால் கீழேயே தொட்டியில் போடலாம் என்று பயன்படுத்தாமல் கிடந்த சில சிமெண்ட் தொட்டிகளை எடுத்து ஒரு ஓரமாக கொஞ்சம் இடம் கண்டுபிடித்து ஒரு தோட்டத்தை ஆரம்பித்து விட்டேன். முதன் முறையாக சிமெண்ட் தொட்டியிலே Coir Pith மீடியாவை பயன்படுத்தி பார்த்தேன். வழக்கம் போல Coir Pith, மண்புழு உரம், செம்மண் கலவை தான்.

விதைத்து ஒரு வாரத்திலேயே முளைத்து விட்டது. கிட்டதட்ட எல்லா விதைகளுமே முளைத்து விட்டது (100% Germination Rate). செடி உயரமாக வரும் என்பதால் எல்லா தொட்டியிலும் நடுவில் ஒரு கம்பு ஒன்றையும் ஊன்றி வைத்தேன் (செடியை அதில் சுற்றி கட்டி விடலாம் என்று. காற்று அடித்தால் சாயாமல் இருக்க. ஆனால் அதற்க்கு அவசியம் இல்லாமல் போய் விட்டது).

செடி செழிப்பாக வளர்ந்து வந்தது. அடுத்தது எப்போது கதிர் வரும், எப்போது பறிக்க வேண்டும் என்று தகவலுக்கு இணையத்தில் தேட ஆரம்பித்தேன். செடி வளர்ந்து முதலில் செடி நுனியில் நெல் கதிர் மாதிரி வந்த பிறகு ஒவ்வொரு இலையின் இடையிலும் கதிர் வைக்க தொடங்குகிறது. நான் முதலில் நெல் கதிர் மாதிரி வருவதை பார்த்து என்னடா இது மாட்டு தீவனத்திற்க்கு வளர்க்கிற சோளம் மாதிரி வந்துட்டு என்று நினைத்தேன். பிறகு கதிர் வந்த பிறகு தான் செடி ஒழுங்காய் வளர்கிறது என்று நிம்மதி.

கதிர் வந்த பிறகு கொஞ்ச நாளில் கதிரின் நுனியில் கொத்தாய் பட்டு முடி போல வரும். இதை Silk என்கிறார்கள். அது கதிரில் இருந்து வெளியே வந்து இரண்டு நாட்களில் கதிரை அறுவடை செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் கதிர் முற்ற ஆரம்பித்து ருசி இல்லாமல் போய் விடும். செடியில் பறிக்கும் போது கொஞ்சம் கவனமாக பறிக்க வேண்டிய இருக்கிறது. இல்லாவிட்டால் செடி மொத்தமும் ஒடிந்து போய் விடுகிறது. 

விதைத்து பத்து வாரத்தில் அறுவடை எடுத்தாச்சு. சிமெண்ட் தொட்டியில் முதன் முதலாய் Coir Pith மீடியா வைத்து கொண்டு வந்த முதல் செடி. விளைச்சல் நன்றாகவே இருந்தது. பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல் என்று ஒன்றும் இல்லை. ஒவ்வொரு செடியிலும் இரண்டில் இருந்து மூன்று கதிர்கள் வந்தது. தொட்டியில் இல்லாமல் தரையில் வைத்தால் இன்னும் விளைச்சல் அதிகமாக கிடைக்கலாம். கார்ன் நல்ல ருசி. இதை நிரந்தர பயிராக வைத்துக் கொள்ளலாம். இந்த முறை தரையில் நிறைய போட்டு விடலாம் என்று இருக்கிறேன். இது தோட்டத்தில் இருந்து வீட்டில் இருக்கும் குட்டீஸ்களுக்கு பிடித்த ஒரு செடியாக இருக்கும்.















Monday, September 29, 2014

2014 சீசன்-2 (ஜூன்) – பகுதி-6 (விளைச்சல் – கொடிகள் & English Vegetables)

இந்த சீசனின் மிக பெரிய சொதப்பல் இந்த ஏரியா தான். மூன்று பந்தல் தயார் செய்தும் ஒன்றிலும் சாதிக்க முடியவில்லை. புடலை, பாகல், சுரை, பீர்க்கங்காய் என்று அனைத்தையும் முயற்சி செய்து அதனையும் ஊற்றிக் கொண்டது. ஒரு பக்கம் மற்ற காய்கறிகள் எல்லாம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வந்தாலும் கொடி என்னமோ சரியாய் வருவதில்லை.

செடிகள் பொதுவாய் சரியான வெயில், நல்ல மண், சரியான தண்ணீர் இருந்தால் வளர்ந்து விடும். வளர்ந்த பிறகு பூப்பதிலும், பிஞ்சி பிடிப்பதியும் பெரிதாய் பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் கொடிகள் அப்படி இல்லை. முதலில் வளர்ந்து வருவதில் இருந்தே பிரச்னை ஆரம்பித்து விடுகிறது. ஒரு ஐந்து-ஆறு இலைகள் வந்த பிறகு அப்படியே நரங்கி போய் விடுகிறது. சில நம் உயரத்திற்கு வளர்ந்த பிறகு அதன் குருத்து உயிரே இல்லாமல் கொடியின் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடுகிறது. புடலை செடியும், சுரையும் இப்படி தான் போனது. எவ்வளவோ முயற்சி எடுத்தும் தேற்ற முடியவில்லை.


