Wednesday, December 30, 2015

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 1)



ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம்.

இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும் போனது. அதுல வழக்கம் போல கொடிகள் சூப்பர் ஃபளாப் ஆகி போனது..அதனால் மக்களே ‘பாவக்கா செடி தண்டு வீங்கி போச்சு, சுரைக்கா வெம்பி போச்சு. என்ன செய்ய’ என்று மடல் அனுப்பினால் என் பதில் ‘உங்களுக்குமா....அவ்வ்வ்வவ்’ என்று தான் இருக்கும் :) (வரும் சீசனில் இதுல ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அப்படி கொடிக்கும் நமக்கும் என்ன ஜென்ம பகை என்று தெரியவில்லை. பார்க்கலாம் :) )

இந்த சீசனின் சிறப்பு என்றால் நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகள் கொண்டு ஆரம்பித்தது தான். முக்கியமாக தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல நிறைய பூச்சி தொல்லைகள். வழக்கமான பூச்சிகளை விட்டு இந்த முறை புதிய வரவுகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றும் நமக்கு எதாவது ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டு, வந்ததற்கு செடிகளையும் காலி செய்து விட்டு போய் விட்டன. ஒவ்வொன்றாய் விவரமாய் பார்க்கலாம்,

கத்தரிக்காய்

பரமேசிடம் இருந்து வாங்கிய மூன்று வகை நாட்டுக் கத்தரி, என்னிடம் இருந்த வெள்ளை கத்தரி, முள் கத்தரி என்று இந்த சீசன் ஒரு கத்தரி ஸ்பெஷல் ஆகி போனது. ஊதா, பச்சை, வெள்ளை என்று கலர் பல்புகள் போல அழகாய் தோட்டத்தை மாற்றின.
   
நண்பர் பரமேசிடம் இருந்து பச்சை கத்தரி, ஊதா கத்தரி, ஊதா குண்டு கத்தரி என்று மூன்று வகை வாங்கி இருந்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று செடிகள் வீதம் தரையில் வைத்து விட்டேன். பச்சைக் கத்தரி மட்டும் மாடியில் பையில் வைத்து விட்டேன். பெரிதாய் ஏதும் பராமரிப்பு தேவைப்படவில்லை. நோய் தாக்குதலும் இல்லை. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை காய் பறித்து விட்டோம். இன்னும் கூட நிறைய பூத்து கிடக்கிறது.




















வெள்ளைக் கத்தரி, இதை பற்றி முன்பே சில முறை கூறி இருக்கிறேன். ஊரில் இருந்து கொண்டு வந்த விதை. கடந்த மூன்று வருடமாக விதை எடுத்து அதில் இருந்தே இந்த செடிகளை வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். விளைச்சல் எந்த வருடமும் சொதப்பியதில்லை. எந்த நோய், பூச்சி தாக்குதலும் வந்ததில்லை. எங்கள் தோட்டத்தின் ஸ்பெஷல் கத்தரி இது தான். வெள்ளை கத்தரியை பார்த்ததும் ‘அட.. நம்ம ஊரு கத்தரி’ என்று வருபவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை வருமே, அதற்காகவே இந்த செடி என் எல்லா சீசனிலும் பட்டியலில் இருந்து தவறுவதில்லை. 





முள் கத்தரி

தெரிந்தவர் ஒருவர் கத்தரி நாற்றுகள் ஒரு பத்து இருக்கும் கட்டு ஒன்றை கொடுத்தார். நெருங்கிய வட்டத்தில் யாருக்காவது செடி, விதை கிடைத்தால் முதலில் என் நியாபகம் தான் வருகிறது. அந்த நாற்றுகளை பிரித்து தரையில் வைத்து விட்டதில் இரண்டு செடிகள் மட்டும் முள் கத்தரியாக வந்தது. முதலில் இது தோட்டத்தில் ஒரு ஸ்பெஷல் செடியாக மாறும் என்று தெரியாது. செடியில் எல்லாமே முட்கள் தான். தண்டு, மொட்டு, இலை என்று ஒரே முள் மாயம். மிதித்தால் காலிலேயே குத்தும் அளவுக்கு உறுதியான முட்கள். ஆனால் கத்தரிக்காய் ரொம்ப அழகாக, குண்டு குண்டாய் நிறையவே காய்த்தது. கத்தரிக்காய் சில  200  கிராம் அளவுக்கு மிக பெரிதாய் வந்தது. காய் பார்க்க பெரிதாக இருந்தாலும், உள்ள மிக மென்மையாக ருசியாக இருக்கிறது. எல்லா கத்தரியை விட இது தான் ருசி என்று வீட்டில் கூறினார்கள். இதை பார்த்த எல்லோருமே நாற்று கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து வைத்திருக்கிறேன். கோவை நண்பர்கள் வேண்டுமென்றால் ஒரு மடல் அனுப்புங்கள்.







இதோடு மேலே கொடுத்திருக்கும் எல்லா கத்தரியிலும் விதை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்த சீசனுக்கு விதை வாங்க வேண்டியதில்லை. கத்தரியில் விதை எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ ஓன்று எடுத்திருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.  

கத்தரி கதையே ரொம்ப பெரிதாக போனதால், மற்ற காய்கறிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

22 comments:

  1. அருமை .ஜனவரி மாதம் என்ன என்ன விதைகள் நடவு செய்யலாம்.எந்த தேதியில் ஆரம்பம் செய்வது.இந்த கத்திரியில் மிகவும் சுவையானது எது.

    ReplyDelete
    Replies
    1. ஜனவரியில் ஆங்கில காய்கறிகளை (காரட், கோஸ் மாதிரி) தவிர்த்து மற்ற எல்லாமும் நடலாம்.

