Showing posts with label கத்தரிக்காய். Show all posts
Showing posts with label கத்தரிக்காய். Show all posts

Wednesday, December 30, 2015

2015- சீசன்-2 (ஜூலை-டிசம்பர்) – அறுவடை (பகுதி – 1)



ஒரு வழியாக ஜூலையில் தொடங்கிய சீசன் ஒரு முடிவுக்கு வருகிறது. அடுத்தது ஜனவரி (தை) சீசனுக்கான திட்டமிடல் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது தான் விதைகள் எல்லாம் ஆர்டர் செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த சீசனை தொடங்குவதற்கு முன் இந்த சீசன் அறுவடை பற்றி ஒரு முடிவுரை கொடுத்து விடலாம்.

இந்த சீசனை பற்றி சொல்வதென்றால் ‘சுமார்’ என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. சில செடிகள் ஹிட் லிஸ்டிலும், சில ஃபளாப் லிஸ்டிலும் போனது. அதுல வழக்கம் போல கொடிகள் சூப்பர் ஃபளாப் ஆகி போனது..அதனால் மக்களே ‘பாவக்கா செடி தண்டு வீங்கி போச்சு, சுரைக்கா வெம்பி போச்சு. என்ன செய்ய’ என்று மடல் அனுப்பினால் என் பதில் ‘உங்களுக்குமா....அவ்வ்வ்வவ்’ என்று தான் இருக்கும் :) (வரும் சீசனில் இதுல ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம்.. அப்படி கொடிக்கும் நமக்கும் என்ன ஜென்ம பகை என்று தெரியவில்லை. பார்க்கலாம் :) )

இந்த சீசனின் சிறப்பு என்றால் நண்பர் பரமேசிடம் வாங்கிய நாட்டு விதைகள் கொண்டு ஆரம்பித்தது தான். முக்கியமாக தக்காளி, கத்தரி, மிளகாய் செடிகளை பெரிதும் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல நிறைய பூச்சி தொல்லைகள். வழக்கமான பூச்சிகளை விட்டு இந்த முறை புதிய வரவுகள் நிறைய இருந்தன. ஒவ்வொன்றும் நமக்கு எதாவது ஒன்றை கற்றுக் கொடுத்து விட்டு, வந்ததற்கு செடிகளையும் காலி செய்து விட்டு போய் விட்டன. ஒவ்வொன்றாய் விவரமாய் பார்க்கலாம்,

கத்தரிக்காய்

பரமேசிடம் இருந்து வாங்கிய மூன்று வகை நாட்டுக் கத்தரி, என்னிடம் இருந்த வெள்ளை கத்தரி, முள் கத்தரி என்று இந்த சீசன் ஒரு கத்தரி ஸ்பெஷல் ஆகி போனது. ஊதா, பச்சை, வெள்ளை என்று கலர் பல்புகள் போல அழகாய் தோட்டத்தை மாற்றின.
   
நண்பர் பரமேசிடம் இருந்து பச்சை கத்தரி, ஊதா கத்தரி, ஊதா குண்டு கத்தரி என்று மூன்று வகை வாங்கி இருந்தேன். ஒவ்வொன்றிலும் மூன்று செடிகள் வீதம் தரையில் வைத்து விட்டேன். பச்சைக் கத்தரி மட்டும் மாடியில் பையில் வைத்து விட்டேன். பெரிதாய் ஏதும் பராமரிப்பு தேவைப்படவில்லை. நோய் தாக்குதலும் இல்லை. செப்டம்பரில் இருந்து டிசம்பர் வரை காய் பறித்து விட்டோம். இன்னும் கூட நிறைய பூத்து கிடக்கிறது.




















வெள்ளைக் கத்தரி, இதை பற்றி முன்பே சில முறை கூறி இருக்கிறேன். ஊரில் இருந்து கொண்டு வந்த விதை. கடந்த மூன்று வருடமாக விதை எடுத்து அதில் இருந்தே இந்த செடிகளை வருடா வருடம் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன். விளைச்சல் எந்த வருடமும் சொதப்பியதில்லை. எந்த நோய், பூச்சி தாக்குதலும் வந்ததில்லை. எங்கள் தோட்டத்தின் ஸ்பெஷல் கத்தரி இது தான். வெள்ளை கத்தரியை பார்த்ததும் ‘அட.. நம்ம ஊரு கத்தரி’ என்று வருபவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை வருமே, அதற்காகவே இந்த செடி என் எல்லா சீசனிலும் பட்டியலில் இருந்து தவறுவதில்லை. 





முள் கத்தரி

தெரிந்தவர் ஒருவர் கத்தரி நாற்றுகள் ஒரு பத்து இருக்கும் கட்டு ஒன்றை கொடுத்தார். நெருங்கிய வட்டத்தில் யாருக்காவது செடி, விதை கிடைத்தால் முதலில் என் நியாபகம் தான் வருகிறது. அந்த நாற்றுகளை பிரித்து தரையில் வைத்து விட்டதில் இரண்டு செடிகள் மட்டும் முள் கத்தரியாக வந்தது. முதலில் இது தோட்டத்தில் ஒரு ஸ்பெஷல் செடியாக மாறும் என்று தெரியாது. செடியில் எல்லாமே முட்கள் தான். தண்டு, மொட்டு, இலை என்று ஒரே முள் மாயம். மிதித்தால் காலிலேயே குத்தும் அளவுக்கு உறுதியான முட்கள். ஆனால் கத்தரிக்காய் ரொம்ப அழகாக, குண்டு குண்டாய் நிறையவே காய்த்தது. கத்தரிக்காய் சில  200  கிராம் அளவுக்கு மிக பெரிதாய் வந்தது. காய் பார்க்க பெரிதாக இருந்தாலும், உள்ள மிக மென்மையாக ருசியாக இருக்கிறது. எல்லா கத்தரியை விட இது தான் ருசி என்று வீட்டில் கூறினார்கள். இதை பார்த்த எல்லோருமே நாற்று கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். ஒரு காயை விதைக்கு விட்டு எடுத்து வைத்திருக்கிறேன். கோவை நண்பர்கள் வேண்டுமென்றால் ஒரு மடல் அனுப்புங்கள்.







இதோடு மேலே கொடுத்திருக்கும் எல்லா கத்தரியிலும் விதை எடுத்து வைத்திருக்கிறேன். அடுத்த சீசனுக்கு விதை வாங்க வேண்டியதில்லை. கத்தரியில் விதை எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ ஓன்று எடுத்திருக்கிறேன். சீக்கிரம் கொடுக்கிறேன்.  

கத்தரி கதையே ரொம்ப பெரிதாக போனதால், மற்ற காய்கறிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.