அடுத்தது பீர்க்கங்காய். இங்கே வேற பிரச்னை. மூன்று கொடிகள் விட்டிருந்தேன். அவ்வளவு செழிப்பாக வளர்ந்தது. கொஞ்சம் ஓவராகவே வளர்ந்தது. இங்கே பிரச்னை காய்ப்பதில். கிட்டதட்ட மூன்று மாதம் ஆகியும் மொட்டு எதுவுமே வைக்க வில்லை. பிடுங்கி போட்டு விடலாம் என்று நினைக்கும் போது மொட்டு வைக்க ஆரம்பித்தது. நிறைய காய் மொட்டுகள் வைத்தாலும் பிஞ்சி பிடித்தது என்னமோ ஒன்றே ஓன்று தான். மற்ற எல்லாமே வெம்பி விடுகிறது, இல்லை பூப்பதே இல்லை. சாம்பிளுக்கு ஒரு காய் மட்டும் கிடைத்தது. அவ்ளோ தான். இவ்வளவு செழிப்பாய் வந்தும் இங்கே ஊற்றிக் கொண்டது.





ஊற்றிய தண்ணீருக்கும், செலவிட்ட நேரத்திற்கும் கொஞ்சம் உருப்படியாய் வந்தது பாகல் மட்டும். ஆனால் இங்கே வேற மாதிரி பிரச்சனை. செடி நன்றாக காய்த்தாலும் பீர்க்கங்காய் கொடிக்கு இடையே மாட்டிக் கொண்டு அமுங்கி போய் விட்டது. அதனாலயே சரியாய் இடம் கிடைக்காமல், வெயில் கிடைக்காமல் காய் குறைந்து விட்டது (பீர்க்கங்காய் இப்படி அநியாயத்துக்கு வளரும் என்று எதிர்பார்க்கவில்லை)


மொத்தத்தில் இந்த சீசனில் கொடி ஏரியா செம ஊத்தல். நிறைய பிரச்சனைகள். அவற்றில் சில

·         நாம் பொதுவாய் நாற்று விடும் போது ஐந்து செடியாவது விடுவோம். பிறகு அதில் ஓன்று-இரண்டு செடி மட்டும் வைக்காமல் அத்தனையையும் வைத்து விடுவோம் (தூர ஏறிய மனம் இல்லாமல்). இனி ஓன்று இரண்டு செடியோடு விட்டு விடனும்.
·         சில செடிகள் முளைத்து வரும் போதே ஒரு செழிப்பற்ற, உயிரற்ற ஒரு தோற்றத்திலேயே வளர்கிறது. விதை தரமற்றதாக, பழையதாக இருக்கலாம். இப்படி வரும் செடியை அவ்வளவு எளிதாக தேற்ற முடிவதில்லை. பிடுங்கி போட்டு விட்டு உடனே அடுத்த செடியை நடுவது நேரத்தை மிச்சப் படுத்தும்.
·         கொடிகளில் மட்டும் தான் இரண்டு விதமான பூக்கள் வரும் (காய் மொட்டு, வெறும் பூ மொட்டு – Male & Female flowers). காய் மொட்டு நிறைய வராமல் பிரச்னை வரும். இதற்கு எதாவது செய்யமுடியுமா என்று பார்க்க வேண்டும்.
·         கொடிகளில் இன்னொரு பிரச்னை தண்டு தடித்து போகுதல். பாகலில் பொதுவாய் இந்த பிரச்னை வரும். தண்டு பகுதி தடித்து போய் வளர்ச்சி அப்படியே நின்று போய் விடும். இதற்கு ஒரு வழி கண்டு பிடித்திருக்கிறேன். விவரமாய் பிறகு எழுதுகிறேன்.

கோஸ், காலி ஃப்ளவர் மற்றும் Broccoli

 இந்த ஏரியாவும் கொஞ்சம் ஊற்றிக் கொண்டது என்று தான் சொல்லவேண்டும். முக்கிய காரணம் தேவையான சத்து பற்றாக்குறை. முதன் முதலாக Grow Bag-ல் முயற்சித்தது. செடிகள் எல்லாம் ரொம்பவே செழிப்பகவே வந்திருந்தது. பிரச்னை எங்கே வந்தது என்றால், பூ வைக்கும் பருவத்தில். பொதுவாக காலி ஃப்ளவர் மற்றும் Broccoli-ஐ ‘heavy eater என்பார்கள். அதாவது இவைகள் நிறைய சத்தை உறிஞ்சும். Grow Bag-ல் வைத்ததனால் முதலில் போட்ட உரம் எல்லாம் இவை வளர்வதற்கே காலி ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். Broccoli-ல் முதல் பூ ரொம்ப சிறிதாக வந்த போதே இது தெரிந்தது. ஆனால் பிறகு நாம் மண்புழு உரம் போட்டு, அதை செடி கிரகிப்பதர்க்குள் செடி எல்லாம் பூத்து விட்டது. காலி ஃப்ளவர்–ம் அதே கதை தான். Chemical Fertilizer பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரச்னை வராது. நாம் உரம் போட்டதும் செடிக்கு சேர்ந்து விடும். Organic முறையில் போகும் போது, மண்புழு உரம் போட்டவுடனே செடிக்கு போய் சேராது. கொஞ்சம் காலம் எடுக்கும். அடுத்த முறை கொஞ்சம் திட்டமிட்டு வைக்க வேண்டும்.



காலி ஃப்ளவர் ஒரு வருடத்திற்கு முன்பு தரையில் போட்ட போது நன்றாகவே வந்திருந்தது (கீழே படம்)
Cauliflower in 2012 in my garden
இந்த முறை கோஸ் Grow Bag-ல் நன்றாகவே வந்தது. ஒரு ஐந்து பூ கிடைத்தது.     


வழக்கம் போல முள்ளங்கி நன்றாக வந்திருந்தது.  
   


(அடுத்த பதிவில் கீரை தோட்டம் எப்படி வந்திருந்தது என்று எழுதுகிறேன்)