      முள் கத்தரி நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். நாட்டுக் கத்தரி என்பதால் மற்ற கத்தரிகளும் நன்றாகவே இருக்கிறது.

      Delete
  2. கத்தரிக்காய் கிலோ 100 ரூபாய் விற்கும் போது படத்தை போட்டு பெருமூச்சு விட வைக்கிறீங்க எங்கள எல்லாம்.. முள் கத்தரி இப்போது தான் கேள்வி படுறேன்.. வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபி. கத்தரி, தக்காளி எல்லாம் விலை எங்கேயோ போய்விட்டது. இனி இந்த மாதிரி சீசனில் நிறைய விளைச்சல் எடுக்கிறமாதிரி திட்டமிட வேண்டும் போல :)

      Delete
  3. கத்திரியில் வரும் மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த என்ன மருந்து நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நான் கத்தரியில் பெரிதாய் மாவுப் பூச்சியை பார்த்ததில்லையே நண்பரே. நீங்கள் வழக்கமாக என்ன முயற்சி செய்கிறீர்கள்?

      Delete
  4. தயவுசெய்து எனக்கு முள் கத்தரி விதை தர முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. தனி மடல் ஓன்று அனுப்பி விடுங்கள்.

      Delete
  5. Anna, ellam supre-a irukku. ennaku, White and Green Kathiri, Green Mullu Kathirividai kidaikkuma. Please

    ReplyDelete
    Replies
    1. தனி மடல் ஓன்று அனுப்பி விடுங்கள். முள் கத்தரி, வெள்ளை கத்தரி விதை இருக்கிறது. நண்பர் பரமேசிடம் மற்ற விதைகளை வாங்கி கொள்ளலாம். இந்த பதிவை பாருங்கள்

      http://thooddam.blogspot.in/2015/06/blog-post.html

      Delete
  6. வணக்கம் அண்ணா. அனைத்து கத்திரிகளும் அருமை. எங்கள் வீட்டு கத்திரியிலும் மாவுப் பூச்சி தொல்லை உள்ளது. வேப்பெண்ணெய்,காதி சோப் ,தண்ணீர் கலந்து தெளித்தேன். பலனில்லை.பிறகு ,இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல் முயற்சியும் பயனில்லை. கடைசியாக பூச்சியை கையால் எடுத்து அழிக்கிறோம். எதாவது டிப்ஸ் குடுங்க அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. மாவுப்பூச்சி தொல்லை கொஞ்சம் வர தான் செய்கிறது. தொடர்ந்து வேப்பெண்ணை அடித்து பார்த்தீர்களா? பவர் ஸ்ப்ரேயர் ஏதும் இருந்தால் அடித்து பார்க்கலாம்.என்னிடமும் சரியான விவரங்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு கைகளால் எடுத்து முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்துங்கள். நிறைய தாக்குதல் இருக்கும் இலைகளை நீக்கி விடுங்கள். குருத்து பகுதிகளில் கவனமாக பார்த்து வாருங்கள். பூச்சி இருந்தால் உடனே நீக்கி விடுங்கள்.

      Delete
  7. வீட்டு தோட்டம் இல்லாவிட்டாலும் பலகணியில் தோட்டம் போட்டு விட வேண்டும் எனும் உதவேகம் வந்து விட்டது. நான்கைந்து வருடம் முன்னால் என் வீட்டு பல்கணியில் தக்காளி, பீன்ஸ்,பீற்றூட்,மிளகாய், என எங்க வீட்டு தேவைக்கு ஓரிரு மரக்கன்றுகள் நட்டு பயனடைந்திருக்கின்றேன்.இந்த வருடம் சம்மரில் மீண்டும் ஒரு கை பார்த்து விடலாம்.

    என்ன சொன்னாலும் இந்த கத்தரியில் பூக்கும் போதே ஒருவகைப்பூச்சி வருவதால் ஏனைய செடிகளுக்கும் அது பரவும் என பயந்தே கத்தரியை தவிர்ப்பேன். அல்லது தனித்து தூரமாய் வைப்பேன். நீங்கள் பூச்சியே வருவதில்லை என சொல்வது ஆச்சரியமாயிருக்கின்றது சிவா!

    ReplyDelete
    Replies
    1. கத்தரியில் பெரிதாய் ஏதும் தாக்குதல் இருந்ததில்லை. சில புழுக்கள் வந்து இலை, குருத்தை எல்லாம் சுருட்டி சாப்பிட்டு விடும். அவைகளை எல்லாம் நாம் கைகளாலேயே நீக்கி கட்டுப்படுத்தி விடலாம்.

      மீண்டும் கத்தரி வைத்து பாருங்கள். பார்க்கலாம்.

      Delete
    2. உங்கள் தோட்டம் பற்றியும் உங்கள் ப்ளாக்கில் எழுதலாமே. உங்கள் ஆல்ப்ஸ் மலை (ப்ளாக்) பக்கம் வந்து தேடி பார்த்தேன் :)

      Delete
  8. வணக்கம் .இந்த ஆடி பட்டத்தில் விளைந்த காய்கறியியல் இருந்து விதைகள் எடுத்து காய வைத்து இருபது நாள் ஆகிறது. அதனை தற்போது தை பட்டத்தில் விதைக்கலாமா

    ReplyDelete
    Replies
    1. விதைக்கலாம் என்று தான் நினைக்கிறேன். நான் இவ்வளவு சீக்கிரம் உடனே விதைத்தது இல்லை. விதை தயார் என்றால் விதைக்க வேண்டியது தான் :)

      Delete
  9. அனைத்து இனங்களும் பலன் தந்திருக்கின்றன.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Sir
    can i have mullu kathari seeds sir?

    ReplyDelete
    Replies
    1. Please send a mail to me with your details (thooddamsiva@gmail.com)

      Delete